மரபும் அறிவியலும்.
சங்கீதக் கோலங்களும் ஸைமாட்டிக் தெரஃபியும்
இந்தியர்களின் மரபு சார்ந்த விஷயங்களில் முக்கியமானவை
கோலமிடுதல் வேஷ்டி அணிதல், மிஞ்சி மூக்குத்தி தண்டட்டி போன்ற ஆபரணங்கள் அணிதல்.இவை
பற்றிய மரபு சார்ந்த விஷயங்களையும் அவற்றின் அறிவியல் ரீதியான விளக்கங்களையும் பார்ப்போம்.
பல
நூற்றாண்டுகளாக இந்தியர் வாழ்வில் கோலங்கள் இடம்பெற்று வருகின்றன. தென் தமிழ்
நாட்டில் மட்டுமல்ல தென்னிந்திய மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா, கேரளா போன்ற
ஊர்களிலும் கூட கோலம் முக்கியத்துவம் பெறுகிறது. கேரளாவில் பூக்கோலம் (
அத்தப்பூக்கோலம் ) பிரசித்தம். வடநாட்டில் ரங்கோலியும் சுவரில் வரையும் கோலங்களும்
பிரசித்தம். தமிழ்நாட்டிலும் இன்னபிற மாநிலங்களிலும் கோலப்பொடி என்ற
வெள்ளைக்கல்பொடியால் கோலம் போடுகிறார்கள். முன்பு பச்சரிசியால்தான்
கோலமிடுவார்கள். அதனால் எறும்புகள் உணவாக எடுத்துச் செல்லும். மேலும் கோலங்கள்
உடற்பயிற்சி மனப் பயிற்சி கொடுத்து உடலையும் உள்ளத்தையும் ஆரோக்யமாக வைத்திருக்க
உதவி செய்தன.
மார்கழி மாதம்தான் கோலங்களுக்கான மாதம். யார் வீட்டுக் கோலம் பெரியதென்று ஒரு போட்டியே நடக்கும். முன்பெல்லாம் விடியற்காலையில் எழுந்து வாசல் கூட்டி சாணி தெளித்து வாசல் நிறைக்க இந்தக் கோடிக்கும் அந்தக் கோடிக்கும் கோலம் போட்டு பார்டர் எல்லாம் போட்டு பெண்கள் அமர்க்களப்படுத்துவார்கள். சிலர் காவி போட்டு அசத்துவார்கள்.
வீட்டில் அக்கா, தங்கைகள் கோலம் போட்டால் கூடவே பொடிசுகளும் எழுந்து வண்ணப்பொடி போட உதவுவார்கள். கோலத்து நடுவில் சாணி வைத்துப் பூசணிப்பூ அல்லது பரங்கிப் பூவை செருகிவைப்பார்கள். இதற்காகத் தம்பி தங்கைகள் எல்லாம் ஓடி ஓடி பூ சேகரிப்பார்கள்.
இப்போதெல்லாம் அர்த்த ராத்திரியில் வாசல் தெளித்துக் கோலத்தைப் போட்டுவிட்டுப் படுக்கப் போய்விடுகிறார்கள். பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து கோலம் போட்டால் நமக்குத் தேவையான ஆக்சிஜன் காற்றில் நிறைந்திருக்கும். அது நல்லது என்றுதான் இப்படி ஓர் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இப்போது வேலைக்குப் போகிற பெண்கள் ஆற அமர 4 மணி நேரம் செலவழித்துக் கோலம் போட முடியாது என்று ராத்திரியே போட்டுவிடுகிறார்கள்.
என் அம்மா வழிப் பாட்டி சாணம் தெளித்தால், கரைத்து வடிகட்டித் தெளிப்பார்கள். கோயம்புத்தூர் பக்கமெல்லாம் சாணிப் பொடி என்று மஞ்சள் கலர்ப் பொடி விற்கும். இதையே கரைத்து போர்டிகோ எல்லாம் மெழுகி வைத்திருப்பார்கள்.
