எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 12 மார்ச், 2018

வத்துப்பஹார் வானா ஐயா அவர்களுக்கு நூற்றியாறு வயது.


வள்ளியப்பர் எங்கள் ஐயா
வெள்ளை மனம் கொண்ட மனிதர்.
முள் உள்ளிருக்கும் பலாப் போல
உள்ளமெல்லாம் இனிப்பவர்.
வேகுப்பட்டியிலிருந்து வலசைவந்து
காரைக்குடியில் கோலோச்சும்
வேகுப்பட்டியார் வீட்டில்
வள்ளியம்மை பெற்ற மகன்
விசாலாட்சி வளர்த்த மைந்தன்.
நாகப்பையா மெய்யப்பையா
குலம்தழைக்க உதித்த பேரன்.
கொட்டிக் கிடந்த சொத்தை ஆள
ஓவியமாய்ப் பிறந்த ஒற்றை அரசு.
ஐந்தாவது படிக்கும்போதே
தந்தியைப் படித்துக் காட்ட
மகிழ்ந்து போன பாட்டையாவும்
படித்ததெல்லாம்போதுமென்று
பெட்டியடி பார்க்க
மலேயாவுக்கு அனுப்பக்
கப்பலேறிப் போனவர்கள்.
மலாய் சீனம் பின்னர்
மலையாளமும் கற்று
மலைக்க வைத்தவர்கள்.
கட்டுச் செட்டாய் வாழ்ந்து
கன காரியம் முடித்தவர்கள். 
வத்துப்பஹார் வானா.
பட்டாலையில் பெட்டியடியில்
கம்பீரமாய் வீற்றிருப்பார்.
திண்டும் குறிச்சியும்
சிறு ஓய்வுஸ்தலங்கள்.
செட்டியார் கதம்பமோ
மருக்கொழுந்தோ மணக்க வரும்
செண்ட் வானா.

வெள்ளை வேஷ்டி நீலம் துலங்கும்
விசிறிமடிப்பு அங்கவஸ்திரம் ஒய்யாரம்.
விடுமுறையில் பேரன் பேத்தியர் வந்தால்
வேலைகள் பயில சிறு வாய்ப்பு அமையும்
பார்க்கக் கடிசானாலும்
பதநீர்போல் பக்குவம் இருக்கும்.
பழக பயம் வந்தாலும்
கருப்பட்டிபோல் இனிப்பிருக்கும்.
தேவைக்கு அதிகமாக
உடுத்துவதோ உண்பதோ
ஆடம்பரம் என உரைப்பார்.
சேவை செய்ய வேணும்
பெரியவர்களுக்குப் பிள்ளைகள்.
சொல் ஒன்று செயலும் ஒன்றுதான்
சொல்லியதைக் கடுகி முடிப்பார்.
வைரம் பார்த்தாலும்
வட்டிக்கு விட்டாலும்
தொழில் தர்மம் காத்து நின்று
தோதாக வரவு வைப்பார்.
ஷேர் மார்க்கட்தனிலே
ஷேர்கான் தான் அவர் சந்தேகமில்லை.
சிப்லா மருந்துண்ணும் வேளையிலும்
சிப்லா ஷேர் விலையில் கண்ணிருக்கும்.
வேதபாடசாலை ஓங்க
வேண்டியன செய்தவர்கள்.
வேண்டி வரும் அனைவருக்கும்
வேண்டும் உதவி செய்திடுவார்.
கற்பக விநாயகருக்குக்
கோயில் ஒன்று கட்டுவித்து
கற்பக விநாயகர் நகரைக்
கருத்தாக உருவாக்கினார்.
அன்றைக்குக் காடான இடம்
இன்றைக்கு நாடாகிக் கிடக்கு.
தன் மக்களுக்கு ஒரு நீதி என்றால்
மற்றவர்க்கும் அதே நீதி.
தாய் வாக்கைக் கடைப்பிடிப்பார்
தன் வாக்கை வாரிசுகளைக்
கடைப்பிடிக்க வைப்பார்.
கேட்ட வாக்கெல்லாம்
வீணாகிப் போனதில்லை.
இன்று நாம் இருக்கும் ஸ்திதிக்கு
அவர் வாக்கே காரணமாம்.
காதலோடு கைப்பிடித்த
கருப்பாயி ஆயாவோ
கனிவான எழிலரசி.
ஏழுபெற்ற ஏந்திழையாள்
இறைவன் பதம் ஏக
அடுத்துக் கரம் பிடித்த
ஐஸ்வர்ய இலக்குமி
அலமேலு ஆயாதான்
ஐயாவின்  உலகமானார்.
கொண்டுவிக்க ஐயா செல்ல
கொண்டுவந்ததையெல்லாம்
கொண்டவருக்காகக்
கழட்டிக் கொடுத்த ஆயிழை.
கொண்டுசென்ற ஐயாவோ
ஒன்றைப் பத்தாய்ப் பெருக்கி
ஆயாவை அழகு செய்தார்.
தனித்துத் தொலைதூரம் வாழ்ந்து
குடும்பத்தை இணைத்தவர்கள்.
ஆறாவயலிலிருந்து வந்த
அலமேலு ஆயாவோ நல்லரசி.
ஆறு தங்கக்கட்டி பெற்று
அதில் நாலை வைரமாக்கியவர்கள்.
அறுபதுக்குப் பின் காரைநகர்வந்துவிட
அதன் பின்னே ஐயாவின் ராஜாங்கம்
இன்னும் ஜோர் ஜோர்தான். 
ஒவ்வொரு நாளும் ஐயாவைப் பிள்ளைபோல
நேரம் தவறாமல் தாய்போல உணவூட்டிச்
சீராட்டிப் பாராட்டிப் போற்றிப் பணிந்து வந்தார்.
காலை ஆறுமணியிலிருந்து இரவு எட்டு மணிவரை
இரண்டு மணிக்கொருதரம்  விதம் விதமா உணவு
ஐயாவுக்கு  அடுப்படியிலிருந்து அணிவகுக்கும்.
வெந்நீர் அருந்தி ஐயா  வெகு நோய் கடப்பார்.
இசை வெள்ளத்தில் நீந்தி மனம் தோய்ந்து கிடப்பார்.
சாந்தியும் சதாபிஷேகமும்
சபை நிறையச் செய்து கொண்டாலும்
சீராட்டிய ஆயாவை விட்டுப் போக
எப்படித்தான் மனம் வந்துச்சோ
நூறாண்டு நெருங்க நாலாண்டு இருக்கு முன்னே
ஒரு வாரம் தான் கிடந்தார்.
நோய் நொடியெனக் கிடக்காதார்
போதுமடா இல்வாழ்க்கையென
பூமி துறந்து முருக பதம் அடைந்தார்.
தினம் சொல்லும் ஸ்கந்தர் சஷ்டிக்கவசம்
கவசம்போலக் காத்து நிற்க
குன்றக்குடி ஷண்முகந்தான்
மயில்மேல்காட்சி தந்து கரம்பிடிக்க
மார்ச் மாசத்தில்
மலையேறிப் போன ஜோதி.
வத்துப்பஹார் வானாவுக்கு
இன்று  நூற்றியாறு வயது
வானப் பிரஸ்தம் அடைந்ததோ
வயது  தொண்ணூற்றாறில்
வள்ளியப்ப ஐயாவின்
வாக்கும் நோக்கும் ஒன்றாய் இருக்கும்
அவர் வாழ்ந்திருந்தால்
இந்த பூமி இன்னும் புதுக்கும்.
கொடுத்து வைச்சது அம்புட்டுத்தான் என்று
மனசை உதறிப் போங்க.
அவர் கொடுத்துச் சென்றதை எடுத்துக் கொண்டு
மனஉறுதி கொண்டு  வாழுங்க. 

