எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 17 அக்டோபர், 2018

பத்ரிக்கையாளர் ப. திருமலை அவர்களின் பார்வையில் பெண்மொழி.

பெண்மொழி ஒரு பார்வை.

//// பத்ரிக்கையாளர் ப திருமலை நான் மிக மதிக்கும் ஆளுமைகளுள் ஒருவர். இவரது கட்டுரைகளில் இருக்கும் முழுமைத் தன்மையும், நம்பகத்தன்மையும் , எந்த ஒரு தலைப்பிலும்  தகுந்த புள்ளி விவரங்களோடு பிரச்சனைகளை எடுத்துக் காட்டுவதும், ஆள்பவர்களுக்கு அஞ்சாமல் வெளிப்படுத்தும் நேர்மையான கருத்துக்களும் ஆச்சர்யப்பட வைப்பவை. அவர் இந்நூலைப் படித்து அதற்குச் சிறப்பளிக்கும் விதத்தில் விமர்சனம் அனுப்பி இருப்பது குறித்து மிகுந்த சந்தோஷம் ஏற்பட்டது. அதை உங்களுடன் பகிர்வதில் மகிழ்கிறேன். சிறப்பான விமர்சனத்துக்கு நன்றியும் மகிழ்ச்சியும் திருமலை சார். ///


பெண்களின் நிலை சற்று மேம்பட்டுள்ள இந்நாளிலும் பெண்களுக்கான அனைத்து உரிமைகளும், பாதுகாப்பும் கிடைத்துவிட்டதா என்றால் இல்லையென்றே சொல்லவேண்டிவரும். காரணம், அன்றாடம் நான் கேள்விப்படும், வாசிக்கும், பார்க்கும் நிகழ்வுகள் அதனை உணர்த்துகின்றன. பெண்களின் வலி, மகிழ்ச்சி, ஆசை, அபிலாஷை என பல்வேறு உணர்வுகளை இந்த சமூகம் முழுமையாக ஏற்றுக்கொள்வதுமில்லை. அங்கீகரிப்பதுமில்லை. ஆனால், "பெண்களை தெய்வமாகப் போற்றுகிறோம்.. தாயாக மதிக்கிறோம்" என்ற பீற்றலுக்கு மட்டும் குறைவைப்பதில்லை. இந்த சூழலில்தான் கவிதாயினி தேனம்மை லட்சுமணன் எழுதிய பெண்மொழி எனும் கட்டுரை நூலினை வாசிக்கும் வாய்ப்பு கிட்டியது. 

அது என்ன பெண்மொழி...உங்கள் தாய்மொழியை எப்படி கற்றுக்கொண்டீர்கள்? சின்னக் குழந்தையிலிருந்தே வீட்டில் உள்ளவர்களும் நண்பர்களும் பேசுவதைக் கேட்டுக் கேட்டு கற்றுக்கொண்டேன் என்பீர்கள். காதால் கேட்டும் வாயால் பேசியுமே நாம் பெரும்பாலும் மொழியைக் கற்றுக்கொள்கிறோம். மொழி என்பது மனிதனின் அறிவு நிலைப்பட்டுள்ளதை அடையாளப் படுத்துகிறது. அதே போன்று அறிவு நிலையின் மூலம் மொழியும் அடையாளப்படுகிறது. எத்தனையோ மொழிகளைக் கேட்டிருப்பீர்கள். அல்லது அறிந்திருப்பீர்கள். ஆனால், "பெண்மொழி" குறித்து அறிந்திருக்கிறீர்களா..? இது வரிவடிவமோ ஒலி வடிவமோ இல்லாத வருத்த வடிவம் கொண்ட மொழி.

பெரும்பான்மைப் பெண்கள் குடும்பம் சார்ந்து மட்டுமே இயங்குவதால் அவர்களின் கருத்துக்களும் அவர்களைச் சென்றடைய வேண்டிய கருத்துக்களுமாக பெண்மொழி எனும் இந்நூல் வெளிவந்துள்ளது. அடித்தட்டு, நடுத்தர, மேல்தட்டு இல்லத்தரசிகள் நிறைவேற்றும் சம்பளமில்லா உத்யோகத்தை இல்லத்தின் அரசியாக இருக்கிறேன் என்று பிரகடனப்படுத்துவது மட்டுமல்ல, அவர்களின் குழந்தைப்பேறு நலம், பூப்பெய்த குழந்தைகளின் உடல், மன நலம், வயதான பெண்களின் உடல் நலம் ஆகியன குறித்தும் இந்நூல் பேசுகிறது.

இல்லக் கடமைகளோடு வேலைக்கும் சென்றுவரும் பெண்களின் சுமையும் அதைப் பகிர்ந்தளித்து இலகுவாய் இருப்பது பற்றியும், பணியிட அரசியல், பாலியல் பிரச்சனைகளிலிருந்து வெளிவருவது பற்றியும் கூறுகிறது ஒரு கட்டுரை அலசுகிறது.

வரதட்சணையின் பொருட்டும், நிலவுடைச் சமூகத்தின் அடிமைத்தனத்தின் சின்னமாகவும் நிகழும் பெண் சிசுக்கொலையையும், கருக்கொலையையும் தடுக்கப்படவேண்டியதன் அவசியத்தை ஒரு கட்டுரை சொல்கிறது. மாமியார் மருமகள் உறவுமுறை இல்லறத்தில் பெண்களுக்கிடையேயான மெல்லிய அரசியலைப் பேசுவதுபோல் ஐந்தாவது வர்ணத்தின் முன்னேற்றம் சமூகத்தில் பகடைக்காய்களான பெண்கள் நிலைபற்றிப் பேசுகிறது.