கோல மாவைக் கூடப் பச்சரிசியில் வைத்துக்கொள்வது நல்லது. எறும்பு, குருவி போன்றவை எல்லாம் அந்த அரிசியைச் சாப்பிடட்டும் என்று எண்ணம். ஆனால் அதை வைத்துக் கோலத்தை நன்றாக வழவழ என்று போட வராது. எனவே வெள்ளைக் கல்லைப் பொடியாக்கிக் கோலம் போட ஆரம்பித்தார்கள். அந்த வெள்ளைக் கல்லில் கலர் மாத்திரைகளைக் கலந்தால் வண்ணக் கோலப் பொடி ஆகிவிடும்.
ஓலைக்கு நனைக்கிற சாய மாத்திரை வாங்கி வந்து தண்ணியில்
கரைத்து, கோலப் பொடியை அதில் போட்டுக் காய வைப்பார்கள். என் அம்மா காபித்தூள், கரி,
உப்பு, ராபின் நீலம், மஞ்சள் பொடி, சுண்ணாம்பு, இதெல்லாம் கலந்து கலர் தயாரிப்பார்கள்.
உப்பில் கலர் கலந்தும், தேங்காய்ப் பால் எடுத்த தேங்காய்ச் சக்கையைக் காயவைத்துக் கலர்
சேர்த்தும் வண்ணக்கோலம் போடப் பயன்படுத்துவார்கள்.
கம்பிக்
கோலம் புள்ளிக் கோலம் ரங்கோலி என விதம் விதமான கோலங்கள் உண்டு. பச்சரிசியை
அரைத்துக் கரைத்தும் கோலமிடுவார்கள். திருமணம், பூப்பெய்துதல், குடிமனை புகுவிழா,
முக்கிய நிகழ்வுகள், திருவிழாக்கள், திருக்கோயில்கள், பண்டிகைகள், நிறுவனங்கள்,
கல்லூரிகள், பள்ளிகள், அலுவலகங்கள் போன்றவற்றின் விசேஷ நிகழ்வுகளிலும்
கோலங்கள் முக்கிய இடம் பிடிக்கின்றன. விதம் விதமான மணல், பயறு வகைகள், சாயம்
ஏற்றிய கல் உப்பு, கலர்ப்பொடிகள் ஆகியவை கொண்டும் கோலமிடுகிறார்கள். யக்ஞம் யாகம்
ஹோமம் ஆகியவற்றில் கோலம் சிறப்பிடம் வகிக்கின்றன.
கோலங்களை பச்சரிசி மாவு, வெள்ளைக் கல் பொடி (முகுமா), தேங்காய்த்துருவல், உப்பு, பூக்கள், இதிலெல்லாம் போடுவோம். பொடிக்கோலம், மாக்கோலம், ரங்கோலி, பூக்கோலம், மணற்கோலம், (SAND CARPET), பயறுக் கோலம் (GRAIN CARPET) என்ற வகைக் கோலங்களையெல்லாம் எங்கள் பாத்திமா கல்லூரியில் நடைபெறும் கல்ச்சுரல் போட்டிகளில் போடுவோம்.
பொடிக்கோலம் என்பது பொடியால் (அரிசி, கோலமாவு) போடுவது. இது மண்ணில் போடுவது. தரையிலும் போடலாம். புள்ளிக் கோலம், நெளிக்கோலம், டிசைன் கோலம் என்பவை இதில் அடங்கும். மங்கல நிகழ்ச்சிகள் என்றால் இரட்டை இழைக்கோலங்களும், அமங்கலம் என்றால் ஒற்றை இழையும் போடுவார்கள்.
