எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 2 ஏப்ரல், 2023

நவரசத் திலகம் முத்துராமன்

 

நவரசத் திலகம் முத்துராமன்


சிவப்புக்கல்லு மூக்குத்தி சிரிக்க வந்த மான்குட்டி ஆஹா! தங்க முகத்துல குங்குமப் பொட்டு வைச்சிக்கிட்டு நீ எங்கடி போறே சுங்குடிச் சேலை கட்டிக்கிட்டுபடிக்கும்போதே தெரிஞ்சிருக்குமே இது நம்ம கவியரசரின் வரிகள்னு. இது நடிகர் முத்துராமன் நடித்த எல்லோரும் நல்லவரே என்ற படத்தில் இடம்பெற்ற பாடல்.

பத்தாவது படிக்கும்போது ஒரு படம் வந்தது. தாலியா சலங்கையா என்று. பரிட்சை முடிந்த அன்று ஒரு தோழி கதை சொல்ல எங்களை அழைக்க வந்த மாட்டு வண்டியைத் திருப்பி அனுப்பி விட்டு அந்த சுவாரசியமான கதையைக் கேட்டோம் !. ஏன்னா வீட்ல கூட்டிட்டுப் போக மாட்டாங்க !

படத்தின் தலைப்பும் சரி படமும் சரி எங்கம்மா, எங்க பெரியம்மா இருவரும் பார்த்து அனுமதித்தபின்தான், நாங்கள் படம் பார்க்க அழைத்துச் செல்லப்படுவோம். அப்பிடி ஸ்ட்ரிக்ட். அதனால தேவரின் தெய்வம், கண்ணாமூச்சி, கை கொடுக்கும் கை, நத்தையிலே முத்து, அனுபவி ராஜா அனுபவி, பணம் பெண் பாசம், எதிர்நீச்சல் எல்லோரும் நல்லவரே என்ற நல்ல படங்களைப் பார்த்து நல்ல பிள்ளைகளாக வளர்ந்தோம்J அதனால் அநேக முத்துராமன் படங்களைப் பார்த்திருக்கிறோம்

 நடிகர் திலகம், மக்கள் திலகம் எல்லாம் கோலோச்சிய காலத்திலும் நவரச திலகம் என்ற அடைமொழியைப் பெற்றவர் நடிகர் முத்துராமன் அவர்கள். முதலில் நாடகங்களில் நடித்து வந்த இவர் பின்னர் திரைப்பட நடிகரானார். கிட்டத்தட்ட 190 படங்களில் நடித்துள்ளார். ஸ்ரீதர், பாலசந்தர், எஸ் பி எம், கோபாலகிருஷ்ணன் ஆகியோரின் படங்களில் பெரும்பாலும் நடித்துள்ளார்.

தஞ்சாவூரில் உள்ள ஒரத்தநாட்டில் 1929 ஜூலை 4 ஆம் தேதி பிறந்தவர். பெற்றோர் ராதாகிருஷ்ணன் ஓந்திரியார்,ரத்னாவதி அம்மாள். இவர்தான் முதல் தலைமுறை நடிகர். இவருக்குப் பின் இவரது மகன் கார்த்திக்கும்,பேரன் கௌதம் கார்த்திக்கும் என மூன்று தலைமுறைகளாக நடிப்புப் பாரம்பர்யம் தொடர்கிறது. இவரது மனைவி சுலோச்சனா மற்றும் இரு மகன்கள் கணேஷ் & கார்த்திக்.

இரண்டு மூன்று ஹீரோக்களில் ஒருவராகவும் இவர் பல படங்களில் நடித்திருக்கிறார். எம்ஜியார், சிவாஜி மட்டுமல்ல, கல்யாண்குமார், ரவிச்சந்திரன், தேங்காய் சீனிவாசன், ஜெய்சங்கர், ஏவிஎம் ராஜன் ஆகியோருடனும் மற்றும் கதாநாயகனைவிடக் கதாநாயகிக்கு முக்கியத்தும் உள்ள படங்களிலும் கூட நடித்துள்ளார்.

நடிப்பைப் பிழிந்து ஞானப் பழரசம் கொடுக்காமலே தனது இயல்பான நடிப்பினாலே நவரசத்தையும் படைத்தவர் இவர் என்றால் மிகையாகாது. துணை நாயகனாகவும் அதிலும் பல்வேறு குணாதிசயங்களையும் மாண்புறச் சித்தரித்தவர்.