5 கருத்துகள்:

  1. சந்தனப் பொட்டு
    மந்திரப் புன்னகை
    இன்றும் மனதில் நிற்கும்
    தங்க பிரேம் கண்ணாடி
    உடையிலும் மொழிலும்
    பகட்டில்லா நேர்த்தி
    பமுத்த பழம்
    அனுபவக் களஞ்சியம்


    தொழில் துறையில் தான்
    இழந்த கதைகளையும்
    சின்ன முறுவலோடு பகர்வார்
    பொல்லாத பங்குச் சந்தையிலும்
    ஆராவாரமின்றி அள்ளிக் குவிப்பார்
    அவர் தான் வத்துபார் வானா


    எந்த நிலையிலும்
    அதிர்ந்து பேசமாட்டார்
    எச்சிக்கலுக்கும் தீர்வை
    அறுதியிட்டுக் கூறுவார்

    பதிலளிநீக்கு
  2. கருத்துக்கு நன்றி நலந்தா ஜம்பு சார்

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு
  3. //சிப்லா மருந்துண்ணும் வேளையிலும்
    சிப்லா ஷேர் விலையில் கண்ணிருக்கும்.
    வேதபாடசாலை ஓங்க
    வேண்டியன செய்தவர்கள்.
    வேண்டி வரும் அனைவருக்கும்
    வேண்டும் உதவி செய்திடுவார்.
    கற்பக விநாயகருக்குக்
    கோயில் ஒன்று கட்டுவித்து
    கற்பக விநாயகர் நகரைக்
    கருத்தாக உருவாக்கினார்.//

    சூப்பர் ! :)

    தங்களின் இந்த எழுத்துக்கள் ஒவ்வொன்றிலும், அவர் மேலும் ஜொலித்து, இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்.

    பழுத்த பழம் .... சிவப்பழம் ஒருவரின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் இந்த பகிர்வுக்குப் பாராட்டுகள் + நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  4. வைரம் பார்த்தாலும்
    வட்டிக்கு விட்டாலும்
    தொழில் தர்மம் காத்து நின்று

    சிறப்பான கவிதை. மண்மணம் வீசும் சொற்கள். இனிமை.

    பதிலளிநீக்கு
  5. நன்றி விஜிகே சார்

    நன்றி முத்துசாமி சார்.

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...