காமம் குரோதம் லோபம் மதம் மாச்சர்யம் ஆகிய ஐந்து கீழ்நிலைக் குணங்களும் வந்துவிட்டால் ஒரு மனிதன் உயர முடியாதது மட்டுமல்ல. கீழான நிலைக்கும் போய்விடுவான். அப்படி ஒரு கந்தர்வன் தன் கீழ்நிலைக் குணத்தால் அரக்கனானதும் அதன்பின் சாபவிமோசனம் பெற்றுக் கந்தர்வனானதையும் பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.
ராமனும் சீதையும் இலக்குவனும் கைகேயி தயரதனிடம் கேட்டுப் பெற்ற வரத்தினை நிறைவேற்றப் பதினான்கு ஆண்டுகள் வனவாசம் செய்யப் புறப்பட்டனர். அப்படி அவர்கள் சித்திரகூடத்தில் தங்கி அதன் பின் பத்தாண்டுகள் கழித்துத் தென்திசை நோக்கிச் சென்றார்கள்.
அத்திரி முனிவரின் ஆசிரமம் எதிர்ப்பட்டது. அங்கே அத்திரி முனிவரும் அனுசூயாதேவியும் வரவேற்று உபசரித்தனர். அனுசூயாதேவி தன் ஆபரணங்களை சீதைக்குப் பூட்டி அழகு பார்த்தார். அவர்களிடம் விடைபெற்று ராமனும் இலக்குவனும் சீதையுடன் தண்டகாரண்யம் நோக்கிப் பயணமாயினார்.