 1951 இல் அறிமுகம். பார் மகளே பார், சர்வர் சுந்தரம், பஞ்சவர்ணக்கிளி, காதலிக்க நேரமில்லை, ஊட்டி வரை உறவு, படித்தால் மட்டும் போதுமா, கொடி மலர், போலீஸ்காரன் மகள், கற்பகம், எதிர்நீச்சல், குங்குமம், நவக்ரஹம், கர்ணன், மகாகவி காளிதாஸ், நாணல், பூஜைக்கு வந்த மலர், அனுபவம் புதுமை, நெஞ்சிருக்கும் வரை, திருவருட்செல்வர், கண்ணே பாப்பா, கனிமுத்துப் பாப்பா சிவந்தமண், சுபதினம், துலாபாரம், அவளும் பெண்தானே, போக்கிரி ராஜா, குரு,லெக்ஷ்மி வந்தாள் எனகிட்டத்தட்ட 190 படங்களில் நடித்துள்ளாராம்.! 

1956 இல் ரங்கூன் ராதா அதன் பின் அரசிளங்குமரி படத்தில் எம்ஜியாருடன் ஏற்றமுன்னா ஏற்றம் என்ற பாடலில் தோன்றியுள்ளார். ஆடம்பரமில்லாத பாந்தமான எளிமையான அழகு, பெரிய காலர் கொண்ட சட்டை, மெல்லிய வசீகரத்துடன் கூடிய கண்ணியமான பார்வை, பென்சில் மீசை.

படித்தால் மட்டும் போதுமா, காலங்களில் அவள் வசந்தம், ராமன் எத்தனை ராமனடி, காசேதான் கடவுளடா (ஜம்புலிங்கமே ஜடாதரா) பாடல் விலாநோகச் சிரிக்க வைக்கும் அனுபவி ராஜா அனுபவியில் ஹீரோயின்ஸ் பெயர் ரமாமணி ராஜாமணி. “”அழகிருக்குது உலகிலே ஆசை இருக்குதுமனசிலே” “அழகுப் பெண்களின் கையாலே அடிவிழுந்தாலும் சந்தோஷம்என்று நல்ல காமெடிப் படம்.

சித்திரைச் செவ்வானம் சிரிக்கக்கண்டேன். இதை என் தோழி வஹிதா ரெஹ்மான் பாடி கேக்கணும். பதின்பருவப் பாடல். அற்புதம். ஆனா படமாக்கப்பட்டவிதம் சொதப்பல். கவிதாவும் முத்துராமனும். ஆனால் கவிதா பயந்து ஒதுங்கி நம்மையும் பதட்டப்பட வைத்திருக்கிறார் காட்சியமைப்பில். கெமிஸ்ட்ரி பிசிக்ஸ் எல்லாம் வொர்க்கவுட் ஆகலை போல. :) மாக்ஸி என்னும் உடையணிந்த கவிதாவும்ஃபுல் ஃபார்மல்ஸில் ) பாண்ட் ஷர்ட்டில் முத்துராமனும் நம்ம தமிழ் சினிமா டூயட்டின் விநோத ஸ்பெஷல். :)  ஒரு வானவில் போலே என் வாழ்விலே வந்தாய் என்ற பாடலும் அற்புதம்.

புனித அந்தோணியார், அன்னை வேளாங்கண்ணி, ஆதி பராசக்தி, திருவிளையாடல், முருகன் அடிமை( திருந்தி வாழும் திருடனாக) ,திருமலை தெய்வம், காரைக்காலம்மையார், ராஜராஜசோழன் ( வந்தியத்தேவன்) , கர்ணன் (அர்ஜுனனாக), தேவரின் தெய்வம், திருவருட்செல்வர் ( அப்பூதி அடிகள்), மகா கவி காளிதாஸில் (போஜராஜனாக) என ஆன்மீக, சரித்திரப்படங்களிலும் இயல்பாகத் தன் நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். இதில் ஆன்மீகவாதியாகவும் ராஜா மேக்கப்பும் கூடப் பொருத்தம்தான். ராஜராஜ சோழனில்கத்து திரைக்கடல்”  என ஒரு பாடலும்கூடப் பாடி இருக்கிறார்.


கௌரவவேடம் தாங்கிய படங்கள் சவாலே சமாளி,நீயா, ஸ்கூல் மாஸ்டர், வீட்டுக்கு வந்த மருமகள், தெய்வ சங்கல்பம்,எங்கிருந்தோ வந்தாள், காவல் தெய்வம், நம்ம வீட்டு லெக்ஷ்மி, தாயே உனக்காக.

