எனது இருபது நூல்கள்

எனது இருபது நூல்கள்
எனது இருபது நூல்கள்

செவ்வாய், 6 ஜூலை, 2021

சித்தன்ன வாசல் குகை ஓவியங்களும் சமணர் படுகைகளும்

 ஜனவரி மாதம் தஞ்சையில் இருந்து புதுக்கோட்டை வழியாகக் காரைக்குடிக்கு வரும்போது  சித்தன்ன வாசல் சென்று வந்தோம். 

இங்கே குடைவரைக் கோயிலுக்கு உள்ளே உள்ள குகை ஓவியங்களைக் காணவேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. அது அன்றுதான் வாய்த்தது. கிபி ஏழாம் நூற்றாண்டு ஓவியங்களைக் காண்பது என்றால் சும்மாவா. மூலிகை வண்ணங்கள் கொண்டு வரையப்பட்டவை என்பதால் பதினான்கு நூற்றாண்டுகளாகியும் அவை பொலிவு குறையாமல் உள்ளன. 

மனிதர்களின் அஜாக்கிரதையால் அவை நிறம் மங்கித்தான் உள்ளன என்றாலும் அவற்றின் பொலிவும் எழிலும் குன்றவில்லை. 

மிக அழகான அலங்கார வளைவுகளோடு கோட்டைபோல் வரவேற்றது சித்தன்ன வாசல் நுழைவாயில். இதன் அருகேதான் குடுமியான் மலை. ஆனால் ஒரே நாளில் தஞ்சைப் பெரிய கோவில், சித்தன்ன வாசல், குடுமியான் மலை எல்லாவற்றையும் நடந்து நடந்து பார்க்க முடியாது என்பதால் குடுமியான் மலை செல்லவில்லை. 


நுழைவாயிலுக்குப் பின்னும் இரண்டு கிலோமீட்டர் தூரம் வரை வனப்பாதை போல் இருந்தது. 
அதன் பக்கவாட்டில் இந்தத் தடாகம். சமணர்கள் உலாவிய இடம் இது எல்லாம். 

ஏனெனில் இதன் மேலே சமணர் படுகை இருக்கிறது. சமணர்கள் வாழ்ந்த இடம் சித்தன்ன வாசல்.  இங்கே சமணர்கள் தவம் செய்தும் அவர்கள் வாழ்ந்த படுகைகள், குடைவரைகள் போன்றவையும் காணப்படுகின்றன. 

இதன் பின்னேயும் சிறிது தூரம் சென்றால்தான் சித்தன்ன வாசல் குகைக்கோயிலைக் காணலாம். அன்னவாசல் என்ற இடத்தில் இருப்பதால் இதை சித்தன்ன வாசல் என்கிறார்கள். 

இதன் அருமை அறியாமல் சில மக்கள் இங்கே சமைத்து உண்டு அதன் புகைபடிந்து பாழடைந்துள்ளது போன நூற்றாண்டு வரை. 

அரசு இந்த இடத்தைக் கையகப்படுத்தியபின் பழைய ஓவியங்களை சீர்கெடாமல் புதுப்பித்துள்ளது. இந்தக் கோடிங்கை காப்பி செய்து அனுப்பி இணையம் மூலம் எண்ட்ரன்ஸ் டிக்கெட் பெற்று மேலே செல்ல வேண்டும். 

இதுதான் ஏழடிப் பட்டம் சமணர் படுகளும் கல்வெட்டுக்களும் உள்ள இடம். 17 கற்படுகைகள் உள்ளனவாம். !


மலையின் கீழ்த்திசைப் பாறையில் அமைந்துள்ள ஏழடிப் பாட்டம் என்னும் இயற்கைக் குகையில் வழுவழுப்பான தலையணை அமைப்புடன் கூடிய 17 கற்படுகைகளைக் காணலாம்.

இவற்றுள் மிகப் பெரியதும் பழமையானதுமான படுகையில் தமிழ்க் கல்வெட்டொன்று தமிழ் பிராம்மி எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. 

கி. மு. 3 - 2 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இக்கல்வெட்டு எவுமி நாட்டுக் குமட்டூர் பிறந்த காவிதி ஈதன்கு சிறுபோசில் இளையான் செய்த அகிட்டானம் என்று கூறுகிறது. 

