எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 21 அக்டோபர், 2022

மின்னி மறைந்த நட்சத்திரங்கள் குணாலும் மோனலும்

 மின்னி மறைந்த நட்சத்திரங்கள் குணாலும் மோனலும்


தமிழ் சினிமாவில் நடிக நடிகையரின் தற்கொலை அவ்வப்போது நிகழ்ந்து நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தும். அந்தவகையில் 2002 இல் 22 வயதே ஆன மோனலும், 2008 இல் 31 வயதே ஆன குணாலும் தற்கொலை செய்து கொண்டது வருந்தத் தக்க விஷயம். இருவரும் பார்வை ஒன்றே போதுமே மற்றும் அதே யூனிட்டுடன் பேசாத கண்ணும் பேசுமே ஆகிய இரு படங்களில் இணைந்து நடித்திருக்கிறார்கள்.

நடிகை சிம்ரனின் தங்கையான மோனல் விஜயுடன் பத்ரி, குணாலுடன் பார்வை ஒன்றே போதுமே ஆகிய படங்களின் மூலம் புகழ்பெற்றவர். குணால் காதலர் தினம், வருஷமெல்லாம் வசந்தம், அற்புதம் போன்ற படங்களில் நடித்தவர். இருவரும் தாங்கள் தங்கியிருந்த வீட்டிலேயே தற்கொலை செய்து கொண்டனர்.  இவர்களின் மறைவை மோனலின் அக்கா சிம்ரனும் குணாலின் தந்தை ராஜேந்திரசிங்கும் மறக்காதது போல் நம்மாலும் கடக்க இயலவில்லைதான். நிறைவேறா காதலா, மன அழுத்தமா. காரணம் தெரியா தற்கொலைகள். 

ராதா மோனல் நேவல் என்பதுதான் மோனலின் முழுப்பெயர். டில்லியில் 26 ஜனவரி 1981 இல் பிறந்து சென்னையில் 14 ஏப்ரல் 2002 இல் மறைந்தவர். அசோக் நேவல், சாரதா இவரது பெற்றோர். இவருடைய சகோதரிகள்தான் சிம்ரன் மற்றும் ஜோதி. சுமித் என்று ஒரு சகோதரரும் உண்டு. மிதிபாய் கல்லூரியின் இளங்கலை வணிகவியல் பட்டதாரியாக இருந்தாலும், இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டாலும் தமிழ்ப் படங்களை நடிக்கத் தேர்ந்தெடுத்தார். முன்பே ஃபேஷன் ஷோக்கள் அழகுப் போட்டிகளில் பங்கேற்றிருக்கிறார்.

பத்ரிதான் அறிமுகப் படம் என்றாலும் குணாலுடன் நடித்த பார்வை ஒன்றே போதுமே படம்தான் முதலில் வெளியானது. பாக்ஸ் ஆஃபீஸ் ஹிட் என்று சொல்லமுடியாவிட்டாலும, வணிகரீதியாகப் பெரிய வெற்றியைப் பெறாத படங்கள் எனினும் இவர் சில படங்களில் ஹீரோயினாகவே நடித்துள்ளார். இறக்கும்போது தாதாகிரி மற்றும் பெஸ்ட் ஆஃப் லக் என்ற படங்களிலும் பணிபுரிந்திருக்கிறார். இவர் இறந்த நாளில் இவரது புதிய படமான பியே ஜென்மம் – பேய் ஜென்மம் என்ற படத்தின் வெளீயீட்டில் இவர் கலந்து கொண்டது வித்யாசமான சம்பவம்.

2000 இலிருந்து 2002 வரை இவர் இந்திரதனுஷ், பார்வை ஒன்றே போதுமே, பத்ரி, லவ்லி, சமுத்திரம், இஸ்டம், விவரமான ஆளு, மா துஜே சலாம், சார்லி சாப்ளின், பேசாத கண்ணும் பேசுமே, ஆதிக்கம் எனப் பதினோரு  படங்களில் நடித்துள்ளார். இதில் கன்னட, தெலுங்கு, ஹிந்திப் படங்களும் உண்டு. எல்லாவற்றிலும் ஸ்வேதா, நீதா, நர்கிஸ், திலோத்தமா, யவனிகா, மதுபாலா, பிரியா, ஜான்ஸி என்று பெயர்கள்.

