மனிதர்கள் பூவில் பிறக்க முடியுமா. அதுவும் எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்தவர்கள் ஒரு பாடலில் இணைய முடியுமா. இதெல்லாம் முடியும் என நிரூபிக்கிறது திருக்கோயிலூர் என்னும் ஊர். வாங்க குழந்தைகளே அங்கே யார் வந்தார்கள், எப்படி இணைந்தார்கள், என்ன நடந்ததுன்னு பார்ப்போம்.
ஏழாம் நூற்றாண்டுக் காலம். திருக்கோவிலூர் என்னும் ஊரில் ஒரு குடிசை வீட்டின் முன்னே ஒருவர் வருகிறார். அடை மழை.. மின்னல் கண்ணைப் பறிக்கிறது. இடியோ கட்டிடங்களையே இடிப்பது போல் இடித்துத் தள்ளுகிறது. சரி அந்த வீட்டில் மழைக்கு ஒதுங்கலாம் என நினைத்துத் திண்ணையில் ஏறுகிறார். வெகுதூரம் கல்லிலும் முள்ளிலும் நடந்து வந்த களைப்பின் மிகுதியில் படுக்கிறார். அவர்தான் பொய்கையாழ்வார்.
