செவ்வாய், 24 மார்ச், 2015

அழகர்களும் அழகிகளும் அறுவை சிகிச்சைகளும்:-


அழகர்களும் அழகிகளும் அறுவை சிகிச்சைகளும். :-
MISSION IMPOSSIBLE ,FACE OFF போன்ற படங்களில் அதன் நாயகர்கள்  ஜான் ட்ரவால்டோ & நிக்கலஸ் கேஜ், டாம் க்ரூஸ் ஆகியோர் மாஸ்க் போல முகத்தை மாற்றிக்கொள்வதைப் பார்த்து அசந்திருக்கிறேன். ரைனோ ப்ளாஸ்டி செய்துகொண்ட பிறகு நடிகை ஸ்ரீதேவி ஹிந்திப்பட உலகையே ஒரு கலக்கு கலக்கினார். ஆனால் யதார்த்தத்தில் அவ்வளவு சுளுவானதல்ல முகச்சீரமைப்பு அறுவை சிகிச்சை என்பது.
மைக்கேல் ஜாக்சனுக்கு ஒரு நடனப் பயிற்சியில் மூக்கு உடைந்துவிட அதனால் அவர் ஒரு ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டார். ஆனால் அதில் சுவாசிப்பதில் தொந்தரவு ஏற்பட மீண்டும் ஒரு சர்ஜரி என அடுத்தடுத்த சர்ஜரிகள் செய்து கொண்டார். ஆனால் இயல்பாய் அவர் ஆடிய பழைய பாடல்களில் இருக்கும் ஒரு இன்னொசண்ட் அழகு புதுமுகத்தில் காணாமல் போய் இருந்தது. அதே நடனத்திறமைதான் என்றாலும் ப்ளாஸ்டிக் சர்ஜரியின் மூலம் அழகான பர்ஃபெக்டான முகத்தைப் பெறலாம். ஆனால் அதே போன்ற எளிமையான கொள்ளை கொள்ளும் அழகும் ( பர்ஃபெக்ட் இல்லாவிட்டாலும் ) தோல் மென்மையும் மாறக்கூடும்


தீபிகா படுகோனே போல மூக்கு வேண்டி தன்னுடைய பெரிய மூக்கை சீர்திருத்திக் கொள்ள 24 வயது  கிருத்திகா செலவழித்தது  நான்கு மாதங்கள் மற்றும் ஒரு லட்ச ரூபாய்தன் வருங்காலக் கணவரின் ஆசைப்படி மணப்பெண் ப்ரியா திருமண நாளன்று சிரிக்கும்போது தன் கன்னத்தில் அழகாகக் குழி விழ டிம்பிள் க்ரியேஷன் சர்ஜரி செய்து கொண்டிருக்கிறார். இதற்காக அவர் செலவழித்தது 75,000 ரூபாய். பெங்களூரில் இரண்டு வருடங்களாக மென்பொறியாளராகப் பணியாற்றும் பிரிஜோஷ் தன் திருமண நாளன்று சிறப்பாகத் தெரியவேண்டும் என்று ஹேர் ட்ரான்ஸ்ப்ளாண்டேஷன் செய்து கொண்டிருக்கிறார்.
இவைகளை ஏன் செய்துகொள்கிறார்கள் என்று பார்த்தோமானால் தற்காலிகமாக அழகாகத் தோன்ற மட்டுமல்லாது அந்த அழகை நிரந்தரமாக உடலின் அங்கமாக மாற்றவும் செய்துகொள்கிறார்கள்.