இவரது மறைவுக்குப் பின் சிம்ரன் வெளியிட்டுள்ள ட்வீட்டில்” இப்போது நீ என்னோடு இல்லாமல் இருக்கலாம். ஆனால் நாம் எப்போதும் ஒன்றாக இருக்கிறோம் என்பது எனக்குத் தெரியும். 20 வருடங்கள் ஆனாலும் நீ என்னும் ஒரு அங்கமாக இருந்து வருகிறாய்.” என்று கூறி இருக்கிறார்.

குணால் குமார் சிங் 1999 இல் வெளியான காதலர் தினம் படம் மூலம் தமிழ்த் திரைக்கு அறிமுகமானவர். முதல்படமே சூப்பர் டூப்பர் ஹிட். செப்டம்பர் 29, 1977 இல் ஹரியானாவில் பிறந்தவர். மும்பையில் ஃபிப்ரவரி 7, 2008 இல் இறந்தார். 1999 முதல் 2007 வரை ஒன்பது ஆண்டுகள் திரைத்துறையில் இருந்தார். இருபத்தி இரண்டு வயதில் திரையுலகில் நுழைந்தார். 16 படங்களில் நடித்தார். காதலர் தினத்தில் சோனாலி பிந்தரே ஜோடி. இணையத்தில் அவரைக் காதலிக்கும் இளம் மாணவன் பாத்திரம்.

இதன் பின் பார்வை ஒன்றே போதுமே மற்றும் புன்னகை தேசம் ஓரளவு வெற்றி பெற்றன. முதல் படத்துக்குப் பின் அடுத்த படங்கள் அனைத்துமே பெரிதாகப் பேசப்படவில்லை. வாய்ப்புக்களும் அதிகம் இல்லை. தூக்க மாத்திரை எடுத்துக் கொள்ளும் பழக்கமும் இருந்ததாம். நடிக்க வாய்ப்பு இல்லாதபோது பல படங்களுக்கு உதவி எடிட்டராகவும் உதவி இயக்குநராகவும் பணியாற்றி உள்ளார். பாலகிரி என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார்.

பேசாத கண்ணும் பேசுமே, எங்கே என் கவிதை, உணர்வுகள் எனப் பல படங்கள். நவாவின் நிலவினிலே, கிமு கிபி, காதலித்தல் ஆனந்தம் இவை எல்லாம் இவர் நடித்துப் பாதியில் நின்று கிடப்பில் போடப்பட்ட படங்கள். ஷெரின் சிருங்காருடன் காதல் திருடா மற்றும் நந்தாவின் தோடு ஆகிய இரு படங்களும் இன்னும் வெளிவரவில்லை. 2007 இல் வெளியான நண்பனின் காதலிதான் அவர் நடித்த கடைசிப்படம்.

காதலர் தினம், தில் ஹி தில் மே , பார்வை ஒன்றே போதுமே புன்னகைதேசம், வருஷமெல்லாம் வசந்தம், பேசாத கண்ணும் பேசுமே, எங்கே என் கவிதை, அற்புதம், சூப்பர்டா, தேவதையைக் கண்டேன், திருடிய இதயத்தை, சாதுரியன், மன்னிக்கவும் எனக்குக் கல்யாணமாயிடுச்சு, நண்பனின் காதலி, ஹிந்தியில் ஜிந்தா, பச்கே ரெஹ்னா ரே பாபா ஆகியவற்றில் நடித்தார். படங்களில் ராஜா, ரமேஷ், வினோத், விக்ரம், பாபு, அரவிந்த ராகுல், பாலா, இளங்கோ, கணேஷ், விஜய், சூரியா என்று பெயர்கள்.

