வியாழன், 18 ஏப்ரல், 2013

மணிவண்ணனின் பெய்த நூல் எனது பார்வையில்.

முகப்புத்தகத் தோழமைகளுக்கு முத்தமிழ் முத்தங்களுடன் சமர்ப்பிக்கப்பட்ட முதல் புத்தகம் இதுவாகத்தான் இருக்க முடியும். மணிவண்ணனின் ஆன்மாவில் நெய்யப்பட்ட கவிதைகளால் பெய்த நூல் மழை அற்புதம் என்றாலும் அங்கங்கே சமுதாயச் சாடலுடன் அமில மழையும் கூட. மிக விரிவாக தமிழோடு தமிழாகத் தன்னுரையும், தான் பயின்ற கல்வி நிறுவனங்களுக்கு நன்றியும், தன் குடும்பத்தாருக்கு இந்நூலை அன்புப் பரிசாக்கியும் இருக்கும் நூலில் போதிமரங்கள் எனத் தான் ஞானம் அடையப்பெற்ற பலரையும் குறிப்பிட்டிருப்பது சிறப்பு.


பல சிற்றிதழ்களில் வெளிவந்த கவிதைகள் இடம் பெற்றிருக்கிறது இந்நூலில். முதல் கவிதையே குண்டுபட்டுத் துளைத்த தாயின் மார்பில் பாலருந்திய குழந்தை பற்றிய சித்திரம் வரைந்து அதிர்வலைகளை உண்டாக்கியது. கண்ணீரை தீராநதியாகவும் விரல்வழி துடைக்கும் போது மலைவழி நிறைந்து வழியும் நதியாகவும், தண்ணீர்த்தாள்களில் கண்ணீர்க் கவிதை எழுதும் மீனும் வித்யாசம். மரம் வெட்டுதல் பற்றி பச்சைக் கொலை என்னும் கவிதையும் வார்த்தைக் கிருமிகள் புற்றாய் உருக்கொள்ளும் கவிதையும் , அலகில் அமுதம் என்ற கவிதையும் ,குருதியைப் பருகியவாறு கொலை வெறியுடன் புத்தன் ஆயுதத்தைக் கூர்தீட்டும் கவிதையும் ஈழம், 5ம் 6ம் உலுக்கிப் போட்டது.

பெரும்பாலும் நம் பேச்சு மொழி ஆங்கிலக் கலப்பில் அமைவதைப் பெரும் பகடி செய்து சில கவிதைகளும் படைத்துள்ளார்.

early morning எழுந்ததும்
brush பண்ணி
wash பண்ணி
clean பண்ணி
iron பண்ணி
dress பண்ணி
fresh பண்ணி
drive பண்ணி
work பண்ணி என்ற கவிதை பண்ணி வளர்ப்பு என்ற தலைப்பில் நம் ஆங்கில மோகத்தை அக்கக்காக்கிக் காட்டியது.

தன் மனதுக்குப் பிடித்த பெண்ணைப் பார்த்ததும்,

 “உன்னைப்
பார்க்கும்போதெல்லாம்
திருவிழாக்களை
ஞாபகப்படுத்துகின்றன
உன் சந்தனக் கன்னமும்
குங்கும உதடுகளும். “

என்ற காதல் ததும்பும் கவிதை இனிமையைத் தோற்றுவிக்கிறது.

கருவேல மரங்களில் கனகாம்பரம் பூப்பதும் காதலியின் புன்னகையில் சாத்தியம் போலும்.

தேனுறக்கம், அசையா சொத்து, அடையாளம், முகவரி, பனி, வெள்ளை அலைகள், ஈரப்பொழுதுகள், அவன் தோழன்/அவள் தோழி, பயணங்களில், பூவே, மனதை வருடியவை. அப்பாக்கள் பொய் சொல்லலாம் என்ற கவிதை தந்தை மகன் உறவின் பாசத்தை வெளிப்படுத்தியது. நானும் கங்காருதான் ரொம்பவும் அற்புதம் தந்தை மகனின் நேசத்தை நெய்த கவிதை இதுவெனலாம். மழலைச் செல்லழுகை நம்முடன் எப்போதோ பயணிக்கும் ஒரு குழந்தை மேல் நமக்குத்தோன்றும் அன்பை வெளிப்படுத்தியது.

