எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 11 ஜூலை, 2021

இராமனின் முன்னோர்கள்

இராமனின் முன்னோர்கள்


நாம் நம்முடைய முன்னோர்களை அறிந்திருக்கிறோமா. அப்பா, தாத்தா, கொள்ளுத் தாத்தா பெயரை அறிந்திருப்போம். அதிகபட்சமாக எள்ளுத் தாத்தாவின் பெயரை அறிந்தவர்கள் அபூர்வமே. ஆனால் இராமன் தோன்றின சூரிய குலத்தில் இட்சுவாகு வம்சத்தில் இராமனுக்கு முன்னே அரசாண்ட அவனது தாத்தாக்கள் யார் அவர்களது வீர தீரப் பராக்கிரமம் என்ன என்று பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.

இராமனுடைய குலமுன்னோர்கள் பற்றி அவனாகவும் பெருமை அடித்துக் கொள்ளவும் இல்லை. விசுவாமித்திரர் ஜனக முனிவரிடம் இராமனின் முன்னோர்கள் அறுபத்தி எட்டுப் பேரில் மிகச் சிறந்த பதினேழு பேர் பற்றிக் கூறி இராமனின் சிறப்பையும் கூறுகிறார்.

விஷ்ணுவிடம் இருந்து பிரம்மாவின் மகன் மரீசி. இவரது மகன் கஷ்யப் இவரது மகனே விவஸ்வான் எனப்படும் சூரியன். இவர் மகன் வைவஸ்வத மனு. இவரது மகன் இஷ்வாகு. இனி இஷ்வாகு வம்சத்தில் பிறந்த அரசர்கள் பெயரை வரிசையாகக் கூறுகிறேன். விகுஷி, புரஞ்சயன் ( காகுஸ்த்தன்), அனேனா, பிருது, விஷ்தரஸ்வன், சந்திரன், யுவனக்ஷ்வன், ஷபஸ்தன், பிரஹத்தஷ்வன், குவலயஷ்வன், த்ரீதஷ்வன், ஹர்யஷ்வன், நிகும்பன், அமிதஷ்வன், கிருஷஷ்வன், பிரசேன்ஜித், யுவனஷ்வன், மாந்தாதா, முசுகுந்தன், தராஸாதஸ்யூ, அனாரன்யன், ப்ரீஷாதஸ்வன், ஹர்யாஷ்வன், ஹஸ்தியன், சுமனா, த்ரிதன்வா, த்ரயாருணி, சத்யவிரதன் ( திரிசங்கு ), ஹரிஷ்சந்திரன், ரோஹித்தாஷ்வன், ஹரீதா, சஞ்சு, விஜயன், ருருக், வ்ரீக், பாஹூ, சகரன்,  அஸமான்ஜஷ், அம்ஷுமான், திலீபன், பகீரதன் , சுகோத்ரன் , சுருதி, நாபாக், அம்பரீஷன், ஷிந்துதுவிப் , அயுதயு, ரிதுபர்ணா, சர்வகாமன், சுதாஸ், சௌதாஸன், அஸ்மகன், முலகன், தஸதரன், சிபி, விஷ்வாசாகன், கத்வங்கன், தீர்க்கபாகு, ரகு, அஜன், தசரதன், ராமன். ராமனது புத்திரர்களே  லவனும் குசனும். இன்னும் மகாபாரதப் போருக்குப் பின்னும் இவரது பேரன்கள் தொடர்கிறார்கள்.


இஷ்வாகு என்ற மன்னன் சூரிய குலத்தை சிறப்படையச் செய்ததால் அவரது வம்சம் இஷ்வாகு வம்சம் எனப்பட்டது. புரஞ்சயன் என்ற அரசன் காலத்தில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் போர் மூண்ட போது இந்திரன் புரஞ்சயன் உதவியை நாடினான். போர் செய்யப்போகும்போது இந்திரன் எருது உருவம் கொண்டு புரஞ்சயனுக்கு வாகனமாக மாறினான். புரஞ்சயன் அந்த எருதின் மேலேறி அசுரரோடு போர் செய்து வென்றான். அதனால் புரஞ்சயன் காகுஸ்தன் ( காகுஸ் என்றால் திமில், ஸ்தன் என்றால் அமர்ந்தவன் ) எனப் புகழ் பெற்றான்.

பிருதுச் சக்கரவர்த்தி பெயராலேதான் நாம் பூமியைப் பிருத்வி என அழைக்கிறோம். மாந்தாதா என்னும் மன்னன் காலத்தில் ஆண்புலியும் கலைமானும் ஒரே நீர்த்துறையில் நீர் அருந்துமாம். புலியும் மானும் பரம எதிரி. வலியவர் எளியவர் என்ற பாகுபாடு, பயம் இல்லாமல் இந்த மாந்தாதா மன்னன் காலத்தில் விலங்குகள் கூட பயமின்றி ஒற்றுமையாக வாழ்ந்தனவாம்.