மும்பை ஓஷிவாராவில் உள்ள தனது வீட்டில் இவர் தூக்கிட்டு இறந்தபின் அங்கே கடைசியாக இருந்தவர் நடிகை லவினா பாட்டியா. ஆனால் அவருக்கும் இவர் இறப்புக்கும் எந்த சம்பந்தமுமில்லை எனப் பின்னர் விடுதலை செய்யப்பட்டார். குணால் கராத்தேவில் கறுப்பு பெல்ட் மற்றும் ராணுவப் பள்ளியில் வாட்டர் போலோ விளையாட்டில் ஈடுபாடு உள்ளவர்.

இறக்குமுன் அவர் தன்னுடைய நிறுவனமான பாலகிரியின் மூலம் யோகி என்ற ஹிந்தித் திரைப்படத்தைத் தயாரித்துக் கொண்டிருந்தார். தனது படத்தில் பணிபுரிந்த திரைக்கதை எழுத்தாளர்கள், ஆடை வடிவமைப்பாளர்கள் மற்றும் நடிகை பாட்டியாவைத் தன் இறப்பு தினத்தில் சந்தித்துள்ளார். இறப்புக்குக் காரணம் வெற்றியடையாத சினிமா கேரியரா அல்லது திருமண முரண்பாடுகளா என்பது தெரியவில்லை.

குணாலுக்கும் அவர் மனைவி அனுராதாவுக்கும் குணாலின் நடிப்புலக வாழ்க்கை மற்றும் தொடர்புகள் பற்றி அடிக்கடி விவாதம் எழுந்துள்ளது அவருக்கு இரண்டு குழந்தைகளும் உண்டு. அவர்கள் இவர் இறப்பின்போது அஹமத் நகரில் இருந்தார்கள்.

ஆயிரக்கணக்கான ரசிகர்களைக் கொண்டிருந்தும் உணர்ச்சி வயப்படும் சூழலில் ஆதரவைக் கொடுக்க யாரும் அருகில் இல்லாதது, அவநம்பிக்கையான சூழ்நிலை, உறவுகளின் மேல் நம்பிக்கையின்மை, ஆழமற்ற மேலோட்டமான உறவுகள், நிராகரிப்பு, துஷ்பிரயோகம், பண நெருக்கடி, விரக்தி, கைவிடப்பட்டதான பயம், பாதுகாப்பின்மை உணர்வு,  மகிழ்ச்சியற்ற குழந்தைப் பருவம், உளவியல் பிரச்சனைகள் மனச்சோர்வு ஆகியவை இம்மாதிரித் தற்கொலைகளுக்குக் காரணங்கள். மன அழுத்தத்தைச் சமாளிக்கக் கற்றுக் கொள்வதும் பிரச்சனைகளுக்கான தீர்வைக் கண்டுபிடிப்பதும் முக்கியம். குறுகிய காலத்தில் பெற்ற வெற்றியின் உச்சத்தைத் தக்கவைக்கும் முயற்சியில் ஏற்படும் மன அழுத்தமும் ஒரு காரணம்.

மிகப் பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்ட படம் காதலர் தினம். தன் காதலி பரிசளித்த ஒரு தொட்டி ரோஜாச்செடியை வைத்துக்கொண்டு ரயில்வே ஸ்டேஷனின் காத்திருக்கும் குணால் தன் காதல் கதையை கவுண்டமணியிடம் சொல்வார். பெண்ணின் தந்தையான நாசரிடமே யோசனை கேட்க நாசர் வழிநடத்துவார்.


குணால் ராஜாவாகவும் சோனாலி ரோஜாவாகவும் அருமையான ஜோடிப்பொருத்தம். தாண்டியா ஆட்டமுமாட எனக் கோலாட்டக் கட்டைகளுடன் அவர்கள் ஆடும்போது நம் மனமும் சேர்ந்து ஆடும் காலும் தாளமிசைக்கும். சோனாலி பிந்தரேவுடன் குணால் நடித்த காட்சிகள் இளையர்கள் மத்தியில் அமோக வரவேற்புப் பெற்றது. பாக்ஸ் ஆஃபீஸ் ஹிட்.  

