எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 25 அக்டோபர், 2018

கணிகண்ணனுடன் சென்ற மணிவண்ணன். தினமலர். சிறுவர்மலர் - 40.

கணிகண்ணனுடன் சென்ற மணிவண்ணன்.

ஆசிரியர் ஊர் மாறிப்போகிறாரே என்று மாணவர்கள் வருந்துவது பழக்கம். ஆனால் இங்கே ஒரு மாணவன் ஊர் விட்டுப் போகிறாரே என்று அவரது குரு வருத்தப்பட்டு அவருடன் செல்கிறார். செல்பவர் சும்மாவா செல்கிறார் அந்த ஊரில் பள்ளி கொண்ட மணிவண்ணனையும் தன் பாம்பணையைச் சுருட்டிக் கொண்டு பின் வரப் பணிக்கிறார். இதெல்லாம் எங்கே நடந்தது அப்படி தன் குருவையும் தெய்வத்தையும் கவர்ந்த கணிவண்ணன் யார் ? அவனுடன் சென்ற மணிவண்ணன் யார் என்று பார்ப்போம் குழந்தைகளே.
திருமழிசை என்ற ஊரில் பார்க்கவர் என்ற முனிவர் மகப்பேறு வேண்டி யாகம் புரிந்து வந்தார். அதன் பயனாக அவரது மனைவிக்கு ஒரு ஆண்குழந்தை பிறந்தது. அக்குழந்தை வளர்த்தியற்ற குறை உருவாக இருந்ததால் அவரது பெற்றோர் அங்கேயே ஒரு பிரம்புத் தூற்றின் கீழ் விட்டுச் சென்றுவிடுகிறார்கள்.

