எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 21 நவம்பர், 2018

கர்வம் தந்த அவமானம். தினமலர். சிறுவர்மலர் - 44.

சோதனைக்கு உள்ளாக்கிய ஜோதி.ந்த விஷயத்திலும் நானே பெரியவன் என்ற கர்வம் இருந்தால் அது அழிவுக்கே வழிவகுக்கும். அப்படி நானே பெரியவன் என்று மும்மூர்த்திகளில் இருவர் சண்டையிட்டால் என்ன ஆகும். ஈசன் அந்த கர்வத்தை எப்படிக் களைந்தார் என்பதைப் பார்ப்போம் குழந்தைகளே.  
ரு முறை படைப்புக் கடவுளான பிரம்மாவுக்கும், காக்கும் கடவுளான விஷ்ணுவுக்கும் இடையில் யார் பெரியவர் என்ற அகந்தை ஏற்பட்டது. முதன் முதலில் பொருட்களையும் மனிதர்களையும் படைப்பதால் தானே பெரியவன் என்றும் தன்னால் படைக்கப்பட்ட அந்தப் பொருட்களைக் காப்பவர்தான் விஷ்ணு என்றும் ஆகையால் தானே பெரியவன் என்று கூறினார் படைப்புக் கடவுள் பிரம்மா. பொருட்களைப் படைத்தல் பெரிதல்ல. படைக்கப்பட்ட பொருட்களையும் மனிதர்களையும் காத்து வருதலே அரும்பணி என்றும் அதனால் தானே பெரியவன் என்றும் விஷ்ணு கூறினார்.
இவ்வாறு இவர்கள் இருவரும் சண்டையிட்டபடி இருந்ததை ஈசன் பார்த்தார். இருவரிடமும்  ஒன்றும் சொல்லாமல் சிவன் ஜோதி ரூபமாக விண்ணையும் பாதாளத்தையும் தொட்டபடி நின்றார். ”என் அடிமுடியை அறிந்து சொல்பவரே பெரியவர்” என்று ஜோதியில் இருந்து சக்தி வாய்ந்த அசரீரி புறப்பட்டது.

