திங்கள், 11 ஜூலை, 2016

புகை - நமது மண்வாசத்தில்.

புகை.

நெல் அண்டாவில் அகப்பையால்
கிளறிக்கொண்டிருக்கிறது பாக்கியத்தக்கா

வாரி வாரி இழுபடும் நெல்மணிகளில்
வரையப்படுகின்றன அதன் கைரேகைகளுடன்
அவரவர்க்கான சோறும்.

இடிந்துவிடாமல் அரைத்ததைக்
குருணையாகவும் பெருமணிகளாகவும்
சிலாத்திக் கொண்டிருக்கிறது
பாம்பைப் போல் படமெடுத்தாடும் அரிசியை
உஸ் உஸ்ஸென்ற ஒலியுடன்.

சுளகைத் தட்டி உமியைத் தூவும்
அதன் விரல்களில் தவிட்டு வண்ணத்தில்
உறைந்துகிடக்கிறது உழைப்பின் கல்வி.

மாறு உலக்கையில் தூளாகும்
இடியாப்பத் தூசிகள் மாசற்ற பேரழகியாக்குகின்றன
கருத்து நரை திரை விழுந்த முகத்தை.

கல் நெல் இல்லாக் கடை அரிசியும்
பாக்கெட் இடியாப்ப மாவும் புட்டுமாவும்
பாக்கியத்தக்கா இல்லாமலே வந்து சேர்கின்றன

இடிந்த அதன் கனவுகள் போல
புட்டுத் தூசியும் இடியாப்ப ஒட்டடையும் படிந்து
இடிபாடுகளுக்குள் சிக்கித் தவிக்கிறது
அது கண் புகையப் புகைய
புகை உண்ட மண் அடுப்பும்.

டிஸ்கி:- இக்கவிதை ஜூலை 2016 நமது மண்வாசத்தில் வெளியானது.


5 கருத்துகள் :

வெங்கட் நாகராஜ் சொன்னது…

அருமையான கவிதை. பாராட்டுகள்.

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

அருமை
வாழ்த்துக்கள் சகோதரியாரே

PR.Katturaja Raja சொன்னது…

என்று இந்த பணி சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்!

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி வெங்கட் சகோ

நன்றி ஜெயக்குமார் சகோ

நன்றி காட்டுராஜா

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...