முசுகுந்தச் சக்கரவத்தியின் பெருமை பேசி முடியாது. அவர் தேவாசுரப்போரில் விண்ணுலகம் சென்று அசுரர்களோடு போரிட்டுத் தேவர்களைக் காத்ததோடு மட்டும் அல்ல. அழகாபுரியிலேயே தங்கியிருந்து அசுரர் பற்றிய பயத்தைத் தேவர்களிடமிருந்து நீக்கினாராம்.

சிபிச் சக்கரவர்த்தி கதை நாம் முன்பே அறிவோம். புறாவுக்காகத் தன் தன்னையே ஈந்தவர். நந்தவனத்தில் இருக்கும்போது ஒருமுறை அடிபட்ட புறா ஒன்று அவர் மடியில் வீழ்ந்தது. பின்னேயே துரத்தி வந்த கழுகு ”அரசே அதை நான் தான் வீழ்த்தினேன். அதுதான் என் இன்றைய உணவு” என்றது.

அரசன் சிபியோ” இதற்கீடாக நான் என்னையே தருகிறேன் “ என்று கூறி தராசைக் கொணரச் செய்து ஒரு தட்டில் புறாவை வைத்து மறு தட்டில் தன் உடலில் இருந்து தசையை வெட்டி வைத்தார். எவ்வளவு வைத்தும் புறாவின் எடைக்கீடாகாததால் தானே தராசில் ஏறி நின்றார். உடனே இரு தட்டும் சமமாகியது. இவரது வள்ளல்தன்மை, உயிருக்கு உருகும் தன்மை பார்த்து புறாவும், கழுகும் இந்திரனாகவும் அக்னி தேவனாகவும் காட்சி அளித்துப் பாராட்டினார்கள்.

விசுவாமித்திரர் முனிவர் மூலம் திரிசங்கு என்ற மன்னன் திரிசங்கு சொர்க்கம் அடைந்தான். உண்மையே பேசியதால் கஷ்டப்பட்டுக் கடைசியில் ஜெயித்த ஹரிஷ்சந்திரன் , அவன் மகன் ரோஹித்தாஷ்வன் கதை அறிவோம்.


சகரர் என்ற சக்கரவர்த்தியும் அவரது புத்திரர்களும் தோண்டியதே இன்று சாகரம் என்று அழைக்கப்படும் சமுத்திரம். யாருக்கும் அடங்காத கங்கை நதியைச் சிவன் ஜடாமுடியில் அடங்க வைத்ததும் தன் முன்னோர் 60000 பேர் மோட்சமடைய அந்தக் கங்கையைப் பகீரத் தவம் செய்து பூமிக்கு அழைத்து வந்ததும் பகீரத மகாராஜாவே.

தன் சிறப்பான ஆட்சியால் ரகுவம்சம் என்று பெயர் விளங்குபடி செய்தவர் அரசன் ரகு. இந்துமதி என்ற ராணியைச் சுயம்வரத்தில் வென்றவர் அஜன் மகாராஜா. இவர்தான் தசரதச் சக்கரவர்த்தியின் தந்தை

இட்சுவாகு சக்கரவர்த்தி பிரம்மனைக் குறித்துத் தவம் செய்து அவர் பூஜித்துவந்த அரங்கநாதனை விமானத்தோடு கேட்டுப் பெற்று அயோத்தியில் வைத்து வழிபட்டு வந்தார். பல்வேறு தலைமுறைகளாக இஷ்வாகு வம்சம் பூஜித்த அந்த அரங்கனைத்தான் விபீஷணன் இராமரிடம் கேட்டுப் பெற்றான். ஆனால் அவனால் ஸ்ரீரங்கத்தை விட்டு இலங்கைக்கு எடுத்துச் செல்ல இயலவில்லை. ஏனெனில் விநாயகர் சிறுவன் உருவில் வந்து அந்த விமானத்தை அரங்கனோடு விபீஷணனிடம் வாங்கிக் கீழே வைத்துவிட்டு ஓடிவிடுகிறார். விபீஷணன் எவ்வளவு முயன்றும் எடுக்க முடியவில்லை. அரங்கன் திருச்சி ஸ்ரீரங்கத்திலேயே கோவில் கொள்கிறார்.

எவ்வளவு இராஜாக்கள் எவ்வளவு தகவல்கள். நம் ஒவ்வொருவரின் முன்னோரின் வாழ்வும் இந்த ராஜாக்களை விடக் குறைந்ததல்ல. அதனால் அவர்கள் பேரையும் அவர்களைப் பற்றிய குறிப்புக்களையும் சேமித்து வைப்போம் குழந்தைகளே.

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...