எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 27 மே, 2015

திருமண இயந்திரங்களும் தீப்பாய்ந்த அம்மன்களும்:-திருமண இயந்திரங்களும் தீப்பாய்ந்த அம்மன்களும்:-

குவாலியர் கோட்டை. கோடையில் கொழுந்துவிட்டெறிகிறது குவாலியர் மாநகரம்.அதைவிட அதிகமாய் அங்கே கொழுந்து விட்டெறிகிறது ஜௌஹார்குண்ட் என்னும் நெருப்புக் குண்டம். வண்ண வண்ணமாக கண்ணாடிகள் பதித்த உடையணிந்த அழகும் இளமையும் நளினமும் நிரம்பிய ராஜபுதனத்துப் பெண்கள் நிரம்பியிருக்கின்றார்கள் நெருப்புக்குண்டத்தின் முன். சம்சுதீர் அல்துமிஷின் படைகள் ஆக்கிரமிக்கப் போகின்றன கோட்டையை. ராஜா இறந்தபின் ராணிகள் மீதும் ஆக்கிரமிப்பு நடந்துவிடும். அதைப் போன்ற ஒரு அவலம் நிகழ்ந்துவிடும்முன் ராணிகள் அனைவரும் அங்கே அரண்மனைக்கு நீர் வழங்கிக்கொண்டிருந்த குளத்தில் குதித்து உயிரிழக்கின்றார்கள். மிச்சமுள்ளவர்கள் ஜௌஹார் குண்டத்தில் தீப்பாய்கிறார்கள். எங்கும் பரவுகிறது சதியின் வாசனை. சதி தேவிகள் பதிவிரதா தேவிகள் என்று வணங்கப்படுகின்றார்கள்.

பெண்களுக்காகவே போர்கள். மண் பெண் பொன் ஆசையில்லாத மன்னர்களே கிடையாது. அந்தப்புரம் நிறையப் பெண்கள். பட்டத்து ராணிகள், இளைய ராணிகள், ஆடலழகிகள், காமக்கிழத்திகள், ஆசை நாயகிகள், அடிமைப் பெண்கள். அவ்வளவு பேரும் அரசனுக்காகவே படைக்கப்பட்டவர்கள். அவன் இறந்து நாடு பிடிபடும் நேரம் வந்தால் அவன் ஒருவனுக்கான கற்பரசிகளாய் வாழ்வதே பெண்கள் தம் பெண்மைக்குச் சிறப்பு என்று கற்பிக்கப்பட்டு வந்திருக்கிறார்கள். மன்னனுக்குப் பின் தங்களுக்கு ஒரு அவமானம் நிகழ்ந்து அந்நிய புருஷரின் வசப்பட்டுவிடலாகாது அதைவிட உயிர்துறப்பதே வீரம் என்று காலகாலமாய்க் கற்பிக்கப்பட்டிருகின்றனர்.


இவ்வாறு கைது செய்து கொண்டுவரப்பட்ட பெண்கள் பிற அரசர்களின் அந்தப்புர ராணிகளாகவோ அடிமைகளாகவோ மட்டுமல்ல. தேவரடியார்களாகவும் தேவதாசிகளாகவும் கூட பொட்டுக் கட்டப்பட்டிருக்கிறார்கள். பெரிய கோயில் கட்டும் பணியில் இருந்த சிற்பிகளை மகிழ்விக்க தளிச்சேரிப் பெண்கள் என்று தஞ்சையில் 400 பெண்கள் ராஜராஜசோழன் காலத்தில் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் அண்டை தேசத்தில் நிகழ்ந்த போரில் அடிமைகளாகக் கொணரப்பட்டவர்கள். . எந்த தேசத்து மன்னர்களுக்கிடையே போர் என்றாலும் இழிவுபடுத்தப்படுவது பெண் இனமாகவே இருந்திருக்கிறது. 

