எனது இருபது நூல்கள்

எனது இருபது நூல்கள்
எனது இருபது நூல்கள்

புதன், 23 மே, 2012

மனமாச்சர்யங்களை உடைப்போம். அணைகளை அல்ல. & புக் கிளப் இந்தியா ஒரு அறிமுகம்.

வள்ளங்களும் ஓடங்களும் கணக்கற்றுக் கிடப்பது மலையாள நாடு. கடவுளின் தேசம் எனப் புகழப்படும் அளவு வளமை, செழிப்பம். நூறு சதவிகிதம் கல்வியறிவு பெற்ற மக்கள். கம்யூனிஸ்ட் ஆட்சிதான் பெரும்பாலும். இருந்தும் எல்லாருக்கும் எல்லாவற்றையும் பகிர்ந்து தரும் பரந்த மனப்பான்மை இல்லை.தமிழகத்திலிருந்து அரிசி மற்ற அத்யாவசியப் பொருட்கள் அனைத்தும் கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு என்பது போல டீக்கடை நாயராகட்டும், நகைக்கடையாகட்டும், நிதி நிறுவனமாகட்டும், நடிப்புத்தொழிலில் கொடிகட்டிப் பறக்கும் நடிகர் நடிகையராகட்டும். தமிழ்நாட்டில் எல்லாருக்கும் இடம் உண்டு. எல்லாருக்கும் இருக்கவும் வாழவும் எல்லா உரிமைகளும் வழங்கி மதம், இனம் மொழி சாரா தன் இறையாண்மைமை நிரூபித்துள்ளது தமிழ்நாடு.

எல்லாவற்றையும் உற்பத்தி செய்து மற்ற மாநிலத்தவருக்கு வழங்கும் தமிழகத்துக்கு தண்ணீராகட்டும், மின்சாரமாகட்டும் மற்ற மாநிலங்கள் தருவதில் தயக்கம் காட்டவே செய்கின்றன. தமிழனுக்கும் கொடுக்கும் போது மட்டும் அவற்றின் கை சுருங்கி விடுகிறது.

தமிழக கேரள எல்லையில் இருக்கும் முல்லைப் பெரியாற்றின் மூலம் 225 டி எம் சி தண்ணீர் தமிழகத்திற்கு விவசாயத்திற்கும், மின்சார உற்பத்திக்கும் கிடைக்கிறது. வைகையாற்றில் தேக்கப்படும் இந்நீர் தேனி பகுதியின் விவசாயத்திற்கு உதவுகிறது. இதன் தேவையே இன்னும் அதிகமாய் இருக்கிறது. இந்த சூழலில் இது ஒரு நூற்றாண்டுக்கு முன் செஞ்சாந்தையும் சுண்ணாம்பையும் வைத்துக் கட்டப்பட்டது என்பதால் இதன் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் விரிசல் ஏற்பட்டு அணை உடையும் அபாயத்தில் இருப்பதாக கேரள அரசியல்வாதிகள் ஒரு பிரசாரத்தை மேற்கொள்ள அது கேரளாவிலும்., நீர்வரத்து குறைந்தால் என்ன செய்வது என்ற கவலையை தமிழக விவசாயிகளிடமும் விதைத்துத் தேவையற்ற போராட்டங்களையும் சச்சரவையும் உருவாக்கியுள்ளது.

கேரளாவிலிருந்து உயிர் தப்ப பயந்தபடி கானகம்வழியாக எளிய தமிழகமக்கள் வருவதாக செய்தித்தாள்கள் சொல்லுகின்றன. தமிழகத்தில் பல ஆண்டுகளாக நம்முடைய தெருமுக்கின் அடையாளச் சின்னங்களாக இருந்த அப்பாவி நாயரின் கடைகள் அடித்து நொறுக்கப்படுகின்றன. அரசியல் சூதாட்டத்தில் பகடைக்காய்களாக மக்கள் அங்குமிங்கும் உருட்டப்படுகிறார்கள்.

வன்முறைகளற்ற தேசத்தை உருவாக்க காந்தி பாடுபட்ட நம் நாட்டில் தங்கள் சுயலாபத்துக்காக மக்களிடம் தேவையற்ற பீதியை கிளப்பும் முயற்சி பல ரூபங்களில் நடந்துவருகிறது.

