எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 17 ஜனவரி, 2017

நீங்க நல்லா இருக்கோணும் இந்த நாடு முன்னேற..


வீட்டில் அனைவரும் மேட்னி ஷோவுக்குக் கிளம்பிக் கொண்டிருந்தார்கள். அச்சோ சினிமாவா நமக்கு பீதியளிக்கும் விஷயமாச்சே. யார் யாரோ பிரம்மாண்டமா திரையில் வந்து பேசுவாங்க பாடுவாங்களே.

நான் வல்லை நான் வல்லை என அனத்திக் கொண்டிருந்தது அந்தப் பிள்ளை. அப்ப சரி நீ வேலை செய்யும் லெக்ஷ்மி அக்கா வீட்டில் இரு எனச் சொல்லிவிட்டு அனைவரும் சினிமாவுக்குச் சென்று விட்டார்கள். அக்கா வேலை முடித்து வந்து கஞ்சியைக் குடித்து விட்டு எங்கோ அழைத்துச் சென்றார்கள்.

அட இதென்ன ஒரே கூட்டம். ஏதோ சின்ன பொந்து போல ஒரு கவுண்டர் இருக்கு.  ஒரு ஆள் மட்டுமே போகக்கூடிய அளவு சிமிண்ட் சுவரு. மூச்சு முட்டுது. எதுக்கு க்யூவுல நிக்கிறோம். திடீர்னு மணி அடிக்குது. நிக்கிற ஆள் தோள் மேலே ஆள் ஏறி ஓடுறாங்க.

தபதபன்னு கூட்டம் வெளிகேட்டு உள்கேட்டு எல்லாம் ஒடையுது. அடுத்த பெல் அடிச்சாச்சு. ஒரு வழியா தப்பிச்சு அடிச்சுப் பிடிச்சு உள்ளே போய் பெஞ்சுல நெருக்கியடிச்சு ஒக்காந்தாச்சு.

ஐயோ இதென்ன சினிமா தியேட்டர். பயமா இருக்கு. ஆத்தி. நியூஸ் ரீல் ஓடுது. நேரு மாமா ஃபாண்டா கரடியோட வெளையாடுறாரு. கண்ணுக்குள்ள இவங்கள்ளாம் சுத்துறாங்க. அக்கா மடியில படுத்துக்குது அந்தப் புள்ள. பயம்மாருக்கு. என்ன ஏன் கூட்டியாந்தே சினிமாவுக்குன்னு அந்தப் புள்ள அழுவுது. அந்த அக்காவோ நிமிண்டுது அட புள்ள சினிமாவைப் பாரு. டிக்கெட்டுக் கொடுத்த காசு வேஸ்ட்டு.

யேய் உய்ய்ய்ய்ய் விசில் சத்தம் வாத்தியாரய்யா வந்திட்டாரு..  ”நேத்துப் பூத்தாளே ரோஜா மொட்டு பறிக்கக் கூடாதோ லேசா தொட்டு. ” ஐயய்ய இதென்ன ஆம்பிளையும் பொம்பிளையும் தொட்டுத் தொட்டு ஆடுறாங்க. ஐய வெக்கமா இருக்கு. ஏழெட்டு வயசுப் புள்ள மொகத்த மூடி மூடிப் பார்த்த மொத சினிமா அதுதான் ...உரிமைக்குரல். -- அட நாந்தாங்க அந்தப் புள்ள.

சும்மா கிடந்த புள்ளய சினிமா தியேட்டருக்குக் கூட்டிப் போயி சினிமால முக்கி எடுத்துட்டாங்க. ஆனா எம்சியாரு ரசிகை எல்லாம் இல்ல. (ஆனா நிறைய எம்ஜியார் ஜெயாம்மா படம் பார்த்திருக்கேன். ) அதுக்குன்னே எங்க குடும்பத்துல ஒருத்தர் இருக்காரு அவர்தான் எங்க சித்தப்பா செல்லப்பன் என்ற மாணிக்கம். அவர் வீட்டுல வைச்சிருக்கிற ஃபோட்டோதான் இது.

நிறைய பேருக்கு எம்ஜியார் தெய்வம் மாதிரி.