கல்வியறிவு இல்லாத ஒரு ஏழைக்குடும்பத்தில் பிறந்து கல்வி மற்றும் காதல் இரண்டுக்கும் இடையில் ஊடாடும் ஒரு ஏழை இளைஞனின் கதை. நாசரின் மூலமே நாசரின் கல்லூரியில் சேர்ந்து அவர் மகள் என்று தெரியாமலே அவரிடமே தன் காதலைச் சொல்லிப் பின்னர் அவர் மூலமாகவே கடிதம் எழுதிக் காதலர் தினத்தில் காதலிக்குக் கடிதம் கொடுத்து அன்றே சோனாலியைக் கைப்பிடித்து முடிவில் சுபம்.

இதில் இணைய ஏமாற்றுகள் பற்றி வரும் இடம் சிறப்பு & சிரிப்பு ராஜாவும் ரோஜாவும் அமெரிக்கா & லண்டனில் இருப்பதாக மெயில் செய்து கொள்வார்கள். ஆனால் ஒரே நெட் கஃபேயில் சிறிது நேரத்திலேயே சந்திப்பார்கள். அது அதிரடிச் சிரிப்பை உண்டாக்கும்.

1999 இல் கதிர் இயக்கிய படம். ஏ எம் ரத்னம் தயாரிப்பு. பி சி ஸ்ரீராமின் காமிராவில் மராட்டிய அழகனாக குணால் பாடல் காட்சிகளில் மிளிர்வார். சோனாலியும் தேவதையாகக் கவர்வார். ஏ ஆர் ரஹ்மானின் இசை.. கேட்க வேண்டுமா.

என்னவிலை அழகே. ஒட்டுமொத்த அழகையும் குத்தகை எடுத்தது பிசியின் கேமிரா. என்ன விலை அழகே. பாடல் காட்சிகளில் குணாலின் தலைமுடி கொத்தாக அலைபோல அசைவதும் அழகு. காதலெனும் தேர்வெழுதி பிருதிவிராஜன் போலக் குதிரையில் வைத்துச் செல்லும் பாடலும், நெனைச்சபடி நெனைச்சபடி மாப்பிள்ளை அமைந்ததடி உனக்கெனப் பிறந்தானோ உயிர்வரை கலந்தானோ பாடலும் அருமை. ஓ மரியா பாடல் கிராஃபிக்ஸ் பிரம்மாண்டம். ரோஜா ரோஜா என்று பாடும்போது தியேட்டரே அதிரும், காதலர் தினம்.

முரளி கிருஷ்ணா இயக்கத்தில் பார்வை ஒன்றே போதுமே. பரணியின் இசையும் ஸ்ரீ சங்கரின் ஒளிப்பதிவும் அற்புதம். இதில் ராம்ஜியின் பார்த்துட்டுப் போனாலும் பார்க்காமப் போனாலும் பாடல் காமெடிக் கலக்கல். குணால், மோனல், கரணின் முக்கோணக் காதல் கதை. படம் பாக்ஸ் ஆஃபீஸ் ஹிட். பாடல்கள் மெகா ஹிட்.

வினோத்தும் மனோஜும் நண்பர்கள். இவர்கள் இருவரும் நீதாவைக் காதலிக்கிறார்கள். கடைசியில் காதல் தெய்வீகமானது ஆனால் நட்பு தூய்மையானது என்று படம் முடிகிறது. சுவர்ணலதா , மால்குடிசுபா என ஹைபிட்ச் பாடகியரின் குரலில் பாடல்கள் அருமை. எஸ் ஜானகியும் ஒருபாட்டு பாடியிருக்கிறார்.

பார்வை ஒன்றே போதுமே. இரண்டும் குணால் மோனல் இருவரும் சேர்ந்து நடித்த திரைப்படங்கள்.டூ பீஸ் நீச்சல் உடை எல்லாம் பொருத்தமாய் இருக்கும் உடல் வாகு மோனலுக்கு. தீர்க்கமான மூக்கு, பரந்த நெற்றி, சுருள் கூந்தல், நளினமான அசைவுகள், லேசாகப் பருக்களோடு மிக மெல்லியதாய் முற்றிய முகம், லேசான பூனைக்கண், குவிந்த இதழ்கள், ஸ்லிம் & ஸ்லீக்காக இருப்பார் மோனல்.

