எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 30 ஜூலை, 2015

முன்னோடிகள் மறைவதில்லை.

கல்லூரியில் சேரும் முதல் நாள். முதல்வரைச் சந்திக்க வேண்டும். ஒரே டென்ஷன்.தந்தையுடன் ரிஷப்ஷனில் நின்றது ஞாபகத்தில் பக்கத்தில் ஒரு சின்ன கெபி. குழந்தை யேசுவைச் சுமந்த மேரி கண்ணில் பட கல்லூரி பற்றிய பயத்தோடு சின்ன பெரிய வேண்டுதல்கள் எல்லாம். முதல்வர் சந்திப்புக்குப் பின் ராகிங் இருக்குமே. அதுதான். 

என்னுடைய டர்ன். அப்பாவோடு உள்ளே நுழைந்து மாலை வணக்கம் சொன்னேன். கண்ணாடியணிந்த கம்பீரமான உருவம். சிம்மம்போன்ற பார்வை. நான் மிரட்சியோடு இருக்க அப்பா’ கெமிஸ்ட்ரில நல்ல மார்க் இருக்கதால பிஎஸ்ஸி கெமிஸ்ட்ரி க்ரூப் கிடைக்குமா ‘ என்று கேட்டார். லேசான கனிவோடு கேட்ட கோர்ஸில் கையெழுத்திட்டுக் கொடுத்தார் சகுந்தலா மேடம் . கொஞ்சம் பயமும் அதிகம் நம்பிக்கையுமாக வெளியே வந்தேன். கல்லூரியும் ஹாஸ்டலும் பழகவேண்டும் என்பதற்காக கல்லூரி திறக்க இரு தினங்கள் முன்பே ஹாஸ்டலில் சேர்ந்தாச்சு. ஹாஸ்டலில் சின்ன சின்ன ராகிங் நடந்தது. மேரீஸ் ஓனில் புது வரவுகள் குடியேற நான் என் உறவினர் பெண் இருக்கும் லோரேட்டோவில் புகுந்தேன். “ மணமகளே மருமகளே வா வா உன் வலதுகாலை எடுத்துவைத்து வா வா என்று வரவேற்பு “ என் உறவினர் பெண்ணின் ரூம்மேட் எங்கள் உறவு முறையை விசாரித்துவிட்டு ” அடி மாமா மக ரதியே . என் சீனிச் சக்கரக் கிளியே “ என்று பாட்டுப் பாடி கிண்டலடித்தார்.காதில் போட்டிருக்கும் தொங்கட்டானை எல்லாம் தட்டி விளையாடுவார். வீட்டுக்கே திரும்ப ஓடிடலாமா என்று இருந்தது.

டைனிங்குக்கு நான்கு ஹால்கள் உண்டு. டைனிங்க் ஹாலில் டின்னரின் நடுவில் ஒரு ப்ரேயர் பெல் அடிக்கும். அப்போது அனைவரும் மௌனமாக அதே இடத்தில் அமர்ந்திருந்து அதன் பின் உணவருந்துவதைத் தொடர்வோம். ஆனால் இன்னொரு சீனியர் ரூம்மேட் ப்ரேயர் பெல் அடிக்கும் போது நீ எந்திரிச்சு நின்னு ப்ரே பண்ணனும் என்றார். பயத்துடன் ஒத்துக்கொண்டேன். அதே போல் ப்ரேயர் பெல் அடிக்கும் போது எழுந்து நின்றால் அந்த ஹால் மொத்தமும் என்னைப் பார்த்து சிரிப்பை அடக்கிக் கொண்டது. இன்னொரு பெல் அடித்ததும் குபீர் சிரிப்பு. ஹாஹா.என் நிலையைப் பார்த்து நானும் சேர்ந்து சிரித்துவிட்டு சங்கோஜமாக அமர்ந்தேன். அப்படி அப்படியே அனைவரும் நட்பானார்கள்.

கல்லூரியில் ஜூனியர்ஸ் சீனியர் வெல்கம் மீட் வைத்து இந்த ராகிங்கையும் ஒன்றுமில்லாமல் செய்து திறமைகளை வெளிக்கொணரும்படி செய்திருந்தார்கள் முதல்வர் சகுந்தலா மேடம்.. இரும்புக் கரம் என்பார்கள் ஆனால் இது அன்புக் கரம். அதனால்தான் எல்லா இடத்திலும் இதன் பிடி செல்லுபடி ஆனது. இந்த அன்புக் கரத்துக்குச் சொந்தக்காரர் எங்கள் அன்பு முதல்வர் சகுந்தலாம்மா.

