வெள்ளி, 24 ஜூலை, 2015

எஞ்சோட்டுப் பெண்ணும் சூடிய பூ சூடற்கவும்.
6. எஞ்சோட்டுப் பெண்.

தமிழச்சி தங்கபாண்டியனின் முதல் கவிதைத் தொகுதி எஞ்சோட்டுப் பெண். 2003 இல் வெளியிடப்பட்ட இது மூன்று பதிப்புகளைக் கண்டிருப்பதே இதன் சிறப்புக்குச் சாட்சி. எஸ் பொ, பழமலய், அறிவுமதி, சிறீசுக்கந்தராஜா ஆகியோரின் வாழ்த்துரையுடன் சிறப்பாக வந்திருக்கிறது இத்தொகுப்பு.

தன் பிரியத்துக்குரிய தந்தையைப் பற்றிய இவரின் கவிதைகள் மிக முக்கியமானவை. நகரத்து வாழ்வுக்கும் கிராமத்து வாழ்வுக்கும் இடையே கிடக்கும் பள்ளத்தை கடக்க முயலும் கவிதைகள் இந்த வனப்பேச்சியினுடையவை. அப்பா, அக்கா,அப்பத்தா, கிழவி, கொத்தனார், வெடிவாலு, ஆசாரி, எஞ்சோட்டுப் பெண் என்று பாசம் பொங்கக் ( மண்ணின் மைந்தர்களுக்கான )  கவிதை படைத்திருப்பதோடு வெய்யிலுக்கான கவிதைக்களத்திலும் வெளுத்து வாங்கி இருக்கிறார். மண்ணுக்கும் சீரழியும் இயற்கைக்குமான பரிதவிப்பு பல கவிதைகளில் காணக் கிடைக்கிறது.

தீப்பெட்டிப் பொன்வண்டும், மனப்பச்சையும், நான் என்கிற காவிரியும் , கலர்ப்பூந்தியும் கனகாம்பரமும் ஊர் நினைவைத் தூண்டிய மண்மொழிக்கவிதைகள். எஞ்சோட்டுப் பெண் சிலம்பாயி, பிறந்த வீட்டுக் கோடியில் அக்கா பற்றிய கவிதைகள் வருத்தமெழ வைத்தன. குழந்தைக் கல்வி, மாணவிகள் எரிப்பு சம்பவத்தையும் கவிதையாக்கி மனதைக் கசிய வைத்துவிட்டார். கதவு, கூண்டு, ரயில் ப்ரயாணத்தில் உதவும் சிநேகிதன் பற்றிய கவிதைகள் வித்யாசம்.

முதுகு நாமமும் தொட்டுக் கொள்ளத் தொலைக்காட்சிப் பெட்டியும் நச் கவிதைகள்.

எனக்கு மிகப் பிடித்த பல கவிதைகளில் இது முக்கியமானது. :-

/// தேடல் :-

ஒரே மாதிரி இருக்கின்ற
இந்த இரயில் பெட்டிகளில்
எது அந்தக் கதவு
என்று தெரியாது.
என்றாலும்
பயணம் போகும்
ஒவ்வொரு முறையும்
முன்பொரு நாள்
பூரண கர்ப்பிணியாய்
நீண்ட நேரம்
நிற்பதற்குச் சிரமப்பட்டுத்
தண்டோடு தலைகுனியும்
தாமரையின்
நிறை மாதச்சோர்வோடு
பயணித்த நான்
உறங்குவதற்கு இலகுவாக
உடை மாற்ற
யத்தனிக்கையில்
தள்ளாடி விழுந்து
விடுவேனோ
எனும்
உள்ளார்ந்த
பதட்டத்தோடும்
உளியின் நுனியது
விரல்களில் படாது
துளையிடும் சிற்பியின்
கவனத்தோடும்
வெளியிலிருந்து
தாயுமான என் தந்தை
ஒருக்களித்துப் பிடித்திருந்த
அந்தக் கதவு
ஒருவேளை இதுதானோ என்று
இன்றுவரை தேடுகிறேன்.

நூல் :- எஞ்சோட்டுப் பெண்
ஆசிரியர் :- தமிழச்சி தங்கபாண்டியன்
பதிப்பகம் :- மித்ர ஆர்ட்ஸ் & கிரியேஷன்ஸ்
விலை – ரூ 140/

9. சூடிய பூ சூடற்க,

நாஞ்சிலாரின் கதைகளுக்குப் பல்லாண்டுகளுக்குமுன்பே நானும் என் பெரிய மகனும் விசிறிகள். இதில் கேட்கவும் வேண்டுமோ.மிகவும் ரசித்துப் படித்தோம். ஒவ்வொரு கதைக்கும் விமர்சனமே தனிக்கட்டுரைதான் போடவேண்டும். சாகித்ய அகாதமி விருது பெற்ற நூல் என்ற சிறப்பு வேறு இதற்கு உண்டு.