ஆங்கில நடிகர்கள் போலத் தோற்றம். ஹிந்தி ஹீரோக்கள் போல மேனரிசங்கள். சாக்லேட் பாய் நடிப்பு, சந்தன நிறம். கண்ணுக்கு இனிமையான பாடி லாங்குவேஜ், குணாலின் சிங்கப் பல் ஒரு கவர்ச்சி. எந்த உடைகளும் பொருந்தும் பாந்தமான உருவம். இருவருக்கும் கொழுமிய கன்னங்கள். குவிந்த இதழ்கள். பாடல் நடுவில் கூலர்ஸுடன் இருவரும் பேசும் காட்சி அழகு.

கரண் கனவு காண “யே அசைந்தாடும் காற்றுக்கும் அழகான பூவுக்கும் காதலா’.. என்பதில் காற்றைப் போலவே நளினமாய் ஆடுவார்கள். உன்ன மறக்க முடியாது. என்று லவ்பேர்ட்ஸ் கீச்சிடும் சூழலில் பாடும் உணர்ச்சிகரமான பாடல் ”திருடிய இதயத்தைத் திருப்பிக் கொடுத்துவிடு காதலா என் காதலா என் காதலா.” கண்ணில் நீர் வழிய பிரிந்து செல்லும் காதலர்களின் பிரிவு கீதம் இனிமையான சோகம் ததும்பும்

“சிரிக்கிற சிரிப்பை நிறுத்திவிடு பார்க்கிற பார்வையை மறந்து விடு பேசுற பேச்சை நிறுத்திவிடு பெண்ணே என்னைத் திருப்பிக் கொடு. உயிரே மறந்துவிடு உறவே மறந்து விடு அன்பே விலகி விடு என்னை வாழ விடு”என்று காதலில் மூழ்கடிக்கும் வரிகள் அற்புதம்.. நடுவில் கடற்கரையில் லாந்தர் விளக்குகள் சூழ ஒரு ஆனந்த நடனம். உன்னிகிருஷ்ணன், ஹரிணி பாட, மோனலும் குணாலும் பா விஜயின் வரிகளுக்கு உயிர் கொடுத்திருப்பார்கள்.

”துளித்துளியாய் சிந்தும் மழைத்துளியாய் என் இதயத்தை, இதயத்தைக் கவர்ந்துவிட்டாய் பார்வையிலே உன் பார்வையிலே ஒரு வேதியல் மாற்றத்தை நிகழ்த்திவிட்டாய்.” இப்பாடலில் சிம்ரனைப் போன்ற உடலமைப்பில் மோனல் இடுப்பை வெட்டி வெட்டி ஆடுவது வெகு அழகு. என்ன உடை கொடுத்தாலும் மறுக்காமல் போட்டுக் கொண்டு ஆடும் அளவு வட இந்திய நடிகைகளின் உடல்வாகும் மனவாகும் இருப்பது ஆச்சர்யம்.

காதலர்கள் ஓடும்போது இந்தக்காடு மேடெல்லாம் கூட அழகாய்த் தென்படுவது அற்புதம். துளித்துளியாய்ப் பாடல் நடுவில் நீர் மேகமாகி மழை பொழிவதைக் கூட  அழகான சந்த நயத்தில் பாடலாக்கி இருப்பார் விஜய். அதற்கு வெகு பொருத்தமாய் அசைந்து உயிர்கொடுத்திருப்பார்கள் இருவரும். பாடல் முடிவில் வெண்ணிற உடையில் துள்ளும் மான்குட்டியாய் மோனல் குதித்துவருவது காட்சியின்பம். இத்தனைக்கும் இந்தப் பாடல் பின்னணி முழுவதும் ட்ராக்டர், குடிசை, அருவி, காடு, மழைதான்.