மாக்கோலம் பெரும்பாலும் சிமெண்ட், மார்பிள் மற்றும் மொசைக் தரைகளிலும் போடப்படும். மோதிர விரலால் துணியைக் கோலமாவில் நனைத்துப் பிழிந்தபடி போடப்படுவது இது. இதில் நடுவீட்டுக் கோலம், பாப்பாரக் கோலம், தும்பு பிடித்தல், நிலைவாசல் கோலம், நடைக்கோலம் என்பவை அடங்கும். நெளி நெளியாய்ப் போடுவதை நுடக்குப் போடுதல் என்பார்கள். கோலம் முடிந்ததும் இரட்டைப் புள்ளிகள் வைப்பார்கள். இதைப் புள்ளி குத்துதல் என்பார்கள். எந்த நிகழ்வு என்றாலும் அது கோலத்தோடுதான் துவங்கும்.
தீபாவளி, பொங்கல், நவராத்திரி, காரடையான் நோன்பு, பிள்ளையார் நோன்பு மட்டுமல்ல, பிள்ளை பெற்று அழைத்தால், மகள் சமைந்தால், திருமண சமயம் மற்றும் மருமகள் முதல் தீட்டானால், விளையாட்டுப் பெட்டி வேவு எடுத்தால், கிரஹப் ப்ரவேசம், குடிபுகுதல், சாந்தி, சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம், கனகாபிகேஷம் என சுபத்துக்கும், கேதம் போன்ற அசுபத்துக்கும் கோலமிடுவார்கள். இதிலும் அமங்கலம் என்றால் ஒற்றை வரிசையில் புள்ளிகளும், மங்கல நிகழ்வு என்றால் இரட்டை வரிசைப் புள்ளிகளும் வைப்பார்கள்.
ரங்கோலி கலர்க்கோலப் பொடியால் போட்டு அலங்கரிக்கப்படுவது. இது புள்ளிக் கோலம், நெளிக்கோலம், டிசைன் கோலம் என எதுவானாலும் மிகுந்த அழகைக் கொடுப்பது. நாங்கள் கதகளி உருவத்தை ரங்கோலியில் வரைந்து முதல் பரிசு பெற்றோம். அத்தனை வண்ணங்களையும் அதில் சேர்க்கலாம். நவரசக் கலவை கதகளி என்பது.
பூக்களால் போடப்படும் கோலம் பூக்கோலம். இது கேரளாவில் தவிர தமிழ்நாட்டில் போட்டிகளிலும், பெரிய விசேஷ வைபவங்களில் வரவேற்கவும், பெரிய நிறுவனங்களின் ரிஸப்ஷன் ஹால்களில் மிகப்பெரும் நிகழ்வுகளின் போதும் போடப்படுகிறது.
மணற்கோலம் போட விதம் விதமான நிறமுடைய மணல் தேவை. ஒருமுறை கன்னியாகுமரியில் வாங்கி வந்த 5 வகை மண்ணை வைத்து நாங்கள் போட்டிக்குக் கோலமிட்டோம். கறுப்பு, செம்மண், சந்தன நிற மண், சாதா மண், ஆற்று மணல் போன்றவை வைத்து டிசைன் வரைந்தோம்.
பயறு வகைக் கோலங்கள், போட்டிகளிலும், பெரிய விசேஷங்களில் அழகூட்டவும் போடப்படுகின்றன. இதற்கு 2 அடிக்கு 2 அடி என்ற அளவு கொடுத்து விடுவார்கள். அதில் நாம் இந்தியாவையும் வரையலாம். இறைவன் திருவுருவங்களையும் வரையலாம். மைசூர் தால், பாசிப்பயறு, கறுப்பு உளுந்து, கடலைப் பருப்பு, பாசிப்பருப்பு, கறுப்புக் கொண்டைக் கடலை, சோயா, மொச்சை, ராஜ்மா, கொள்ளு, காராமணி, வெள்ளைக் கொண்டக் கடலை கொண்டு இவ்வகைக் கோலம் போடப்படுகிறது.
