எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 4 செப்டம்பர், 2021

சாட்டர்டே ஜாலிகார்னர். அன்னு செய்த அற்புத பாதுஷா !!!

எங்களுக்கெல்லாம்  செல்லமாக அன்னு எனப்படும்  அனிதாஶ்ரீகாந்த் வசிப்பது மஹாராஷ்டிரா டோம்பிவிலி ல. மழலை பள்ளி ஆசிரியராக இருக்காங்க. இரண்டு குழந்தைகளுக்கு( பையன் மூணாவது வருஷம் கம்ப்யூட்டர் இஞ்சினியர் படிக்கிறான்..பொண்ணு பத்தாவது படிக்கிறா) அம்மா. ஆனா எனர்ஜி லெவலில் டீனேஜ் யங்ஸ்டர். அதிரடி சரவெடி எழுத்துக்குச் சொந்தக்காரர்.  என் அன்புத் தங்கைகளில் ஒருவர். 


இவருக்குப் புத்தகங்கள் படிக்க ரொம்பப் பிடிக்கும். அதை விமர்சிக்கவும் பிடிக்கும். இவரை நான் கண்டடைந்ததே நுழைபுலம் என்ற நூல் விமர்சனக் குழுவில்தான். எல்லோருடனும் ஒத்திசைந்து செல்வார். அதே சமயம் செம குறும்புக்காரியும் கூட. 

நுழைபுலம் போட்டிக்காக இவர் எழுதிய கதையை நான் சிறப்பானதாகக் கருதினேன். மனிதநேயமிக்க நல்ல எழுத்தாளரும் இவருக்குள்ளே இருக்கிறார் என்பதை நான் உணர்ந்து கொண்ட தருணம் அது. !

அவரிடம் என் ப்லாகுக்காக ஜாலியாக ஏதேனும் எழுதித்தரும்படிக் கேட்டிருந்தேன். அதற்காக அவர் தான் தீபாவளிப் பலகாரம் செய்த அனுபவத்தை அனுப்பி இருந்தார். 

யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம். நீங்களும் படிச்சுச் சிரிச்சு வாழ்க்கையைக் கொண்டாடுங்க. 


//// எல்லாருக்குமே தலை தீபாவளி ஸ்பெஷல் தான்.

எங்க தலை தீபாவளிக்கு  நான் செஞ்ச பாதுஷா தான் ஹைலைட்டே..

வீட்ல செல்லமா வளர்ந்து .. பலகாரம் னா சாப்பிட மட்டுமே  தெரிஞ்சிருந்த நேரம் அது. 

ஓரளவுக்கு நல்லா சமைப்பேன். அத வெச்சு என் மாமியார் இவ பலகாரமும் நல்லா செய்வா னு  நினைச்சிட்டாங்க. 

அந்த மாசம் மங்கையர் மலர்ல பாதுஷா செய்வது எப்படி னு சொல்லி இருந்தாங்க . சிவனேனு இருக்க மாட்டாம என் மாமியார் ட்ட அத காட்டினேனா..பேசாம இத நீ செய்யிரே..படிச்சா ஈசியா செய்யிராப்போல தான் இருக்கு..நீ செஞ்சிரு..னு சொல்லிட்டாங்க. 

பலகாரம் செய்ய தெரியாதுனு சொல்ல பயமாவும்  இருந்திச்சு தெரியலைனு சொல்ல தன் மான குருட்டு மருவாதியும் இடம் தரலை. 

அவருட்ட சொல்லி தேவையான சாமானை எல்லாம் வாங்கீட்டு வந்தாச்சு . சாமி மேல பாரத்தை போட்டு சர்க்கரை பாகு வெச்சா..செமையா வந்திச்சு. உனக்கு எல்லாம் தெரியும் டி..போயி கலக்கு னு என்னை நானே புகழ்ந்துகிட்டு பாதுஷாவுக்கு பக்குவமா மாவு பிசைஞ்சு குட்டி யா ஒண்ணே ஒண்ணை சாமிக்கு முதல்ல செஞ்சிருவோம் னு ஒண்ணே ஒண்ணை எண்ணெய் ல பொறிச்சு சர்க்கரை பாகுல முக்கி கேஸூக்கு கொஞ்சம் தள்ளி சின்ன தட்டுல வெச்சிட்டு மும்முரமா மத்ததை எல்லாம் பொறிச்செடுத்திட்டு வேர்க்க விறுவிறுக்க ஒரு காபியை குடிச்சிட்டே  சாமிக்கு வெச்ச பாதுஷாவை பார்த்தேன் . பெரிய கட்டெறும்பு ஒண்ணு  அத சுத்தீட்டு இருந்திச்சு.  

