எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 12 அக்டோபர், 2022

முகம்மது நூர் அஸ்லி அவர்களின் பார்வையில் “சிவப்புப் பட்டுக் கயிறு “

 #வாசிப்போம்#


என் வாழ்வின் சிறப்பான வழிகாட்டியாக, நட்பாக, ஆசானாக பல்வேறு காலகட்டங்களில் தொடர்ந்து புத்தகங்களே இருந்து வருகின்றன. படிப்பதற்கு நேரம் ஒதுக்குவதிலேதான் தற்போதைய சூழலில் சிரமமாக இருக்கிறது. மேலோட்டமாக படிப்பதில் விருப்பமில்லை. கிடைக்கும் நேரங்களிலும் கைப்பேசியில் படிப்பதில், பார்ப்பதில் அதிகம் போய்க் கொண்டிருந்தது. இனி புத்தகங்கள் படிக்க நேரம் ஒதுக்க வாய்ப்பு அமையுமென நம்புகிறேன்.
முதலாவதாக எழுத்தாளர் தேனம்மை லெஷ்மணன் Thenammai Lakshmanan அவர்கள் எழுதிய சிறுகதைத் தொகுப்பு நூலான சிவப்பு பட்டுக்கயிறு நிறைவு செய்தேன்.(புத்தகம் வாங்கி 2 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. முழுமையாக நிறைவு செய்து ஒரு வாரமாகிறது. )
பல்வேறு காலகட்டங்களில் பல இதழ்களில் வந்த சிறுகதைகளின் தொகுப்பான இந்நூலில்... உறவுகளின் பிணைப்பு, சமூகத்தினால் ஏற்படும் விளைவுகள், சில வட்டாரங்களில் உள்ள நடைமுறைகள் என சிறப்பாக உள்ளது.
சிவப்பு பட்டுக்கயிறு என்ற கதையில் செட்டிநாட்டில் செய்யப்படும் சுவீகாரத்தின் பிண்ணனியில் அதற்குப் பிறகு ஏற்படும் வலியைப் பதிவு செய்வதாக உள்ளது.
சூலம் பொறுப்பிலா கணவனின் மரணத்தையும், நந்தினி ஒரு ஒழுக்கமற்ற கணவனால் உயிர்க்கொல்லி நோயால் பிரவசத்தின் போது இறந்த மனைவி மற்றும் தற்கொலை செய்து கொண்ட கணவனால் மருத்துவர் சந்திக்கும் இடைஞ்சலையும் விவரிக்கிறது.
கருணையாய் ஒரு வாழ்வு கருணைக் கொலைக்கெதிராக கருத்துக்களை விதைக்கிறது.
நான் மிஸ்டர் Y கருக்கலைப்புக்கெதிரான கருத்துக்களை சிசுவின் குரலாய் பதிவு செய்கிறது.
கத்திக்கப்பல் கணவர்கள் வெளிநாட்டில் இருக்கும் போது மனைவிகளின் உணர்வுகளையும், சமூகத்தில் சந்திக்கும் பேச்சுக்களையும் பிரதிபலிக்கிறது.
பட்டாம்பூச்சிகளும் பூக்களும் நடிகையர் தற்கொலைகள் பற்றியும், செம்மாதுளைச்சாறு வித்தியாசமான கதைக்களத்தில் வங்கியில் இதயத்தை பத்திரப்படுத்த சொல்வதற்கு சென்ற ஒரு மாதுவின் கதையாகவும் அமைந்துள்ளது.
சொர்க்கத்தின் எல்லை நகரம் பணக்கார வீடுகளில் சேவகம் செய்யும் விளிம்பு நிலை குடும்பத்தின் சிறுமிக்கு ஒரு நாள் அவ்வீட்டிலுள்ள சௌகரியங்களை பயன்படுத்திக் கொள்ள ஏற்படும் ஆவலில் செய்யும் குறும்புத்தனங்களை அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறது.
இப்படி இன்னும் வரும் கதைகளிலும் உணர்வுகளையும், வட்டார வாழ்க்கை முறைகளையும், சமூகச் சிக்கல்களும், அதன் பாதிப்புகளையும் சிறப்பாக பதிவு செய்துள்ளார்கள்.
(இன்னும் விரிவாக எல்லா கதைகளையும் பற்றி எழுத விருப்பமிருப்பினும், இதை பதிவு செய்வதற்கே பல இடையூறுகள் வந்ததால் சுருக்கமாக நிறைவு செய்கிறேன்.)
மேலும் வாசிப்போம்... மனிதர்களை நேசிப்போம்...

டிஸ்கி:- தங்களின் மேலான வாசிப்புக்கும், அன்பான வாழ்த்துக்கும், சுருக்கமாக இருந்தாலும் சுவையான கருத்துக்களுக்கும் நன்றியும் அன்பும் மகிழ்ச்சியும் தோழர், முகம்மது நூர் அஸ்லி. :)

1 கருத்து:


  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...