எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 4 செப்டம்பர், 2021

திருவள்ளுவர் நற்பணி மன்றம் - நூறாண்டு கடந்து வாழும் மகாகவி.

 திருவள்ளுவர் நற்பணி மன்றம் பங்களாபுதூர்  கிட்டத்தட்ட ஏழு வாரங்களுக்கு மகாகவியின் விழாவைக் கொண்டாடத் திட்டமிட்டு நான்கு வாரங்களாகக் கொண்டாடி வருகிறது. கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்கும் மேலாக கோபி செட்டிப்பாளையம் பங்களாபுதூரில் இலக்கிய சேவை ஆற்றி வருகிறது இவ்வமைப்பு. நூல்கள் சிலவும் வெளியிட்டு உள்ளார்கள். பல்வேறு சமூக சேவைகளும் செய்து வருகிறார்கள். 

அவர்கள் ஏழு வார நிகழ்வாக மகாகவியின் பிறந்தநாளை சிறப்பு அழைப்பாளர்கள் கொண்டு ஜூம் மீட்டில் நிகழ்த்தினார்கள். 

தலைப்பு :- நூறாண்டு கடந்தும் வாழும் மகாகவி

முதல் நிகழ்வில் நடிகர் ரமேஷ் கண்ணா கலந்து கொண்டு சினிமாவில் மகாகவின் பாடல்களை மேற்கோள் காட்டிப் பேசினார். ரசனையாக இருந்தது.


 அந்நிகழ்விலேயே மகாகவி பாரதி அவர்களின்  கொள்ளுப் பேத்தி திருமதி உமா பாரதி அவர்களும், சுதந்திரப் போராட்டத் தியாகி வாஞ்சிநாதன் அவர்களின் பேரன் அவர்களும் கலந்து கொண்டார்கள். 

ஒவ்வொரு நிகழ்விலும்  வரவேற்புரையைத் திரு பாமா மனோகரன் அவர்களும், நெறியாளுகை & தொகுத்து வழங்குதலை டாக்டர் திரு கணேசன் அவர்களும், மற்றும் நன்றியுரையைத் திரு  கிருஷ்ணகுமார் அவர்களும் சிறப்பாக வழங்குகிறார்கள்.

இரண்டாம் வாரம் நடிகர் திரு டெல்லி கணேஷ் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள். மாணாக்கரையும், இளம் தலைமுறையினரையும் இதில் ஈடுபடுத்தவேண்டிய அவசியம் பற்றியும் பாரதியார் மற்றும் வாஞ்சிநாதனின் வழித்தோன்றல்களுக்கு அரசாங்க வேலை வாய்ப்பு போன்ற சலுகைகளை அரசாங்கம் தரவேண்டும் எனவும் கூறினார். 
மூன்றாவது வாரம் திரு ஸ்டாலின் குணசேகரன் பேசினார். 

திருமதி விஜயா பாரதியார் பாடல் ஒன்றைப் பாடினார்.

வரவேற்புரையில் திரு பாமா மனோகரன் சுதந்திரத்துக்கு 25 ஆண்டுகளுக்கு முன்பே விடுதலையைப் பாடியவர் என்றார். 

திரு கணேசன் அவர்கள் காகிதம் செய்வோம் என்று நாம் வாசிப்பை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தைப் பாரதி சுட்டியதாகச் சொன்னார். 

எழுச்சி மிக்க பேச்சு. அவரின் பேச்சில் அனைவரும் மெய் மறந்தோம். ஏறத்தாழ ஒரு மணி நேரம் பேசினார். பாரதி & பாரதிதாசன் இருவருமே போற்றப்பட வேண்டியவர்கள் என்றார். எந்த விஷயத்தையும் துல்லியமாகச் சொல்ல வேண்டும் என்பதை அவரிடம் கற்றேன். யானை மிதித்து எட்டு மாதங்கள் கழித்துத்தான் பாரதி இறந்தார். அதுவும் யானை மிதித்ததனால் அல்ல. அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால்தான் என்றார். இதை ஆதாரங்களோடு நிறுவினார். 