சாமியே நம்ப செஞ்ச பாதுஷாவை சாப்பிட கட்டெறும்பா  வந்திருக்காரு னு செம சந்தோஷம். அத தொந்தரவு பண்ணாம போயிட்டேன் .  கொஞ்சம் கழிச்சு வந்து பார்த்தா அந்த கட்டெறும்பு காலை எல்லாம்  மேலே தூக்கீட்டு அசைவில்லாம கிடந்திச்சு... பக்கத்தில போயி பார்த்தா...சாமி! அது செத்து போயிருந்திச்சு.  

பயங்கர கலவரமா அமுக்கமாவே இருந்திட்டேன்...

நைட்டு இவரு ஆபீசுல  இருந்து வரவும் சாப்பாட்டோட பாதுஷாவையும் கொண்டு வை னு மாமியார் சொன்னாங்க .  பயந்திட்டே வெச்சேனா...இவரு சாப்டு  என்னை பார்த்தாரு.. 

என்ன இது கடிக்கவே முடீலயே..னு கேட்டாரு ..ஓடி போயி நானு ஒண்ணு எடுத்து வாயில போட்டா  கமர் கட்டாட்ட இருந்திச்சு . அழுகையா வந்திச்சு. போனா போகுது போ பரவாயில்லை . னு மாமியார் சமாதானம் செஞ்சாங்க. 

இதுல கடைசீ  சீனு ஒண்ணு இருக்கு பாருங்க....

அடுத்த நாளு மாமியார் என்ட ருசி நல்லா இருக்கு ம்மா..கொஞ்சம் கல்லா போச்சு பரவாயில்லை விடு ..வீணாக்க வேணாம் ..அத எடுத்து வா உடைச்சு  சாப்பிடறேன் னு சொன்னாங்க..(அவுங்களுக்கு பல்லு இல்ல) . சரி னு சுத்தில இரண்டை உடைச்சு தந்தேன். 

அடுத்த நாளு இரண்டு இரண்டா உடைக்கிறதுக்கு மொத்தமா உடைச்சிருவோம் னு உக்கார்ந்து தட்டோ தட்டுனு தட்டி உடைச்சு முடிச்சேன் . 

நைட் இவரு பயங்கர கோவமா வந்தாரு. ஏன்னு கேட்டா அது அப்பார்ட்மெண்ட் வீடு . மேல இப்டி தட்டினா கீழ உள்ள வீடு பக்கத்து வீடு எல்லாம் சத்தம் கேட்டு தொந்தரவு ஆகும்.. கிராமத்து  ஓட்டு வீட்ல வளர்ந்த எனக்கு அது தெரில.  சொசைடி சேர்மேனு இவருக்கு போன் செஞ்சு வீட்ல ரெனோவேஷன் வேலை செஞ்சா சொசைட்டிக்கு அனுமதி கேட்டு  கடிதம் குடுக்கணும் னு உங்களுக்கு தெரியாதா னு கேட்டு திட்டினாராம். 

நீ உடைச்சு தின்ன வரை போதும் னு அத்தனை பாதுஷாவையும்  குப்பைல கொட்டிட்டாரு . அப்ப இருந்து இப்ப வரை பலகாரம் செய்யிரதே இல்லை...நானு. 

பையன் தான் போன வருஷம் கேட்டான்..எல்லா வீட்ல இருந்தும் தீபாவளிக்கு பலகார வாசனையா வருது..நீ ஏம்மா எதும் செய்யிரது இல்ல..இந்த வருஷம் செய்யி...னு..

குடுகுடுனு இவர் ஓடி வந்து உனக்கு எத்தனை வகையான சுவீட்டு வேணுமோ கேளு..எத்தனை கிலோ வேணாலும் வாங்கி தரேன். உங்கம்மாட்ட மட்டும் எதும் செய்ய சொல்லாதே...னு சொல்லீட்டு என்னை பார்த்தாரு பாருங்க  ஒரு பார்வை..