இதைத் தவிர கிபி ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ்க் கல்வெட்டு ஒன்றில் கடுந்தவம் புரிந்த சமணத்துறவிகளைப் பற்றியும் அறிய முடிகிறது.

வந்துவிட்டோம்.. இதுதான் சித்தன்ன வாசல். இதில் ஓவியம் இருக்கும் இடம் விதானம் !
புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை. 

மேலும் கும்பலாக உள் செல்லவும் அனுமதி இல்லை. 
எனவே வெளியேயே க்ளிக்கிக் கொண்டோம். 
கணவர் எச்சரித்ததையும் மீறி ஒளித்து வைத்து எடுத்தது இந்தப் புகைப்படம். 
இயற்கை வண்ணக் கலவைகளில் பச்சையும் காவியும் இன்னும் நிறம் மாறாமல் இருக்கின்றன. 

பத்துப் பத்துப் பேராக உள்ளே விட்டார்கள். எண்ட்ரன்ஸ் டிக்கெட் உண்டு. 

உள்ளே ஒரு கைடு இருக்கிறார். அவர் ஓவியங்களை விவரிக்கிறார். 

ஓவிய மண்டபத்துக்குப் பின் சமணர்கள் தவம் செய்த குடைவரை ஒன்று உள்ளது. 

காலியாக இருந்தாலும் அதில் எக்கோ சவுண்ட் கேட்பதில்லை. ஓம் என்ற ஒலி ரீங்கரிப்பதில்லை. இதை இருவராக அனுப்பி சோதிக்கச் செய்தார். புது அனுபவம். 

முக்கியமான விஷயம் இந்தக் குகையில் ஓவியங்கள் தூண், சுவர் போன்றவற்றிலும் இருக்கின்றன. நாம் சரித்திரப் புத்தகத்தில் பார்க்கும் தாமரை மலர் பறிக்கும்/ஏந்தும் புத்தபிக்கு/மன்னன் உருவம். மேலும் அழகான ஒரு இளவரசி உருவம், நடனப் பெண் உருவம்  தூண்களில் சமைக்கப்பட்டுள்ளது. 

இது போக அன்னபட்சி, மீன் தாமரை மொட்டுகள் ஆகியனவும் காணக் கிடைக்கின்றன. 

இவற்றில் ஹைலைட் குடைவரைக்குள் நுழையுமுன் உள்ள வெளி மண்டபத்தின் நடு விதானம் முழுக்க மொக்குகளும், மலர்களும் அல்லிகளும் நிரம்பிய அழகான தாமரைத் தடாகம் , அதில்தாமரை பறிக்கும் புத்தபிக்கு, நீந்தும் அன்னங்கள், மீன்கள், அவற்றினால் ஏற்படும் அலைமடிப்புகள் என திடீர் ஆச்சர்யம் அளித்த இடம் அது. இந்த விதான ஓவியம் மட்டுமே இப்போது எஞ்சியுள்ளது. இவையே மங்கலாகத்தான் காணக் கிடைக்கின்றன. ஞானக் கண் இருந்தால் இன்னும் நன்றாகக் காணலாம் :)

வெளி மண்டப ஓவியங்கள் சமையல் புகையினாலும் மழை புயல் போன்ற பேரிடர் சீற்றங்களாலும் அழிந்து லேசாக உள்ளன.   

இரு பக்கமும் இரு சமண தீர்த்தங்கரர்களின் உருவம் கல்லில் புடைப்புச் சிற்பமாகச் சமைக்கப்பட்டுள்ளது. 

எதையும் புகைப்படமெடுக்க முடியவில்லை. 
ஒரு வழியாக வாழ்நாள் ஆசையான சித்தன்ன வாசல் ஓவியங்களைக் கண்டாகி விட்டோம். இன்னும் குடுமியான்மலை, அஜந்தா , எல்லோரா எல்லாம் பாக்கி. :) 
அங்கே உள்ள போர்டில் காணப்பட்டது ////ராக் கட் ஜெயின் டெம்பிள் எனப்படும் சமணர் குடைவரைக் கோவிலான இதை அறிவர் கோயில் என்றும் அழைக்கிறார்கள். 

இந்த அறிவர் கோவில் முற்பாண்டியர் காலத்தில் , கிபி ஏழாம் நூற்றாண்டில் குடையப்பட்டதாகும்.