ப்ளாஸ்டிக் சர்ஜரி என்றால் சிற்பம் செதுக்குவது போல வடிவமைத்தல்/ சீரமைத்தல்பலரும் நினைப்பது போல இது ப்ளாஸ்டிக்கை வைத்துச் செய்யப்படுவதல்ல. இது ப்ளாஸ்டிக்கோஸ் என்ற க்ரேக்கச் சொல்லில் இருந்து உருவானது. இதன் அர்த்தம் சிதைந்த திசுக்களை செப்பனிடுவது. தோல், கொழுப்பு, தசை, கார்டிலேஜ், எலும்பு போன்ற பாகங்கள் அவரது உடம்பிலிருந்தே எடுக்கப்பட்டு பாதிக்கப்பட்ட பாகத்தை சீரமைக்கப் பொருத்தப்படுகிறதுஅவ்வாறு அவரிடமே எடுக்க இயலாத நிலையில் டோனரிடம் பெற்று சீரமைக்கப்படுகிறது. தற்காலத்தில் சிலிக்கான் போன்ற செயற்கைப் பொருட்களும் ப்ரெஸ் சிலிக்கான் ஜெல்லும் உபயோகப்படுத்தப்படுகின்றன.

ப்ளாஸ்டிக் சர்ஜரி என்பது சீரமைப்பு அறுவை சிகிச்சை. விபத்து  தீயினால் ஏற்பட்ட காயம் அல்லது பிறப்பில் ஏற்பட்ட ஊனம், காயம், அல்லது தழும்பை சீர் செய்யப் பயன்படுகிறது. புற்று நோய், தொற்று நோய், கட்டிகள் சீரமைப்பு. கட்டி நீக்கம், குதறியகாயம் சரிசெய்தல், வடு சரிசெய்தல், கையில் அறுவை சிகிச்சை, மற்றும்  மார்பகச் சீரமைப்பு ஆகியன.
காஸ்மெடிக் சர்ஜரி உடம்பின் குறைபாடு உள்ள பகுதியை அதிகமாக்கியோ, குறைத்தோ மறுபதிப்பு செய்ய உதவுகிறது. நிறைய புதுமைகள் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டாம் உலக யுத்தத்துக்குப் பின்னான காலகட்டம்தான் இதன் பொற்காலம் எனலாம். ஹெரால்டு கில்லீஸ் தான் புதுயுக அறுவை சிகிச்சையின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்.
அவுலஸ் கோர்நேளியஸ் செல்சஸ் என்ற ரோமன் அறிஞர்தான் முதன்முதலில் இதன் உத்திகள் மற்றும் சிகிச்சைகளைப் பதிவு செய்தவர். இந்தியாவில் ப்ளாஸ்டிக் சர்ஜரியும் கண்புரை அறுவை சிகிச்சையும்  கி.மு, ஆறாம் நூற்றாண்டுக்கு முன்பே ( 600 B.C. )"சுஸ்ருதர்" என்பவரால் செய்யப்பட்டு வந்தது. எனவே" சுஸ்ருதர்"தான் "இந்தியாவின் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் தந்தை" எனலாம். இவருடைய மருத்துவ முறைசுஸ்ருதர் சம்ஹிதைஎன்ற பெயரில் தொகுக்கப்பட்டுள்ளது. முன்நெற்றியில் உள்ள தோலை எடுத்து மூக்கை சீரமைக்க அவர் பயன்படுத்திய முறை சிறப்பானது. அது இன்றும் “INDIAN FOREHEAD FLAP RECONSTRUCTION OF THE NOSE." என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில் யுத்தத்தின்போது நிறைய வீரர்கள் மூக்கு அறுக்கப்பட்டுத் தண்டிக்கப்பட்டார்கள். அவர்களுக்கு சுஸ்ருதரின் இந்த முறை வைத்தியம் மிக வரப்ரசாதமாக அமைந்தது
