செவ்வாய், 5 ஜூலை, 2016

அக்னிச் சிறகுகள் – அப்துல் கலாமுடன் ஒரு பயணம்.அக்னிச் சிறகுகள் – அப்துல் கலாமுடன் ஒரு பயணம்.


இந்தியாவின் கடைக்கோடி கிராமத்தில் பிறந்து தலைநகரை ஆட்சி செய்த ஒரு அற்புத மனிதர் தம் கனவுகள் நனவாக அக்னிச் சிறகுகள் கொண்டு சிகரத்தை நோக்கிப் பயணித்த கதைதான் இது.. பத்ம பூஷன் , பத்ம விபூஷன் பெற்றவர், அக்னி என்னும் ஏவுகணையை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தக் காரணமானவர், இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் , மாணவர்களை நெறிப்படுத்தியவர், சென்னைப் பல்கலைக் கழகத்தில் கௌரவ டாக்டர் பட்டம் பெற்றவர் என்று சில பரிமாணங்களில் மட்டுமே நமக்குப் பரிச்சயமான திரு அப்துல் கலாமின் உள்ளக் கிடக்கைகளையும் உத்வேகங்களையும் சந்தித்த சோதனைகளையும் அதன் மூலம் நிகழ்த்திய சாதனைகளையும்இன்னும் பல பரிமாணங்களையும் இதில் வாசிக்கலம்.

தந்தை தாயின்மேல் வைத்திருந்த பூரணமான அன்பு , தன்னைச் சார்ந்தவர்களின் மேல் வைத்திருந்த அபிமானம், தாய்நாட்டினை உலக அரங்கில் தலைநிமிரச் செய்யவைக்கப்பட்ட ப்ரயாசை, கொண்ட குறிக்கோளில் அனைவரையும் அரவணைத்துச் சென்று நிறைவேற்றிய பாங்கு என வியக்க வைக்கிறார் கலாம்.

முன்னுரை, அறிமுகம், முனைதல், படைத்தல், அமைதிப்படுத்துதல், தியானம், நிறைவுரை என அமைந்திருக்கிறது இதன் நூற்பொருள். இந்தப் புத்தகத்தை எழுதியதே ஒரு புனித யாத்திரை போல இருந்தது என முன்னுரையில் குறிப்பிடுகிறார் அருண் திவாரி. சரளமாக மொழி பெயர்ப்புச் செய்திருக்கிறார்கள், மு. சிவலிங்கம் அவர்களும், கவிஞர் புவியரசு அவர்களும்.


விக்ரம் சாராபாய், சதீஷ் தவன், பிரம்ம பிரகாஷ், தன் தந்தை ஜெயினுலாபுதீன், தாயார் ஆஷியம்மா, சகோதரியின் கணவர் ஜலாலுதீன், ஒன்றுவிட்ட சகோதரர் சம்சுதீன், தந்தையின் நண்பரான ராமேஸ்வரம் கோயிலின் தலைமைக் குருக்கள் லெட்சுமண சாஸ்த்ரிகள், ஆசிரியர்கள் அய்யாதுரை சாலமன், கிருஷ்ண ஐயர், ரெவரெண்ட் ஃபாதர் டி.என். செகுரிரா, பேராசிரியர்கள் பண்டலை, ஸ்பாண்டர், நரசிங்க ராவ், ஸ்ரீனிவாசன், சுவாமிஜி சிவானந்தர், அமைச்சர் கிருஷ்ண மேனன், டாக்டர் மெடிரட்டா, க்ரூப் கேப்டன் வி. எஸ். நாராயணன், டாட்டா, வெர்னர் வன் பிரான், சிவகாமி நாதன், அணு விஞ்ஞானி ராஜா ராமண்ணா அமைச்சர் வெங்கட்ராமன், டாக்டர் அருணாசலம், இந்திராகாந்தி அம்மையார், வி ஆர் நாகராஜ், பி, ராமராவ், ஆகியோருடன் தனக்கு ஏற்பட்ட நெகிழ்வான அனுபவங்களை மனம்திறந்து சரளமாகப் பகிர்ந்து செல்கிறார்.

கலீல் கிப்ரான் கவிதைகள், லூயிஸ் காரலின் வரிகள், குரானிலிருந்து சில வரிகள், அபு பென் ஆடம் பற்றி அப்பா சொன்ன கதை, அம்மா சொன்ன இறைச் சம்பவங்கள், இறைச்சக்தி தன்னுள் ஊடுருவிப் பரவி லட்சியங்களையும் கனவுகளையும் எட்ட உதவி செய்தது, ஊன் உயிர் உள்ளொளி ஒன்று சேர்ந்தால் நிகழ்த்தும் சாதனை எனப் பிரமிக்க வைக்கிறார் கலாம்.