போங்க வெக்கமா வருது🙈

#அன்னு
🐿️❤️

டிஸ்கி:-  ஹாஹாஹா !   தீபாவளி ஸ்வீட்டா.. அது கதி அதோ கதி என முடிவில் தெரிந்தது. :) என்னது நீங்க செஞ்ச ஸ்வீட்டைச் சாப்பிட சாமியே எறும்பு உருவில் வந்தாரா.. எவ்ளோ பிள்ளை மனசு  உங்களுக்கு அன்னுத் தங்கமே ! 

மெய்யாலுமே சுத்திலால ஸ்வீட் உடைச்சுத் தின்னதப் படிச்சுச் சிரிச்சு வயிறெல்லாம் வலி. பாவம் மாமியாரும், தம்பி ஸ்ரீகாந்தும். எல்லாருக்கும் பல்லு பத்திரமா இருக்கா :) பில்டிங்குக்கு ஒண்ணும் சேதமில்லையே :)  ரெண்டுமே பத்திரமா இருந்தா அது அற்புத பாதுஷா தான். :)  

சும்மாவின் வாசகர்களே ”அது சரி தீபாவளியைக் கொண்டாடினீங்களா”ன்னு கேக்குறீங்களா !. தினம் தினம் வாழ்க்கையையும் உறவுகளையும்  கொண்டாடும் அன்னுவின் முன் எல்லாப் பண்டிகையும் தீபாவளிதான் :) 

நன்றி அன்னு அழகாக உங்கள் தீபாவளிப் பலகாரம் பத்தி எழுதித் தந்தமைக்கு. இப்பல்லாம் பாதுஷான்னாலே பல்லெல்லாம் கடகடங்குது :) சாரி செல்லமே அடிக்க வராதே. சும்மா கிண்டல் அடிச்சேன். தீபாவளிக்கு இன்னும் ரெண்டு மூணு மாசம் இருக்கு. எங்களுக்கும் மும்பை ஸ்வீட்ஸ் ஒரு கிலோ பார்சேல் !   

6 கருத்துகள்:

 1. சூப்பர் அன்னுமா.💙//சொசைட்டிக்கு அனுமதி கடிதம்...// இந்த இடத்தில் நான் வாய்விட்டு சிரித்து விட்டேன். எங்க வீட்ல பொங்கலுக்கு தான் பலகாரங்க செய்வோம் .அது ஞாபகம் வந்துடுச்சு.😍💜

  பதிலளிநீக்கு
 2. Divine Blessings 🙌.
  The society needs good souls like you.

  பதிலளிநீக்கு
 3. ஜானுவுக்கு பலகாரம் செய்யத் தெரியாதுன்னு இதுவரைக்கும் தெரியும் ஆனா காரணம் இன்னைக்கு தெரிஞ்சது பாதுஷா நமக்கு பழக்கமில்லாத ஒன்று ஆனா மற்ற சைவ சமையலில் அசத்துவாங்க எனக்கு இவங்க சமையல் ரொம்ப பிடிக்கும் கொழுக்கட்டை இவங்க ஸ்பெஷல் ரொம்ப நல்லா எழுதி இருக்க ஜானு மாமாவோட பதிலும் சிரிப்பை கொடுத்தது வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 4. நண்பர் குலசேகர் கூறியது

  அனிதா அம்சமா புது மெத்தட்ல கமர்கட்டு செஞ்சிருக்கேன். அதுக்கு புது ரெசிபியே கண்டுபிடிச்சிருக்கேன்னு சொல்லி இருந்தா, இப்போ காப்பி ரைட்ஸ் வாங்கி இருக்கலாம். இப்படிப்பட்ட திறமைசாலிகளை ஏன் தான் இந்த நாட்ல கொண்டாட மாட்டேன்றாங்களோ.. என்ன உலகம்டா இது.. ஷோ ஸேட்..கீப் ராக்கிங் அனிதா வித் யுவர் இன்னவேட்டிவ் ரெஸிபிஸ்.

  பதிலளிநீக்கு
 5. ஹா ஹா ஹா செம.... இனிமே பாதுஷான அனிதா தான் ஞாபகத்துக்கு வருவாங்க....

  பதிலளிநீக்கு
 6. நன்றி பானுரேகா

  நன்றி கோபால்ஜி

  நன்றி பெயரில்லா

  நன்றி குலசேகர்

  நன்றி கவிநல்லு

  வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...