கல்லூரி முதல்வராக இவரின் பணியை வேண்டி ரிடையர்மெண்ட் பிரியட் வந்தும் பணி நீட்டிப்பு வழங்கி இருந்தார்கள். அதனால் நாங்கள் வந்ததும் ரிடயர்மெண்ட் வயதில் இருந்தவர் எங்களுக்காக இன்னும் இரு ஆண்டுகள் பணியில் நீடித்து தன்னுடைய ஆளுமைத் தன்மையினால் எங்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்தார். கல்லூரியிலேயே மாலை நேரத்தில் தட்டச்சு வகுப்புகள், முதியோர் கல்வி பயிற்றுவிக்க எங்களுக்கெல்லாம் வாய்ப்பு, ஆகியன கிடைத்தன. முத்தமிழ் வாரம், லைப்ரரி வாரம், கல்சுரல் வாரம் , தமிழ் எல்லாம் உண்டு. வாரம் தோறும் வெள்ளியன்று அசோசியேஷன் ஹவர்ஸில் ப்ரபலங்களின் உரை உண்டு. சேஷகோபாலன், அரு. நாகப்பன், ஜெயகாந்தன், தமிழண்ணல் இன்னும் பல ப்ரபலங்கள் வருகை தந்திருக்கிறார்கள்.

பாடங்களில் மட்டுமல்ல பல்கலைகளிலும் பங்கெடுத்துச் சிறப்பிக்க ஃபாத்திமா கல்லூரி எனக்கு எல்லாவிதத்திலும் உறுதுணையாய் இருந்தது. ஃபாத்திமா கல்லூரி என்றால் எங்கள் முதல்வரும் ஆசிரியைகளும்தான். இண்டர் காலேஜ் கல்சுரல் ஃபங்க்‌ஷனில்  மேபிள் மிஸ், சரஸ்வதி மிஸ் ஆகியோர் எங்களுடன் வருவார்கள்.தியாகராஜா என்ஜினியரிங்க் காலேஜ், யாதவா காலேஜ், அக்ரி காலேஜ், தியாசஃபிகல் காலேஜ், எம் எம் சி ஆகியவற்றுக்கு உடன் வந்து ஊக்கம் அளித்திருக்கிறார்கள். இன்றைய என் எழுத்துக்கான விதை அன்று ஃபாத்திமாவில் சுசீலாம்மா, ஃபாத்திமாம்மா போட்டது. அதன் மூலாதாரம் சகுந்தலா மேடம் அவர்கள்.

கல்லூரிக்காகவே வாழ்ந்த எங்கள் ஆசிரியைகளை இந்தத் தருணத்தில் நினைவுகூர்கிறேன். பத்மாசனி மேம், ராஜலெக்ஷ்மி மேம், ஷெண்பகம் மேம், சுசீலாம்மா, ஃபாத்திமாம்மா & சகுந்தலாம்மா.

இவர்களில் சிலர்  ரிஷிகளைப் போல தனித்தனியாக எங்கள் ஹாஸ்டலுக்குப் பக்கத்தில் ( சிக் ரூமின் மறுபுறம் ) வேறு வேறு அறைகளில் வசித்து எங்களுக்குப் பாடம் போதிப்பதை மட்டுமே வாழ்வியலாகக் கொண்டிருந்தார்கள்.  தங்கள் கடன் கல்விப்பணி செய்து கிடப்பதே என்பதே இவர்களின் தார்மீக மந்திரம். கல்வியில் மட்டுமல்ல வாழ்வியலிலும் ஆசான்களாகத் திகழ்ந்தார்கள் என்பதே இதில் குறிப்பிட வேண்டிய சிறப்பான விஷயம்.

எங்களை வழிநடத்தியவர்கள்.. இவர்களுள் எங்கள் முதல் முதல்வர் பேராசிரியை சகுந்தலா அவர்கள் இன்று மதுரையில் இயற்கை எய்திய செய்தியை சுசீலாம்மா முகநூல் உள்டப்பியில் தெரிவித்தார்கள். பார்த்ததும் மிகுந்த வருத்தமடைந்தேன்.

