எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 27 செப்டம்பர், 2021

பூவில் பிறந்து பாவில் இணைந்தவர்கள்.

பூவில் பிறந்து பாவில் இணைந்தவர்கள்.

மனிதர்கள் பூவில் பிறக்க முடியுமா. அதுவும் எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்தவர்கள் ஒரு பாடலில் இணைய முடியுமா. இதெல்லாம் முடியும் என நிரூபிக்கிறது திருக்கோயிலூர் என்னும் ஊர். வாங்க குழந்தைகளே அங்கே யார் வந்தார்கள், எப்படி இணைந்தார்கள், என்ன நடந்ததுன்னு பார்ப்போம்.
ஏழாம் நூற்றாண்டுக் காலம். திருக்கோவிலூர் என்னும் ஊரில் ஒரு குடிசை வீட்டின் முன்னே ஒருவர் வருகிறார். அடை மழை.. மின்னல் கண்ணைப் பறிக்கிறது. இடியோ கட்டிடங்களையே இடிப்பது போல் இடித்துத் தள்ளுகிறது. சரி அந்த வீட்டில் மழைக்கு ஒதுங்கலாம் என நினைத்துத் திண்ணையில் ஏறுகிறார். வெகுதூரம் கல்லிலும் முள்ளிலும் நடந்து வந்த களைப்பின் மிகுதியில் படுக்கிறார். அவர்தான் பொய்கையாழ்வார்.

காஞ்சிபுரத்தின் திருவெஃகா என்னுமிடத்தில் உள்ள யதோத்தகாரி என்னும் பெருமாள் கோவிலின் பொய்கையில் செந்தாமரை மலர் ஒன்று மலர்ந்து மணம் வீசி கொண்டிருந்தது. அதில் புதிதாய்ப் பிறந்த பச்சிளம் குழந்தை ஒன்று கைகால்களை வீசிக் கிடந்தது. கொள்ளை அழகு.
செந்தாமரைப் பூவில் பிறந்த அப்பாலகன் யதோத்காரி என்னும் பெருமாள் மேல் ப்ரேமை கொண்டு வளர்ந்தான். அதோடு பொய்கையில் பிறந்தவன் என்பதால் அவனை பொய்கை ஆழ்வாரென அழைத்தார்கள். அவனுக்கோ பெருமாள் உறையும் தலமனைத்தும் சென்று தரிசிக்க ஆவல். அப்படிக் கிளம்பியவன்தான் திருக்கோயிலூருக்கு வந்து சேர்ந்து திண்ணையில் படுக்கிறான்.
அடுத்து யாரோ திண்ணையில் மழைக்கு ஒதுங்குவது தெரிந்து படுத்திருந்த பொய்கை ஆழ்வான் எழுந்து அமர்கிறான். வந்தவர் பெயர் பூதத்தாழ்வார். கடல்மல்லை எனப்படும் ஊரில் ஒரு நீலோற்பவ மலரில் பிறந்தவர். இவரும் காண்போர் மகிழும் பேரழகோடு திகழ்ந்தார். கடவுளின் மேல் பூதகணங்கள் போல் பக்தி செலுத்தினார்.
இவர் பிறந்ததில் இருந்து பக்தியைத் தவிர வேறொன்றும் அறியார். தலசயனப் பெருமாளுக்குப் பூமாலைகளும் பாமாலைகளும் சார்த்தி வழிபட்டு வந்தார். இவரும் மற்ற தலங்களில் உள்ள பெருமாள் கோவில்களைத் தரிசிக்க தலயாத்திரை புறப்பட்டு பொய்கையாழ்வாரிருக்கும் திருக்கோவிலூர் குடிசை வீட்டுக்கு வந்து சேர்ந்தார். இருவரும் திண்ணையில் அமர்ந்து கொண்டனர்.
மூன்றாவதாக யாரோ அந்தத் திண்ணையில் மழைக்கு ஒதுங்க முற்படுவது தெரிகிறது. ஆளரவம் கேட்டதும் ஒரு மனித உருவம் திண்ணையின் மேலேறுவதும் தெரிய அமர்ந்திருந்த பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார் இருவரும் எழுந்து நின்று கொள்கிறார்கள். மூன்றாமவர் பேர் பேயாழ்வார்.
மயிலையின் திருக்குளத்தில் ஒரு செவ்வல்லி மலர்ந்திருந்தது. அம்மலரின் மேல் அதைவிடச் சிவந்த நிறத்தில் புதிதாய்ப் பிறந்த ஒரு குழந்தை தவழ்ந்திருந்தது. காண்போர் வியந்து போற்றிடும் வண்ணம் தெய்வபக்தியோடும் வளர்ந்தது. பக்தி என்றால் பேய் பக்தி. பெருமாளின் மேல் ப்ரேமையும் பேய்த்தனமான பக்தியும் கொண்டதால் அவரைப் பேயாழ்வார் என அழைத்தார்கள். அவரும் பெருமாள் ஸ்தலங்களைத் தரிசிக்க எண்ணி நடைப்பயணமாக வந்து மழையில் சிக்கி திருக்கோவிலூர் குடிசையை அடைந்தார்.

