எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 18 பிப்ரவரி, 2017

சாட்டர்டே ஜாலி கார்னர் - ஆகாயகாதலன் தேவராஜன் ஷண்முகம். :)

முகநூல் நண்பர் தேவராஜன். எம்.ஏ. தமிழ்இலக்கியம் பயின்றவர். . பூர்வீகம் நாகப்பட்டினம் மாவட்டம்- திருக்கண்ணபுரம். வசிப்பது காஞ்சீபுரம். 17 ஆண்டுகள் பத்திரிகைப்பணி. 500க்கும் அதிகமான கட்டுரைகள், பேட்டிகள், சிறுகதைகள், கவிதைகள் பிரசுரம். அச்சு புத்தகங்கள் 10 மற்றும் மின்புத்தகங்கள் 10 வெளியீடு என்று பிரமிக்க வைக்கிறார். 

தினமலரில் ஃபேஸ்புக் பிரபலங்களின் கதைகள் வெளிவரக் காரணமாயிருந்தவர். ( அதுல நாமளும் ஒரு ஆளுல்லா :) 

இடையறாத பத்ரிக்கை & எழுத்துப் பணியில் ஈடுபட்டிருக்கும் அவரிடம் சாட்டர்டே ஜாலிகார்னருக்காக ஏதும் எழுதித்தரும்படிக் கேட்டிருந்தேன். அவர் வித்யாசமாக ஆகாயம் பத்தி எழுதி இருந்தார் !. 

நானும் இதுபோல் எல்லாம் ஆகாயத்தை ரசித்திருக்கிறேன் என்பது ஆச்சர்யம். நீங்களும் கூட ரசித்திருக்கலாம். கொஞ்சம் ஆகாய உலா போய் வருவோம் வாருங்கள்.  உங்கள் பார்வைக்குப் புலப்படும் கொஞ்சம் ஆகாயம் . :)

  
///நான் ஆகாய காதலன் ! 

மாதத்தில் ஒரு நாளாவது நீங்கள் பவுர்ணமி வானத்தை ரசித்திருக்கிறீர்களா? தன்னந்தனியே பொன்மாலை நேரங்களில் நடந்து செல்லும்போது அன்னார்ந்து வானம் பார்த்ததுண்டா? இதற்கு ஆமெனில் உங்களுக்கு இந்தக்கட்டுரை சுவாரஸ்யம் தரும். இல்லை என்பவர்கள் படிப்பதில் நேரம் வீணடிக்க வேண்டாம்! 

பகல் ஆண். இரவு பெண். பூமி பெண். வானம் ஆண். அஃறிணைக்கு பால் பிரிப்பது சரியா என்றெல்லாம் யோசிக்காதீர்கள். எனக்கும் வானத்துக்குமான புரிதலில் இவை எல்லாம் சரியே. வானம் எனக்கு இளங்காலையில் தோழன். மதிய நேரத்தில் ஆசிரியன். மாலையில் காதலன். இரவில் தாய். நானும் வானமும் எந்த பருவத்திலும் பிரிந்ததே இல்லை. என் துயரத்திலும் சந்தோஷத்திலும் வெற்றியிலும் தோல்வியிலும் வானத்தைப் பார்ப்பேன். சிலநிமிடங்களில் நான் ஜென் நிலைக்கு உறைந்துவிடுவேன். 


என் வாழ்வில் பல நாட்களைக் கழித்தது வானத்துடன் தான். வானம் எனது மனசாட்சி. எனது இருபதின் இளமையில் நேர்ப்பட்ட ரகசியங்கள் எல்லாம் வானமறிந்திருக்கிறது. வானம் எனக்கு பாஸ்வேர்ட் கொடுத்திருக்கிறது. எப்போது என்றெல்லாம் நினைவிலில்லை. பதின்ம வயதினிலேயே வசீகரித்து வந்தது வானம். பச்சைவயல் சூழ்ந்த வரப்புகளில் நடக்கும்போதெல்லாம் வானம் பார்த்து நடப்பேன். வானில் சிறகடிக்கும் பறவைகள் கண்டு ஆர்ப்பரித்து பறவைப்போல பறக்கமாட்டோமா என்றுஅலைபாயும் மனதும் அதில் ஊறும் கனவுகளும். எப்படியாவது வானை நெருக்கத்தில் பார்த்துவிட வேண்டும் என்ற ஆசை இதோ இப்போது வரையில் இருக்கிறது. 

