பஞ்சு மிட்டாய்
”பஞ்சு மிட்டாய் சேலை கட்டி பட்டு வண்ண ரவிக்கை போட்டு”. ’ஜிங்கு ஜக்கு சக்குச் சக்கு ஜிங்கு ஜக்கு சக்குச் சக்கு’ என்று கரகத்தை சுற்றிக் கொண்டிருந்தாள் அந்தப் பெண். தலையில் கிளி வைத்த கரகமும் பஞ்சவர்ணக்கிளிபோலச் சிவந்திருந்த அவளும் கை விரித்து ஆடுகையில் மொத்தக் கல்லூரிக் கூட்டமும் ஆ வென்று பார்த்துக் கொண்டிருந்தது.
அவளின் நீலக்கலர் சராய் போன்ற கீழுடுப்பும் அதன் மேல் மிட்டாய் ரோஸில் கவுன் போன்ற மேலுடுப்பும் முகத்தில் கொஞ்சம் அதிகப்படியான மேக்கப்பும் கரகாட்டத்துக்கான கலாசார உருவத்தை ஒரு நவநாகரீக யுவதியின் மேல் தீட்டி இருந்தது. தமிழனின் தொன்மக்கலையை ஒரு கல்லூரியில் அவளின் கம்பீரம் தன்னம்பிக்கையாக நிகழ்த்திக் கொண்டிருந்தது.
ஹூய் ஹோய் என்று அவள் ஸ்டேஜில் வந்தபோது கத்தியது மாணவர் கூட்டம். ரெக்கார்டரை விடச் சத்தமாகக் கத்தினாலும் அவள் நெஞ்சு நிமிர்த்திக் கரங்குவித்து ஒரு அழகான கும்பிடோடு நாட்டியக்காரியின் லாவகத்துடன் ஸ்டேஜுக்கு நடுவில் வந்து நின்றதும் அசந்தது சபை.