எங்க அம்மா வீட்டில் குடி இருந்த லெக்ஷ்மி அக்காவிடம் அம்மா ஒரு முறை சொன்னார் ( ஒரு படத்தில் எம்ஜியார் விக் வைத்திருப்பார் - அதில் ஹீரோயின் எம் ஜி ஆர் தலையில் எண்ணெய் வைப்பார் ) - டோப்பாவுல இவ்ளோ எண்ணெய வச்சு வேஸ்ட் பண்றாங்க .அந்த முடி எல்லாம் உண்மைன்னு நம்புறியா நீ. துலாபாரம்னு ஒரு படம் வந்திருக்கு . அருமையான படம் அந்தப் படத்தைப் பாரு “ என்றார்.

“அட நீ வேற. நாங்க வாழ்க்கைலதான் அழுதுக்கிட்டு இருக்கோம் சினிமாவுலயும் போயி அழுகணுமா. நாங்க சிரிச்சு சந்தோஷமா இருக்கத்தான் எம்சியார் படம் பார்க்கிறோம் “ என்றார்.

”சும்மா சிரிக்கத்தான் அந்தப் படம் எல்லாம். அவர் வந்தா உங்களுக்கெல்லாம் சாப்பாடா போடப்போறாரு. நீங்க கை காலோட நல்லா இருந்து உழைச்சாத்தான ஒங்களுக்கு அடுத்த வேளை சாப்பாடு. ”

ஆனா அவர் ஆட்சிக்கு வந்தார். ஏழைபாழைகளின் துயரம் எல்லாம் ஓரளவு தீர்ந்தது. சத்துணவு, முதியோருக்கு பணம், உணவு, ஏன் செருப்பு, பல்பொடி கூட கிடைத்து எல்லாரையும் வாயடைக்கச் செய்தது.

ஜெயகாந்தனின் சினிமாவுக்குப்  போன சித்தாளு கதை படித்து அசந்ததுண்டு. ரிக்‌ஷாக்காரன் மனைவி அவரின் டீ ஷர்ட்டில் இருக்கும் எம்ஜியார் படத்தைப் பார்த்து மயங்கி கணவனுடன் சமாதானமாகப் போவார்.

அருணாசலா தியேட்டரில் உலகம் சுற்றும் வாலிபன் ஓடிக்கொண்டிருந்தது மூன்றாவது முறையோ நான்காவது முறையோ. ( படம் வந்தது 1972. ஆனால் அப்போது 1985 இருக்கும் ) . படத்தில் பெரிய பல்லோடு புத்தபிட்சுவாக எம் என் நம்பியார் தோன்றுவார். அப்போது அவருக்கும் எம்ஜியாருக்கும் சண்டை நடக்கும். படம் பார்த்துக் கொண்டிருந்த ஒரு பெண் உணர்ச்சி வசப்பட்டு ,

”அட வாடா எம் பல்லழகா. வரப்போறாரு வாத்தியாரு நல்லா குடுப்பாரு பல்லுத் தெறிக்க. வாங்கிக்க வாங்கிக்க”  என்று சத்தமிடுகிறார். படம் பார்க்கும் அனைவரும் உணர்ச்சி வசப்பட்டு ஆமாம் ஆமாம் எனக் கத்துகிறார்கள். ”உய் உய்” என்று விசில் சத்தம் :)  இதுதான், இவர்கள்தான், இவர்கள் அன்பும் நம்பிக்கையும்தான்  எம்ஜியாரின் பலம்.

அவர் ஆட்சிக்கு வந்ததும் படுத்துக் கொண்டே ஜெயித்ததும் ஊரறிந்த கதை.

ஒரு டிசம்பர் மாசம் பிள்ளையார் நோன்பு சமயம் வீட்டுக்கு டிவி வந்த புதிது. ஒரு நாள் பூரா அமரரான எம்ஜியாருக்காக வந்த ஊர்வலத்தை டிவியில் பார்த்தபடியே வருத்தத்தோடு கழிந்தது.

மூன்றாம் வகுப்பு வரையே படித்த இவரால் நிறைய கல்வித் தந்தைகள் உருவாகி இருக்கிறார்கள். !!! அவர் ஒரு சகாப்தம். 

இறந்தும் இறவாமல் நூறாண்டு கண்ட மாபெரும் நாயகன் அவர் . அவரைப் பெரும் புகழின் உச்சியில் கொண்டு சேர்த்த பாடல் இது.

”நீங்க நல்லா இருக்கோணும் இந்த நாடு முன்னேற..:

என்ற பாடல் ஒலிக்க ஆளுயர மாலை அணிந்து கம்பீரமாக நடந்து வருவார். !