தக்ஷன் செய்த யாகத்தில் சிவன் உபசரிக்கப்படவில்லை என்பதால் தாக்ஷாயிணி என்னும் சதி யாகத்தீயில் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்டாள்.  இதை ஒரு எடுத்துக்காட்டாக வைத்திருக்கிறார்கள் போலத் தோன்றுகிறது கணவனுக்கு ஒரு அவமானம் நிகழ்ந்தால் அல்லது கணவனுக்குப் பின் தனக்கு அவமானம் நிகழக்கூடாது எனபதால் சதி என்னும் உடன்கட்டை ஏறுவதை. இதை எதிர்த்து ஆரிய சமாஜம் நிறுவிய ராஜாராம் மோகன்ராய் போன்றவர்கள் போராடி இருக்கிறார்கள். இருந்தும் மக்கள் திருந்தவில்லை. சதி மாதா என்று சிந்தியாக்களில் ஒருவரே ( விஜயராஜே சிந்தியா ) வணங்கியதாக சர்ச்சைகளிலும் சிக்கினார்.

உத்தரப் பிரதேசத்தில் பாலியா என்ற இடத்தில் உள்ள காசிப்பூரில் சதிமாதா என்ற கோவிலே இருக்கிறது. சதி தர்ம சுரக்ஷண சமிதி என்ற அமைப்பு ரூப்கண்வரைப் புகழ்ந்து முழக்கமிட்டு ஊர்வலங்கள் நிகழ்த்துகிறது. இவ்வாறு கணவன் இறந்தபின் தானே அவனுடன் உடன்கட்டை ஏறும் பெண்கள் சிலர் இருக்க ( இவ்வாறு செய்வதே சிறந்தது என்று கற்பிக்கப்பட்டவர்கள், கணவன் மேலோகம் சென்றாலும் பின் தொடர்ந்து சென்று பணி செய்ய வேண்டுமாம்  ) இப்படிச் செய்தே ஆகவேண்டும் என்று சிலர் வற்புறுத்தப்பட்டனர். இந்த நூற்றாண்டிலும் இந்தக் காட்டுமிராண்டித்தனம் ஓயவில்லை. இதை ஒட்டியே 1987 இல் செப்டம்பர் 4 ஆம் தேதி ராஜஸ்தானில் தியோராலா என்ற இடத்தில் ரூப் கண்வர் என்ற 18 வயதுப் பெண் தன் கணவன் மாலே சிங் இறந்ததும் புத்தாடைகளும் நகைகளும் அணிவிக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்துவரப்பட்டு கணவனின் சிதை மீது ஏற்றி குடும்பத்தாராலேயே சதி மாதாகீ ஜெய் என்று வணங்கப்பட்டுக் கொல்லப்பட்டிருக்கிறாள். என்ன கொடுமை இது. அதன் பின் பெண் இயக்கங்கள் கொடுத்த ப்ரஷரின் காரணமாக அரசு ’ராஜஸ்தான் சதி தடுப்பு அவசரச் சட்டம்’ என்ற ஒன்றை அக்டோபர் மாதம் ஒன்பதாம் தேதி  அவசரமாகக் கொண்டுவந்தது. இதன் மூலம் மேலும் பல பெண்கள் இம்மாதிரி எரியூட்டப்படுவது தடுக்கப்பட்டது.

புதுக்கோட்டை தீப்பாஞ்ச அம்மன் கோயிலிலும் சரி, பூவராகர் கோயிலுக்குச் செல்லும் வழியில் இருக்கும் தீப்பாஞ்ச நாச்சியார் கோயிலிலும் சரி. (அந்த நாச்சியார் சீதாதேவிதான்.) சீதை இலங்கையில் ராவணனின் நாட்டில் இருந்ததால் தீக்குளித்துத் தன் புனிதத்தை நிரூபிக்க வேண்டி இருந்தது.

சில நூற்றாண்டுகளுக்கு முன் பெண்கள் நிலவறையில் அடைக்கப்பட்டிருந்தார்கள். பெரும் யுத்த காலங்களிலும் அந்நியர் படையெடுப்பிலும் பழமை பொருந்திய குடும்பங்கள் தங்கள் குடும்பப் பெண்களை சொத்தாகக் கருதி இவ்வாறு நிலவறையில் அடைத்துப் பாதுகாத்து இருக்கிறது.

பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் கூட ஆப்ரிக்கப் பெண்கள் அமெரிக்க முதலாளிகளின் அடிமைகளாக செவிலிகளாக அவர்களின் முறையற்ற குழந்தைகளைப் பெற்றெடுக்கும் தாயாக அவலமடைந்திருக்கின்றனர். இவ்வாறு ஆறு ஆண்டு காலம் அடிமையாக நிலவறையில் வாழ்ந்த ஹேரியட் ஜேக்கப் என்ற பெண் தங்களுக்கு நிகழ்த்தப்பட்டவற்றைக் கதையாக எழுதி இருக்கிறார்.

இவ்வாறு பெண்களை நிலவறையில் அடைப்பது, சதி என்னும் உடன்கட்டை ஏறுவது இதெல்லாம் முகலாயர் படையெடுப்புக்குப் பிறகுதான். தோன்றியது. அந்நியர் படையெடுப்பில் குழந்தைகளைக் கூட பெண்கள் என்பதால் கையகப்படுத்தப்படலாம் என நினைத்தே பால்ய விவாகங்களும் நடைபெற்றிருக்கக்கூடும். பால்ய விவாகங்களில் கணவனுக்கு வயது அதிகமாக இருப்பதால் சீக்கிரம் இறந்துவிடுவதால் பால்யப் பெண் பூப்பெய்தும் முன்னரே பால்ய விதவையாக்கப்பட்டுவிடுகிறாள். அதன்பின் அவளைப் பாதுகாப்பது கடினம் என்று எண்ணுவதால் முடி மழித்தலும் வெள்ளை அல்லது மடிநார் அணியவும் விரதம் அநுசரிப்பதும் ருசிகர உணவுகள் விலக்கப்பட்டு உப்புச் சப்பற்றவைகளும் வழங்கப்படுகின்றன. மேலும் அவள் அதிகாரத்தோடு வளைய வந்த தாய் வீட்டிலும் அவளுக்கான அங்கீகாரம் மறுக்கப்பட்டு மூலையில் முடக்கப்படுகிறாள்.

 பல நூற்றாண்டுகளுக்கு முன் ஒரு அரசன் வீதியில் விளையாடிய நகரத்தார் மரபில் பிறந்த ஒரு பெண் குழந்தையைத் தூக்கிச் சென்றான் என்பதற்காக அக்குழந்தை வீடு வந்தபின் நெருப்பிட்டுக் கொல்லப்பட்டிருக்கிறது. மனிதர்கள்தாம் எவ்வளவு கொடூரர்கள். 

இளம் குழந்தைகள் கூட திருமண இயந்திரமாகக் கருதி சம்சார பந்தத்தில் தள்ளப்படுகிறார்கள். பதின்பருவத் திருமணம், உடன் குழந்தைப் பேறு வீட்டுச் சுமைகள் என மனமலர் விரியுமுன்னே குலைந்து போய்விடுகிறது ஒரு குழந்தையின் வாழ்வு.

குழந்தைத் திருமணங்கள் இந்தியாவில்தான் அதிகம் நிகழ்கின்றன என்று யுனிசெஃப் கூறியுள்ளது. இதற்கு முதல் காரணம் படிப்பறிவின்மை. ஏழ்மை. இரண்டாவது குடும்பச் சொத்து கைவிட்டுப் போகமலிருக்கவும் நிகழ்கிறது. சொந்தத்தில் மாப்பிள்ளை பெண் போக சீக்கிரம் திருமணம் செய்து கொடுத்துவிட்டால் நிம்மதியாக இருக்கலாம். வயதுக்கு வந்த பெண் குழந்தைகளை வீட்டில் வைத்திருப்பது நெருப்பை மடியில் கட்டியது போலிருக்கிறது என்று எண்ணி அவர்களை இளவயதிலேயே குடும்ப வாழ்க்கை என்னும் பெரு நெருப்பில் தள்ளுகிறார்கள்.