நாம் தரையில் மட்டும் கோலம் போடாமல் தண்ணீரிலும் போடலாம். ஒரு வாளித் தண்ணீரில் போட்டாலும் சரி, ஒரு தாம்பாளத்தில் தண்ணீர் ஊற்றிப் போட்டாலும் சரி. தண்ணீர்ல கோலமா என்று ஆச்சரியமா! ஆமாங்க ஆமாம். தண்ணீரில் கோலம் போடுவது எளிதுதான். ப்ரெஞ்ச் சாக் பவுடர் என்று ஒன்று இருக்கிறது. அதை அந்தத் தண்ணீர் மேல் தூவிட்டு அது நன்றாக அடர்த்தியாகப் பரவியதும், கோலமாவால் கோலம் போடலாம். அதில் லேசான எடையுள்ள மெழுகு விளக்குகளையும் எரிய விடலாம். பொதுவாக இந்த வகைக் கோலங்கள் நவராத்திரி சமயங்களில் கொலுவுக்கு முன்னே போடப்படுகிறது.
கோலத்திலும் சங்கீதம் இருக்கிறது. நாங்கள் கல்லூரியில் படிக்கும்போது ஒருவர் கோலத்தில் ச, ரி, க, ம, ப, த, நி, என்ற ஏழுவகைக் கோலங்கள் போடச் சொல்லிக் கொடுத்து வகுப்பெடுத்தார். பொதுவாக நாம் மூணு புள்ளி, மூணு வரிசை வைத்துப் போடுகிற கோலங்கள்தான் அவை. இவைதான் புள்ளிக் கோலங்களுக்கு ஆதாரக் கோலங்கள். இதை வைத்து நாம் ஆயிரக்கணக்கான கோலங்கள் போடலாம். ஆரோகணம், அவரோகணம் என்ற வரிசையில் கூட இதை எல்லாம் மாற்றி மாற்றி இணைத்துக் கோலம் போடலாம் என்று அவர் சொன்னார்.
தப்பாகப் கோலம் போட்டால் அபஸ்வரம் தட்டிவிடும். அதாவது பாதிக் கோலம் போட்ட பின்னால், தப்பாகப் போட்டிருந்தால், சிக்கலாகி வந்த வழியே சுற்றிக் கோலத்தை அழித்து அழித்து அசிங்கமாக்கி விடுவோம். எனவே நோட்டீல் போட்டுப் பார்த்துட்டு வாசலில் போடுவது உத்தமம்.
கைகள் பழகப் பழக நல்ல வளைவு நெளிவான கோலங்கள் எல்லாம் எளிதாகப் போட வரும். காலையில் மட்டுமல்ல, மாலையிலும் கோலம் போடும் பழக்கம் உண்டு. சூரியனை வரவேற்க, அந்த நாளை வரவேற்க, காலையில் கோலம் போடுவது போல, மாலையிலும் வாசலைத் தெளித்துக் கோலம் போடும் பழக்கம் இன்னும் பல இடங்களில் இருக்கிறது. கோலம் என்பது லெக்ஷ்மண ரேகை மாதிரி. அதைத் தாண்டி தீமை ஏதும் வீட்டுக்குள் வராது என்பது நம்பிக்கை.
பழங்கள், பூக்கள், பறவைகள், சூரியன், சந்திரன், கொடிகள், வண்ணத்துப் பூச்சிகள், தாமரை, நட்சத்திரம் போன்றவை அடிக்கடி போடப்படும் கோலங்கள்.
