காயத்ரி பொதிகை மங்கையர் சோலை குழுமத்தில் இருக்கிறார். மார்கழி முழுவதும் தினம் ஒரு பாசுரத்துக்குக் காவிக் கோலம் வரைந்து அசத்தி இருந்தார். பாசுரத்துக்குக் கோலம் என்பது புதுமையான விஷயம் என்பதால் இதுபற்றி அவரிடம் விசாரித்தபோது அவர் கூறியவை இவை.
கோலக்கலை , எனது பார்வையில்
கோலம் என்பது ஒரு 'வரைகலைப் பிராத்தனை'. 64 கலைகளில் ஒன்றான கோலக்கலை , நம் வீட்டு வாசலின் அடையாளம். கோலம் என்ற சொல் அழகு, ஒப்பனை, வரிசை என பல பொருள் கொண்டுள்ளது. வேதகாலம் தொட்டே கோலம் போடும் வழக்கம் இருந்தது என்பதை யாக சாலை பூஜையின் போது ,ஹோம குண்டத்தை கோலத்தின் மீது வைத்து , மஞ்சள் ,குங்குமம் ,பூவினால் அலங்கரித்ததாக இலக்கியங்கள் கூறுகின்றன . அபிஷேகம், ஆராதனை ,பூஜை போன்றவற்றை இசைப் பாடல்களாக பாடி கடவுளிடம் பிரார்த்தனையை செலுத்துவது போல் , கோலம் மூலமாக நம் பிரார்த்தனையை செலுத்துவதும் ஒரு வழக்கம் தான்.