மேற்கு நோக்கிய இக்குடைவரைக் கோயில் கருவறை மற்றும் முகமண்டபத்தை உள்ளடக்கியது. 

கருவறையின் பின்புறச் சுவரில் மூன்று சமணர் தீர்த்தங்கரர்களின் புடைப்புச் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

முகமண்டபத்தின் பக்கவாட்டுச் சுவர்களில் பார்சுவ நாதர் மற்றும் சமண ஆசான்களின் புடைப்புச்சிற்பங்கள் உள்ளன. 

முகமண்டபத்தின் விதானம் மற்றும் தூண்களின் மேற்பகுதி ஆகியவற்றில் தாவர வண்ணங்களிலான ஓவியங்கள் அழகுறத் தீட்டப்பட்டுள்ளன.

சமண மதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஸமவஸரனத்தை  எடுத்துக் காட்டுவது போன்று தாமரைக் குளத்தில் மலர் சேகரிக்கும் ஆண்கள், விலங்குகள், அன்னம் போன்ற பறவைகள், மீன்கள், தாமரை மற்றும் அல்லி மலர்களும் விதானத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளன.

மேலும் அரசன், அரசி, நடனமகளிர் உருவங்களும் தூண்களில் தீட்டப்பட்டுள்ளன.

அனந்தா குகை ஓவியங்களை ஒத்துள்ள இவை தென்னக ஓவியக்கலை வளர்ச்சிக்கு முன்னோடி எனலாம்.  ////

 இந்த ஓவியங்களையும் நால்வகையாக வகைப்படுத்தி இருக்கிறார்கள். 

மலையிலிருந்து கீழே காணும் காட்சி. 
தட்டையான படிகள்தான் என்றாலும் ஒரு மாதிரி சுழல்படிகள் போலத் தடுமாற்றம் ஏற்பட்டது. 


சுற்றுப்புற மலைத்தொடர்கள். இவை பற்றி எல்லாம் அவர் இன்னும் விவரமாகச் சொன்னார். மேலும் சமணர்கள் தவம்செய்ய இந்த மலையைத் தேர்ந்தெடுத்த காரணத்தையும் சொன்னார். 

மேலும் அவர்கள் தவம் செய்தலே முழுப் பணி என்றும் காற்றைக் குடித்தே உயிர்வாழ்ந்த அதிசயத்தையும் சொன்னார்.

இங்கே வாசலில் பிராமிக் கல்வெட்டு உள்ளதென்று சொன்னார்கள். 


இதை மெய்யியல் தொடர்பான பயன்பாட்டில் இருந்த இடம் என்கிறார்கள். மூன்றாம் நூற்றாண்டில் சமணர்கள் வரையப்பட்ட இவ்வோவியங்கள் ( இவர்களை சமணர்கள் என்றும் ஆசீவகத் துறவிகள் என்றும் சொல்கிறார்கள் ) சேந்தன் மாறன் அல்லது மாறவர்மன் அரிகேசரி  என்ற பாண்டிய மன்னர்கள் காலத்தில் சீரமைக்கப்பட்டது என்கிறார்கள். 

பல நூற்றாண்டுகள் தாண்டியும் சமணர்களின் கல்வெட்டும்,படுகைகளும் ஓவியங்களும் தப்பிப் பிழைத்திருப்பதே இயற்கையின் பேரதிசயம். காற்றைக் குடித்து வெளியில் வாழ்ந்து தவம் செய்த அத்துறவிகளின் பேராற்றலின் சாட்சியாய் இருக்கின்றன நிலையாய் அந்த மலையும் குகைக் கோவிலும் எதிரே சிற்றலைகளோடு தியானிக்கும் தடாகமும் ( ஒரு காலத்தில் தாமரைத் தடாகமாய் இருந்திருக்கலாமோ என்ற எண்ணத்தை உண்டாக்கியது ) தினம் இவற்றை உலாவரும்  சூரியனும் சந்திரனும். 

2 கருத்துகள்:

  1. இங்கே செல்லும் வாய்ப்பிற்கு காத்திருக்கிறேன். தகவல் பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  2. நிச்சயம் போய் வாருங்கள் வெங்கட் சகோ. அருமையான இடம்.

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...