வீட்டு வாசற்படிக்கு அந்தக் காலத்தில் நிறைய முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள். நீறு இல்லா நெற்றி பாழ் என்று சொல்வது போல கோலம் இல்லா வாசல் பாழ் என்பது வழக்கம். ஏதும் அமங்கலம் இருந்தால்தான் கோலம் போட மாட்டார்கள். மற்ற தினங்களில் நிச்சயம் ஏதோ ஒரு சிறிய கோலமாவது வீட்டு வாசலில் இருக்கும். வீட்டு வாசற்படியைக் கழுவி மஞ்சள் தடவி குங்குமம் இட்டுச் சிலபேர் திருஷ்டி கழியட்டும் என எலுமிச்சை கூட வெட்டி வைப்பார்கள்.
பூஜையறைக் கோலங்கள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை. அதிலும் நவக்கிரகக் கோலங்கள், பன்னிரெண்டு ராசிகளையே கோலங்களாக வரைதல், இருதயக் கமலம், ஐஸ்வர்யக் கோலம், ஆஞ்சநேயர் கோலம், சங்குக் கோலம், மயில் கோலம் போன்றவை பூஜையறையில் போடச் சிறப்பு வாய்ந்தவை. சக்தி வாய்ந்த கோலங்களை மந்திரம் எனச் சொல்றோம். அவை விதிமுறைப்படி வரையப்பட்டிருக்கும். இந்து மதப்படி ஒவ்வொரு சாமிக்கும் ஒவ்வொரு விதமான யந்திரமும் கோலமும் கூட உண்டு. யந்திரங்கள் கொண்ட கோலங்கள் விசேஷ சக்தி வாய்ந்தவை. கோலங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி கொடுக்கின்றன. நளினமான இனிமையான கோலங்கள் காண்பவர் மனதை வசியப்படுத்தும் சக்தி வாய்ந்தவை.
துளசி மாடம் இருந்தால் அதற்கும் தூய்மை செய்து கோலம் போட்டுத் தீபம் காட்டுவார்கள். துளசி மாடத்தடியில் கண்டெடுக்கப்பட்ட சூடிக் கொடுத்த சுடர்க்கொடியான ஆண்டாள், பெருமாளை அடைய திருப்பாவை பாடிய காலத்தில், நாமும் பெரிய பெரிய கோலங்கள் இட்டு வழிபடுகிறோம்.
புராண இலக்கியக் காலங்களில் அரசர்கள் போருக்குப் போகுமுன்னும், போய் வந்த பின்னும், ஆரத்தி கரைத்துக் கோலத்தில் கொட்டும் பழக்கம் இருந்திருக்கிறது. சினிமாக்களில் கூடப் பார்த்திருப்பீர்கள். காலிலேயே உருவங்களை உருவாக்கும் பரத நாட்டியப் போட்டி எல்லாம் அந்தக் காலத்தில் இருந்திருக்கிறது. பத்மினி, வைஜெயந்தி மாலா போன்ற நடனமணிகள் அட்டகாசமாக ஒரு பீடத்தில் இருக்கும் கலர்க் கோல மாவுகளை எல்லாம் தட்டிவிட்டு, அதன்மேல் நடனமாடி, புலி, சிங்கம் என்றெல்லாம் உருவங்களை உருவாக்குவதை நாம் திரைப்படங்களில் பார்த்திருக்கிறோம்.
நகரத்தார் திருமணங்களில் பச்சரிசி மாவை அரைத்துத் துணியில் நனைத்துக் கோலம் போடுவார்கள். நிலைவாசல் படிக்கோலம் என்றும் சாமி வீட்டுக் கோலம் என்றும் சொல்வார்கள். திருமணத்தின்போது மணமக்கள் அமரும் மணவறையின் மீது போடப்படும் கோலம் மணைக் கோலம். நல்லது எல்லாவற்றிற்கும் ஒரு பாப்பாரக் கோலம் என்ற ஒன்றைப் போடுவார்கள்.
கணபதி ஹோமம் மற்றும் பலவித ஹோமங்களைச் செய்யும்போதும் கோலங்கள் போடப்படுகின்றன. ஹோமம் செய்யும் செங்கற்கள் மீதும் கோலம் போடுவார்கள். நிலைவாசல் படிகளில் போடும் கோலம் படிக்கோலம். கோலமாவில் நடுவீட்டில் தும்பு பிடித்து விட்டுக் கோலமிட ஆரம்பிப்பார்கள்.