நெஞ்சிருக்கும் வரையில் எங்கே நீயோ பாடலில் குடித்து விட்டு வரும் கணவனாக என்ன பர்பார்மென்ஸ் ! வயிற்றை எக்கிக் கொண்டு குழன்ற பார்வையுடன் குளறிய நடையுடன் மாடிப்படி ஏறுவதும் மனைவி உணவைப் பரிவுடன் ஊட்ட தெளிவற்றுப் பார்த்துப் படுத்துக் கொள்வதும் என உண்மையான குடிகாரனின் நடத்தையை வெளிப்படுத்தி இருப்பார்.

பார் மகளே பாரில் அன்புக் காதலனாகஅவள் பறந்து போனாளேஎனத் தள்ளாடி நடந்து மணல்மேட்டில் சோர்வுடன் விழுவதும், கற்பகத்தில் சுயநல மகனாகவும், காதலிக்க நேரமில்லை நகைச்சுவையிலும் வெளுத்து வாங்குவார். கேட்டதெல்லாம் நான் தருவேன் எனை நீ மறக்காதே என ஜெயம்மாவுடன் திக்குத்தெரியாத காட்டில் ரவுண்ட் நெக் பனியன் போட்டு அட்டகாசமான பர்ஃபார்மன்ஸ் மீசை கூட இல்லாமல் ஜெண்டில் லுக். “ஒரு பொழுதேனும் பிரிவறியாமல் வாழ்வது நாம்தானேஎன்ற வரிகளை உணர்வுபூர்வமாகச் சொல்லுவார்.

பட்டையாக சைட் பர்ன்ஸ் எனப்படும் கிருதா, தலை நிறையக் கூடை கூடையாய் முடி, மடித்துவிடப்பட்ட சட்டைக் கை, கறுப்பு ஸ்ட்ராப் போட்ட வாட்ச், எங்க வீட்டுத்தங்கத்தேரில் எந்த நாளும் திருவிழா என்ற பாடலில் அந்த வாட்ச் வலது கைக்கு மாறி இருக்கும் J . தொப்பையே இல்லாத உடற்கட்டு என்பதால் வேஷ்டி மட்டுமல்ல பெல்ஸ், ஹாஃப் கோட், கோட் சூட், சஃபாரி, பைஜாமா ஜிப்பாவும் எடுப்பாக இருக்கும்.

எல்லோரும் நல்லவரேயில்பகை கொண்ட உள்ளம் துயரத்தின் இல்லம்என்ற பாடலில் கம்பீரமான பார்வை ஆளுமை, வாணி ராணியில்முல்லைப்பூ பல்லக்குப் போவதெங்கேஎன்ற இனிமையான பாடலில் கனிவும் கண்டிப்பும் நிறைந்த பார்வை, நடிப்பு, மெல்லிய ரொமான்ஸ் இருக்கும். தீர்க்க சுமங்கலியில்மல்லிகை என் மன்னன் மயங்கும்வாணி ஜெயராமின் குரல் குழைவுடன் விஜயாம்மா முத்துராமனின் தாம்பத்யம் மணக்கும்.

சூர்யகாந்தியில்நான் என்றால் அது அவளும் நானும்பாடல் காட்சியில்தான் எத்தனை முகபாவங்கள். நளினமும் கோபமும் கலந்த சொஃபிஸ்டிகேட்டட் லுக். ஜெயம்மாவுக்கு ஈடான நடனம். பொறாமைக்காரராகவும் பின் பக்குவப்பட்டவராகவும் சிறந்த நடிப்பு. கோபத்தையும் அன்பையும் பொறாமையையும் அசூயையும் வெளிப்படுத்தும். அதிலேயே மேரி தில் ரூபா காதல் விளையாட்டு. ஆனால் நிறையப் படங்களின் பாடல்களில் மனைவி மேல் உள்ள பெருமிதம் வெளிப்படும்படியாகவே சிறப்பாக நடித்திருப்பார்.