கிராமத்தில் இருந்தபோதெல்லாம் வீட்டின் முற்றத்தில் அமர்ந்துகொண்டு வானத்தைப்பார்த்தபடியே இருப்பேன். ஏதோ ஓர் மாலையில் பிலிப்ஸ் ரேடியோவில் ஒலித்த ‘சித்திரை செவ்வானம் சிரிக்க கண்டேன்... என் முத்தான முத்தம்மா...’ பாடலும் ‘ வானம் அருகில் ஒரு வானம் தரையில் வந்த மேகம் தலை துவட்டி போகும் கானம் பறவைகளின் கானம்’ பாடல்கள் என் மனதுக்குள் நாற்காலிபோட்டு அமர்ந்துவிட்டன. இப்போது வரைக்கும் அந்தப்பாடல்கள் கேட்கும்போதெல்லாம் செவிகளில் தேனாய் தித்திக்கும். என்னவோ வானம் பற்றிய பாடல்கள் என்றால் எனக்கு அவ்வளவு பிரியம். 

அன்றைய டிடிகே 90 கேசட்டில் வானம் பற்றிய பாடல்களை எல்லாம் தேடித்தேடி பதிவு செய்து கேட்டு கேட்டு மகிழ்ந்திருக்கிறேன். நான் கேட்டு ரசித்த அந்தப்பாடல்கள் இப்போதும் கூட நினைவில் வந்து ஒலித்துக்கொண்டிருக்கின்றன. *நிலவை பார்த்து வானம் சொன்னது என்னை தொடாதே நிழலை பார்த்து பூமி சொன்னது என்னை தொடாதே... *புதிய வானம் புதிய பூமி - எங்கும் பனிமழை பொழிகிறது நான் வருகையிலே என்னை வரவேற்க வண்ணப் பூமழை பொழிகிறது ஒ ஒ ஓஹோ லால்ல ... 

*சித்திரை செவ்வானம் சிரிக்க கண்டேன் என் முத்தான முத்தம்மா *பொன் வானம் பன்னீர் தூவுது இன்னேரம் அட எண்ணம் மீறுது வண்ணம் மாறுது கண்ணோரம் பொன் வானம் பன்னீர் தூவுது இன்னேரம் ஹா ஆ ... *ஆகாயம் மேலே பாதாளம் கீழே ஆனந்த உலகம் நடுவினிலே ஆகா நான் தான் மைக்கேல் அடி நீதான் மை கேர்ள் நில்லாமல் சுழலும் *வானம் மெல்ல கீழிறங்கி மண்ணில் வந்து ஆடுதே, தூறல் தந்த வாசம் இங்கு வீசுதிங்கே, வாசம் சொன்ன பாஷை என்ன உள்ளம் ... *தொடு வானம் தொடுகின்ற நேரம் தொலைவினில் போகும் அட தொலைந்துமே போகும் தொடு வானமாய் பக்கம் ஆகிறாய் தொடும் போதிலே தொலைவாகிறாய் 

*தொலைவினிலே வானம் தரை மேல் நானும்தொடும் ஆசைகள் சிறகினை விரிக்குதே... மணி மணியாய்த் தூறல் மழை நாள் சாரல் பட்டுப் பூச்சிகள் பார்வையில் பறக்குதே... நீ நடந்து... போ!! கூட... என் நிழல் வரும் !! *வானம் கீழே வந்தால் என்ன. அட பூமி மேலே போனால் என்ன. மாயம் எல்லாம் மாயம். இதில் மனிதன் நிலை என்ன. வாடா ராஜா வா வா. *அந்தியில வானம் தந்தனத்தோம் போடும் அலையோடு சிந்து படிக்கும்... ம்... ம்... சந்திரரே வாரும் சுந்தரியை பாரும் சதிராட்டம் சொல்லி கொடுக்கும்... ம்... ம்... *வானம் தொட்டு போனா மானமுள்ள சாமி தேம்புதையா பாவம் தேவர்களின் பூமி பட்டத்துக்கு வேறு சிற்றரசன் யாரு தங்கத்துக்கு வேறு இந்தப்பாடல் பட்டியல் நீளும். நினைவில் நின்றவைகளைத்தான் குறிப்பிட்டிருக்கிறேன். 