சுசீலாம்மாவின் பகிர்வு. 

///மதுரை பாத்திமாக்கல்லூரியின் முதல் நான்கு முதல்வர்கள்.
அருட்சகோதரிகளுக்கிடையே மஞ்சள் பட்டுடுத்தி இருப்பவர் இன்று காலை இயற்கை எய்திய எங்கள் பாசத்துக்குரிய முதல் முதல்வர் பேராசிரியை சகுந்தலா (பொன்விழாவின்போது எடுத்த படம்) — with அருட்சகோ.மரிய தெரஸா, அருட்சகோதரி.பிளோரா மேரி, சகோ இக்னேஷியஸ் and பேரா சகுந்தலா.///


 சுசீலாம்மாவின் பகிர்வு. 

////அஞ்சலி!
என்னை....
என்னைப் போலப் பலப்பலரைத் தன்னை அறிய வைத்து தைரியமும்தான் கொடுத்து அறிவோடு உடனாக ஆளுமையும் வளர்த்தெடுத்து மதுரை பாத்திமாக் கல்லூரியின் முதல்முதல்வராய்ப் பெண்கல்விக்குப் பெரும் பணியாற்றிய அன்னை சகுந்தலா அவர்கள் இன்று காலை அவர்கள் நேசித்த மதுரை மண்ணிலேயே இயற்கை எய்தி விட்டார்கள்.

அவர் ஏற்றிய தீபங்களாய் உலகெங்கும் பரவிக்கிடக்கும் மாணவச்செல்வங்களோடும் சக ஆசிரியைகளோடும் இத் துயரச்செய்தியைக்கண்ணீர் மல்கப்பகிர்ந்தபடி அவர்களுக்கு என் நெகிழ்வான அஞ்சலியைக் காணிக்கையாக்குகிறேன்.////

 * * * * * * * * * ** * * * * * * * * * * * * * * * ** * * * * * * * * *

இந்த அஞ்சலியை நான் முகநூலில் பகிர்ந்த போது குமார் ரெங்கராஜு என்ற முகநூல் நண்பர் எழுதியது இது.

//////Kumar Rengaraju Thenammai Lakshmanan, First I want to Pray Her Soul May be Rest In Peace. I am a Vellaichamy Nadar College Student in Madurai. We went to that college for attending cultural programme. At that time there was no co-education. When we were very eagre to speak with Fathimal College Students. They said if our principal saw it we would be punished. They asked us to keep the distance. At the time we know she was very strict and discipline principal. What a good administrator. அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே../////

------ நூற்றுக்கு நூறு கட்டுக்கோப்பாக எங்களை வார்த்தெடுத்த பெருமைக்குரியது ஃபாத்திமாக் கல்லூரியும் எங்கள் பெருமதிப்பிற்குரிய முதல்வர் சகுந்தலா மேம் அவர்களும் மற்றும் எங்கள் பேரன்பிற்குரிய ஆசிரியைகளும்தான். இவர்களது நிமிர்ந்த நன்னடையையும் நேர்கொண்ட கருத்துக்களையும் எங்களுக்குள் செலுத்தி இருக்கிறார்கள். உன்னதமானவர்களுக்கு நன்றி அனைத்துக்கும்.

தனக்கென வாழாது எங்களுக்கென வாழ்ந்த இவர்கள் எங்கள் முன்னோடிகள்.  எந்த நிலையிலும் இவர்க்கு மரணமில்லை . இவர்போல இன்னும் பல ஆசிரியைகள் உருவாகவேண்டும் என்ற ப்ரார்த்தனையோடு கலங்கும் கண்களுடன் எங்களது வணக்கங்களையும் அஞ்சலியையும் இவர்களின் பாதங்களில் சமர்ப்பிக்கிறேன்.  
 

5 கருத்துகள்:

 1. நல்லாசிரியர்.....

  அவரது ஆன்மா சாந்தியடைய எனது பிரார்த்தனைகளும்.....

  பதிலளிநீக்கு
 2. சிறப்பான ஆசிரியர்... அவரது ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்...

  பதிலளிநீக்கு
 3. நன்றி வெங்கட் சகோ

  நன்றி டிடி சகோ

  பதிலளிநீக்கு
 4. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு
 5. அருமையான ஆசிரியை! அவரது ஆன்மா இறைவன் அடியில் சேரட்டும்...பிரார்த்தனைகள்..

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...