பெண் குழந்தைகளைப் படிக்கவைத்தால், வேலைக்கு அனுப்பினால் காதல் என்று சொல்லி பிற சாதி இளைஞனைக் கடிமணம் புரிந்துவிட்டால் சாதிக்கட்டுப்பாடு போய்விடும் என்று எண்ணிப் படிக்க வைக்காமல் அல்லது அதற்கான வசதியோ மனமோ இல்லாமல் இருக்கும் பெற்றோர் நல்ல வசதியான இடத்தில் மாப்பிள்ளை அமைந்தால் இரண்டாம்தாரம் மூன்றாம் தாரமாகவும் வயதான மாப்பிள்ளைக்கும் திருமணம் செய்து  கொடுக்கக்கூடத் தயங்குவதில்லை. இவ்வாறு நிகழும் வயது வித்யாசத் திருமணங்களில் வரதட்சணை டிமாண்ட் செய்யப்படாததால் பெற்றோரும் கிடைத்த இடத்தில் பெண்ணைத் தள்ளி விடுகின்றார்கள்.

ஹைதராபாத் போன்ற பெரு நகரங்களில்கூட குழந்தைத் திருமணங்கள் நிகழ்ந்து வருகின்றன. ஒரு முறை வெளிநாட்டைச் சேர்ந்த ஒரு முஸ்லீம் முதியவருக்கு மூன்றாம் தாரமாகத் திருமணம் செய்துகொடுக்கப்பட்ட ஒரு பதின்பருவப் பெண் ஏர் ஹோஸ்டஸிடம் தன்னுடைய கண்ணீர்க் கதையைச் சொல்லி அழுததன் மூலம் காப்பாற்றப்பட்டிருக்கிறார். 

ராஜஸ்தானில் குழந்தைத் திருமணங்களை எதிர்த்த பன்வாரி தேவி என்பவர் தன்னுடைய ஒரு வயது குழந்தையின் திருமணத்தைத் தடுத்ததால் ராம்கரன் குஜார் என்பவர் தலைமையில் வந்த ஐவரால் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார். வன்புணர்வு செய்தவர்கள் உயர்சாதி பன்வாரி தாழ்ந்தசாதி என்பதால் இவ்வன்புணர்வு நிகழவே இல்லை என்று சாதித்து வழக்கை தள்ளுபடி செய்திருக்கிறது நீதிமன்றம். நீதியும் கண்கள் கட்டப்பட்டிருப்பது உண்மைதான்.

காதலித்துக் கைகூடாவிட்டால் பெண்களை எரிக்கும் ஆண்கள் ஒருபுறமிருக்க, குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டால் அல்லது குடும்ப உறுப்பினர் ஒருவரை இழந்ததால் மொத்தக்குடும்பமுமே சில இடங்களில் தீக்குளித்து மடிகிறார்கள்.

பெற்றோர் பார்த்துச் செய்யும் திருமணங்களில் வரதட்சணைக் கொடுமை போன்றவற்றால் பெண்களை உணர்வால் எரிப்பது மட்டுமல்ல உடம்பாலும் எரிப்பது நிகழ்கிறது. சில பெண்கள் தம் கணவரின் சொற்ப வருமானத்தில் குடும்பத்தின் பொருளாதாரத் தேவைகளை ஈடுகொடுக்க முடியாததாலும் மன ஒற்றுமையில்லாத திருமண வாழ்வை எதிர்த்தும், வறுமை சூழ குடிகாரக் கணவர்களோடு வாழ்ந்த வாழ்வை வெறுத்தும் மண்ணெண்ணெய் ஊற்றி தம்மைத் தாமே எரித்துக் கொள்கின்றனர்.

இளவயதுத் திருமணங்கள் மூலம் குடும்ப இயந்திரங்களாகும் பெண் குழந்தைகளுக்கு சத்துக் குறைச்சலால் ரத்தசோகை போன்றவை மட்டுமல்ல பல்வேறு தீயபழக்கங்கள் உள்ள ஒழுக்கமற்ற கணவன் மூலம் எய்ட்ஸ் போன்றவைகளும் தாக்குகின்றன. கருப்பை வளராத இந்த இளம் தாய்கள் தங்கள் பதினைந்து வயதிலேயே இன்னொரு குழந்தைக்குத் தாயாவதும் நிகழ்கிறது.