அவர் அமரராகிவிட்டபின்னும் நீங்க நல்லா இருக்கோணும் என்று வேண்டும் மக்கள் இன்றும் இருக்கிறார்கள். 

இந்தப் பாடல் எடுக்கப் பட்டவிதம் பிரம்மாண்டமாய் இருக்கும். இதன் மெட்டு இன்றளவும் என் மனசை விட்டு நீங்கியதில்லை.

”பேராசையாலே வந்த துன்பம் சுயநலத்தின் பிள்ளை
சுயநலமே இருக்கும் நெஞ்சில் அமைதி என்றும் இல்லை
அமைதி என்றும் இல்லை”

என்று எல்லாருக்காகவும் பாடிய அவர் 

பாடுபட்டுச் சேர்த்த பொருளைக் கொடுக்கும் போதும் இன்பம்
வாடும் ஏழை மலர்ந்த முகத்தைப் பார்க்கும் போதும் இன்பம்

-- என்றும் பாடிச் சென்றிருக்கிறார். அவர் பாடிச் சென்றதைப் பின்பற்ற முயல்வோம். 

11 கருத்துகள்:

 1. பேராசையாலே வந்த துன்பம் சுயநலத்தின் பிள்ளை
  இன்றைய நிலை அல்லவா

  பதிலளிநீக்கு
 2. மக்கள் மனதில் என்றும் வாழும் தலைவர்...

  பதிலளிநீக்கு
 3. எம்ஜிஆரைப் பற்றிய நல்ல விவரங்கள் அடங்கிய பதிவு. இப்போது?

  பதிலளிநீக்கு
 4. புரட்சித் தலைவர் எம்ஜீயாருக்கு என்று அளவ்லா ரசிகர்கள் உண்டு அதைத் தெரிந்தவர் அவர் நாட்டு மக்களுக்கு நல்லது செய்தவர் ஆதாலால் என்றும் நெஞ்சில் நிலைப்பவர்

  பதிலளிநீக்கு
 5. ஆம் ஜெயக்குமார் சகோ

  ஆம் டிடி சகோ

  நூற்றாண்டு நிறைவுக்காக எழுதியது துளசி சகோ

  ஆம் பாலா சார். சத்தியமான வார்த்தை

  பதிலளிநீக்கு
 6. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு
 7. அவர் படங்கள் பாடல்கள் பட்டங்கள் ஏன் படத்தின் தலைப்புகள் கூட அவருக்காகவே அப்படி அமையும்!
  வெண்திரையில் செய்ததை வாழ்க்கையிலும் செய்து காட்டிய அதிசய மனிதர்!
  பாமரனும் ஆச்சிரியமா பார்த்தான் படிச்சவனும் ஆச்சிரியமா பார்த்தான்!
  அவர் மறைந்தபோது ஆறுதல் சொல்ல வந்த அன்றைய பிரதமர் ராஜிவ் காந்தி சொன்னது!
  என் பாட்டனார் இவரை பார்த்து அதிசய பட்டு இருக்கிறார் என் அன்னையும் இவர் பற்றி சொல்லி வியந்து இருக்கிறேன் பிறகு நானும் இவரை பார்த்து ஆச்சிரிய பட்டு இருக்கிறேன் தனிப்பட்ட முறையில் என் குடும்பத்தில் இப்படி 3 தலைமுறையினரோடு பழகிய ஒரு மகத்தான மனிதரை இன்று இழந்து விட்டேன்!
  ஒரு அகதியா இந்தியாவுக்கு வந்து புவி ஆண்டு இந்திய துணை கண்டத்தின் 3 பிரதமர்களையும் ஆச்சிரியப்பட வைத்த தனிப்பிறவி!

  பதிலளிநீக்கு
 8. மக்கள் திலகம் மறக்க முடியாத மறுக்க முடியாத ஒரு மாமனிதர்!

  பதிலளிநீக்கு
 9. மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களை இன்றும் பலரும் மறக்காமல் உள்ளனர். அதுவே அவரின் தனிச்சிறப்பாகும். அவரின் புகழ் என்றும் நீடித்து நிறகும். பகிர்வுக்கு நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 10. நல்ல பகிர்வு. சரியான நாளில் சரியான பகிர்வு.

  பதிலளிநீக்கு
 11. மிகச் சரியா சொன்னீங்க கிருஷ்ணா. விரிவான கருத்துக்கு நன்றி

  மிக்க நன்றி விஜிகே சார்

  மிக்க நன்றி வெங்கட் சகோ


  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...