நம்நாட்டில் அந்த அணையை கட்டும்போது அதன் பொறியாளரான பென்னிகுயிக் தன் மனைவியின் நகைகளைக் கூட அடகுவைத்துக் கட்டினாராம். ஒரு வெளிநாட்டுக்காரருக்கும் நம் மண்ணின் மேல் இருந்த சேவை மனப்பான்மையை என்ன என்று சொல்ல.? இன்று அதே மண்ணைச் சேர்ந்த சொந்த சகோதரர்களாகிய நாம் நம் சகோதரர்களுக்கே தண்ணீரை மறுக்கிறோம், மின்சாரத்தை மறுக்கிறோம். அது வீணானாலும் பரவாயில்லை யாருக்கும் கொடுக்கக்கூடாது என்ற மனோபாவம் மாறவேண்டும்.

தமிழக அரசு மத்திய நதி நீர் ஆணையம் இட்ட கட்டளையை நிறைவேற்றச் சொல்லிக் கேட்கிறது. அதற்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை. இன்னும் 11.25 டி எம் சி தண்ணீர் தேவை நம் மக்களுக்கு. ஆனால் அந்த அணையை இன்னும் உயர்த்தவும் பலமுள்ளதாக்கவும் அனுமதி கிடைக்கவில்லை. கிடைத்த சிலவற்றையும் நிறைவேற்ற முடியவில்லை.

மார்ஷல் நேசமணி அவர்கள் தமிழக கேரள எல்லைப் போராட்டத்திலும் தமிழகத்துக்கு நீர் கிடைக்க வேண்டியும் போராடிய போது எதிர்த்த கேரளத்தவருடன் கேரள மக்கள் கை கோர்த்தனர். ஆனால் நேசமணி அவர்கள் பெரும் பலம் கிடைக்காமல் நம் சகோதரர்களின் ஆதரவு கிடைக்காமல் தனித்தே போராடினார். இன்னும் எவ்வளவு காலத்துக்குத்தான் நாம் நம் சொந்த நாட்டுக்குள்ளேயே நமக்கு சாதகமாக நீர்வழங்கும்படி இடப்பட்ட சட்டங்களை நிறைவேற்றும்படி போராட வேண்டிவருமோ. நதி நீர் எல்லாம் தேசியமயமாக்கப் படவேண்டும். இதை குறிப்பிட்ட மாநிலத்தவர் தங்களது என உரிமை கோரக்கூடாது.

உள்ளபடியே அந்த அணையில் விரிசல் இருந்தால் செப்பனிடப்பட்டு சீர் செய்யப்பட அனுமதிக்கப்படவேண்டும். அதை விட அதிகம் விரிசல் உள்ள அணைகளை எல்லாம் விட்டுவிட்டு இந்த அணையை மட்டும் உடைக்கவேண்டும் . இன்னும் இரு சிற்றணைகள் கட்டப்படவேண்டும் எனச் சொல்வது அரசியல் ஆதாயத்துக்காகவும், தமிழர்கள் மேல் உள்ள காழ்ப்புணர்வுக்காகவும்தான்.

ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து பகிர்ந்து வாழ்வோம். பிரச்சனைகள் வந்தால் சேர்ந்தே சமாளிப்போம் . இதில் தனிமனிதர்களைத் தாக்க மாட்டோம் என ஒவ்வொருவரும் உறுதி எடுக்க வேண்டும். இதை விடுத்து மற்ற மாநில மக்களின் கடைகளை உடைப்பது, சொத்துக்களை சூறையாடுவது, மரங்களை வெட்டுவது, பாலை கொட்டுவது என அழிவு வேலைகளில் ஆக்கபூர்வமான தமிழரும், கேரளத்தவரும் ஈடுபடக்கூடாது. எதாயிருந்தாலும் மனித உழைப்பு, மனித உயி்ர் மதிக்கப்படவேண்டும்.

எனவே மன மாச்சர்யங்களை உடைப்போம், மனிதநேயத்தோடு அனைத்தையும் நம்முள் பகிர்ந்து வாழ்வோம்.

