எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 17 நவம்பர், 2018

அய்க்கண் சிறுகதைகளில் கையாளப்படும் உத்திகள் :-


அய்க்கண் சிறுகதைகளில் கையாளப்படும் உத்திகள் :-

முன்னுரை :- அய்க்கண் சிறுகதைகள் அனைத்தும் சிறப்பானவை. அவர் தான் வாழ்ந்து வந்த செட்டிநாட்டின் மணம் பலவற்றில் கமழுகின்றது. இவர் கதைகள் இவர் ஊர்ப்பற்றை விளக்குகின்றன. இவருடைய கதாபாத்திரங்கள் இலச்சியங்களைக் கொண்டவர்களாகவே அமைவார்கள். சிறுகதையில் ஒரே வகை உணர்ச்சி, ஒரு பாத்திரத்தின் உணர்ச்சி மிகுத்துக் கூறப்படும். அந்த உணர்ச்சியைப் பெற வைக்க அவர் அந்தக் கதாபாத்திரத்திற்கு மிக்க அழுத்தம் கொடுத்திருப்பார்.

இலட்சியவாத கதாநாயகர்கள், கதாநாயகிகள். :-

இவர் கதைகளில் பெரும்பான்மையும் கதாநாயகர்களும், கதாநாயகிகளும் பலவகை இலட்சியங்களைக் கொண்டவர்களாயிருப்பார்கள். சிறு சிறு தவறுகளையும் ஒழுக்கத்திற்குக் குறைவாக எண்ணுவார்கள். எடுத்துக்காட்டாக சொர்க்க வாசல் கதையில் பாச்சாவை கூறலாம். உதார குணத்திற்கு எடுத்துக்காட்டாக மெய்யப்பச் செட்டியாரைக் கூறலாம். தன்னிடத்திற்கு இன்னொருத்தி படித்தவள் வந்துவிடுவாள் எனத் தெரிந்தே அம்பலக்காரரின் மனைவி தன் கொழுந்தனுக்கு அந்தப் படித்த பெண்ணையே முடிக்க வேண்டும் என்று கூறி விட்டுக்கொடுக்கும் தன்மையும், மகளின் வாழ்வுக்காகத் தாயும் தாயின் வாழ்வுக்காக மகளும் விட்டுக் கொடுப்பதும், கவிதா தன் கணவன் செய்யும் கொடுமைகளையும் பொறுத்து முடிவில் நன்மையடைவதும் இவருடைய இலட்சிய கதாபாத்திரங்கள். கதாபாத்திரங்கள் அனைவரும் தியாகத்தின் மொத்த உருவமாக இருப்பர்.

இரண்டு உச்சக்கட்டங்கள் :-

பொதுவாக இவருடைய கதைகளில் இரண்டு உச்சக்கட்டங்கள் வரும். ‘கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே’ என்ற கதையில் தன் மைந்தனின் தேர்வுக்கு வந்திருந்த பணத்தை எடுத்துக் கொடுப்பதும், தனக்கு வரவேண்டிய ரூபாய் ஐயாயிரத்தை வேண்டாம் என மறுப்பதும் கதையின் இரண்டு உச்சக்கட்டங்கள். அதுபோல் ‘சொர்க்கவாசல்‘ கதையில் அவர் (பாச்சா) விமான விபத்தில் , பின்பு கார் விபத்தில் இருந்து தப்பிப்பதும், ‘லட்சுமணன் கோடு ‘ கதையில் மகன் தந்தையைத் திருத்துவதாக அமைவதும், அக்கா திருந்தி தங்கையிடம் வருந்துவதும், தாய்க்காக மகள் அமெரிக்காவுக்கு டாக்டர் கணவனுடன் செல்லும் வாய்ப்பை நழுவ விடுவதும், தாய் மகளுக்காகத் தன் காதல் வாழ்வைத் துறப்பதும், அது ஒரு தொடர்கதையில் காதலியின் நல்வாழ்வுக்காக காதலன் பொய்க்கடிதம் எழுதுவதும், காதலனின் நல்வாழ்வை எண்ணி காதலி ஒதுங்கியபின் அவளைக் காண நேரும் காதலனின் மன நிலையும், எல்லாவற்றிலும் இரட்டை உச்சக்கட்டங்கள்.

முடிவில் நன்மை :- தவறு செய்தவர்கள் அனைவரும் திருந்தி மன்னிப்புப் பெறுவதாக வருகின்றன. பாச்சா தன் பாவங்களுக்கு மன்னிக்கப்படுதலும், அக்கா தங்கையிடம் மன்னிப்புப் பெறுவதும், தவறாகப் புரிந்து கொண்ட காதலன் காதலியைக் கடைசியில் புரிந்து கொள்வதும், முடிவில் நன்மையில் முடிப்பது ஆசிரியரின் நல்லுள்ளத்தை விளக்குகின்றது.

