எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 26 ஜூலை, 2021

ராமனுக்கு உதவப் புறப்பட்ட குலசேகரர்.

ராமனுக்கு உதவப் புறப்பட்ட குலசேகரர்.

தொலைக்காட்சியில் கார்ட்டூன் பார்க்கும் குழந்தைகள் அதில் ஆழ்ந்து அதைப் போலவே வீரசாகசங்களைத் தாங்களும் செய்து பார்ப்பதுண்டு. இப்பழக்கம் குழந்தைகளுக்கு மட்டுமல்ல ஒரு அரசருக்கே அந்த நாளில் இருந்தது. யார் அந்த அரசர் அப்படி அவர் என்ன காரியம் செய்தார் எனப் பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.
எட்டாம் நூற்றாண்டில் சேரநாட்டின் திருவஞ்சைக்களம் என்னும் இடத்தில் திடவிரதன் என்ற மன்னர் ஆட்சி செய்து வந்தார். அவருக்குக் குலசேகரன் என்ற மகன் பிறந்தார்.
தன் தந்தைபோலவே சிறப்பாக ஆட்சி புரிந்த இவர் ஒரு சமயம் நாடு பிடிக்கும் ஆசையில் சோழ பாண்டிய நாடுகளின் மீதும் படையெடுத்து வென்றார். பாண்டிய மன்னன் இவருக்குத் தன் மகளைத் திருமணம் செய்து கொடுத்தார். இவர்களுக்குச் சேரகுலவல்லி என்ற மகள் பிறந்தாள்.
மகன் பிறந்ததும் தான் ஈடுபட்ட கொடுமையான போர்க்களங்களை நினைத்து வருந்திய குலசேகரர் ஒரு கட்டத்தில் கடவுளைச் சரணடைந்தார். நாளும் கிழமையும் கடவுளின் புகழ் கூறும் உபன்யாசகர் யாரையாவது அழைத்து வந்து காவியங்களின் விளக்கத்தைக் கேட்டு இன்புற்று வந்தார்.


அவற்றைக் கேட்கும்போதெல்லாம் தான் திருவரங்கன் உறையும் கோவிலின் திருக்குளமாக மாட்டேனா, அத்திருக்குளத்தின் படி ஆக மாட்டேனா அல்லது அக்குளத்தில் நீந்தும் மீன் ஆக மாட்டேனா என்ற அளவில் அதீதமாகப் போய்க் கொண்டிருந்தது அவரது பக்தி.
அரசாங்கக் காரியங்கள் முடங்க ஆரம்பித்தன. விடிந்ததும் எழுந்ததும் காலைக்கடன்கள் முடித்து அரசர் பாடு உபன்யாசம் கேட்கச் சென்றுவிட்டால் அரசகாரியங்கள் என்னாவது. யார் எடுத்து நடத்துவது ? அவரது பக்தி அளவு கடப்பதை அறிந்த அவரது மந்திரி சபையினர் ஒரு சதித்திட்டம் தீட்டினர்.
குலசேகரர் தினமும் வணங்கும் பெருமாளின் ஆராதனைச் சிலைக்கு அணிவிக்கும் விலையுயர்ந்த நவரத்ன மாலையை எடுத்து ஒளித்து வைத்து விட்டார்கள். அதை அங்கே வந்த திருமால் அடியார்களில் யாரோ ஒருவர்தான் திருடிச் சென்றுவிட்டதாகப் பழி வேறு போட்டார்கள்.
கொதித்துப் போய் விட்டார் குலசேகரர். “ யாரை வேண்டுமானாலும் குற்றம் சொல்லுங்கள். ஆனால் கடவுளின் திருத்தொண்டர்களைச் சொல்லாதீர்கள் “ சபையே மௌனம் காத்தது. அன்றையப் பொழுது கழிந்தது.
மறுநாள் காலை அரசர் ”அந்த மாலையை அடி