ஆனால் அக்குழந்தை முழுமையடைந்து அழகான சிசுவாகி அழத்தொடங்குகிறது. பிரம்புத்தொழில் செய்யும் திருவாளனும் பங்கயச்செல்வியும் பிரம்பு எடுக்க அப்பக்கம் வர அச்சிசுவின் குரல் அழைக்கிறது. அவர்கள் இருவருக்கும் பிள்ளைப்பேறு இல்லை. எனவே அக்குழவியை அணைத்து இல்லத்துக்கு எடுத்துச் சென்று வளர்க்கிறார்கள்.
அக்குழந்தைக்கு அவ்வூரில் இருந்த முதிய தம்பதியர் பசுவின் பாலை வழங்கி வருகிறார்கள். இக்குழந்தை திருமழிசையில் பிறந்து பெருமாளின் மேல் அளப்பரிய பக்தி கொண்டதால் திருமழிசை ஆழ்வார் என அழைக்கப்பட்டார்.
இக்குழந்தைக்குப் பசுவின் பால் கொடுத்த தம்பதிகளுக்கும் சிறிது காலத்தில் கணிகண்ணன் என்றொரு மகவு பிறந்தது. அவன் பிறந்தது முதலே திருமழிசை ஆழ்வாரின் மேல் மிகுந்த பக்தியும் ப்ரேமையும் கொண்டு அணுக்கத் தொண்டனாக விளங்கினான்.
இவர்கள் இருவரும் காஞ்சி மாநகருக்குச் சென்று அங்கே திருவெஃகா என்னும் ஊரில் தங்கி இறைப்பணி ஆற்றித் தமிழ்ப் பாசுரங்கள் இயற்றி வந்தார்கள்.
அந்த ஊர் மன்னனின் மனைவி இக்கோயிலில் இறைத்தொண்டும் உழவாரப்பணியும் ஆற்றி வந்ததால் இறைவன் மனமிரங்கி திருமழிசை ஆழ்வார் மூலமாக அவளுக்கு என்றும் இளமைகுன்றாத மேனி வனப்பைக் கொடுத்தார் என்று கூறுகிறாள். இதைக்கேட்ட மன்னனுக்குத் தானும் தன் மனைவி போல் என்றும் இளமையோடு இருக்க எண்ணம் ஏற்படுகிறது.
இளமை வரம் கொடுத்தவர் யார் என்று மன்னன் வினவ ராணி தம்  அரண்மனைக்குத் தினமும் உஞ்சவிருத்திக்கு வரும் கணிகண்ணனின் குருவே காரணம் என்கிறார்.
மறுநாள் அரண்மனைக்கு உஞ்சவிருத்திக்கு வரும் கணிகண்ணனிடம் மன்னன் கேட்கிறான்.” எனக்கும் என்றும் குன்றா இளமையோடு இருக்கும் வரம் வேண்டும்.”
கணிகண்ணன் பதில் அளிக்கிறார். “ அந்த வரத்தை என் குருதான் அளிக்கமுடியும். அதுவும் ராணியின் பக்தியும் சேவையும்தான் அதை சாதித்தது. அது சாதாரணர்களுக்குக் கிடைக்காது “
ராஜா கோபமடைகிறார். , ”இந்த நாட்டு ராஜா நான். எனக்குக் கிடைக்காதா போகட்டும் நீங்கள் பாடல்கள் நன்றாக எழுதுவீர்களாமே . என்னைப் பற்றிப் பாடுங்கள் “ என்று கேட்கிறான்.
கணிகண்ணன் அதற்கும் அஞ்சாமல் “ நாராயணைப் பாடிய வாயால் நரனைப் பாட மாட்டேன் , மணிவண்ணனைப் புகழ்ந்த நாவால் மனிதர்களைப் புகழமாட்டேன் “ என்கிறான்.
“ஓஹோ அப்படியா விஷயம், இந்த கணிகண்ணனை காராகிரகத்தில் இடுங்கள். இல்லாவிட்டால் சங்கிலி மாட்டி நாடு கடத்துங்கள். “ என உத்தரவு இடுகிறார் மஹாராஜா.
என்ன கொடுமை. கையையும் காலையும் சங்கிலியால் கட்டி தனது பிரியத்துக்குரிய கணிகண்ணனை அரண்மனை சேவகர்கள் இழுத்துக்கொண்டு வருவதைப் பார்த்தார் திருமழிசை ஆழ்வார். அவர் மனம் வருந்தியது.
அவனைக் கோட்டைச் சுவற்றுக்கு அப்பால் கொண்டு போய் நாட்டைவிட்டுக் கடத்தி விட்டுத் திரும்பினார்கள் சேவகர்கள். அல்லும் பகலும் மணிவண்ணனைப் பாடிய கணிகண்ணனுக்கே இக்கதி என்றால் எனக் கொந்தளித்த திருமழிசை ஆழ்வார் விடு விடுவென மணிவண்ணன் சந்நிதிக்குச் சென்றார்.
“ உன்னையே பாடி வாழ்ந்த பக்தனான கணிகண்ணன் நாட்டைவிட்டுப் போகிறான், அவனுடன் நானும் போகிறேன். இனி உனக்கிங்கு என்ன வேலை. பாம்புப் படுக்கையில் துயில்கொண்டது போதும். எங்களுக்கொரு அநீதி என்றால் உன்னையும் சார்ந்ததுதான் அது. எனவே  நீயும் உன் பாம்பணையைச் சுருட்டி எடுத்துக் கொண்டு எங்களோடு வா ” என்று கூறிவிட்டு வேகமாக வெளியே சென்று அரண்மனையில் மதிலைத் தாண்டுகிறார்.
மணிவண்ணனும் திருமழிசை ஆழ்வாரின் வேண்டுகோளுக்கிணங்க சடாரென எழுந்து தன் பாம்புப் படுக்கையைச் சுற்றிக் கொண்டு ஆழ்வாருடனும் கணிகண்ணனுடனும் நகரை விட்டு வெளியேறுகிறார்.
ஆண்டவன் போனபிறகு அந்நகரம் ஒளியிழந்தது. நாட்டில் துர்ச்சகுனங்கள் தோன்றின. கோயிலில் கடவுள் திருவுருவைக் காணாத பக்தர்களும் மக்களும் அரண்மனைக்கு ஓடி வந்தார்கள். மணிவண்ணன் இல்லாத ஊரில் தாங்களும் இருக்கமாட்டோம் எனக் கதறி அழுதார்கள்.
விஷயத்தின் வீர்யத்தைப் புரிந்த மன்னன் செய்வதறியாது திகைத்தான். தன் பிழையை உணந்தான். சேவகர்களை அழைத்துத் தேடச் சொன்னான். தானும் நகர எல்லை வரை ஓடித் தேடினான். அவன் புத்தி பேதலித்தது. ஒரு வழியாக கணிகண்ணனையும், அவனைப் பின் தொடரும் அவனது குரு திருமழிசை ஆழ்வாரையும், அவர்கள் இருவரின் பின்னும் தொடர்ந்து  பாம்பணையைச் சுருட்டிக் கையில் வைத்துக் கொண்டு செல்லும் மணிவண்ணனையும் பார்த்தான்.
”மன்னித்துவிடுங்கள்” என்று மூவரின் கையிலும் காலிலும் விழுந்து கெஞ்சிக் கதறினான். மனமிரங்கிய திருமழிசை ஆழ்வார், ” மணிவண்ணா மன்னன் மனம் திருந்திவிட்டான். நானும் கணிகண்ணனும் காஞ்சி திரும்புகிறோம். நீயும் திரும்பி வந்து உன் பாம்பணையை விரித்து சயனம் கொள் “ என்கிறார்.
இப்படி ஒரு சீடனுக்காக மன்னன் மன்னிப்புக் கேட்டது கூடப் பெரிதில்லை.  குருவும் கடவுளும் கூட அவனைப் பின் தொடர்ந்து சென்றார்களே அதுவன்றோ உண்மையான குருசிஷ்ய உறவு.

டிஸ்கி:-  இந்தக் கதை இதிகாச புராணக் கதைகள் என்ற தலைப்பில் 12. 10. 2018  தினமலர் சிறுவர்மலர் இதழில் இடம்பெற்றுள்ளது. நன்றி தினமலர் சிறுவர் மலர் & தேவராஜன் ஷண்முகம் சார்

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...