பொங்கல் சமயங்களில் பொங்கல் தவலை, இரும்பு அடுப்பு (தற்போது காஸ் அடுப்பு) அடுப்படி மேடை, கலவடை (பொங்கலை இறக்கி வைக்க உபயோகப்படுவது), சுளகு (முறம்), எல்லாவற்றிலும் குச்சியில் பஞ்சு சுத்தி நனைத்துக் கோலமிடுவார்கள். பச்சரிசி மாவும் மஞ்சளும் நாமக்கட்டியும் கரைத்த மஞ்சள் மாவிலும் போடுவார்கள். மங்கலகரமாக இருக்கும்.
மாடு கன்று வளர்ப்பவர்கள் கட்டுதுறையையும் கழுவி மஞ்சள், குங்குமமிட்டுக் கோலமிட்டு, சாம்பிராணி தூபம் காண்பிப்பார்கள். தீபாவளி, கார்த்திகைக்குத் தீபக் கோலங்களும், பொங்கலுக்குப் பொங்கல் கோலங்களும், கிறிஸ்துமஸ், புத்தாண்டு தினங்களில் சாண்டாக்ளாஸ், மெழுகுவர்த்தி, தேவாலய மணி, கேக் போன்ற கோலங்களும் இட்டு, புத்தாண்டு, தீபாவளி, பொங்கல் வாழ்த்துக்களும், நல்வரவு, வருக வருக என்றும் அனைவரையும் இனம் மொழி பாகுபாடு பாராமல் கோலத்தாலேயே வரவேற்கும் மக்கள் நம் மக்கள்.
திருவிழா, தேர், தெப்பம் சமயங்களில் ஒவ்வொரு வீதியிலும் சாமி உலா வரும் நேரம், நடுவாசலில் நீர் தெளித்துக் கோலமிடுகிறார்கள். சாமியை வரவேற்க, தேர், மண்டபம், அம்பாரியோடு யானை, நாகம், மயில், கிளி, அன்னம், கருடன், கற்பக விருட்சம், காமதேனு என்று கோலமிடுவார்கள். ஏதோ ஒரு கோயிலுக்கும் பாத யாத்திரை செல்லும் பக்தர்கள் வந்தாலும் அவர்களை வரவேற்கக் கோலங்கள் போடுவதுடன் அவர்கள் பாதங்களில் நீரூற்றியும் மகிழ்வார்கள்.
தமிழ்நாட்டுப் பெண்களோடு கோலங்கள் பொதுவாக இணைந்திருந்தாலும், ராஜஸ்தான், கேரளா வங்காளம், குஜராத், மகாராஷ்டிரா போன்ற பகுதிகளிலும் கோலமிடும் பழக்கம் உண்டு. ராஜஸ்தானில் வண்ணப் பொடியால் கோலங்களும் கேரளாவில் ஓணம் பண்டிகையின்போது ‘அத்தப் பூக்கோல’மும் வங்காளத்தில் ‘ஆல்பனா’ என்னும் கோலமுறையும் பிரபலம். குஜராத்திலும் மகாராஷ்டிரத்திலும் ஸ்வஸ்திக் சின்னத்தை ஒட்டிக் கோலமிடுகிறார்கள். இது செல்வத்தைக் கொடுக்குமாம்.