திரும்பத் திரும்பப் பார்த்து பார்த்து திரும்பத் திரும்பப் பேசிப் பேசி திரும்பத் திரும்ப காதல் சொல்லும் கனவு காதலா. இமைக்கும்போது உன் முகம் தெரிவதில்லை வாடினேன் இமைகள் ரெண்டை நீக்கிடும் மருத்துவங்கள் தேடினேன். உயிரைக் கொண்டு உன்னை மூடினேன். என்று தன் துப்பட்டாக் கரங்களால் குணாலை மோனல் மூடி அணைப்பது பேரழகு. பிறப்புப் போல இறப்புப் போல ஒருமுறைதான் காதல் தோன்றுமே. பட்டாம்பூச்சியின் இறக்கைபோல மோனலின் இமைகள் மேலெழுவதும் அசைவதும் விசித்திர அழகு.

இண்டர்நேஷனல் மாடல்ஸ் போல உருவம் குணாலுக்கு. அந்தக் கோட் எல்லாம் அவருக்கு அவ்வளவு எடுப்பாக இருக்கும். வீடு முழுதும் ஏற்றி வைக்கப்பட்ட அத்தனை தீபங்களுக்கு மத்தியில் மோனல் சுழன்று ஆடுவதும் அதைக் கண்டு குணால் ரசனையோடு பார்த்து மயங்குவதும் க்ளாஸ்.

பார்வை ஒன்றே போதுமே படத்திற்குப் பின் குணாலும் மோனலும் நடித்து எடுக்கப்பட்ட படம் பேசாத கண்ணும் பேசுமே. பார்வை ஒன்றே போதுமே காதலை விட நட்பு உயர்ந்தது என்று சொன்ன படம். கடைசியில் நீதாவைக் காதலித்த கரணே  இவர்களை இணைத்து வைப்பார். பேசாத கண்ணும் பேசுமே சில தவறாக தகவல்களை உண்மை என்று பிறர் நம்பும்படிக் கூறும் ஹீரோ பின்னர் அதனால் படும் பாடுதான் கதை. இதிலும் மோனல் குணால் ஜோடி.

திரைக்கதை, கதை என்று ஏதும் அழுத்தமாக இல்லாத படங்கள் இவை இரண்டுமே. மாபெரும் வெற்றிப் படங்கள் என்று கூற முடியாவிட்டாலும் இரண்டிலும் பாடல்களும், காட்சிகளும் நன்றாக இருந்தன. ஆனால் பார்வை ஒன்றே போதுமே பாடல்கள் விஜயின் பொருள் செறிந்த ஆத்மார்த்த வரிகளால் தம்மைப் பொலிவூட்டிக் கொண்டன.  இன்றும் சாகாவரம் பெற்றுத் திகழ்கின்றன.

பணம், புகழ் எல்லாம் இருந்தும் கூட பொன்னான இந்த வாழ்வை அற்பக் காரணங்களுக்காக முடித்துக் கொள்ளும் பிரபலங்கள் இங்கே அதிகரித்து விட்டனர். "திருடிய இதயத்தைத் திருப்பிக் கொடுத்துவிடு காதலா காதலா என் காதலா " என்று திரும்பத் திரும்பப் பாடி ஆடும் இவர்கள் செல்லுலாய்ட் பொம்மைகள் போல் மின்னி மறைந்தார்கள். ஆனால் இந்தப் பாடல்களில் உயிர்ப்போடு வாழ்கிறார்கள். இன்னும் நூறாண்டு கூட வாழ்வார்கள்.

2 கருத்துகள்:

 1. செல்லுலாய்ட் உலகில் இப்படியான தற்கொலைகள் அதிகம் சில்க் சுமிதா கூட இப்படித்தானே, இன்னும் பலர்....காரணங்கள் பல இருந்தாலும் இப்படியான நிகழ்வுகள் வருத்தம்தான்...

  கீதா

  பதிலளிநீக்கு
 2. உண்மைதான் கீத்ஸ். வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி.

  வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...