எத்தனையோ இரவு நேரங்களிலும் வீட்டின் முற்றத்தில் மல்லாந்து படுத்து, வானத்து நட்சத்திரங்களை வெறித்துக் கொண்டிருப்பேன். அங்குமிங்கும் ஓடும் மேகங்களைப் பார்த்துக்கொண்டிருப்பேன். இவைகள் எங்கே போகின்றன. யாரைத்தேடுகின்றன. அங்கே யார் இருக்க முடியும் என்று எப்போதும் யோசித்துக் கொண்டே இருப்பேன். வானத்தில் மேகம் எழுதிச்செல்லும் ஓவியங்களை எல்லாம் சுடச்சுட ரசித்திருக்கிறேன். அந்த ஓவியங்களை இதுவரை எந்த ஓவியர்களும் வரைந்ததே இல்லை. 

நான் பல நேரங்களில் வானத்துடன் பேசிக்கொண்டே இருப்பேன். அதை சின்னஞ்சிறு குழந்தைப்போல வானம் தரைவந்து என் தோள் மீது உரசிக்கொண்டு கேட்பது போல பிரம்மை தோன்றும். சில சமயங்களில் வானம் என்னிடம் பேசும். ‘வா... வா... உன்னை ரொம்ப பிடிக்கும். என் மீது ஏறிக்கோ. ஓடுவோம் வா. என்னைப்போர்த்திக்கொள். என்னை சுருட்டிக்கொள். என்னில் மோது; உருளு, என்றெல்லாம் பேசும். பாரேன் ஒருநாள் நிச்சயம் நீ என்கிட்ட வருவே. உனக்காக நீ ஆகாசம் ஏறிவர ஏணி தருவேன். மாணிக்க பல்லக்குத் தருவேன். நீ ஒரு மகாராஜா போல வரலாம். உனக்கு எப்போதும் என் வாசல் திறந்திருக்கும். உனக்காக நான் எப்போதுமே காத்துக்கிட்டே இருப்பேன். என்னை மட்டும் நீ மறந்துடாதே’ என்றெல்லாம் பேசி சிரிக்கும். 

வானம் எனக்கு ஒருவித போதை தந்திருக்கிறது. வானம் எனக்கு போதிமரம் என்று சொன்னாலும் சரிதான். இன்றைய அலார வாழ்க்கையில், வானத்தை நிமிர்ந்து பார்க்கக்கூட எவ்வளவு பேருக்கு நேரம் இருக்கிறது என்று தெரியவில்லை. எனக்கு நேரம் இருக்கிறது. நீங்கள் வானத்தைக் கவனித்தால்தான் படைப்பின் அற்புதமான, அளவிட முடியாத பிரமாண்டம் புலப்படும். இறைவனைப்பற்றி, இயற்கையைப் பற்றி இதுவரை கற்றுக் கொடுத்த விஷயங்கள் எல்லாம் தாண்டி- வானத்தைப் பார்க்கையில், இன்னும் இன்னும் அனுபவமாகப் புலப்படும். வானம் என்பது ஆன்மிகம் போல் முடிவில்லாத வாய்ப்பு. எல்லையற்ற தன்மை. தொட்டுவிட இயலாத கூரை. நினைத்துப் பார்க்க முடியாத அளவு விசித்திரமானது. வானம் பார்த்தல் தியானம். இதை எந்தமதமும் உங்களுக்கு சொல்லிதராதது. 

வானம் என்றால் என்ன? அதன் எல்லை எது? என்ன வரையறை? தலைக்கு மேலே இருப்பது எல்லாமே வானம்தான், அன்னார்ந்து பார்த்தால் தெரிவது எல்லாம் வானம். பூமியை விரிப்பாகவும், வானத்தை விதானமாகவும் அமைத்து, வானத்தினின்றும் மழை பொழியச்செய்து; அதனின்று உங்கள் உணவிற்காகக் கனி வர்க்கங்களை வெளிவரச் செய்கிறான்- என்கிறது குரான் குரல். எங்கே இருந்து மழை பொழிகிறதோ, எங்கே பறவைகள் பறந்து செல்கிறதோ அவை எல்லாம் உள்ளடக்கிய பொதுவான வானம். இதை சாமானியன் புரிந்துகொள்ள கூடியது. எங்கே சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் இருக்கிறதோ அவற்றையும் வானம் என்றே குறிக்கிறது. நம்முடைய தற்கால அறிவியல். 