சிறுவயதில் தீக்காயத்தால் பாதிக்கப்பட்ட ரம்யாதேவி ( என் சாதனை அரசி புத்தகத்தில் இடம் பெற்ற தைர்ய லெக்ஷ்மிஇதுவரை தன் முகச்சீரமைப்புக்காக பல லட்சரூபாய் செலவோடு கிட்டத்தட்ட 45 சர்ஜரிகளை மேற்கொண்டுள்ளார். இது பல அடுக்கு சிகிச்சைகளைக் கொண்டது. முதலில் பாதிக்கப்பட்ட இடத்தில் உள்ள புண்ணை குணப்படுத்துதல், அதன் பின் தசைகளையும் செல்களையும் உருவாக்குதல். அதன் பின் புது தோலை வளரச்செய்தல் என . இது சில மாதங்களில் இருந்து பல வருடங்கள் பிடிக்கும் ஒரு சிகிச்சையாகும்.
பொதுவாக பர்சனாலிட்டியை மேம்படுத்த, தன்னம்பிக்கையைப் பெற, அழகை அதிகரிக்க, சுய மதிப்பீட்டை அதிகரிக்க, தாழ்வு மனப்பான்மையை நீக்க , தோற்றத்தை மேம்பாடு செய்ய, வயதான அறிகுறிகள் நீங்க செய்யப்படும் இச்சிகிச்சைகள் உடல் குறைபாடுகள், பிறப்புக் குறைபாடுகள், உதடு பிளவு, அன்னப் பிளவு, கை குறைபாடு ஆகியவற்றை நீக்குவதோடு முகப்பரு, மங்கு மச்சம் நீக்குதல், உச்சந்தலை புனரமைப்பு ஆகியவையும் செய்யப்படுகின்றன. அதிர்ச்சி, காயம், நோய் முதலாய் வரும் குறைபாடுகள் நீக்கவும்., தொற்றுக் கட்டிகள், புற்று, கழலைகள்,ஆகியவற்றையும் நீக்கவும் ஆபரேஷன் செய்த தழும்புகள் நீங்க, விபத்தில் காயமுற்ற உடல் பாகங்களை சீரமைக்க, தீக்காயங்கள் நீக்க, போரில் காயமுற்ற வீரர்களுக்கும் பயன்படுகின்றன.
பல்வேறுபட்ட காஸ்மெடிக் சரிஜரி பற்றிய விவரங்கள் கோரி திருமண சமயங்களில் நாளொன்றுக்கு சராசரியாக 400 என்கொயரீஸ் வருவதாகக் கூறுகிறார்கள். தொப்பையைக் குறைத்தல், சிக்ஸ் பேக் , ஹேர் ட்ரான்ஸ்ப்ளாண்டேஷன் பற்றி அதிகமாக என்கொயரீஸ் ஆண்களிடமிருந்து வருகின்றன. மார்பக அறுவை சிகிச்சை ( பெரிதாக்குதல், சிறிதாக்குதல் ), உடலை ஸ்லிம்மாக சீரமைத்தல், லிப்போசக்‌ஷன் ஆகியன பெண்களிடமிருந்து வரும் என்கொயரீஸ் என்று ஹேர்லைன்ஸ் இண்டர்நேஷனல் ட்ரீட்மெண்ட் & ரிசர்ச் செண்டரின் இயக்குநர் பானி ஆனந்த கூறுகிறார்.
இதில் பெரும்பான்மையானவை ஆபத்தில்லாதவை என்றாலும் சரியான மருத்துவரிடம் சரியான சிகிச்சை பெறுவதே சாலச்சிறந்தது. சில சிகிச்சைகள் மூன்று வாரத்திலும் சில அதற்கு மேலும் பல மாதங்களும் எடுக்கக்கூடியனவாம். உடல் சீரமைப்பு, லிப்போசக்‌ஷன் போன்ற சிகிச்சைகள் திருமணத்துக்கு மூன்று மாதத்துக்கு முன்பே எடுக்கப்படவேண்டும். இவை அனைத்தும் கொஞ்சம் சிக்கலான சிகிச்சைகள்தான் என்றாலும் அனுபவமிக்க மருத்துவரிடமும் அனைத்து வசதிகளும் கொண்ட மருத்துவமனையிலும் செய்துகொண்டால் பாதுகாப்பானது என்று மணிப்பால் ஹாஸ்பிட்டலைச் சேர்ந்த டாக்டர் அஷோக் ( ப்ளாஸ்டிக் சர்ஜரி நிபுணர் )சொல்கிறார்.
இந்த பாக்கேஜ் ட்ரீட்மெண்டுகளில் டாட்டூ போட்டுக் கொள்வதுகூட இப்போது ஒரு ஃபாஷனாகி வருகிறது. முன்னொரு காலத்தில் விரும்பிப் போட்டுக்கொண்ட டாட்டூக்களை/ பெயர்களை நீக்கக்கோரி  அடுத்துப் புதிதாக திருமணம் நிச்சயமாயிருக்கும் சமயத்தில் நிறையப் பேர் வருவதாக அப்போலோ ஹாஸ்பிட்டல்ஸ் மற்றும் கொலம்பியா ஏசியாவில் பணிபுரியும் ப்ளாஸ்டிக் சர்ஜன் டாக்டர் யோகேஸ்வரப்பா கூறுகிறார்.
