எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 31 ஆகஸ்ட், 2010

கவியரசர் இல்லமும் கர்னகை கதையும்


ஒவ்வொரு முறையும் ஊர் செல்லும் சமயங்களில் சக்தியை புதுப்பித்துக் கொள்வதுபோல் பிள்ளையார்பட்டியும் குன்றக்குடியும் போவது வழக்கம்.. இந்தமுறை நெருங்கிய உறவின் திருமணம் என்பதால் சம்பந்தப்பட்ட சம்பந்தப்புரமும் செல்லவேண்டி சிறுகூடல் பட்டி விஜயம்.. சென்றபின்தான் தெரிந்தது .. பக்கத்திலேயே கவியரசர் இல்லம் இருப்பது... பார்வை நேரம் அல்ல என்பதால் உள் சென்று பார்க்க இயலவில்லை.. ஆனால் ஒரு கவிதை கருக்கொண்ட கனவு போல அந்த இல்லம் என்னை மயக்கியது... எப்பேர்ப்பட்ட வீச்சு அவருடையது .. ஆசுகவி..அறம் பாடினால் பலிக்கும். மகாகலைஞனின் இல்லம் தொட்ட காற்று என் உள்ளம் புகுந்து உருவேற்றியது.. இன்னும் இன்னும் சிறக்க எழுது ..முன்னேறு என்று.

திங்கள், 30 ஆகஸ்ட், 2010

எய்தது என்ன....?

அவரவரே நிரம்பிய
அட்சய பாத்திரமாயிருக்க..
அடுத்தவரிடம்
பிட்சைப் பாத்திரம் ஏந்தி..

குத்திய முள் எல்லாம்
பிடுங்கிப் போட்ட பின்னும்
தொடர்ந்து வந்து
கொண்டு வலி மட்டும்...

பரமபதப் பாம்புகளால்
ஏறுதலும் இறங்குதலுமான
வாழ்வில் எது குறிக்கோள்..?
எய்தது என்ன..?

செவ்வாய், 24 ஆகஸ்ட், 2010

நட்பும் ..துணையும்..

அறிமுகம் ஆனவுடனே
முகம் பார்க்கக் குழைந்து
குரல் கேட்க விழைந்து
விருந்துண்ண அழைத்து
விடியுமட்டும் கதைத்து
முடியுமட்டும் முயன்று
முடிந்தவரை அடைந்து
நீர்த்துப் போகிறது அல்லது
மந்திரிக்க வேண்டிய
விஷக்கடியாகிறது

திங்கள், 23 ஆகஸ்ட், 2010

தமிழாய் தமிழுக்காய்..


கூழுக்காய்., பாலுக்காய்.,
வேலைக்காய்., வெட்டிக்காய்.,
அலையாய் அலைந்ததில்லை.,
தமிழாய் தமிழுக்காய்..
ஆங்கிலமா ..அரபியா
அனைத்துக் கலப்பிலும்
அணையாமல் காத்துவிடு
தமிழாய் தமிழுக்காய்..

சனி, 21 ஆகஸ்ட், 2010

மாயாவி..

நீ கொடுத்த கோப்பை அப்படி
நீ இல்லாத போதும்
எனக்கானதை சுரந்து கொண்டே..

எல்லா மனத்திலும்
வாணவேடிக்கை உன் வருகையால்
என் பெர்சியாய்டே..வா..

நிலவாய் மேகத்துள் மறைந்து..
அதுதானே உன் கவர்ச்சி..
எண்ணத்தீயே..