எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 31 மார்ச், 2015

மது.. பாலா..மது.. பாலா..
==============
”நான் ரொம்ப ஸ்ட்ராங்க்ன்னு  நெனைச்சிண்டு  இருந்தேன் மது. ஆனா நான் ஒரு கூடு. வெறும் கூடு மட்டுமில்ல மதூ.. உளுத்துப்போன கூடு. தட்டினா உதுந்து போயிடுவேன்னு புரிஞ்சிடுத்து மதூ. யெஸ். “ என்று கூறிக் கண்கலங்கிய பாலாவை மதுவால் என்ன சொல்லித் தேற்றுவது என்று புரியவில்லை.

எது பேசினாலும் ஆறுதல் கூறப்போனால் கூட அந்த நேரத்தில் சரியாய்க் கூற முடியாதோ என்றிருந்தது.

“நான் அப்பாடான்னு நிம்மதியா சாஞ்சுக்கவும் ஒரு தோள் வேணும். என் தோள்லே சாயவும் ஒரு ஆள் வேணும். நான் இப்பிடிப் பேசுறது உனக்குத் தப்பாக்கூடப் படலாம் மதூ. “

காதல்னா இவ்வளவு சிரமம் இருக்காது பாலாம்மா.. ‘ எடுக்குறதும் கொடுக்குறதும்தான் ப்யூர் லவ். உரிமையோட இருக்குறதும்தான்.. கெஞ்சிக் கேட்டு வாங்குறதில்லை. “ சொல்ல நினைத்தும் மௌனித்தான் மது.
‘இந்தப் பெண் ஏன் இவ்வளவு அலட்டிக் கொள்கின்றாள். உழப்பி, உழப்பி, உழன்று, பத்திரமாய்க் கைக்குள் புறாக்குஞ்சாய் எந்நேரமும் இருக்கணும்னு கவலைப் பட்டுண்டு,.. ஏதோ இவளைப் பலமாய்ப் பாதித்திருக்கணும். ‘ . தோளில் சாய்ந்து கொண்டிருந்த அவளின் முதுகைத் தட்டிக் கொடுத்தான்.

“யுனிவர்சல் லவ் பத்தி என்ன நினைக்கிறே..மதூ..” எனத் திடீர்க் கேள்வியிட்ட பாலாவை மது ஆச்சரியமாகப் பார்த்தான்.

“ப்ளீஸ் சொல்லேன்.” பாலா தூண்டவும் “ ஏன்.. கேக்குறே..?” “ இல்லை மதூ.. சும்மாத்தான். உன்னோட ஐடியாவையும் தெரிஞ்சுக்கலாமேன்னு”.

’இல்லை எங்கோ மழுப்புகிறாள். என்னவோ விஷயமிருக்கின்றது. இல்லாவிட்டால் இப்படிக் கேள்வி கேட்டு அழுத்தமாய்ப் பார்த்துத் தூண்டுகிறவள் இல்லை , ஆளை ஆராயும் ரகம் இல்லை இவள்’ மனதுள் தந்தியடித்த நினைப்புக்களை ஒதுக்கிவிட்டு அவளைப் பார்த்து சகஜமாய்ப் புன்னகைத்தான்.

அவளின் பார்வை பதிலுக்காய் காத்திருந்தது. “ உன்னோட வியூவை சொல்லு அப்புறம் நான் சொல்றேன்.” தயக்கமாய் கீழ்ப்பார்வையுடன் “ லவ்ன்னா குறிப்பிட்ட ரெண்டு பேர்க்குள்ளதான் இருக்கணும். அதிலே மூணாம் பேருக்கு இடமில்லை. அது மட்டுமில்ல. உனக்கு நான் மட்டும்தான். எனக்கு நீ மட்டும்தான். நீ என் கூடவும் நான் உன் கூடவும்தான் பேசிக்கொண்டிருக்கணும்.  குறுக்கீடே கூடாது.. ராமனாத்தான் இருக்கணும்..  ஏன்னா நான் சீதையா இருப்பேன்ற உறுதியினாலே..”

அவனுக்குப் புரிந்தது. யார் அவளின் குழப்பத்துக்குக் காரணம் என்று. சடாரெனக் கோபம் வந்தது. யாராவது ஏதாவது சொன்னால் உன் புத்தி எங்கே போயிற்று என்று கேட்க வேண்டும் போல் இருந்தது. அந்த டைப்பிஸ்ட் ராதுவின் மேல் எரிச்சல் ஏற்பட்டது. இப்படியும் பெண்கள் இருக்கின்றார்களே என்று.

“இவ்வளவு சந்தேகப்படற பெண், என்னை லவ் பண்ணி இருக்கக் கூடாது. அதுக்குக் கல்லு, மரம், ஏதாவதாயிருக்கணும். மனசுல பயத்தையும், குழப்பத்தையும் வச்சிண்டு காதல் பண்ண முடியாது. பீ. ப்ராங்க்.. லவ் வேற.. ஃப்ரெண்ட்ஷிப் வேற.. ரெண்டையும் போட்டுக் குழப்பி சந்தேகப்படக்கூடாது. ஃப்ரெண்ட்ஷிப்பே கூடாதுன்னு சொல்றது முட்டாள்தனம். லுக் ஒரு சந்தேகப் பிராணியோட வாழ நான் பிரியப்படலை.”