பெண்களை அடிமை இனமாகக் கருதும் சமூகமும் ஆண்களும் இருக்கும்வரை பெண்களுக்குப் பெண்களேதான் சாதி மதம் இனம் தாண்டிப் போராட்டம் நிகழ்த்தவேண்டும். வட இந்தியாவின் ஒவ்வொரு நகரத்திலும் அம்பேத்கார் சிலையைப் பார்க்கலாம். எத்தனை சட்ட மேதைகள் வந்தாலும் சாதிப்பாகுபாடை ஒழிக்கமுடியாதோ அதே போல்தான் எத்தனை சட்டமியற்றினாலும் பெண்கள் மீதான வன்முறையும்  ஆக்கிரமிப்பையும் அழிவுச் செயல்களையும் ஒழிக்க முடிவதில்லை..

மனிதம் உயிர்பெறும்போதுதான் குழந்தைத் திருமணங்கள் முடிவுக்கு வரும். கல்வியும் வேலையுமே அவளின் உண்மையான சுதந்திரம் என்று சமூகம் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களே தங்கள் குடும்பத்தைக் காக்கும் சக்தி என்பதையும் ஆண்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்போதுதான் திருமண இயந்திரங்களும் தீப்பாய்ந்த அம்மன்களுமாய் இல்லாமல் தீர்ப்பு எழுதக்கூடிய பெண்ணரசிகள் வாய்ப்பார்கள். 

டிஸ்கி :-  2015 மார்கழி மாத மெல்லினத்தில் வெளியானது. 


4 கருத்துகள்:

 1. இந்தக்கட்டுரையில் கொதித்தெழுந்துபோய் பல கொடுமைகளைச் சுட்டிக்காட்டியுள்ளீர்கள்.

  //கல்வியும் வேலையுமே அவளின் உண்மையான சுதந்திரம் என்று சமூகம் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களே தங்கள் குடும்பத்தைக் காக்கும் சக்தி என்பதையும் ஆண்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்போதுதான் தீர்ப்பு எழுதக்கூடிய பெண்ணரசிகள் வாய்ப்பார்கள். //

  இந்தப்பிரச்சனைகளுக்கு தீர்வு சொல்லும் தங்களின் முடிவுரை மிகவும் அருமையாக உள்ளது.

  // 2015 மார்கழி மாத மெல்லினத்தில் வெளியானது. //

  பாராட்டுகள். வாழ்த்துகள். பயனுள்ள விழிப்புணர்வு தரும் பகிர்வுக்கு நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 2. பெண்ணே தெய்வம் அன்னை கடவுள்
  பெருமை என்று பேசுகிறான்
  பெண்ணே தெய்வம் அன்னை கடவுள்
  பெருமை என்று பேசுகிறான் - பெண்
  பேதைகள் என்றும் பீடைகள் என்றும்
  மறு நாள் அவனே ஏசுகிறான்

  ஏதோ மனிதன் பிறந்து விட்டான் - அவன்
  ஏனோ மரம் போல் வளர்ந்து விட்டான்
  ஏதோ மனிதன் பிறந்து விட்டான் - அவன்
  ஏனோ மரம் போல் வளர்ந்து விட்டான்

  எதிலும் அச்சம் எதிலும் ஐயம்
  எடுத்ததற்கெல்லாம் வாடுகிறான் - தன்
  இயற்கை அறிவை மடமையெனும்
  பனித் திரையாலே மூடுகிறான்

  படம் : பனித்திரை

  பதிலளிநீக்கு
 3. நன்றி கோபால் சார்

  அருமையான பாடல் பகிர்வுக்கு நன்றி டிடி சகோ

  பதிலளிநீக்கு
 4. அருமையான கருத்துரைகல் மிக்க கட்டுரை.....வட இந்தியாவில் தான் கொடுமைகள் மிகவும் அதிகம். தமிழகம் எவ்வளவோ மேல் எனலாம். இறுதி பாராவில் சொல்லியிருப்பது அப்படியே வழி மொழிகின்றோம்...சகோதரி!

  பாராட்டுகள்!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...