 பெண்ணியமும் பெண்களும், உலகளாவிய குடும்ப வன்முறையில் ராணிகளும் அடிமைப்பெண்களாய் அவதியுறுவதை இரு கட்டுரைகள் பதிவு செய்கின்றன.

நாட்டு விடுதலைக்குப் பாடுபட்டு எதிர் எதிர் தேசங்களால் தண்டிக்கப்பட்ட பெண்களையும் போர் சமயங்களில் நாட்டுக்காகப் பாடுபட்ட பெண் தியாகிகளையும் உறைக்கும்படி உரைக்கிறது ஒரு கட்டுரை.

பாலியல் பலாத்காரத்திலும் அமில வீச்சிலும் அழிந்து கரைந்து போன பெண்களுக்காகக் குரல் கொடுக்கிறது ஒரு கட்டுரை. அதிலும் பச்சிளம் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் நடவடிக்கைகளைப் பிட்டு வைக்கும் கட்டுரை அதிர்ச்சி ரகம்.

நிதி நிறுவனங்களில் பணம் கட்டியும், போலி சாமியார்களின் ஆன்மீக அருளுரைகளில் ஏமாறும் பெண்களுக்கு ஆலோசனை சொல்லும் விதமாக ஒரு கட்டுரையும் இருப்பது வித்யாசம்.

பெண்களின் உடை பற்றிய பழமைவாதக் கற்பிதங்களைத் தகர்க்கிறது உடை அரசியலும் உடல் அரசியலும் என்ற கட்டுரை. இளம் குழந்தைத் திருமணங்களைத் தடுக்கவேண்டும் என்ற விழைவைச் சொல்கிறது திருமண இயந்திரங்களும் தீப்பாய்ந்த அம்மன்களும்.

குடி குடியைக் கெடுக்கும் என்பதைப் புள்ளி விவரங்களோடு விவரிக்கிறது ஒரு கட்டுரை. இன்னொன்று கைபேசி மற்றும் இணையப் பயன்பாட்டிலும் பெண்கள் எடுக்க வேண்டிய நிலைப்பாட்டை வலியுறுத்துகிறது.

இந்த கட்டுரை தொகுப்பின் அவசியமென்ன என்ற கேள்வி எழலாம். மூன்றாவது ஆயிரமாண்டில் அடியெடுத்து வைத்துப் பயணித்துக் கொண்டிருக்கும் அதிநவீன உலகின் சாதனைகள் பட்டியலிட முடியா அளவிற்கு விண்ணையும் தாண்டிச் சென்று கொண்டிருக்கின்றன.  மனித வாழ்க்கைத் தரம் பல்தரத் துறைகளில் உயர்ந்து, வறுமை, நோய் போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் முயற்சிகளில் உலக சமுதாயம் ஓரளவு முன்னேற்றத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன. ஆனால் தொன்றுதொட்டே பெண்களுக்கான பாதுகாப்பு மற்றும் உரிமைகள் சார்ந்த வளர்ச்சியில் நீடித்த நிலையான தேக்கம் இருந்து கொண்டே இருக்கிறது. சர்வதேச அளவில் மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் பெண் இன அனுதாபிகளின் சமுதாய விழிப்புணர்வு முயற்சிகள் மற்றும் பாதுகாப்பு குறித்த செயல்பாடுகள் பெண்கள் மீதான வன்முறைகளைத் தடுப்பதில் பெரும்பாலும் தோல்வியைத்தான் தழுவிக்கொண்டிருக்கின்றன. எனவே பெண் குறிந்தான கட்டுரைகள் இன்றைய சூழலில் மேலும்மேலும் தேவை.

இந்த கட்டுரைகளெல்லாம் ஆண்களுக்கு எதிரான கட்டுரைகள் அல்ல. ஆண்களோடும் சமூகப்போக்கோடும் இயைந்து நல்லறம் நடத்தி வரும் பெண்களின் மனப்போக்கையும், விழைவுகளையும், தங்கள் நேர்மையான குறிக்கோள்களையும் சமூகத்துக்கு உரத்துச் சொல்லும் கட்டுரை தொகுப்பு நூல். தனது ஆழ்ந்த அனுபவம், வாசிப்பில் தேடல், வார்த்தைகளில் வலிமையோடு வலம் வருபவர் தேனம்மை லட்சுமணன் அவர்கள். தனது வைரவரிகளால் வியக்கவைக்கும் அவர், இந்த நூல் வலிக்க வைத்திருக்கிறார். பெண்களுக்காக பெண்கள் பிரச்சனை பற்றி ஒரு பெண் எழுதிய இக்கட்டுரை நூலை வாசிக்கும் பெண்கள், வாசித்து முடித்தவுடன் நிமிர்ந்து உட்காருவார்கள் என்பது திண்ணம். தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துகள்..

ப. திருமலை
பத்திரிகையாளர், 
ஆசிரியர், நமது மண்வாசம்.

பெண்மொழி நூல் கிடைக்குமிடம் :-  ( விலை ரூ 60/- ) 

REFLECTIONS BOOKS ( பட்டறிவு பதிப்பகம் ) ,
1ஏ, வைத்தியநாதபுரம் கிழக்கு,
கென்னட் குறுக்குத் தெரு,
மதுரை - 625 016. 
தமிழ்நாடு , இந்தியா. 

தொலைபேசி எண் :- 91452  2302566. 

3 கருத்துகள்:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு
  2. அருமையான மதிப்பீடு. நூலை வாங்கிப்படிக்கும் ஆர்வத்தினை உண்டாக்கிய பத்திரிக்கையாளருக்கு நன்றி.

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...