குழந்தைகள் பலவிதம். சில குழந்தைகள் வளர வளர உலக ஞானம் பெறுவார்கள். ஆனால் சில குழந்தைகளோ கருவிலே திருவுடையவர்களாகப் பிறந்திருப்பார்கள். மேலும் எவ்வளவு திறமை இருந்தாலும் அகங்காரம்கொள்ளாமல் இவர்கள் தங்கள் பணிவன்பாலும் அடக்கத்தாலும் ஆசார்யர்களை மதித்து நடந்து பல்வேறு உயர்வுகளை எய்துவார்கள். அப்படிப்பட்ட புத்திசாலிக்குழந்தை ஒன்றைப் பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.
ஸ்ரீரங்கத்தில் கூரேசர் என்பவர் வாழ்ந்து வந்தார். அவர் ஸ்ரீரங்கன் மேல் மிகுந்த பக்தி கொண்டவர். இவர் மனைவி பெயர் ஆண்டாள் அம்மையார். ஆயிரக்காணக்கான அதிதிகளுக்குத் தினமும் அன்னமிட்டு வந்தவர்கள் இவர்கள். காலமாற்றத்தால் தினமும் உஞ்சவிருத்தி செய்தோ அல்லது கோயில் பிரசாதங்களைக் கொண்டோ எளிமையாக வாழ்ந்து வந்தார்கள் இத்தம்பதிகள்.
ஒரு நாள் உஞ்சவிருத்திக்குச் செல்லமுடியாமல் வெகுமழை பொழிந்தது. கணவன் மனைவி இருவரும் கொலைப்பட்டினி கிடந்தார்கள். தினமும் கோவிலுக்கு வந்து செல்லும் கூரேசர் மழை காரணமாக வராததால் அக்கோவிலின் அர்ச்சகர் பிரசாதங்களைக் கொண்டு வந்து வீட்டிற்கே கொடுத்துச் செல்கிறார். மகிழ்ந்த கூரத்தாழ்வார் அதிலிருந்து தனக்கு ஒரு கவளமும் தன் மனைவிக்கு ஒரு கவளமுமே பெற்றுக் கொள்கிறார்.