குடும்பத்தில் இருக்கும் சிறியவர்களும் ஏன் பெரியவர்களுமே கூட வீட்டில் திருமணம் நிச்சயமாயிருக்கும் சமயம் தாங்களும் சிறப்பாகத் தெரியவேண்டி சில சிகிச்சைகளுக்காக வருகின்றார்களாம். இளையவர்கள் கருவளையம் நீக்குதல், நிறமாற்றத்துக்காக ( காஸ்மெட்டிக் சர்ஜரி ) வந்தால் பெரியவர்கள் சுருக்கம் நீக்கும் சிகிச்சை மற்றும் ப்ளெபரோப்ளாஸ்டி சிகிச்சைக்காக ( மேல் இமைச்சீரமைப்பு ) ஆகியவற்றைச் செய்து கொள்ள வருவதாக மணிப்பால் ஆஸ்பிட்டலின் டாக்டர் அஷோக் கூறுகிறார். கைனகொமஸ்டியா – 25,000 – 50,000.( ஆண்கள் )   ரைனோப்ளாஸ்டி – 60,000 – 1.50,000. (பெண்கள்ப்ளிப்பரோப்ளாஸ்டி – 60,000 ( முதியவர்கள் ) ரூபாய் செலவழித்தும் செய்து கொள்கிறார்கள்.
முன்பெல்லாம் ப்ளாஸ்டிக் சர்ஜரி என்பது திருமணத்தின் ஒரு அங்கமாக இருக்கவில்லை. ஆனால் மக்களுக்கு இப்போது தன்னைப் பற்றிய சுயகௌரவம் மிளரவும். ஹெல்த் கான்ஷியஸ் அதிகரித்து மற்றவர் பார்வைக்குத் தான் இப்படி இருக்கவேண்டும் என்ற ஆவல் மேலிடுவதாலும் சர்ஜரி செய்துகொள்கிறார்கள்உடல்பற்றிய எச்சரிக்கை உணர்வு அதிகரித்துவிட்டதாலும் கையருகே ஒரு பட்டனைத் தட்டினால் தேவையான தகவல்கள் குவிந்து கிடப்பதாலும் தங்கள் தேவைப்படித் தேர்ந்தெடுத்து மக்கள் இதை நாடுகின்றனர்.
நடிக நடிகையர் மட்டுமல்ல சர்வதேச அளவில் விளையாடும் விளையாட்டு வீரர்களும் இதை நாடுகின்றனர். யுத்தத்தில் காயமடைந்த போர்வீரர்களுக்கும் இது வரப்ரசாதமாக அமைந்துள்ளது. 1917 இல் வால்டர் ஜூட்லாண்ட் என்ற வீரருக்கு வலது காது மடலில் செய்யப்பட்ட அறுவை சிகிச்சைதான் முதல் ப்ளாஸ்டிக் அறுவை சிகிச்சை
குழந்தைகள், முதியோர், மணமக்கள் ஆகியோருக்கும் தனித்தனியாக உறுப்பு வாரியாக சிகிச்சை முறைகள் உள்ளன. டம்மி டக் ( தொப்பை குறைப்பு ), பிளிப்பரோ ப்ளாஸ்டி ( கண் இமைச்சீரமைப்பு ), மாமோப்ளாஸ்டி ( மார்பக அளவைக் கூட்ட/குறைக்க/மறு சீரமைக்க) , பட்டக் ஆக்யுமெண்டேஷன்/ பட்டக் லிஃப்ட் ( உட்காருமிடத்தை சீரமைக்க ) , கெமிக்கல் பீல் ( அக்கி , பெரியம்மை ஆகியவற்றால் வந்த தழும்புகளையும் சுருக்கங்களையும் சீர் செய்ய ), சோலார் லெண்டிஜைன்ஸ் ( முதுமையினால் வரும் சுருக்கங்களை நீக்க ) க்ரையோலிபாலிசிஸ் ( கொழுப்பு நீக்க ) , க்ரையோ ந்யூரோ மாடுலேஷன், (தோல் நோய்க்கான சிகிச்சை, வலி நீக்கும் சிகிச்சை . தற்காலிகமாக ஏற்படும் சுருக்கம் நீக்க ), லாபியாப்ளாஸ்டி & லிப்ஸ் என்ஹேன்ஸ்மெண்ட் ( உதடு சீரமைப்பு, பிளவுபட்ட அன்னம் சீரமைப்பு  ), ரைனோப்ளாஸ்டி ( மூக்கு சீரமைப்பு), ஓட்டோப்ளாஸ்டி ( காது சீரமைப்பு , தலையோடு ஒட்டி இருக்கும் காதைப் பிரித்தல் ), ரைடிடெக்டமி ( முகச்சுருக்கம் நீக்கி சீரமைத்தல் ) , நெக் லிஃப்ட் ( கழுத்து சீரமைப்பு ), ப்ரோப்ளாஸ்டி ( புருவ சீரமைப்பு ), மிட்ஃபேஸ் லிஃப்ட் . சீக் ஆக்யுமென்டேஷன் ( கன்னச்சீரமைப்பு ), ஜினோப்ளாஸ்டி ( முகவாய் சீரமைப்பு) , ஆர்த்தோக்நாதிக் சர்ஜரி ( முக எலும்புகளில் லேசாக ஃப்ராக்சர் உருவாக்கி அதன் பின் சீரமைத்தல் ) ,ப்ராக்கியோப்ளாஸ்டி ( அக்குள் மற்றும் முழங்கையில் இருக்கும் அதிகப்படியான சதையைக் கரைத்தல் ), லேசர் ஸ்கின் ரிஜெனுவேஷன் ( முகத்தில் லேசர் சிகிச்சை மூலம் புத்துணர்வு ஊட்டுதல் ), லிப்போ சக்‌ஷன் ( அதிகப்படியான கொழுப்பு நீக்கு சிகிச்சை ), கெலாய்ட் ரிமூவல் ( வடு நீக்கம் ), ஆகியன இதன் வகைகளாகும்.
ஸ்கின் க்ராஃப்டிங் ( தோல் ஒட்டுவது ), அவர்களின் தோல் அல்லது டோனர்களிடமிருந்து பெற்றப்பட்ட தோல் கொண்டு செப்பனிடப்படுகிறது. கெமிக்கல் ஃபீல் கார்பாலிக் ஆசிட் ( பினால்), ட்ரைக்ளோரோ அசிட்டிக் ஆசிட், க்ளைக்காலிக் ஆசிட், சாலிசிலிக் ஆசிட் ஆகியவற்றைக் கொண்டு செய்யப்படுகின்றது.
பிரான்ஸ் நாட்டில் தான், இந்த முகமாற்று அறுவை சிகிச்சைக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டது. கேட்டிலா டாஷ் ( 38 வயது ஆண் ) அழகுப்பெண்மை பெற 7 அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார். மேலும் பல விதமான அறுவை சிகிச்சைகள் மேற்கொண்டுள்ளார். இனி செய்து கொண்டால் இவர் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று டாக்டர்கள் எச்சரித்தும் கூட.
2005 இல் ஃப்ரான்சைச் சேர்ந்த இசபெல்லா என்ற பெண்ணை அவரது வளர்ப்பு நாய் கடித்துக் குதறிவிட சிதைந்த பகுதிகளை முகமாற்று அறுவை சிகிச்சை மூலம் சீரமைக்கப்பட்டுள்ளது. தற்போது, 2010 இல் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு, முழு முகத்தையும் மாற்றி அமைக்கும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது
அமெரிக்கா  லண்டன் போன்ற நாடுகளிலும் இந்த அறுவை சிகிச்சைகள் மிக அதிக அளவில் நடைபெற்று வருகின்றன. ஆசிய நாடுகளான சீனாவிலும் இந்தியாவிலும் இது கொஞ்சம் கொஞ்சமாகப் பெருகி வருகிறது. தாய்லாந்து போன்ற நாடுகளில் மார்பகப் பெருக்கம், பாலியல் அறுவை சிகிச்சை, ஆகியன செய்யப்படுகின்றன. ஆஸ்த்ரேலியா ஐரோப்பா மற்றும் அண்டை ஆசிய நாடுகளில் இருந்தும் இந்த சிகிச்சைகளுக்காக இந்தியா வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பெண்கள் ஆண்கள் இருவரைப் பொறுத்தவரையிலும் மார்பக சீரமைப்பு அறுவை சிகிச்சைகள்தான் அதிக அளவில் செய்யப்பட்டுள்ளன.

