செவ்வாய், 7 பிப்ரவரி, 2017

வீராங்கனை கிட்டூர் ராணி சென்னம்மா. :- கோகுலம் - விடுதலை வேந்தர்கள் -1

வீராங்கனை கிட்டூர் ராணி சென்னம்மா. :-

நமது நாடு சென்ற நூற்றாண்டுகளில் ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டுக் கிடந்தது. அப்போது சுதந்திரம் வேண்டி சாமான்யர்களும் புரட்சியாளர்களும் போராடியது போல சாம்ராஜ்யம் ஆண்டவர்களும் அந்நியரின் ஆக்கிரமிப்புக்கு அடிபணியாமல் போராடினர்.  அவர்களுள் சிலரின் வீர சரித்திரத்தைக் காண்போம்.

கர்நாடகாவில் கிட்டூர் என்ற ஊரின் பேரைக் கேட்டாலே நம் நாட்டை ஆக்கிரமிக்க முயன்ற ஆங்கிலேயர்கள் கிடுகிடுத்தது ஒரு காலம். மாபெரும் ராஜாக்களுக்கு இணையாக ஆங்கிலேயர் ஆட்சிக்கு அடிபணியாத வீர ராணிகள் இந்தியாவில் வாழ்ந்திருக்கிறார்கள். ஜான்சி ராணி லெக்ஷ்மிபாய், ராணி ஜல்காரிபாய், ராணி அப்பக்கா தேவி சௌதா, ராணி அவந்திபாய், வீரமங்கை ராணி வேலு நாச்சியார் என்ற வீர ராணிகளின் வரிசையில் கிட்டூரை ஆண்ட ராணி சென்னம்மா மிக முக்கியமானவர்.  

முதலில் கர்நாடகத்தைச் சேர்ந்த ராணி சென்னம்மாவைப் பற்றிப் பார்ப்போம். இவர் விடுதலைப் போராட்ட வீராங்கனைகள் அனைவருக்கும் முன்னோடி.. பதினேழாம் நூற்றாண்டிலேயே ஆங்கிலேயருக்குக் கப்பம் கட்டுவதை எதிர்த்துப் போரிட்டு வீரமரணம் அடைந்தவர்.

ஆங்கிலேயருக்கு எதிரான போரில் இவர் முதன் முதலில் அடைந்த வெற்றியை இன்றும் கிட்டூரில் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 22 முதல் 24 வரை உத்சவமாகக் கொண்டாடுகிறார்கள். 
 
இவர் 1778 ஆம் ஆண்டு அக்டோபர் 23 ஆம் தேதி கர்நாடக மாநிலத்தில் உள்ள பெல்காம் ராஜ்ஜியத்துக்கு அருகில் உள்ள ககதி என்ற ஊரில் பிறந்தார். சிறுவயதிலேயே ஆண்களுக்கு நிகராக வில்வித்தை, வாள் வீச்சு, குதிரையேற்றத்தில் தேர்ச்சி பெற்றார். சமஸ்கிருதம், கன்னடம், மராட்டி, உருது ஆகிய பல்மொழிகளையும் கற்றுத் தேர்ந்தவர். 

பதினைந்து வயதில் தேசாய் குடும்பத்தைச் சேர்ந்த கிட்டூர் ராஜா மல்லஸர்ஜாவுடன் இவருக்குத் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகன் பிறந்தார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக 1816 இல் கணவர் இறந்தார். அடுத்து 1824 இல் மகனும் இறந்தார். அதன்பின் இவர் 1824 இல் தனது உறவினரில் சிவலிங்கப்பா என்பவரைத் தனது மகனாகத் தத்தெடுத்து கிட்டூருக்கு அரசனாக்கினார். 

அன்றைய காலகட்டத்தில் இந்தியாவை ஆக்கிரமித்திருந்தது பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி.  இம்மாதிரி வாரிசு தத்து எடுத்தல் செல்லாது என உச்சபட்ச அதிகாரத்துடன் அறிக்கை வெளியிட்டிருந்தது. சிவலிங்கப்பாவை நாடு கடத்தும்படி உத்தரவிட்டிருந்தது. ஆனால் ஆங்கிலேயரின் கெடுபிடியான வரிவசூலில் அதிருப்தியடைந்திருந்த ராணி சென்னம்மா இதை ஏற்கவில்லை. 

மிகவும் செழிப்பமாக இருந்த கிட்டூர் ராஜ்ஜியம் ஆங்கிலேயர்களின் கண்ணை உறுத்தியது. எனவே அதை ஆங்கிலேயர்கள் முற்றுகை இட்டனர். கிட்டூர் ராஜ்ஜியத்தின் நலனை உத்தேசித்துப் போரை நிறுத்தும்படி பம்பாய் பிரசிடென்சியில் லெஃப்டினெண்ட் கவர்னராய் இருந்த மவுண்ட்ஸ்டூவர்ட் எல்பின்ஸ்டோனிடம் ராணி சென்னம்மா கோரிக்கை விடுத்தும் அவர் செவிசாய்க்கவில்லை.