செட்டிநாட்டுத் திருமணம். :-

பெயர்களில் இடங்களில் சம்பவங்களில் சொல்லும் முறையில் கதாசிரியர் தான் வாழ்ந்த ஊரினை மறக்காமல் பயன்படுத்தி இருக்கிறார். ‘லட்சுமணன் கோடு ‘ கதையில் வரும் மெய்யப்பன், இராமநாதன் என்ற பெயர்கள், ’சொர்க்க வாசல்’ கதையில் கூறப்படும் கோட்டையூரும், ’கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே’ கதையில் வரும் பாத்திரங்கள் சம்பவங்கள் பண்பாடு இடம் எல்லாமே கதை முழுமையும் செட்டிநாட்டினைப் பற்றியவை. மேலும் வேர்க்கதையில் அம்பலக்காரர் இருப்பதாகக் கூறப்படும் ஊரும் கோட்டையூரே.

முடிவில் தன் கருத்துக்களை ( மையக் கருத்தை ) விளக்கிக் கூறல் :-

கதையினை முடிக்கும்போது எப்போதும் தான் கூற வந்த கருத்தை – மையக் கருத்தை – நன்கு அழுத்தம் கொடுக்குமாறு மறுமுறை கூறி – கதையுடன் பொருத்திக் காட்டுவது அய்க்கண் அவர்களுக்குக் கை வந்த கலை. கதையின் முடிவில் அனைத்துச் சிறுகதைகளிலும் கதைக்கருவை விளக்கிக் கூறுகிறார்.

முன்னோக்கு உத்தி :- முன்னோக்கு உத்தியினை அனைத்துச் சிறுகதையிலும் பயன்படுத்தி இருக்கிறார். அனைத்துச் சிறுகதைகளிலும் நிகழந்தது நினைவுகூறல், ( முன்னோக்கு உத்தியினைச் ) சிறப்பாக அலுப்பு ஏற்படாமல் பயன்படுத்திப் வந்திருப்பது இவருடைய தனிச்சிறப்பு.

உபகதைகள் கூறல் :- சில உபகதைகளும் கூறித் தன்னுடைய கதைக்கருவினைப் பலப்படுத்துகின்றார். மேலும் அந்தாதி அமைப்புக்களும் கதையில் இடம்பெறுகின்றன. கதைக்குத் தேவையான அளவு மட்டுமே வர்ணனை , தேவையானவற்றை மட்டுமே கூறல் முதலியன இவர்க்குரியனவாகும்.

முடிவுரை:- இவ்வாறு அய்க்கண் அவர்களின் சிறுகதைகள் மேற்கூறப்பட்ட இந்த வகையான உத்திகளால் சிறப்புறுகின்றன.

டிஸ்கி :- இது கல்லூரிக் காலத்தில் எழுதப்பட்ட பதிவு :) 

7 கருத்துகள்:

 1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

  பதிலளிநீக்கு
 2. கல்லூரி காலத்திலேயே அழகாக ஆய்வு செய்து எழுதியிருக்கின்றீர்கள் சகோதரி..நல்லாருக்கு. அதான் இப்போதும் கலக்குகின்றீர்கள்! வாழ்த்துகள்!

  துளசிதரன், கீதா

  பதிலளிநீக்கு
 3. உங்களுடன் தொடர்ந்து வர வேண்டும் என என்னுகிறேன் சிறு கதை அய்கன் அவர்களின் பாங்கு எதார்த்தமாக படிக்கும் பொழுது கதைக்குள் கூட்டி செல்கிறார்

  பதிலளிநீக்கு
 4. உங்கள் வாசிப்பின் ஊக்கமும் கழிவும் கல்லூரி காலங்களிலேயே இருந்திருக்கின்றன. ஐட்டம் சிறுகதைகளை வாசிக்க வேண்டும் என்ற ஆர்வம் தோன்றுகின்றது ஆனால் நான் இதுவரை எதுவுமே வாசித்ததில்லை. இனிமேல் நிச்சயமாக எடுத்து வாசிக்கப் போகிறேன் நன்றி

  பதிலளிநீக்கு
 5. கதைகளை வாசித்து விட்டு அப்படியே விட்டு விட்டுப் போகாமல் அந்த கதைகளை பற்றி ச ஆழமாக சிந்தித்து நடத்துவது என்பது சிறப்பு

  பதிலளிநீக்கு
 6. நன்று அக்கா..கல்லூரியிலேயே இவ்வளவு ஆய்வு !! அருமைக்கா

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...