வெள்ளி, 27 ஜனவரி, 2017

வாங்க பழகலாம் – ஒரு பார்வை.


வாங்க பழகலாம் – ஒரு பார்வை.


சூரியன் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கும் இந்நூல் பொதுத் தகவல் தொடர்பு அதிகமாகி தனிமனிதத் தொடர்பு அற்றுப்போய்க் கொண்டிருக்கும் இன்றைய சூழலில் அத்யாவசியத் தேவையான மனிதர்கள் ஒருவரோடு ஒருவர் பழகும் பேசும் தொடர்பு கொள்ளும் கலை பற்றிப் பேசுகிறது. கிட்டத்தட்ட ஐந்து நூல்களுக்கு மேல் வெளியிட்ிருக்கும் திரு லதானந்த அவர்களின் இந்நூல் தனிமனித உறவு & தொடர்பின் ஒரு ஐ ஓபனர் என்றால் மிகையில்லை

தேவைக்கேற்ப சூழ்நிலைக்கேற்பப் பேசுதல், தேவை ஏற்படும்போது பேசாதிருத்தல், உடல்மொழி, நேரடிப் பாராட்டு, கேள்விகளை உள்வாங்குதல், நேரடியாகக் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்வது, மரியாதையாகப் பேசுதல் , மேடைப்பேச்சில் நேர மேலாண்மை , கேட்பவர்களின் கல்வி மற்றும் பொது அறிவுத் தகுதியைக் கணக்கில் கொண்டு பேசுவது, கடிதங்களின் மூலம் சரியாகத் தொடர்பு கொள்ளும் முறை, சூழ்நிலையைக் கவனித்துப் பேசுதல், அத்யாவசிய விஷயங்களை முதலில் தெரிவித்தல், கூர்ந்து கவனித்தல், ஆகியவற்றின் தேவையை உணர்த்துகிறது.

சரியாகப் பேசும் முறை, அடுத்தவர்களின் பிரச்சனையைக் காது கொடுத்துக் கேட்பது, அடுத்தவர் புண்படாதவாறு பேசுவது, எச்சரிக்கையாகப் பேசுவது, எதிர்மறைக் கருத்துக்களைப் பேசாமலிருப்பது, சுவாரசியமாகப் பேசுவது, மதித்துப் பேசுவது, யாரிடம் என்ன பேசுவது எனத் தெரிந்து பேசுவது ஆகியன கடைபிடித்தால் எல்லா நட்பும் உறவும் தொடர்பும் நீடிக்கும் என்கிறார்.

நகைச்சுவையாகப் பேசுகிறேன் என்று நோகடிப்பது, இடம் பொருள் அறியாமல் உளறுவது, தேவையோ தேவை இல்லையோ தகவல்களைக் கொட்டுவது, வளவளவென்று பேசுவது, மழுப்பலான பதில்கள், பொருளற்ற சொற்களைப் பேசுவது, புறம் பேசுவது, உச்சரிப்புப் பிழை, தமிங்கிலீஷில் பேசுவது, வாய் நாற்றம்,  அலட்சிய மனோபாவத்துடன் பேசுவது மற்றும் கேட்பது, தற்பெருமையாகவும் தத்துப் பித்தென்றும் பேசுவது, குறுக்குக் கேள்விகள் கேட்பது,  புகார் வாசிப்பது, சாக்குப் போக்குச் சொல்வது  இவற்றைத் தவிர்க்கச் சொல்கிறார்.

ஒவ்வொரு அத்யாயத்தையும் நகைச்சுவையுடனும் தகுந்த உதாரணங்களுடனும் நகர்த்திச் செல்வதால் படிக்கச் சரளமாகவும் பின்பற்ற அணுக்கமாகவும் இருக்கிறது. யார் யாருடன் எவ்வளவு இடைவெளியில் இருந்து உரையாடவேண்டும் என்று கொடுக்கப்பட்டுள்ள அட்டவணை இப்படிக்கூட இருக்கிறதாவென ஆச்சர்யத்தின் உச்சத்திற்குக் கொண்டு சென்றது.

கடிதங்களின் வலிமை, கற்றலிற் கேடல் நன்று, ORDER OF PRIORITY, குழுக் கலந்துரையாடல்கள் பழகும் கலை மாணவ மாணவியரோடு உரையாடுதல் அர்த்தம் அறிந்து பேசுவது , சரியாக உச்சரிப்பது, ஒருவர் அணிந்திருக்கும் உடைகள் கூடப் பேசுவது , உளவியல் காரணங்கள் , சூழ்நிலைகளைக் கையாள்தல், தனக்குக் கீழே பணிபுரிபவர்களிடம் நடந்து கொள்ள வேண்டிய மனிதநேய முறை, பேச்சாற்றலை வளர்த்துக் கொள்வது, மீட்டிங் பற்றிய கிண்டல் டிக்‌ஷ்னரி , டேபிள் மேனர்ஸ், தன் எழுத்துத் திறமை மூலம் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவது  ஆகியன வெகுவாய்க் கவர்ந்தன.  

தொழில் செய்யும் இடத்திலும் உத்யோகம் பார்க்கும் அலுவலத்திலும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான ஒரு கைடன்ஸாகவே இந்நூலை நான் பார்க்கிறேன்.

குழந்தைகள், மாணாக்கர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள், வியாபாரிகள், இல்லத்தரசிகள், விற்பனையாளர்கள் ஆகியோருக்கான பேச்சுத் திறமையைச் செம்மைப்படுத்திக் கொள்ள உதவும் அகராதியாகவே இந்நூல் திகழ்கிறது.

தகவல் தொடர்பு ஆற்றலையும் பழகும் கலையையும் பேசும் கலையையும் மனித மனங்களையும் மேம்படுத்தும் இந்நூல் ஒவ்வொருவரின் இல்லத்தில் மட்டுமல்ல ஒவ்வொரு நிறுவனத்திலும் கட்டாயம் இடம் பெற வேண்டிய ஒன்றாகும்.

நூல் :- வாங்க பழகலாம்
ஆசிரியர்:- லதானந்த்
பதிப்பகம் :- சூரியன்
விலை :- ரூ. 90/-

6 கருத்துகள் :

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

மிக அருமையான நூலைப் பற்றிய தங்கள் அறிமுகம் நன்று. குழந்தைகளுக்கு மிக மிகத் தேவையான ஒன்றும் ஏன் பெரியவர்களுக்குமே தேவையான ஒன்று.

மிக்க நன்றி அறிமுகத்திற்கு..

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நன்று + நன்றி சகோதரி...

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

நன்றி சகோதரியாரே

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்ல அறிமுகம்.... நன்றி.

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி துளசி சகோ

நன்றி டிடி சகோ

நன்றி ஜெயக்குமார் சகோ

நன்றி வெங்கட் சகோ

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...