மன்னார்குடி - இராஜ மன்னார்குடி ஒற்றைத் தெருவில் இருக்கும் ஆனந்த விநாயகரை கிட்டத்தட்ட 40 வருடங்களுக்குப் பின் தரிசித்தேன்.
கணவருக்கு மன்னார்குடியில் அலுவலக வேலையாகச் செல்ல வேண்டி இருந்தது. உடனே நானும் பையனும் கூடக் கிளம்பி விட்டோம். முக்கிய காரணம் அங்கே என் தோழி ப்ரேமலதா தியாகராஜன் இருப்பதால்தான்.
முகநூலில் என்னைத் தேடி இணைந்து வாட்ஸப்பில் நான்கைந்து வருடங்களாகத் தொடர்பு கொண்டு வந்தே ஆக வேண்டும் என அன்புப்பிடிவாதம் செய்து கொண்டிருந்தாள் அவ்வப்போது. எனக்கும் போக ஆசைதான் . ஆனால் நேரம் ஒத்துழைக்கவில்லை.
கணவர் மன்னார்குடி என்றதும் உடனே கிளம்பி அவளையும் அவளின் அன்பு முயற்சியால் இன்னும் சில தோழியரையும் ( வஹிதா, அமுதா, வசந்தி ) சந்தித்துவிட்டு வந்தேன்.
அந்தப் பயணத்தின் போது நான் மூன்றாம் வகுப்பில் இருந்து எட்டாம் வகுப்பு வரை படித்த கணபதி விலாஸ் பள்ளி, இரண்டாம் வகுப்பு & எட்டு முதல் ப்ளஸ்டூ வரை படித்த செயிண்ட் ஜோசப் பள்ளி ஆகியவற்றையும் நாங்கள் குடியிருந்த 18, சிங்காரவேலு உடையார் தெரு, லெக்ஷ்மி காலனி வீட்டையும், ஆனந்த விநாயகர் & இராஜகோபால சுவாமியையும் தரிசித்துவிட்டு வந்தோம்.
பிரேமலதாவின் அன்பில் தோய்ந்த நிறைவான பயணம். ( ப்ளஸ் ஒன் ப்ளஸ் டூ வரை இருவரும் படித்தோம். அவளுக்குத் திருமணமாகிவிட நான் கல்லூரிக்குச் சென்றேன். நாங்கள் இருவரும் அன்பு மடல்களாக வரைந்து தள்ளி இருந்திருக்கிறோம். அதை எல்லாம் பத்திரமாக வைத்துள்ளாள். அவளது மருமகள் அன்பும் அழகும் அறிவும் வாய்ந்த பாசமான பெண். அவளின் முயற்சி மூலமே நாங்கள் சந்தித்தோம். )