கரகரவெனக் கண்ணீர் வழிந்தது பாலாவுக்கு. “ மன்னிச்சுங்க்க மதூ.. நான் சரியில்லை. நான் வேண்டாம் உங்களுக்கு; உங்களை மாதிரி ஃப்ராங்கா பேச முடியலை. ப்ளீஸ் கேட்டதுக்கு மன்னிச்சுக்குங்க. ஏதோ அவசரத்துல என் ஆதாரமே போயிடும்னு பயந்துட்டேன் மதூ.. ப்ளீஸ்ஸ். “ உடைந்துபோய்க் கதறும் அவளைப் பார்த்ததும் மதுவுக்குக் கஷ்டமாகிவிட்டது. 

“பாவம் சின்னப் பெண்.. நான் இவ்வளவு கத்தியிருக்கக்கூடாது. இவள் சின்னப் புறாக்குஞ்சு. என் ஆக்ரோஷம் இவளைத் துவள வைத்துவிடும். இவளின் ஆதாரம் நான்.; என்னை நம்பி புறப்படும் பெண் இவள். இவளின் துன்பத்திலும் எனக்குப் பங்குண்டு. மெல்ல மெல்லத்தான் இவளைப் பக்குவப்படுத்தவேண்டும்.

முழங்காலில் முகத்தைப் புதைத்திருந்த அவளை நிமிர்த்திக் கண்ணீரைத் துடைத்துக் கொண்டே சொன்னான் ,” லுக் பாலாம்மா. மனசுல சந்தேகத்தை வச்சுண்டு யூனிவர்சல் லவ் பண்ண முடியாது. நமக்குப் பிடிச்சவங்களுக்கும் நம்மைப் பிடிக்கணும்னு அர்த்தமில்லே. ஒரு ஆணும் ஆணும் , பெண்ணும் பெண்ணும்தான் சிநேகிதமாயிர்க்கணும்னு அர்த்தமில்ல. உனக்கு நான் மட்டும்தான். எனக்கு நீ மட்டும்தான்னு இருக்கக்கூடாது. உனக்கும், எனக்கும் நீயும் நானும்னு இருக்கத் தெரியணும்.”

”ஒரு ஆணும் பெண்ணும் சிறந்த நண்பர்களா இருக்கமுடியும். கருத்துப் பரிமாறிக்க, எண்ணங்களை, நிகழ்ச்சிகளைப் பகிர்ந்துக்க முடியும். ப்ரசண்ட் வோர்ல்ட்ல சன்யாசியாட்டம் போக முடியாது.”

”மனசு சலனப்பட்டாலும் இழுத்துக் கட்டிக்கத் தெரியணும். என்னை அப்பிடியாக்குற பொறுப்பு உன் கையில இருக்கையில நீயே இப்பிடிக் கேட்டா.. என்ன சொல்றது. என் கோபத்தைப் பார்த்துப் பயந்துட்டியா. மன்னிச்சுக்கடா. “ இருவரின் புன்னகைப் பரிமாற்றத்தையும் பார்த்துக் கடலலைகள் சிரித்துச்  சந்தோஷப்பட்டன. 


6 கருத்துகள்:

 1. //”ஒரு ஆணும் பெண்ணும் சிறந்த நண்பர்களா இருக்கமுடியும். கருத்துப் பரிமாறிக்க, எண்ணங்களை, நிகழ்ச்சிகளைப் பகிர்ந்துக்க முடியும். ப்ரசண்ட் வோர்ல்ட்ல சன்யாசியாட்டம் போக முடியாது.”//

  மிகவும் ஆழமானதோர் இன்றைய யதார்த்தமான இனியக் கருத்தினை, வெகு அழகாகச் சொல்லியுள்ளீர்கள்.

  அந்த கடல் அலைகள் போலவே நானும் இதனை உள்வாங்கிக்கொண்டு மனதுக்குள் மட்டும் ரஸித்து மகிழ்ந்துகொண்டேன்.

  அதீதத்தில் வெளியானதில் அதிஸயம் ஏதும் இல்லை.

  பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 2. //இவள் சின்னப் புறாக்குஞ்சு.//

  நல்லதோர் உதாரணம். சொல்லாடல் அருமை. :)

  பதிலளிநீக்கு
 3. ”ஒரு ஆணும் பெண்ணும் சிறந்த நண்பர்களா இருக்கமுடியும். கருத்துப் பரிமாறிக்க, எண்ணங்களை, நிகழ்ச்சிகளைப் பகிர்ந்துக்க முடியும். ப்ரசண்ட் வோர்ல்ட்ல சன்யாசியாட்டம் போக முடியாது.”//அருமை! சகோதரி! அருமையான ஒரு உண்மையான காதல் கதை! பெண்களுக்கு இருக்கும் ஒரு சின்ன பொசசிவ்னெஸ் ....அதை அந்தக் காதலன் அழகாக எடுத்துரைத்தல் இறுதியில் வைத்தானே ஒரு அருமையான டயலாக் //”மனசு சலனப்பட்டாலும் இழுத்துக் கட்டிக்கத் தெரியணும். என்னை அப்பிடியாக்குற பொறுப்பு உன் கையில இருக்கையில நீயே இப்பிடிக் கேட்டா.. என்ன சொல்றது.// அதில் இருக்கின்றது முழு அர்த்தமும்!!! அருமை அருமை!!!! மிகவும் ரசித்தோம்!!!

  பதிலளிநீக்கு
 4. மிக விரிவான கருத்துக்கு நன்றி கோபால் சார்.:)

  நன்றி தனபாலன் சகோ :)

  விரிவான கருத்துக்கு நன்றி துளசிதரன் சகோ :)

  நன்றி வெங்கட் சகோ. :)

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...