நாகம் போன்ற சில கோலங்களை எல்லா நாளும் போடக்கூடாது என்று சொல்வார்கள். நாக சதுர்த்தி, கருட பஞ்சமி போன்ற தினங்களில் போடலாம். ஞாயிற்றுக் கிழமை சூரியன், திங்கட்கிழமை சந்திரன், செவ்வாய்க்கிழமை தாமரை, புதன் கிழமை சங்கு, வியாழக்கிழமை, கருடன், வெள்ளிக்கிழமை குத்துவிளக்கு, சனிக்கிழமை சக்கரம் ஆகிய கோலங்கள் போட்டால் விசேஷம். கோலம் போடும்போது சாமி பாடல்களோ, ஸ்தோத்திரங்களோ, பாமாலைகளோ சொல்லிக்கொண்டே போடுவார்கள்.
திருமணமாகி வந்த மருமகளை முதலில் கோலமிடச் சொல்லிப் பார்ப்பார்களாம். கோலத்தைச் சீராகப் போட்டாலே குடும்பத்தைக் கட்டும்செட்டுமாக நடத்துவாள் என்று தெரிந்து கொள்வார்களாம்.
கோலக்கலை என்பது இந்தியர்களுடன், பொதுவாகத் தென்னிந்தியர்களுடன் சம்பந்தப்பட்டது. சென்னை போன்ற பெருநகரங்களில் பெரும்பாலும் முறைவாசல் செய்யும் பெண்மணிகளே கோலமிடுவதால் மயிலாப்பூருக்கோ அல்லது மந்தைவெளிக்கோ போனால் நீங்கள் எல்லா வீட்டிலும் ஒரே மாதிரி ஸ்டார் கோலத்தைப் பார்க்கலாம். அந்த அளவுதான் அவர்களின் ரசனை அல்லது அவர்களுக்குக் கிடைக்கும் நேரம். அதை ஒரு கடமையாகச் செய்வதால்தான் அப்படி தினமும் ஒரே மாதிரி ஸ்டாரை வரைகிறார்கள்.
பொதுவாகக் கோலக்கலை
என்பது தியானம் மாதிரி. ஆழ்ந்த கவனத்துடன் நாம் ஈடுபடும்போது நல்ல தியானம் செய்த உணர்வு
ஏற்படும். நம் சுவாசம் அமைதியாய் சீராய் இருக்கும். குனிந்தும், முழங்கால் மடித்து
அமர்ந்தும் கோலம் போடும்போது, உடல் நெளிந்து வளைந்து பல ஆசனங்களைச் செய்த பலன் உண்டாகும்.
அந்தக் குறிப்பிட்ட உருவங்களில் நம் மனதை ஒன்று குவிக்கும்போது அது சிறப்பான பலன்களைத்
தரும். ஸைமாட்டிக்ஸ் என்ற இயல், கோலங்கள் மற்றும் அவற்றின் வளைவு நெளிவால் ஏற்படும்
அதிர்வுகள் நம்முடைய எண்ணங்களையும் சீராக்குவதாகச் சொல்கிறது. எனவே, முடியும்போதெல்லாம்
கோலமிடப் பழகுங்கள். அது உங்கள் வீட்டு வாசலானாலும் சரி, நோட்டுப் புத்தகமானாலும் சரி,
கணினித் திரையானாலும் சரி. கோலம் நம் எண்ணத்தைச் செழுமையாக்கும் என்பதை அனுபவப்பூர்வமாக
உணர்வீர்கள்.
மார்கழி
மாதம் அதிகாலையில் எழுந்து கோலம் போடுவதால் கிடைக்கும் ஓஸோன் காற்று உடலை
சுத்தமாக்கும். சாணம் தெளிப்பதால் சிறந்த கிருமி நாசினியாக செயல்பட்டு நோய் நொடி
அண்டாமல் தடுக்கிறது. கோலத்தில் வைக்கப்படும் சாணியும் பூசணிப்பூ பரங்கிப் பூவும்
மறுநாள் இயற்கை உரமாகும். குனிந்து நிமிர்ந்து பெண்களுக்கான ஜீரண உறுப்புகள் வேலை
செய்வதோடு மற்ற உறுப்புகளும் பலம் பெறுகின்றன
இனி அறிவியல் காரணம் :- இதில் போடப்படும்
ஓவல் ஷேப் கோடுகள் கோள்களின் பாதையை நினைவுறுத்துவதாக அமைந்துள்ளன. முக்கோணம்,
வட்டம், சதுரம், செவ்வகம், வளைவு நெளிவுகள் என்று போடப்படும் கோலங்களுக்கு ஒத்த
அதிர்வுகள் உள்ளன. பௌதீகத்தில் குறிப்பிட்டுள்ளபடி ஒவ்வொரு ஒலிக்கும் ஒரு
ஒத்திசைவான வடிவம் உள்ளது. அது குறிப்பிட்ட அதிர்வலைகளை உருவாக்குகிறது.
