புதன், 8 பிப்ரவரி, 2017

வேஷ்டி ஒண்ணும் வேஸ்ட் இல்லீங்க.( நமது மண்வாசம் இதழில் )


வேஷ்டி ஒண்ணும் வேஸ்ட் இல்லீங்க.

ஆண்கள் அணியும் வேஷ்டி என்பது நம் மரபுசார்ந்த உடை.  தறியில் நீளமாக  செவ்வகவடிவில் நெய்யப்பட்டு வெட்டப்படுவதால் இதற்கு வேட்டி என்று பெயர். பொதுவாக ஆண்கள் இடுப்பைச் சுற்றி அணியும் ஆடைக்கு வேட்டி என்று பெயர். ஆனாலும் கேரளப் பெண்கள் அணியும் இரட்டை முண்டு என்பதும் இரண்டு வேஷ்டிகளை இடுப்பில் ஒன்றும் மேலாடையாக ஒன்றும் அணிந்து கொள்வதே.

கிமு  5 ஆம் நூற்றாண்டிலேயே நம்முடைய ஆண்கள் வேஷ்டிதான் உடுத்தி வந்தார்கள். மாபெரும் மன்னர்கள்கூட இடையில் கச்சைகட்டி வேட்டியை பஞ்சகச்ச பாணியில் உடுத்தியிருப்பார்கள். இதுவும் இந்தியத் திருநாடு முழுவதும் வெவ்வேறு பாணியில் உடுத்தப்படும் உடைதான்.

சங்க இலக்கியங்களின் சான்று ஆவணமாகத் திகழும் சிவகங்கை மாவட்டம் கீழடி கிராமத்தில் நடைபெற்ற தொல்லியல் துறை நடத்திய அகழாய்வின் முடிவில் பல்வேறு பொருட்களோடு நூல் நூற்கும் தக்ளியும் கிடைத்திருக்கிறது. இதுவே அம்மக்கள் நூல் நூற்று ஆடை நெய்து அணிந்திருப்பதைக் காட்டுகிறது.


புட்டகம் பொருந்துவ புனைகுவோரும்” – என்று பரிபாடலும்
நோக்கு நுழை கல்லா நுண்மை யழக்கனிந்து அரவுரி யன்ன அறுவை” –   என்று பெரும்பாணாற்றுப்படையும் குறிப்பிடுகின்றன.

பட்டினும் மயிரினும் பருத்து நூலினுங்
கட்டுனுண்வினைக் காருக ரிருக்கையும்
பாலாவி யன்ன ஆடை
கிழியினுங் கிடையினும் தொழில்பல பெருக்கியோர்

--என்று சிலப்பதிகாரம் பாலாவியென மெல்லிய ஆடை நெய்யப்பட்டதைக் கூறுகிறது. அதை மடித்தால் ஒரு மோதிரத்தில் அடக்கும் அளவு மெல்லியதாய் இருந்ததாம்.

பல நூற்றாண்டுகளாக நம் முன்னோர்கள் அணிந்த வேட்டியை வெறுத்து ஆங்கிலேயர் வருகைக்குப் பின் பாண்ட் போடுவதே ஃபேஷன் என்றாகிவிட்டது. நம் நாட்டு தட்ப வெப்பத்துக்கும் சீதோஷ்ணத்துக்கு ஏற்ப வேஷ்டி அணிவதே நம் உடல் நிலைக்கு ஏற்றதாகும். பொங்கல் தினத்தை ஒட்டிஜனவரி 6 அன்று-  வேட்டி டே என்றெல்லாம் கொண்டாடப்படவேண்டிய அவசத்தில் நாம் இன்று இருக்கிறோம்.

டோதி , தவுத்தி, தவுத்தா, தோத்தியு, சூரியா, துட்டி, துத்தி, சத்ரா, தௌத்ரா, கச்சே பான்சே,தோத்தர்,அங்கோஸ்தர், புத்வே, முண்டு, தோத்தி, லாச்சா, பன்ச்சா, லாச்சா, மர்தானி,வேட்டி & வேஷ்டி என அழைக்கப்படுகிறது. புராணகாலத்தில் உத்தரீயம், பீதாம்பரம் என்றும் அழைக்கப்பட்டது.

காவி நீலம் கருப்பு, சிவப்பு நிற வேட்டிகளைக் கோயிலுக்குச் செல்பவர்கள் அணிகிறார்கள். நான்குமுழம், எட்டுமுழம் வேட்டிகள் உண்டு. கரை வேட்டிகளைக் கட்சிக்காரர்கள் அணிகிறார்கள்.வேளாண் மக்கள் விவசாயத்தின்போது கட்டாயம் வேட்டிதான் அணிந்திருப்பார்கள். வேஷ்டி கட்டி வந்தால் சில கிளப்புகளில் அனுமதி இல்லை என்பது இன்றளவும் ஆச்சர்யப்படத்தக்க உண்மை.

இந்திய மக்களின் தினசரி உடையாயிருந்த வேஷ்டியை இப்போதெல்லாம் கோயிலுக்குச் செல்லும்போதும், திருமணம்,  பண்டிகைகள் போன்ற விசேஷ வைபவங்களின் போதும்தான் அணிகின்றார்கள். இந்தியர்கள் மட்டுமல்ல ஆப்ரிக்காவின் செமாலியர் மற்றும் அபார் இனத்தவர்களும் வேட்டி அணிகிறார்க்ள். அந்த வேட்டிக்கு மகாவிசு என்று பெயர்.

