உச்சியில் கயிறுகட்டிக்கொண்ட
ஒய்யாரக் கூந்தலழகிகள்
பாப் வெட்டிக்கொண்டு
தரையைத் தேய்த்துக்கொண்டு
நடப்பவர்கள்.
தரைக்குழந்தைகளுக்குத்
தினம் தினம் உடல்துடைத்து
வாரமொருமுறை நீரூற்றிக்
குளியல் செய்யும் பொறுப்புள்ள தாதிகள்.
சடைபின்னாமல்
ரப்பர்பாண்ட் போட்டதால்,
நுனி வெடித்த சிகையழகிகள்
தென்னைமரவீட்டைத்
தாயாகக்கொண்ட
செம்பரட்டைத் தலையர்கள்
செம்பரட்டைத் தலையர்கள்
வாயிலோரம் ஒதுங்கி
விடிகாலைப் பனியில்
வியர்க்க விருவிருக்க நடைபயில்வர்
அங்குமிங்கும் நடந்து
மண்வாசல் முதுகு தேய்த்துச்
சொரிந்து குளிப்பாட்டுவர்.
செம்பரட்டைத் தலையர்
வாயிலிலே சேவகம் செய்தால்
அவர்தம் பெண்சாதிகளாம்
வெள்ளைத் தோற்சிலுப்பிகள்
சமையற்கட்டின் மூலையோரங்களில்
குளிருக்கு அடக்கமாய்
முடங்கிப் படுத்துக்கிடப்பர்.