இதைக்கேட்டதும் திடுக்கிட்டது பிரம்மாவுக்கும் விஷ்ணுவுக்கும், நம்மைக்காட்டிலும் பெரியவர் இருக்கிறாரோ, அதையும்தான் பார்த்துவிடுவோமே.. சவாலுக்குத் தயாரான அதேசமயம் தலை உயர்த்திய பிரம்மாவும் விஷ்ணுவும் அந்த ஜோதியைப் பார்த்துப் பிரம்மித்தார்கள். அடேயப்பா. எவ்வளவு பெரியதாக விஸ்வரூபமாக விண்ணையும் மண்ணையும் அடைத்து நிற்கிறது இந்த ஜோதி. இதன் அடி முடி அறிந்து வந்துவிட்டால் போதும்தானே . சரி யார் அடியை அளப்பது. யார் முடியை அளப்பது. என்று இருவருக்கும் சிறிது குழப்பம்.
முடிவில் விஷ்ணு அடியைத் தான் அளந்து வருவதாகக் கூறி பிரம்மாவை முடியை அளக்கச் சொன்னார். விஷ்ணு பூமியைப் பிளக்கத் தோதாய் வராகத்தின் ரூபம் எடுத்து பூமியைக் குடைந்து குடைந்து கீழே செல்லலானார். பல கோடி ஆண்டுகள் கீழே குடைந்து குடைந்து போய்க்கொண்டே இருந்தார். மணல், கற்கள், பாறைகள், நீர், பாதாள லோகம் எல்லாம் கூட வந்தாயிற்று. ஆனால் இந்த ஜோதியின் அடி எங்கேயிருந்து தொடங்குகிறது என்று அவரால் கண்டுபிடிக்கவே முடியவில்லை. அயர்ச்சியும் களைப்பும் மேலிடுகிறது. ஜோதியின் உஷ்ணம் தாக்குகிறது. அந்த உஷ்ணம் பட்டு வராகத்தின் மூச்சும் உஷ்ணமடைகிறது. இன்னும் போய்க்கொண்டே இருக்கிறது அந்த ஜோதிலிங்கத்தின் ஸ்வரூபம். எப்போதுதான் முடியுமோ எங்கேதான் முடியுமோ.. ஒரு வேளை முடியவே முடியாதோ விதிர்விதிர்க்கிறது வராகத்துக்கு. உடலெல்லாம் காந்துகிறது வெப்பத்தால்.
ஒரு கட்டத்துக்கு மேல் இன்னும் இன்னும் தோண்டித் தோண்டிக் களைத்த அந்த வராகம் ஓய்ந்தமர்கிறது.  அதனால் கண்டுபிடிக்கவே முடியவில்லை. தன் தோல்வியை ஒப்புக்கொள்ளலாம் என்று எண்ணி மேலே பூமிக்கு வந்த வராகம் விஷ்ணுவாய் மாறுகிறது. தன்னை விடப் பெரிது ஒன்று இருக்கிறது என்று அவர் ஜோதியின் முன் தன் தோல்வியை ஒப்புக்கொண்டு அமர்ந்திருக்கிறார்.
பிரம்மன் என்ன செய்தார் அவர் கதி என்னாயிற்று என்று பார்ப்போம். பிரம்மன் மேலே பறக்கத் தோதாய் அன்னபட்சியின் ரூபம் எடுத்தார். வெகு தொலைவு உயரம் அன்னம் களைக்காமலே பறந்தது.  
இதோ வந்தாயிற்று இதோ வந்தாயிற்று என்று ஒவ்வொரு தரமும் நினைத்தபடி பறந்து கொண்டிருந்தது அன்னம். பல கோடி ஆண்டுகள் பறந்து பறந்து அதன் இறக்கைகள் களைத்துப் போயின. உடல் சோர்வடைந்தது. ஆனால் முடி அறியாமல் செல்வதெப்படி. கொஞ்சம் கொஞ்சமாய் அலுப்புத் தட்டுகிறது அன்னத்துக்கு. என்ன இது நீண்டுகொண்டே போகிறதே. ஜோதி ஸ்வரூபத்தின் வெக்கையில் அன்னத்தின் சிறகுகள் வாடத் தொடங்குகின்றன.  
எதற்கு பறக்கிறோம் ஏன் பறக்கிறோம் பேசாமல் தோல்வியை ஒப்புக்கொண்டு இறங்கிவிடலாமா என்று யோசிக்க ஆரம்பிக்கிறது அன்னம். அதே சமயம் அதன் மேல் மோதியபடி மெல்ல மெல்ல இறங்கிவருகிறது ஒரு தாழை மடல்..
ஆமாம் தாழம்பூவின் ஒரு மடல்தான் ஜோதி ஸ்வரூபமான இறைவனின் சிரசில் இருந்து இறங்கி வந்து கொண்டிருந்தது. அந்தத் தாழம்பூவும் பல்லாயிரம் கோடி ஆண்டுகளாக ஜோதி ரூபமான சிவனின் சிரசில் இருந்து விழுந்து கொண்டிருக்கிறது. அன்னம் அதைப் பிடித்து ”இந்த ஜோதி ஸ்வரூபத்தின் முடி எங்கே இருக்கிறது” என்று கேட்கவும் அது ”இன்னும் பல்லாயிரம் கோடி ஆண்டுகள் மேலே பறந்து போனால்தான் முடியைக் காணமுடியும்” என்று சொல்லியது.
இதைக்கேட்ட அன்னத்துக்கு நெஞ்சு அடைத்தது. சிறகுகள் களைத்தன. என்னது இன்னும் பல்லாயிரம் கோடி ஆண்டுகளா..? தொடர்ந்து பறக்க முடியுமா.? சிறகுகள் எரிந்துவிடும் போல் இருக்கிறதே. வெப்பம் மேலே போக போக இன்னும் அதிகமாகிறதே ? மேனியே எரிந்துவிடும்போலிருக்கிறதே .
அந்தத் தாழம்பூவைப் பிடித்த அன்னம் அதனிடம் கெஞ்சிக் கேட்டது.. “ ஏ தாழம்பூவே நீதான் அந்த ஜோதி ஸ்வரூபத்தின் உச்சியைப் பார்த்திருக்கிறாயே. அதனால் எனக்கொரு உதவி செய்வாயா.. “
”என்ன உதவி வேண்டும் சொல்.”
“நான் இந்த ஜோதி ரூபத்தின் முடியைப் பார்த்தேன். அங்கிருந்துதான் உன்னை எடுத்து வந்தேன் என்று சொல்ல வேண்டும் “
”பயமாய் இருக்கிறதே.”
“பயப்படாதே.. நானிருக்கிறேன்.”
மிதந்து மிதந்து தரையிறங்கின அன்னமும் தாழையும் விஷ்ணுவிடம் அமர்த்தலாகச் சொன்னது அன்னம் “நான் முடியைக் கண்டு விட்டேன் . இதோ சாட்சியாக தாழம்பூ “
நூறு இடிகள் ஒன்றாக இடித்ததுபோல் சப்தம். எங்கிருந்து வருகிறது. அந்த ஜோதி ரூபமான தீப்பிழம்பிலிருந்துதான் வருகிறது. ஐயோ. பயந்து பதறித் தாவின அன்னமும் தாழையும்.
ஜோதி கேட்டது “ உண்மையைச் சொல். உன்னை பிரம்மன் கண்டு எடுத்து வந்தானா. “
நடுங்கியது தாழம்பூ .” இல்லை. “
“ஏன் பொய் சொன்னீர்கள் இருவரும். நீ இனி  பூஜைக்கு இல்லை. பிரம்மா பொய் சொன்ன உனக்கு இனி பூமியில் சிலை இல்லை. ”
யார் பெரியவர் என்ற அற்ப சண்டையில் ஈடுபடாமல்  இனியாவது நான் யார் என்று உணர்ந்து பொறுப்போடும் பொறுமையோடும் நடந்துகொள்ளுங்கள் என்று அறிவுரை செய்தார் ஜோதி ரூப சிவன்.எனவே குழந்தைகளே யார் பெரியவர் என்று கர்வம் கொள்ளாமல் அவரவர் பொறுப்பை உணர்ந்து நடப்போம்.

டிஸ்கி:-  இந்தக் கதை இதிகாச புராணக் கதைகள் என்ற தலைப்பில் 16. 11. 2018  தினமலர் சிறுவர்மலர் இதழில் இடம்பெற்றுள்ளது. நன்றி தினமலர் சிறுவர் மலர், தனது அழகான ஓவியங்களால் கதைக்கு எழில்கூட்டும் ஓவியர் அஷோக் & தேவராஜன் ஷண்முகம் சார்.


டிஸ்கி :- அரும்புகள் கடிதத்தில் குணம் அழகு தரும் என்ற கதையைப் பாராட்டிய ஆறுபாதி வாசகி ஆ. மகாலட்சுமி அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள். 

3 கருத்துகள்:

 1. நன்றாக இருக்கிறது சகோ/ தேனு

  வாழ்த்துகள் பாராட்டுகள்

  பதிலளிநீக்கு
 2. நன்றி டிடி சகோ

  நன்றி கீத்ஸ்

  வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...