சரிகை வேஷ்டி, கெண்டை வேஷ்டி, மயில்கண் வேஷ்டி ,டயமன் கரை வேட்டி, மாறுகரை வேட்டி, மஸ்லின் வேஷ்டி, பட்டு வேஷ்டி, பருத்தி வேஷ்டி, பாலியெஸ்டர் வேஷ்டி, கைத்தறி வேஷ்டி, பாம்பே மில் வேஷ்டி, நைஸ் மல் வேஷ்டி எனத்தான் கேள்விப்பட்டிருப்போம். இன்றைய தினத்தில் வெல்க்ரோ வேட்டிகள் என்று கட்டிக்கோ, ஒட்டிக்கோ என ஒட்டிக் கொள்ளும் வேட்டிகளும் வந்துவிட்டன.


ஓரிரு இடங்களில் வேஷ்டியையே தார்ப்பாய்ச்சியும் இன்னும் சில இடங்களில் பஞ்சகச்சமாகவும் கட்டும்பழக்கம் இருக்கிறது. பஞ்சகச்சம் என்பது ஐந்து இடங்களில் செருகி உடுத்தும் வேட்டியாகும். வலதுஇடுப்பு, இடது இடுப்பு, பின்புறம், தொப்புள் பகுதியில் இரண்டு எனச் சொருகிக் கட்டிக் கொள்வார்கள்.
சில பெரியவர்கள் வேட்டி அணிந்து இடுப்பைச் சுற்றிப் பட்டை பெல்ட் போட்டு இறுக்கிக் கட்டுவதும் உண்டு. ஜைனர்கள் பூஜை செய்யும்போது அணிந்து கொள்வார்கள். வேஷ்டி அணியும் பாரம்பரியத்தைக் காப்பவர்கள் இன்றும் அரசியல்வாதிகள்தான் என்று சொன்னால் அது மிகையில்லை.

அறிவியல்:-

நம் பாரம்பரிய உடையான வேஷ்டியை இடுப்பில் அணிவதால் மூலாதாரச் சக்கரத்திற்கு சக்தி கிடைக்கிறது. சகஸ்ராரச் சக்கரத்தையும் பாதுகாக்கிறது. உடலைச் சுற்றி ஒரு கவசம்போல அமைகிறது. ரஜோ தமோ என்னும் ராட்சச தாமச சக்திகளை நீக்கி சாத்வீகம் என்னும் ஒளியை உண்டாக்குகிறது. உடலுக்கு வசதியாக இருப்பதால் மனதிலும் உடலிலும் ஏற்படும் எதிர்மறைச் சக்திகளை நீக்கி நேர்மறைச் சிந்தனைகளை உருவாக்குகிறது. மனம் மென்மையும் அமைதியும் பெறுகிறது. உற்சாகத்தை உருவாக்குகிறது. சுற்றுச்சூழல் மாசுபாட்டைத் தவிர்க்கிறது. வேட்டி அணிவது மரபு சார்ந்த கம்பீரத்தையும் அழகையும் கொடுக்கிறது.

வெப்பம் அதிகம் கொண்ட நம்நாட்டின் சீதோஷ்ணத்திற்கு ஏற்ப பருத்தியில் தயாரிக்கப்பட்ட வெள்ளை வேட்டிகள் அணிவதே சிறந்தது. வெள்ளை நிறம் சூரியனின் வெப்பத்தை ஈர்ப்பதில்லை. எனவே உடல் சூடாவதில்லை. அதிகம் வியர்ப்பதுமில்லை. நம் நாட்டின் தட்ப வெப்பத்துக்கு ஏற்ப உடலுக்குக்குக் குளிர்ச்சியையும் அணிவதற்கு எளிதாகவும் இருக்கும் வேஷ்டியே ஆண்கள் அணிய என்றும் சிறந்த உடையாகும்

ிஸ்கி :- ஜி 2017 மண்வாசத்ில் வெளியானு. 

6 கருத்துகள் :

Dr B Jambulingam சொன்னது…

நம்மை பெருமைப்படவைக்கும் பண்பாடு. கட்டுரைக்கு வாழ்த்துகள்.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமை... 100% உண்மை சகோதரி...

G.M Balasubramaniam சொன்னது…

கர்நாடகாவில் வேட்டி கச்சம் எனப்படுகிறது பதிவர் ஒற்றுமை ஓங்குக

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

வேட்டி ஆராய்ச்சி (வெட்டியாக இல்லாமல் ஹிஹிஹி) மிக மிக அருமையான தொகுப்புக் கட்டுரை. பல அறியாதவை. உங்களை நினைத்து மிகவும் வியக்கிறோம் சகோ/தேனு!!!

கீதா: இலங்கையில் கூட மக்கள் வேட்டி போல முண்டு ஜாக்கெட் அணிவதுண்டு இல்லையா?

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி ஜம்பு சார்

நன்றி டிடி சகோ

நன்றி பாலா சார்

நன்றி துளசி சகோ. ஆம் என நினைக்கிறேன் கீத்ஸ். சரிவர தெரியவில்லை :)

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...