ஏற்கனவே திண்ணையில் இருவர் இருக்க மூன்றாவதாகப் பேயாழ்வாரும் ஏறியதும் மூவரும் அத்திண்ணையில் இடம் போதாமையால் நின்று கொண்டார்கள். வெளியே மழை கொட்டித் தள்ளுகிறது. திண்ணையிலேயோ இட நெருக்கடி. இதில் நான்காமவர் ஒருவர் ஏறி அவர்களுடன் நெருக்கித் தள்ளிக்கொண்டு நிற்கிறார். மூவருக்குமே அதில் நிற்கப் போதுமான இடம் இல்லை. இதில் நான்காமவர் வேறா.. யாரென்று காணவும் முடியவில்லை. விளக்கின் வெளிச்சமும் எங்குமில்லை.
மூவரும் நெருக்கியடித்து நின்று நான்காமவரோடு இடித்துக் கொள்கிறார்கள். வந்தவரையும் புறம் தள்ள முடியாது. இடி இடிக்கிறது மின்னல் வெட்டுகிறது. மழை தாரைதாரையாகப் பொழிந்து தள்ளுகிறது. நாலாபுறமும் சாரல். மூவர்தான் இருக்கிறார்கள்.ஆனால் நான்காவதாக ஒருவர் இருப்பதுபோல் கசகசப்பாக இருக்கிறது. அப்போது நான்காவதாக ஏறியவர் அவர்கள் மூவரின் பக்திக்கும்

ஆட்பட்ட பெருமாள் என உணர்கிறார் பொய்கை ஆழ்வார்.
இருளகன்று வெளிச்சம் வந்தால்தான் அவர் யாரெனப் பார்க்கலாம். உடனே பொய்கை ஆழ்வார் ”உலகத்தை அகல் விளக்காக்கிக் கடல்நீரை நெய்யாக ஊற்றி சூரியனையே விளக்காக ஏற்றுகிறேன், இந்த இருளை அகற்று பெருமாளே” என வேண்டுகிறார். உடனே ஒரு மின்னல் வெட்டிக் கோடி சூரியப் ப்ரகாசம் பொலிகிறது. புற இருள் அகல நான்காமவராக வந்தவர் பெருமாள் என உணர்கிறார் பொய்கையாழ்வார்.
அடுத்தவர் மட்டும் சளைத்தவரா என்ன? பூதத்தாழ்வார் அதன் தொடர்ச்சியாக “என் அன்பையே அகல்விளக்காக்கி, ஆர்வத்தையே நெய்யாக்கி உருக்கி ஊற்றி, என் உள்ளத்தையே திரியாக்கி ஞான விளக்கை ஏற்றினேன். ” என்று பாடுகிறார். அடுத்தும் ஒரு மின்னல் பிரகாசமாக வெட்டி அக இருளையும் அகற்றிப் பெருமாளைக் காட்டுகிறது.
மூன்றாமவரோ பேயாழ்வார். பகவான் மேல் பேய் போல் பக்தியும் பித்தும் கொண்டவர். அவர் சும்மா இருப்பாரோ ? அவர் அதன் தொடர்ச்சியாக ஒரு பாடல் பாடுகிறார். பொய்கை ஆழ்வார், பூதத்து ஆழ்வார் இருவரும் பாடும் முன்பே அவர் பெருமாள் அங்கே வந்ததை உணர்ந்ததால் ” திருக்கண்டேன், பொன் மேனி கண்டேன், சூரியன் போல ஒளிரும் நிறமும், கையில் சங்கும், சக்கரமும் ஏந்திய கடல்நிறம் கொண்ட கண்ணனைப் பெருமானைக் கண்டேன் ” என்று பாடுகிறார்.
மூவரும் இதே போல் தொடர்புடைய நூறு நூறு பாடல்கள் பாடினார்கள். மூன்றும் முதல் திருவந்தாதி, இரண்டாம் திருவந்தாதி, மூன்றாம் திருவந்தாதி என்று போற்றப்படுகின்றன.  நண்பர்கள் மூவரும் பூவில் பிறந்ததும், அதன்பின் ஒரே ஊரில் சந்தித்து வெண்பாக்கள் (அந்தாதி) இயற்றியதும் அதிசயிக்கத்தக்க செய்திதானே குழந்தைகளே.

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...