 ”பிசைந்து வைத்த
மதியச் சாப்பாடில்
மனைவியின் கைரேகை”

என்ற கவிதை மனைவி மேலான நேசத்தைப் பகிர்ந்தது. பொதுவாக ஆண்கள் மனைவியைப் பாராட்டுவதில்லை என்ற கருத்தை இக்கவிதை பொய்யாக்கியுள்ளது. மனைவியியும் நேசிப்பவர்கள் இருக்கிறார்கள் என்ற எண்ணத்தை வலிமையாக்கியது.

அடிபட்டு வீழ்ந்து கிடக்கும் கரப்பான் பூச்சி பற்றிய கவிதை மிக வித்யாசம். (ஐம்)பூதங்களைக் கொன்ற மனிதர்களும் மனிதர்களைக் கொல்லும் பூதங்களும் கண்முன்னே இயற்கையை நாம் மாசுபடுத்தும் காட்சியையும் அதன் பின்விளைவுகளையும் நினைவூட்டி பயமுறுத்தியது. பூமித்தாய்க்கு நுரையீரல் நீக்கம் என தொலையும் வனங்களைக் குறிப்பிடுகிறார். ஏசியின் குளிர்காற்றில் ஓசோனின் கன்னங்கள் கிழிவதான கவிதையும் மஞ்சள் பை கவிதையும் அதிரடி.

 “புணர்தலிலும்
புணர்தல் நிமித்தத்திலும்
பிளந்திருக்கும் மண்ணின் யோனியில்
விந்துவைச் செலுத்தவிடாமல்
யாரோ
நிரோத் பொருத்தியிருக்கிறார்கள்
கருத்தரிக்கவியலாமலும்
உயிர்த்தரிக்கவியலாமலும்”

பெரும்பாலும் இயற்கை, தண்ணீரின் அத்யாவசியம் மரம் வெட்டுதல், சுழலியல் குறித்த கவலை, அக்கறை மற்றும் சாடல்கள் கொண்ட கவிதைகளைப் படைத்துள்ளார் பேராசிரியர் மணிவண்ணன். தொடர் இலக்கியப் பயணத்தில் இன்னும் சமுதாயச் சாடல்களாக பசுத்தாய், புண், குருதி, சாபம், கரி ஓவியம், வரதட்சணை, புத்திர சோகம், என்றிலிருந்து மனுசி, விதிகள், மனித மதம், சுதந்திரம், பள்ளி செல்லும் பிள்ளை பெய்த நூல்களால் ஆன சீருடைகளுடன் பயணிப்பது குறித்த கவிதகள் வலி ஏற்படுத்தியவை.

தோற்றுப் பழகுவோம் வெற்றியை நாம் அடையமுதல்படியாய் என உணர்த்திய கவிதை. எனக்குப் மிகப்பிடித்த கவிதையும் இதுதான். இன்று புதிதாய் , ஏழு இளைஞர்களுக்கான எழுச்சிக் கவிதைகள்.முடிவாக அவரின் கவிதை காலம் ஆவோம் என்பதுதான் எல்லாருக்குமான செய்தி.

“நேற்று உதிர்ந்துவிட்டது
இன்று மலர்ந்திருக்கிறது
எங்கேயோ இருக்கிறது
நாளையின் விதை”

இந்த நம்பிக்கைகளை ஊட்டும் பேராசிரியர் மணிவண்ணனின் கவிதைகள் அவரின் இலக்கியச் சொல்லாடல்களுக்காகவும், இயற்கையை நேசிக்கும் மொழிகளுக்காகவும் படிக்கப்படவும் பகிரப்படவும் பின்பற்றப்படவும் வேண்டியவை.

டிஸ்கி:- இந்த விமர்சனக்கட்டுரை பூவரசி இரண்டாம் அரையாண்டிதழில் ( ஜூலை 2012)  வெளியானது. 


5 கருத்துகள் :

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

விமர்சனமும், 'பண்ணி வளர்ப்பு' கவிதையும் அருமை...

துணைவியின் அன்பான கவிதையும், முடிவில் தன்னம்பிக்கை வரிகளும் பிரமாதம்...

நன்றி சகோதரி...

கவியாழி கண்ணதாசன் சொன்னது…

எண்ணமதை பறக்கவிட்டு வானில் ஏணி போட்டு பார்கிறீர்கள்.அருமை

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/04/blog-post_5204.html) சென்று பார்க்கவும்... நன்றி...

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி தனபால்

நன்றி கவியாழி

நன்றி தனபால்.. அதில் என்னுடைய லிங்க் ஓபன் ஆகவில்லையே..

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...