எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 17 ஆகஸ்ட், 2012

கவிதைக்காரர்கள் வீதியில்..

கோதுதல்..

ஒரு தூக்கம் வரும்போது
ஒரு சோகத்தை விழுங்கும் போது
ஒரு கோபத்திலிருந்து விடுபட
ஒரு துக்கத்தை வெளியேற்ற
தேவையாய் இருக்கிறது
தலை கோதுதல்.

தாத்தாவின் முடியடர்ந்த
மார்பில் படுத்தபடி
கதை கேட்டு உச்சுக்கொட்டி
முகம் பார்த்து மல்லாந்திருக்க
தலை கோதும் அவர் கைக்குள்
சுருண்டு வருகிறது
மந்திரக் கோலால்
தொட்டதுபோல் தூக்கம்.


படிப்பு மந்தமோ.,
திருமண பந்தமோ
பார்வையாலே கோதி
தாத்தா வருடும்போது
ஒரு சமரசம் வருகிறது
ஜெயித்து விடுவோமென.

நல்லெண்ணையும் சீயக்காயும்
தாத்தாவின் தலைப்பக்கம்
தொட்டுவைத்துத் திரும்பும் போது
துக்கம் கோதுகிறது
தொண்டையை.
கேவலாய் வெளிப்பட்டு.

தங்கம் உரசி நாவிலிட்டு
பெயரிட்டு அள்ளிக் கொண்டவர்
திரும்பப்போவதில்லை
எத்தனை முறை கூவினாலும்.
பயணப்பட்டுக் கொண்டிருந்தார்
கேளாச் செவியும் பாராமுகமுமாய்
பச்சை ஓலையில்..

அலமாரி லாக்கரைத்
திறக்கும் போதெல்லாம்
மறைந்த தாத்தா
சந்தனப் பாக்கெட்டுகளோடு
வார்த்தைகளால்
கோதியபடி இருந்தார்
பாதுகாத்து வைத்திருந்த
பழைய கடிதங்களில்..

 டிஸ்கி:- இந்தக் கவிதை 2012 ஜூன் மாத குங்குமத்தில் வெளிவந்தது..

5 கருத்துகள்:

  1. தாத்தாவை நினைத்து உருகிய கவிதை அருமை. குங்குமம் இதழில் வெளியானதற்கு மகிழ்வுடன் கூடிய என் நல்வாழ்த்துக்கள் உங்களுக்கு.

    பதிலளிநீக்கு
  2. கவிதை அருமை.
    வாழ்த்துக்கள் அக்கா.

    பதிலளிநீக்கு
  3. வரிகள் அருமை... என் தாத்தாவை நினைக்க வைத்தது... பாராட்டுக்கள்... நன்றி சகோ...

    பதிலளிநீக்கு
  4. தாத்தாக்களும் அவர்களுடைய ஞாபகங்களும் அருமையானவை

    பதிலளிநீக்கு
  5. நன்றி பாலகணேஷ்

    நன்றி குமார்

    நன்றி தனபால்

    நன்றி ஹேமா

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...