கே ஆர் விஜயாம்மாவுடன் 19 படங்கள். ”பூ முடித்தாள் இந்தப் பூங்குழலியில் சந்தேகக் கண்ணோடு தாலி கட்டுதல், நத்தையிலே முத்துவில் இழைவான துறு துறு பார்வை, ”வீணை பேசும் அது மீட்டும்விரல்களைக் கண்டுவில் மென்மையான பார்வை கனிமுத்துப் பாப்பாவில்ராதையின் நெஞ்சமேயில் உரிமைப் பார்வை, ”வரவேண்டும் வாழ்க்கையில் வசந்தம்என மயங்கும் பார்வை, சம்சாரம் என்பது வீணையில்என் வாழ்க்கை திறந்த ஏடுஎன்ற தெளிந்த பார்வை, நாணலில்விண்ணுக்கு மேலாடையில் பத்துக்கு மேலாடைஎன்ற கேள்விப் பார்வை, சீர்வரிசை படத்தில்கண்ணனை நினைக்காத நாளில்லையேஆமோதிக்கும் பார்வை, ”மௌனமே பார்வையால் ஒரு பாட்டுப் பாடவேண்டும்என்ற பாடலின் தொடக்கத்தில் தாமரைப் பூவைத் தலைவன் தாளில் வைத்து வணங்கும் விஜயகுமாரியைக் கண்டு வியக்கும் பிரமிப்புப் பார்வை, இதோடு காதலிக்க நேரமில்லையில் காஞ்சனா பாடும்என்ன பார்வை உந்தன் பார்வைஎன்ற ரொமாண்டிக் பார்வை. இவை அனைத்தும் அவர் ஒரு சிறந்த நவரச திலகம் என்பதைப் புலப்படுத்துகின்றன.

அநேகமாக நகைச்சுவைக் காட்சிகளில், ஓவர் டயலாக் டெலிவரி இல்லாமல் பாமா விஜயத்தில் மனைவி காஞ்சனா பக்கத்து வீட்டு நடிகை பாமாவைப் பற்றி வியந்து கூறும்போது ம்,,, ம்ம்ம்,, அசால்டாக தண்டால் பஸ்கி எடுத்துக்கொண்டே கண்களால் குறும்பை வெளிப்படுத்தி இருப்பார். அவருடன் எழுந்து எழுந்து அமரும் காஞ்சனா ஒரு கட்டத்தில் சோர்ந்து போய் அமர்ந்து விடுவார்!

பாலக்காட்டு மலையாளம் பேசும் நாயராக எதிர்நீச்சலில் உண்மையிலேயே இவர் கேரளாக்காரரோ என நினைக்க வைத்தவர். புற்று நோயால் பாதிக்கப்பட்ட கணவனாக முதிர்ச்சியான நடிப்பு நெஞ்சில் ஓர் ஆலயத்தில், தனக்குப் பின்னும் தன் மனைவி இன்னொரு துணையோடு வாழ வேண்டும் என்ற துடிப்பு உள்ள நல்லிதயம். சர்வர் சுந்தரத்தில் தன் காதலியையே தன் நண்பன் நாகேஷும் காதலிக்கிறான் என்று தெரிந்ததும் துள்ளும் அவரது விழிகள் வார்த்தைகள் இல்லாமலே அவரது மனதைப் புரியவைக்கும்.

பால் நியூமென் என்ற ஹாலிவுட் நடிகரின் நடிப்பை ஒத்தது முத்துராமனின் நடிப்பு என்று நடிகர் ராஜேஷ் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். நடிகைகளிடம் ஜெண்டில்மேன் என்று பெயரெடுத்தவர். சொல்லப்போனால் சிவாஜியே ஒரு பேட்டியில் தனக்குப் பிடித்த நடிகர் முத்துராமன் என்று கூறி இருக்கிறார். இளமையான தோற்றத்தோடேயே மறைந்துவிட்டார்.

வித்யாசமான குணாதிசயம் கொண்ட கதாபாத்திரங்கள். அதிலும் தன்னுடைய சிறந்த பங்களிப்பை வழங்குவார். மென்மையான உடல்மொழி, மிதமான நடிப்பு, தெளிவான தமிழ் உச்சரிப்பு ( தாம்பூலத்தை அதக்கியது போல பின்னாட்களில் கார்த்திக் பேசி சொதப்பியது ஏனோ ஞாபகம் வருகிறது ), நல்ல குரல் வளத்தால், இதமான பார்வையால் தன்னை மெருகேற்றி வழங்கியவர். அதனாலேயே ரசிகர்களால் நவரச திலகம் என்று கொண்டாடப்பட்டார். பெரிய புகழ் அடையாவிட்டாலும் அழியாப்புகழ் பெற்றுள்ளார்.

தனது 53ஆவது வயதில் அக்டோபர் 16, 1981இல் ஊட்டியில் போக்கிரிராஜா படப்பிடிப்பின்போது இவர் மாரடைப்பால் மறைந்தது திரையுலகிற்கு ஏற்பட்ட துரதிர்ஷ்டமே. காத்திரமான நடிப்பு. காலத்தால் அழியாத நடிப்பைக் கொடுத்தவர். அலைகள் ஓய்வதில்லையில் அவரது மகன் கார்த்திக்கும் கடல் படத்தில் பேரன் கௌதம் கார்த்திக்கும் அறிமுகமானதுஒரு வித்யாசமான ஒற்றுமையே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...