திங்கள், 25 மே, 2015

ஒரு மழைநாளும் நிசி தாண்டிய ராத்திரியும் நீர்க்கோல வாழ்வை நச்சி.


3. ஒரு மழைநாளும் நிசி தாண்டிய ராத்திரியும்:-

கவிஞர் ஈழவாணி பல பத்ரிக்கைகளின் ஆசிரியராகப் பணி புரிந்தவர். இரு கவிதை நூல்கள், ஒரு சிறுகதைத் தொகுப்பு, ஒரு குறு நாவல், ஒரு தொகுப்பு நூல் என ஐந்து நூல்கள் வெளியிட்டுள்ளார். இது ஆறாவது நூல். போன வருடமும் இந்த வருடமும் கூட கவிதை நூல்கள் வெளியிட்டிருக்கிறார்.

ஈழத்து வாழ்வியலையும் காதலையும் பிரிவின் துயரையும் புலம்பெயர் வாழ்வின் இருப்பில் நிகழ்த்தப்படும் வன்முறையையும் நெருப்புப் பொறி பட்டது போல் உரைக்கும் கவிதைகள். சில கவிதைகள் பாரதியையும் கம்பனையுமே கேள்விக்குள்ளாக்குகின்றன. வார்த்தைப் ப்ரயோகங்களும் எதிர்பாராத திருப்பங்களும் கேள்விகளும் முகத்தில் அறையும் முடிவும் ஈழவாணியின் கவிதைச் சிறப்புகளில் ஒன்று. 

அகதிகள் நிலை பற்றி என்னை அதிர வைத்த கவிதை ஒன்று.

///உங்களைப் போலவே
வரையறையென பிரிக்கப்பட்டோம்
வாழ
அனுமதியட்டைகள் குற்றப்பட்டோம்
பின்
சுய வளர்ச்சி கூடாதென
அங்கங்கள் உடைக்கப்பட்டு
முறித்தொடுக்கப்பட்டோம்
மீண்டும்
நிமிர்ந்தெழுந்து வாழ
உச்சிகள் பூர்க்கையில்
ஒரு நாளில்
நாங்களும் தான் அழிக்கப்பட்டோம்
உங்களைப் போலவே….///

நூல்  - ஒரு மழை நாளும் நடுநிசி தாண்டிய ராத்திரியும்
ஆசிரியர் :- ஈழவாணி
பதிப்பகம் – உயிர்மை
விலை – ரூ 65.


4. நீர்க்கோல வாழ்வை நச்சி,

மென்பொருள் பொறியாளரான லாவண்யா சுந்தர்ராஜனின் முதல் கவிதை நூல். அகநாழிகை வெளியீடு. இதற்கு அடுத்தும் அவரது கவிதைத் தொகுதிகள் வெளியாகி உள்ளன. எளிமையான இனிய கவிதைகள். ஒவ்வொரு சிறு விஷயத்தையும் ஊன்றிக் கவனித்துக் கவிதையாக்கி இருக்கும் பாங்கு அருமை. தனிமையையும் பிரிவையும் அன்பையும் காதலையும் நிராகரிப்பையும் அதன் வலியையும் முயற்சியையும் அதன் முடிவற்ற தன்மையையும் பெரும்பாலான கவிதைகள் பிரதிபலிக்கின்றன.

இதில் இந்த இரு கவிதைகள் என்னை மிகக் கவர்ந்தவை.

// முயற்சி :-

தொடங்கவுமில்லை
முடிக்கவுமில்லை
தயங்கவுமில்லை
தடங்கலுமில்லை
கலக்கமுமில்லை
கலங்கலுமில்லை

மிதக்கும் நிலவின்
கறை அகற்ற முயற்சித்து
தோற்கிறது நதியலை///

///யாருமற்ற நதி :-

சலசலத்தோடும் நதியை
பிடித்துவிட
நினைக்கும் விரல்போலும்
ஆலம் விழுதின் மடைமை

நதியோட்டம் பார்த்திருக்கும்
ஆவல் கொண்டு
முதுகு வளைந்த தென்னை
நிழலின் நாணம்.

நதி வீசும் தென்றலுக்கு
வளைந்து நெளிந்தாடும்
நாணலின் நளினம்

கரையோர வேப்ப மரம்
கொட்டித் தீர்க்கும்
பூக்களாய்க் காதல்

எல்லாம் இருந்தும்
நகர்ந்து கொண்டு இருந்தது
யாருமற்ற நதி.///

நூல் :- நீர்க்கோல வாழ்வை நச்சி.
ஆசிரியர் – லாவண்யா சுந்தர்ராஜன்
பதிப்பகம் – அகநாழிகை

4 கருத்துகள் :

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

நூல் அறிமுகங்களும், தாங்கள் ரசித்த ஒருசில உதாரணக் கவிதைகளும் அருமை. நூல் ஆசிரியர்களுக்கும் தங்களுக்கும் பாராட்டுகள், வாழ்த்துகள், நன்றிகள்.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நூல் அறிமுகத்திற்கு நன்றி.

திருமதி லாவண்யா அவர்கள் புத்தகம் படித்திருக்கிறேன்.

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி கோபால் சார்

நன்றி வெங்கட் சகோ :)

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...