ஹோவர் ரக ”நந்தி” விமான திட்டம், ராட்டோ மோட்டார் திட்டம், ஷார் ராக்கெட் ஏவுதளம், ( ஏவுகலங்கள், ஏவுகணைகள், செயற்கைக் கோள்கள் ஆகியவற்றை ஏவ நிர்மாணிக்கப்பட்டது ) எஸ் எல் வி டயமண்ட் திட்டம்,  எஸ் எல் வி 3, எஸ் எல் வி 3 – டி1, கைடட் மிஸைல் டெவலெப்மெண்ட் ப்ரோக்ராம், ப்ருத்வி, திரிக்ஷூல், ஆகாஷ், நாக், ரெக்ஸ் என்ற அக்னி, டெவில் ஏவுகணை என தோல்வியும் வெற்றியும் மாறி மாறிக் கிட்டிய சம்பவங்களைப் பகிர்ந்து செல்கிறார். விஞ்ஞானிகளாக இருந்தாலும் சக மனிதர்களுக்குள்ளே இருந்த போட்டி பொறாமை ஒற்றுமையின்மை ஆகியவற்றையும் அங்கங்கே தெளிவுபடுத்திவிடுகிறார்.

தும்பா ஸ்ரீஹரிகோட்டா இஸ்ரோ,டி ஆர் டி எல், டி ஆர் டி ஓ, இம்ரத் ஆய்வு மையம் ஆகிய இடங்களில் பணி புரிந்த அனுபவத்தையும் விஞ்ஞானத்தின் சாத்யக்கூறுகளையும் பகிர்ந்துள்ளார்.

எதிர்பார்த்தவை கிடைக்காத ஏமாற்றமும் என்றோ நிச்சயம் நிகழும் என்ற எதிர்பார்ப்பும் ஊசலாட நேரமின்மையிலும் நிறைவேற்ற வேண்டிய கடமைகள் பற்றியிழுக்க ஒரு சாதாரண மனிதனில் இருந்து அவர் அசாதாரண மனிதராய் மாறியதை இக்கட்டுரைகள் வெளிப்படுத்துகின்றன.

மிக முக்கியமான குறிப்பாக /// தன்னந்தனியாக வாழ்க்கை நடத்த நான் ஆசைப்பட்டதற்கு அன்பு தரும் வேதனையிலிருந்து தப்பித்துக் கொள்வது முக்கிய காரணமாகக் கூட இருக்கலாம். ராக்கெட் தயாரிப்பை விட இந்த வேதனை என்னை அதிகமாகக் கஷ்டப்படுத்தும். எனது வாழ்க்கை முறைக்கு நான் உண்மையாக நடந்துகொள்ள வேண்டும். எனது தேசத்தின் ராக்கெட் விஞ்ஞானத்தை உயர்த்த வேண்டும் /// எனக் கூறியுள்ளது சிந்திக்கத்தக்கது.

மேலும் அக்னி ஏவுகணையை சில பல தடைகளுக்குப் பின் நான்காவது முறையாக முயன்று விண்ணில் ஏவியபின் இப்படித் தனது டயரிக் குறிப்பில் எழுதி உள்ளார்.

///தீச் சகுனங்களைத் தடுத்து நிறுத்த
மேல் நோக்கிச் செலுத்தும் அம்சமாகவோ
உனது பேராற்றலை வெளிப்படுத்தச்
செலுத்தப்படுவதாகவோ
அக்னியைப் பார்க்காதே.

அது நெருப்பு.
இந்தியனின் இதய நெருப்பு.
அது ஒரு வெறும் ஏவுகணையன்று.
இந்த நாட்டின் எரியும் பெருமை,
அதனால்தான் அதற்கு
அத்தனை ஒளி.”////

ஒவ்வொரு மனிதருக்குள்ளும் இருக்கும் அக்னிக் குஞ்சுகள் சிறகுவிரித்துப் பறக்கட்டும் என்கிறார் கலாம். நாம் அனைவருமே படிக்க வேண்டிய தன்னம்பிக்கைக் கட்டுரைகள் இவை.

ஆசிரியர் :- ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்
ஆங்கிலத்தில் – அருண் திவாரி
தமிழில் – மு. சிவலிங்கம்
கவிதைகள் தமிழாக்கம் – கவிஞர் புவியரசு
பதிப்பகம் கண்ணதாசன் பதிப்பகம்.
விலை ரூ 70/-


டிஸ்கி:- இது எனது 100 ஆவது புத்தக மதிப்புரை. 


5 கருத்துகள் :

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்லதொரு புத்தகம். நானும் படித்திருக்கிறேன். மீண்டும் படிக்கத் தூண்டியது உங்கள் பகிர்வு.

Jeevalingam Yarlpavanan Kasirajalingam சொன்னது…

பயனுள்ள பகிர்வு

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

100 ஆவது புத்தக மதிப்புரைக்கு வாழ்த்துக்கள் சகோதரியாரே

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி வெங்கட் சகோ

நன்றி யாழ்பாவண்ணன் சகோ

நன்றி ஜெயக்குமார் சகோ

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...