”அறிவே தெய்வம் என்று கூறியவர். நா, பேனா என்ற இரு ஆயுதங்களையும் பயன்படுத்தியவர். ஐந்து பத்ரிக்கைகளில் ஆசிரியராகப் பணியாற்றினார் ( விஜயா, கர்மயோகி, சக்கரவர்த்தினி, சுதேசமித்திரன், ஹிந்து ), மேலும்  ஆங்கிலம் , தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் படைப்புகள் கொடுத்தவர், படைப்பாளராக இருந்த பாரதியைப் பத்ரிக்கையாளராக மாற்றியவர் ஜி சுப்ரமணிய ஐயர்” என்றார். 

புரட்சி, பொதுவுடமை என்ற வார்த்தைகளை தம் படைப்புகள் வாயிலாக முதலில்  கூறியவர் என பாரதியாரைக் கூறினார். நானும் எனது தொகுப்புரையில் செந்தமிழ் நாடு என்னும் பதத்தையும் விடுதலைக்கு 30 ஆண்டுகளுக்கு முன்பே கொடுத்தவர் என்று கூறினேன். பத்தாண்டுகளுக்கு முன்பு ஈரோடு வலைப்பதிவர் சங்கமத்தில் அவர் கையால் விருது வாங்கியமை குறித்துக் குறிப்பிட்டேன். (பதினைந்து ஆண் பதிவர்களின் நடுவில் ஒரு பெண் பதிவராக என்னையும் ஈரோடும் தாமோதர் அண்ணாவும் வலைப்பதிவர் குழுமமும் சிறப்பித்ததை மறக்க முடியாது. நன்றி அவர்களுக்கும் ) 

திரு கிருஷ்ணகுமார் அவர் பாரதியாரைப் பற்றிப் ’பாண்டிச்சேரிக்கு வீரனாகப் போனவர் ஞானியாகத் திரும்பி வந்தார்’ என்று கூறியதை சிலாகித்தார். நான்காவது வாரம் எழுத்தாளர் திரு மாலன் அவர்கள் பாரதியின் பாஞ்சாலி சபதம் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். பாரதி ஏன் பொதுமக்கள் வாசிக்கும்படியான இயல்பான நடையில் பாஞ்சாலி சபதத்தைப் படைத்தார் என விளக்கினார். வியாச பாரதத்தையும் வில்லி பாரதத்தையும் ஒப்புமைப்படுத்தி பாரதியின் பாஞ்சாலி தனக்காக வாதிடுவதையும் புதுமைப் பெண்ணாக தனக்காகத் தானே குரல் கொடுத்ததையும் சிலாகித்துக் கூறினார். 

பெண்களுக்காகவும் சுதந்திரத்துக்காகவும் குரல் கொடுத்த பாரதிக்கு அவரது உரையின் பின் நானும் வந்தனம் தெரிவித்தேன். சில ஆண்டுகளுக்கு முன்பு சிவசங்கரி  தினமணி நடத்திய போட்டியில் எனக்கு ஊக்கப் பரிசு கிடைத்தது. அந்த நிகழ்வில் பரிசு பெற்ற கதைகளைப் பற்றி திரு. மாலன் அவர்களும் உரையாற்றினார். எனது கதையை வாசித்தது பற்றியும் அது பற்றி அவர் கருத்துக் கூறியதும் எனக்குக் கிடைத்த பெரும்பேறு என நானும் நன்றி நவின்றேன்.

அதன் பின் மாலன் அவர்களும் எனது படைப்பாற்றலைப் பாராட்டிச் செட்டி நாடு பற்றிய கதைகளை நான் இன்னும் படைக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.  ”வசிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷி” என்று பட்டம் கிடைத்தது போல் மகிழ்கிறேன் என நானும் நன்றி கூறினேன். 


இவை அனைத்தும் யூ ட்யூபில் பதிவேற்றப் படுகின்றன. அவற்றின் இணைப்புக் கிடைத்ததும் பகிர்கிறேன். 

நான்கு வாரங்கள் இந்த நிகழ்வில் கலந்துகொள்ளும் அரிய வாய்ப்புக் கிட்டியது. நான்கு வாரங்களிலும் சிறப்பு விருந்தினரின் உரைக்குப் பின்  நானும் எனது கருத்தைப் பகிர்ந்தேன். இத்தகைய நல்வாய்ப்பை ஏற்படுத்தித் தந்த திருவள்ளுவர் நற்பணி மன்றத்துக்கும் நண்பர்கள் திரு. பாமா மனோகரன், திரு கிருஷ்ணகுமார் ஆகியோருக்கும் மனமார்ந்த நன்றிகள் . 

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...