ப்ளாஸ்டிக் சர்ஜரி ஒரு உளவியல் குறைபாடு காரணமாக செய்துகொள்ளப்படுகிறதுபாடி டிஸ்மார்ஃபிக் டிஸ்ஸார்டர் என்பது தனது புறத்தோற்றம் சரியில்லையோ என நினைத்துக் கவலைப்படுவது. சில சமயம் இது சிகிச்சைக்குப்பின் அனரெக்சியா அல்லது தசை மாறுபாடு ஆகிய கோளாறுகளைக் கொண்டு வரும். ப்ளாஸ்டிக் சர்ஜரிக்குப் பின் சிலசமயம் விளைவுகள் மோசமாகலாம்.

ஹைதராபாத்தில் தற்போது அதிக அளவில் காஸ்மெடிக் சர்ஜரி நிலையங்கள் பெருகி உள்ளன்உடல் பருமன் நீக்கும் சிகிச்சைக்கு உட்பட்ட 32 வயது நரேந்திர குமார் ( லிப்போ சக்‌ஷன் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டபோது ) தவறான சிகிச்சை முறையால் உயிரிழந்துள்ளார். எனவே லிப்போ சக்‌ஷன் என்பது அழகுக்கான சிகிச்சை . அது  முழங்கை, தொடை, பிட்டம், கை உள்பக்கம் உள்ள கொழுப்பு  நீக்க செய்யப்படுவது. உடல் பருமன் நீக்கும் சிகிச்சை முறையல்ல என்று லிப்போசக்‌ஷன் நிபுணர் டாக்டர் சுரேஷ் ஹரி கூறுகிறார்தகுதியற்ற மருத்துவரிடம் எடை குறைப்புக்கான சரியான சிகிச்சை செய்யப்படவில்லை என்றால் உயிரிழப்பு ஏற்படும் என்பதையும் அவர் வலியுறுத்துகிறார்.
தோல்நோய் நிபுணர், முகச்சீரமைப்பு நிபுணர், ஜெனரல் பிசிஷியன், கைனகாலஜிஸ்ட், கண் டாக்டர், எலும்பு மருத்துவர், முகம் வாய் எலும்பு சம்பந்தப்பட்ட மருத்துவர், ப்ளாஸ்டிக் சர்ஜன் ஆகியோரின் முறையான ஆலோசனை பெற்றுச் செய்யப்படவேண்டும். மிக அதிக செலவு பிடிக்கும் இந்த அறுவை சிகிச்சைகளில் சில ப்ளாஸ்டிக் சர்ஜரிகளுக்கு மருத்துவக் காப்பீடு செய்து கொள்ள முடியும். ஆனால் காஸ்மெடிக் அறுவை சிகிச்சைகளுக்கு மெடிக்கல் இன்சூரன்ஸ் கிடையாது. சிகிச்சைகள் முடிந்த பின்பும் சொல்லப்பட்ட மருத்துவம் மற்றும் வழிமுறைகளைப் பின்பற்றியே ஆகவேண்டும்.
அமெரிக்கன் அகாடமி ஆஃப் காஸ்மெடிக் சர்ஜரி (AACS) சிறந்த காஸ்மெடி சர்ஜன்களைப் பரிந்துரைக்கிறது. காலம் மாறிவருகிறது. முன்பு போலெல்லாம் மக்கள் இப்போது இருப்பது போதும் .இதுவே கம்பீரம், இதுவே அழகு என நினைப்பது இல்லை. போட்டிகள் நிறைந்த உலகில் தங்களைச் செதுக்கிச் சீர்செய்து கொள்ள விரும்புகிறார்கள் இது ஒவ்வொருவரின் சுய விருப்பம் சார்ந்தது. எனவே தகுதியும் அனுபவமும் வாய்ந்த பயிற்சிபெற்ற சிறந்த மருத்துவரிடம் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ள வேண்டும். எனவே எவ்வளவு துன்பம் கொடுத்தாலும் அழகர்களையும் அழகிகளையும் உலகை உவகையுடன் எதிர்கொள்ள அவர்களின் தன்னம்பிக்கையையும் உருவாக்கும் அழகு அறுவை சிகிச்சைகள் காலத்தின் வரப்ப்ரசாதம்தான்.