***********************************************************************************


புக் கிளப் ஒரு அறிமுகம்:-
**************************** .

புக் கிளப் இந்தியா..இது வாசிப்பனுபவம் மறந்துவிட்ட மக்களிடம் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தைத் திரும்பக் கொணர்வதற்காக உருவாக்கப்பட்டுள்ளது.

திரு ஜி். ஒளிவண்ணன் அவர்கள் ரோட்டரி கவர்னராக இருந்தவர். இவர் ஒரு புத்தக வெளியீட்டு நிறுவனத்தின் அதிபரும் கூட. சுமார் 25 வருடங்களாக பதிப்பாளராக புத்தகங்கள் வெளியிட்டு வரும் இவர் இணையத்தின் மூலம் புக் கிளப் இண்டியா என்ற வெப்சைட்டை இந்திய புத்தக வாசிப்பாளர்களுக்காக உருவாக்கி இருக்கிறார்.

இதன் குறிக்கோள் புத்தக நேசர்களை ஒரு பொதுப்படையான இணையதளம் மூலம் ஒருங்கிணைப்பதே ஆகும். இது நிறைய ஆலோசனைகள், மதிப்புரைகள், கலந்துரையாடல்கள், கருத்துப் பகிர்வு, மற்றும் புது புத்தகங்கள் மற்றும் எல்லா புத்தகங்களுக்குமான விமர்சனத்துக்கான ஒரு இணைய மேடை அமைத்துக் கொடுக்கிறது.

இதற்கான இணையதளத்தின் பெயர் www.bookclubindia.net . இது 2011 ஆகஸ்டில் ஆரம்பிக்கப்பட்டது. இது ஆரம்பிக்கப்பட்டு இப்போது வரை 90 நகரங்களிலிலிருந்து பார்வையாளர்கள் தொடர்ந்து பார்வையிட்டும் தங்கள் பங்களிப்பை செய்தும் வருகிறார்கள். கிட்டத்தட்ட 60 வெளிநாடுகளிலிலிருந்து பார்வையாளர்களைப் பெற்றுள்ளது புக் கிளப்.

பதிப்பாளர்கள் தங்கள் புதுப் புத்தகம் பற்றியும் புத்தக வெளியீடு பற்றியும் பகிர்ந்து கொள்ள இது வகை செய்கிறது.ஒரு புத்தகம் பற்றிய மதிப்புரை, கருத்துரை இதில் வாசகர்களுக்கு கிடைக்கச் செய்கிறது. குழந்தைகளுக்கான புத்தகங்கள் பற்றியும் ஒரு ஸ்பெஷல் இடம் கொடுக்கிறது.

இந்த வெப்சைட்டின் நோக்கம் புத்தக வாசிப்பாளர்கள் வாழ்வில் தங்களைப் பாதித்த எழுத்துக்களை, புத்தங்கங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதே. எந்த புத்தகம் பற்றியும் உங்கள் கருத்துக்கள், மதிப்புரைகள், அலசல்கள் எதுவானாலும் அனுப்பவேண்டிய முகவரி bookclubindia@gmail.com.

புத்தகம் வாசிப்பது ஒவ்வொருவர் வாழ்விலும் ஒரு புரட்டிப் போடும் அனுபவத்தை எப்போதேனும் உண்டாக்குகிறது. எனவே புத்தகத் திருவிழா நடைபெறப்போகும் இந்நேரத்தில் நீங்களும் புக் க்ளப் மெம்பராகி உங்க கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

டிஸ்கி:- இந்தக் கட்டுரை ஜனவரி 1 - 15 , 2012 இன் அண்ட் அவுட் சென்னையில் வெளியானது.  


3 கருத்துகள்:

  1. ஒரே ஒரு நிமிஷம் இந்திய அரசியல்வாதிகளை பற்றி சிந்தித்தால் கூட ரத்தம் சூடாகி கொதித்து கண்களின் வழியாக தெறித்து வெளியேறிவிடும் கோபம் கொப்பளிக்கிறது நெஞ்சில்.

    பழி, பாவத்திற்கான பயம் கொஞ்சம் கூட அரசியல்வாதிகளின் நெஞ்சில் இல்லை சகோ . :(

    பதிலளிநீக்கு
  2. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...