இப்போதும் கூட அலுவலகத்தில் உணவு இடைவேளையில் மாடியில் ஈசானி மூலையில் நின்று வெளிர்ந்த வானத்தை சிலநிமிடங்களாவது பார்த்து ரசிப்பேன். மதிய வேளையில் வானத்தின் பால் அன்னார்ந்து பார்வையைச் செலுத்தினால், அது நீல நிறத்தில் விசாலமான அமைப்பில் அழகாகக் காட்சியளித்துக்கொண்டிருக்கும். இடைஇடையே தூரிகையால் தீட்டிவிட்டது போன்று மேகங்களும் வானை அழகு படுத்தும். அதே வானம் மாலையில் அழகில் என்னை எங்கேயோ கூட்டிச் செல்லும். இரவுகளில் கருமை நிறத்தில் ஜொலிக்கும் நட்சத்திரங்களுடனும் பிரகாசமான நிலாவுடனும் பார்ப்பவர்களைப் பரவசமூட்டும் வானம். 

பாரதியும் கூட ஆகாய காதலானக இருந்திருக்கூடும் என்றே நினைக்கிறேன். அவன் பாடல்களைப்பாருங்களேன்: *மாலைப் பொழுதிலொரு மேடைமிசையே வானையும் கடலையும் நோக்கியிருந்தேன்; மூலைக் கடலினையவ் வானவளையம் முத்தமிட் டேதழுவி முகிழ்த்தல்கண்டேன்; நீல நெருக்கிடையில் நெஞ்சுசெலுத்தி, நேரங் கழிவதிலும் நினைப்பின்றியே சாலப் பலபலநற் பகற்கனவில் தன்னை மறந்தலயந் தன்னில் இருந்தேன். *பார்;சுடர்ப் பரிதியைச் சூழவே படர்முகில் எத்தனை தீப்பட்டெரிவன!ஓகோ! என்னடீ இந்த வண்ணத்தியல்புகள்! எத்தனை வடிவம்! எத்தனை கலவை! *நீலப் பொய்கையில் மிதந்திடும் தங்கத் தோணிகள்!சுடரொளிப் பொற்கரையிட்ட கருஞ்சிகரங்கள்!காணடி,ஆங்குத் தங்கத் திமிங்கிலம் தாம் பல மிதக்கும் இருட்கடல்!-ஆஹா! எங்கு நோக்கிடினும் ஒளித்திரள்!ஒளித்திரள்! வண்ணக்களஞ்சியம்!

டிஸ்கி:- அஹா நாங்களும் ஆகாய காதல் உள்ளவங்கதான். ஒரு பாட்டு விட்டுப் போச்சு சொல்லிடுறேன். :) // வானம் எனக்கொரு போதி மரம். நாளும் எனக்கது சேதி தரும். ///இன்னும் மிச்சம் இருக்க ஆகாய/வானப்பாட்டை யார் வேணாலும் தொடலராம் :)

பாரதி சொன்னாப்புல வானகமே இளவெயிலே மரச்செறிவே. என்றும் பாடத் தோணுதே. மிக அருமை தேவராஜன் சார்.

வீட்டுக்குள்ள கொஞ்சமே கொஞ்சம் கிடைக்கும் வானத்தோட கொஞ்ச நேரம் இருக்கப் போறேன். :) மொட்டை மாடிக்குப் போனா முழு வானமும் எனக்குத்தான். நிலவு கதையா இருக்குதுல்ல. நம்மோடதுமாதிரி போற திசையெல்லாம் தொடருமே. :) 

நன்றி தேவராஜன் சார். நினைவலைகளைத் தட்டி எழுப்பிட்டீங்க. சாட்டர்டே ஜாலி கார்னரை நிறைய ஆகாயத்தால ரொப்பிட்டீங்க. :) இயற்கையை நேசரான உங்களுக்கு அன்பும் நன்றியும். வாழ்க வளமுடன்.

7 கருத்துகள்:

  1. திரு.தேவராஜன் அவர்களுக்கு பாராட்டுக்கள்... வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  2. ஆகாயக் காதலரின் அறிமுகம் அருமை

    பதிலளிநீக்கு
  3. அறிமுகம் மிக அருமை! ஆகாயக் காதலர். வாழ்த்துகள்!

    என்னையும் அதில் சேர்த்துக் கொள்ளலாம் ஹ்ஹஹ்

    கீதா

    பதிலளிநீக்கு
  4. நன்றி டிடி சகோ

    நன்றி திருக்கண்ணபுரத்தான்

    நன்றி நாகேந்திர பாரதி சகோ

    நன்றி மது

    நன்றி கீதா :)

    பதிலளிநீக்கு
  5. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...