அதனால்தான்
அழகான வண்ண ரங்கோலிகளைப் பார்க்கும்போது மனதில் இனிமையான அதிர்வுகள் உருவாகின்றன.
அமைதிப் படுத்துகின்றன.
ஸைமாட்டிக்ஸ்
என்னும் தனிப்பிரிவு அதிர்வுகளுக்கும் கோல வடிவங்களுக்கும் உள்ள உறவை
விளக்குகின்றது. க்ரேக்க மொழியில் அலைகள் என்ற வேர்ச்சொல்லில் இருந்து வந்தது.
இதற்கு முழு உருவம் கொடுத்த பெருமை சுவிஸ் விஞ்ஞானியான ஹான்ஸ் என்னி என்பவரையே
சாரும்.
ஒரு
உலோகத் தகட்டில் சிறிது மணலைத் தூவி அதை அதிர்வு ஏற்படுத்தக் கூடிய ஜெனரேட்டரோடு
இணைத்தால் ஒவ்வொரு ஒத்ததிர்வுக்கும் ஏற்ப மணல் துகள்கள் வெவ்வேறு வடிவமைப்புப்
பெறுகின்றன. இப்படி அதிர்வானது வெவ்வேறு வடிவமைப்புகளை உருவாக்குவது போல இந்த
வடிவமைப்பில் அமைந்த கோலங்களைப் பார்க்கும் மனிதருக்குள் அவை நல்ல அதிர்வுகளை
உருவாக்கும். அமைதியான, மகிழ்ச்சியான மனநிலையைக் கொடுக்கும்.
இதைக்
கொண்டு சிக்கலான மனநிலை வியாதி கொண்டவரையும் குணமாக்கப் பயன்படுத்த முடியும் என
விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள். வண்ணங்கள் வடிவங்கள் கொண்டு மனித
மனங்களில் மாற்றங்கள் நிகழ்த்த இயலும் என்று நரம்பியல் அறிவியல் நிரூபித்துள்ளது.
இதற்கு ஸைமோதெரஃபி என்று பெயர். இதனால்தான் வடிவழகான வண்ணக் கோலங்களைக் கண்டு நாம்
அமைதியான மனநிலை பெற்று ரசிக்கத் துவங்குகிறோம்.
ஆன்மீகத்துக்காகவும்
அழகியலுக்காகவும் பயன்படும் நமது மரபு சார்ந்த கோலக்கலை நம் கலாச்சாரத்தின்
பிரதிபலிப்பாக மட்டுமல்ல அறிவியல் ரீதியாகவும் உளவியல்ரீதியாகவும் நம்மைச்
செப்பனிட்டே வந்திருக்கிறது. அதற்குக் காரணமான நமது கோலக்கலைக்கு நன்றி சொல்வோம்.



கோலமிடும் மரபு என்பதானது அழகியல் நிலையிலும் போற்றிப் பாராட்டப்படவேண்டியதாகும். நன்றி.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் அக்கா...
பதிலளிநீக்குகோலமிடுதல் ஒரு கலை... நம் மரபு...
நன்றி ஜம்பு சார்
பதிலளிநீக்குநன்றி குமார் சகோ
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!