யார்கள் எடுத்திருக்கிறார்கள் என என் மந்திரிகளாகிய நீங்கள் நம்புகிறீர்கள். ஆனால் அவர்கள் எடுக்கவில்லை என நான் கூறுகிறேன். நான் கூறுவது பொய்யானால் என்னை இக்குடத்தில் இருக்கும் பாம்புகள் தீண்டட்டும்.”
இதைக் கேட்டதும் விதிர் விதிர்த்தது சபையோருக்கு. இந்த விபரீத நிகழ்வை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. அங்கே ஒரு குடம் கொண்டு வரப்பட்டது. அதனுள் கொடிய விஷம் கொண்ட நாகங்கள் நெளிந்து கொண்டிருந்தன. குலசேகரரோ சிறிதும் தயங்காமல் தன் கையை உள்ளே விட்டார். பாம்புகளே பயந்து ஒதுங்கின. அவரைத் தீண்டவே இல்லை.
மந்திரி சபையினர் இந்நிகழ்வைப் பார்த்து அதிர்ந்து அரசரிடம் மன்னிப்புக் கேட்டார்கள். “ அரசே அரச காரியங்கள் முடங்குவதால் அப்படிப் பொய் சொல்லி விட்டோம் “
“அப்படியா அப்படியானால் என் மகன் அரசபாரம் சுமப்பான். அவன் அரச காரியங்களை நிர்வகிப்பான் “ என்று கூறி மகனுக்குப் பட்டம் சூட்டிவிட்டு முழு நேரமும் கடவுள் கதைகள் கேட்பதில் ஆழ்ந்தார்.
ஒரு நாள் ஒரு உபன்யாசகர் வந்தார். அவர் ராமனின் காவியமான ராமாயணத்தை மிக அழகான உடல் பாவங்களோடு சொல்லி வந்தார். அயோத்தியில் ராமர் பிறந்தார். மிதிலையில் சீதையுடன் திருமணமாயிற்று. தந்தையின் கட்டளைக்கேற்பப் பதினான்கு ஆண்டுகள் வனவாசம் புகுந்தார்.
இதை உபன்யாசகர் சொல்லி வரும்போதே குலசேகரர் வருத்தமடைந்தார். அதன் பின் கொடியவனான ராவணன் சீதையைக் கவர்ந்து செல்கிறான். அவளைத் தேடிக் கண்டுபிடிக்க ராமரும் இலக்குவனும் புறப்படுகிறார்கள்.
அப்போது

கானகத்தில் அவர்கள் கரன் தூஷணன் என்ற அரக்கர்களை எதிர்கொள்ளுகிறார்கள். இந்தச் சமயத்தில் உபன்யாசகர் ராமருக்கும் கரனுக்கும் தூஷணனுக்கு இடையே நடந்த போரை விவரிக்கிறார்.
ஆரண்யத்தில் வில்லேந்திய ராமர் தன் தம்பி இலக்குவனுடன் தனியே நிற்கிறார். எதிரே கரண் தூஷணன். இரு இயக்கர்களும் ராமர் மேல் அம்பு மாறி பொழிகின்றனர்.  
”அதோ வருகிறது ஒரு கூரான அம்பு.. அடடா அது ராமனை நோக்கியல்லவா வருகிறது. இதோ ராமன் மேல் பாயப் போகிறதோ.. ” இதைக் கேட்டதுதான் தாமதம் .. டணார் என்று ஒரு வாளின் ஒலி கேட்கிறது.
அங்கே அரசர் குலசேகரர் தன் இருக்கையிலிருந்து எழுந்து இடையிலிருந்து வாளை உருவியபடி நிற்கிறார். உபன்யாசகருக்கும் மக்களுக்கும் ஒன்றும் புரியவில்லை.
“யாரங்கே சீக்கிரம் நமது படைகள் தயாராகட்டும். ராமருக்கு உதவப் போகவேண்டும். கரணையும் தூஷணனையும் அழிக்க வேண்டும் “ என்று கூறி வாளை குறுக்கும் நெடுக்கும் வீசுகிறார்.
உபன்யாசகர் உடனே புரிந்து கொண்டு “ அரசரே. ராமர் கரண் தூஷணை மட்டுமல்ல ராவணனையும் அழித்தார். சீதையுடன் பட்டாபிஷேகம் கொண்டார். எனவே கவலற்க “ என்று சமயோசிதமாகக் கூறி சமாதானப் படுத்தினார்.
கடவுள் மேல் கொண்ட பாசத்தால் அவர் கதையைக் கேட்டே அவருக்கு உதவி செய்யத் துடித்தது மட்டுமல்ல தன் மகளான சேரகுலவல்லியையும் மணம் புரிந்து கொடுத்தார் குலசேகரர். கடவுள் மேல் அவர் பெரிய திருமொழி என்று பாசுரங்கள் பாடி அர்ப்பணித்தார். இவரது பாசமும் பரிவும் போற்றுதலுக்குரியதுதானே குழந்தைகளே.

2 கருத்துகள்:

  1. தெரிந்த கதை. ஒரு திரைப்படத்தில்கூட இந்நிகழ்வினைப் பார்த்த நினைவு. இருப்பினும் உங்கள் எழுத்தில் நன்கு ரசித்தேன். திருவஞ்சைக்களம் தேவாரப்பாடல் பெற்ற தலமும்கூட.சுந்தரர் கைலாசம் சென்ற நிகழ்வு....இத்தலத்திற்குச் சென்றுள்ளேன்.

    பதிலளிநீக்கு
  2. மிக்க நன்றி ஜம்பு சார் !

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...