தன்னுடைய கதைகள் கட்டுரைகள் போல அமைவதாக சமீபத்தில் பலரும் சொல்வதாக நாஞ்சிலாரே முன்னுரையில் குறிப்பிடுகின்றார். ஆனால் அது ஏதோ ஒரு தருணத்தில் மிகச் சிறந்த கதையாக மாறுவதைப் பற்றி வெங்கட் சாமிநாதன் திண்ணையில் எழுதி இருந்தார். அதேதான் தோன்றியது எனக்கும்.

கன்யாகுமரியில் இருந்து டில்லி வரை உத்யோகம் நிமித்தம் பயணமே வாழ்வாகிவிட்ட பொழுதை நொந்துகொள்ளாமல் ரசித்துக் கதையாக்கும் பக்குவம் வாய்த்திருப்பது சிறப்பு. தென்னக, வடநாட்டு வாழ்வியல் அனுபவங்களைப் பகடியோடு பகிர்வதும் அதை சங்ககாலத்துக்கும் தற்காலத்துக்குமாக உருமாற்றம் செய்வதும் கைவரப்பெறுகிறது நாஞ்சிலாருக்கு. இதில் தற்கால அரசியல் செய்திகள் மூலமாக சேதி சொல்லும்போது படிக்கும் நமக்கும் சிரிப்பு வருகிறது.

மொத்தம் பதினைந்து கதைகள். இந்திய ஜனத்தொகையில் சிக்கி சீரழியும் சாமானியனின் அன்றாட வாழ்வியல் நிர்ப்பந்தங்களைப் பேசுபவை. கொங்குதேர் வாழ்க்கை லயன் வீட்டு வாழ்வின் அவலத்தைப் பேசியது. வளைகள் எலிகளுக்கானவை, கடவுளின் கால் என் பயண நினைவுகளைக் கிளறிவிட்டது. யாம் உண்பேம் பதறவைத்த விவசாயக் கதை. படுவப்பத்து ஜாதி அடுக்குகளைப்பற்றி நச்சென்று சொன்ன கதை. அதே பரிசில் வாழ்க்கை உயர்ஜாதி ஆனாலும் வர்க்க பேதம் இருப்பதைப் பேசிய கதை.

கதை எழுதுவதன் கதையில் கும்பமுனியும் தவசிப் பிள்ளையும் உரையாடுதல் சுவாரசியம். அதிலும் மாய யதார்த்தம் ,பின்னவீனத்துவம் பற்றிக் கூறுவது நகை தோன்றச் செய்த இடம். கும்பமுனி முறித்த குடைக்காம்பும் புன்னகைக்க வைத்த கதை.

தன்ராம் சிங் கூர்க்காக்கள் பற்றி என் எண்ணத்தைப் பிரதிபலித்த கதை. சூடிய பூ சூடற்க மிகச் சிறப்பான கதை. முடிவு என்ன என்று இன்றும் எண்ண வைத்த கதை. செம்பொருள் அங்கதமும் பழி கரப்பு அங்கதமும் மிக அங்கதம்தான். ஆனால் சங்கிலி பூதத்தானும் தேர்தல் ஆணையத்துக்கு ஒரு திறந்த வெளிக் கடிதமும் மணமானவருக்கு மட்டுமும் இதன் சிகரங்கள் .

எதைச் சொல்ல வந்தாலும் மிக மிக விரிவாகவும் பொருட்செறிவுடனும் முழுமையாகவும் சொல்லிச் செல்வதே இவரது கதைகளில் சிறப்பு. மிக ஆழ்ந்த வாசிப்பு செய்ய வேண்டிய நூல் இது. நிறையத் தரவுகளோடு படைக்கப்பட்டிருப்பதாலும் இலக்கியத் தரத்தின் உச்சத்தைத் தொட்டிருப்பதாலும் இது சாகித்ய அகாதமி விருது வாங்கியதில் ஆச்சர்யமொன்றுமில்லை. தலைப்புகளும் வார்த்தைகளும் துள்ளிச் சரளமாக விழும் பாங்கு ரசிக்கத்தக்கது.

நூல் – சூடிய பூ சூடற்க
ஆசிரியர் – நாஞ்சில் நாடன்
பதிப்பகம் – தமிழினி
விலை -  ரூ 90/- 


டிஸ்கி :- இவற்றையும் படிச்சுப் பாருங்க.

4 கருத்துகள் :

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

2 சிறந்த நூல் அறிமுகத்திற்கு நன்றி சகோதரி...

பரிவை சே.குமார் சொன்னது…

இரண்டு சிறந்த நூல்களின் அறிமுகம் அக்கா...

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி டிடி சகோ

நன்றி குமார் சகோ :)

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...