கிட்டத்தட்ட அந்தக் காலத்திலேயே பதினைந்து லட்சம் ரூபாய் பெறுமானமுள்ள நகைகள் அடங்கிய கருவூலத்தைப் பறிமுதல் செய்வதே ஆங்கிலேயரின் நோக்கம். நாட்டையும் செல்வத்தையும் காப்பாற்ற ராணி சென்னம்மாவே போர்க்கோலம் பூண்டார். தனது படைகளை வீரத்துடன் வழி நடத்தி மிகவும் தீரத்துடன் போரிட்டார். 

அக்டோபர் 1824 இல் 20,797 வீரர்களுடனும், 437 துப்பாக்கிகளைக் கொண்டும் நவீன யுத்தத்தை நிகழ்த்தியது ஆங்கிலப் படை. இருந்தும் முதல் சுற்றுப் போரில் ஆங்கிலப்படை தோற்று ஓடியது. கலெக்டர் ஜான் தாக்கரே கொல்லப்பட்டார். ராணியின் படையைச் சேர்ந்த லெஃப்டினெண்ட் அமெத்தூர் பாலப்பா என்பவர்தான் பிரிட்டிஷ் படையை ஓட ஓட விரட்டினார். 

சர் வால்டர் எலியட், மிஸ்டர் ஸ்டீவன்சன் ஆகிய இரண்டு பேரைப் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றது ராணியின் படை. போர் நிறுத்தம் செய்வதாக ஆங்கிலேயப் படைத்தளபதி சாப்ளின் ஒப்புக் கொண்டதும் இருவரையும் விடுவித்தார். ஆனால் சாப்ளின் இன்னும் அதிகப் படையுடன் வந்து கிட்டூரைத் தாக்க பன்னிரெண்டு நாட்கள் நீடித்தது இந்தப் போர். 

அதிக வீரர்கள், நவீனப் போர்க்கருவிகள், நயவஞ்சகம் கொண்டு ஆங்கிலேயர் போரிட்டதால் கிட்டூர் ராஜ்ஜியம் வீழ்ந்தது. ராணி சிறைப்பிடிக்கப்பட்டு பைல்ஹோங்கல் சிறையில் வைக்கப்பட்டார். ஆனாலும் அவரது விசுவாசத் தளபதி சங்கொலி ராயண்ணா ராணியை விடுவிக்கக்  கொரில்லாத் தாக்குதல் நடத்தினார். ஆனால் அவரும் கைது செய்யப்பட்டுத் தூக்கிலிடப்பட்டார். 

வீராங்கனை ராணி சென்னம்மா  ஃபிப் 21, 1829 இல் தனது 51 ஆவது வயதில் பைல்ஹோங்கல் சிறையில் மரணமடைந்தார். விடுதலைப் போராட்டத்திற்கு முதன்முதலில் வித்திட்ட ராணி இவர் .சுதந்திரப் போராட்ட இயக்கத்தின் வீரச்சின்னமாகவும் கொண்டாடப்படுகிறார். 

கர்நாடக கிட்டூர் கிராம மக்கள் இவரைப் வீரப்பெண் கடவுளாகவே பார்க்கிறார்கள். இவரைப்பற்றிப் பாடப்படும் பாலட், லாவணி, ஜிஜி எனப்படும் கிராமியக் கதைப்பாடல்கள் இவரது பெருமையைப் பறை சாற்றுகின்றன. 


11 செப்டம்பர் 2007 இல் பாராளுமன்ற வளாகத்தில் ஜனாதிபதி ப்ரதீபா பாட்டில் ராணி சென்னம்மாவின் வீரத்திருவுருவச் சிலையைத் திறந்துவைத்தார். பெங்களூரிலும் கிட்டூரிலும் இவ்வீரத்திருமகளுக்குச் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன.

டிஸ்கி:- கோகுலத்தில் சென்ற ஓராண்டாக குழந்தைகளுக்கேற்ற சத்துணவு வெளியானது. அதற்கு சில வாசகர்கள் கடிதங்களும் பாராட்டி வந்தன. அத்திப்பழ அல்வாவை பாராட்டிய வேம்பார் பொ. ஜெனிட்டா அவர்களுக்கு நன்றி !. வாய்ப்புக்கு நன்றி கோகுலம். ! 


6 கருத்துகள் :

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

வீரப்பெண்மணியை வணங்குகிறேன்...

G.M Balasubramaniam சொன்னது…

கிட்டூர் ராணி சென்னம்மாவின் கதைக்கு நன்றி

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

புதியதோர் வரலாறு! மிக்க நன்றி இங்கு பகிர்ந்து கொண்டதற்கு.கோகுலத்தில் வெளி வருவதற்கு வாழ்த்துகள்!

வெங்கட் நாகராஜ் சொன்னது…

பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

Thenammai Lakshmanan சொன்னது…

நானும் வணங்குகிறேன் டிடி சகோ

நன்றி பாலா சார்

நன்றி துளசி சகோ !

நன்றி வெங்கட் சகோ

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...