டிஸ்கி:- இந்தக் கட்டுரை 2014 ஆவணி மாத மெல்லினத்தில் வெளிவந்தது.

8 கருத்துகள் :

Thenammai Lakshmanan சொன்னது…


வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

மிகவும் விரிவான அலசல். ஆரோக்யமான பல வழிமுறைகளையும், ஆபத்துக்களையும் எடுத்துச்சொல்லும் மிகவும் பயனுள்ள பதிவு.

இதைப்படித்ததும் எனக்கும் தன்னம்பிக்கை ஏற்பட்டுவிட்டது.

சும்மாவாவது நானும் ஏதேனும் ஒரு அழகு படுத்திக்கொள்ளணும், இளமையை எப்படியாவது மீண்டும் எழுச்சியுடன் அடையணும் ..... என்ற ஆவல் ஏற்பட்டுவிட்டது. :)

’மெல்லினம்’ இதழினில் பிரசுரம் ஆகியுள்ளதற்குப் பாராட்டுக்கள்.

பகிர்வுக்கு நன்றிகள்.

ஸ்ரீராம். சொன்னது…

விரிவான விளக்கமான பதிவு.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

பல அறியாத தகவல்கள் சகோதரி...

அம்பாளடியாள் சொன்னது…

வணக்கம் !
அருமையான ஆக்கம்! மிகத் தெளிவாகவும் விரிவாகவும் எழுதப்பட்ட இந்த
ஆக்கத்திற்கு என் மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் தோழி .

S.P. Senthil Kumar சொன்னது…

அழகு சிகிச்சை பற்றி அருமையான கட்டுரை.

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி கோபால் சார். ட்ரை பண்ணீங்களா ஏதேனும் அழகு அறுவை சிகிச்சை. :)

நன்றி ஸ்ரீராம்

நன்றி தனபாலன் சகோ

நன்றி அம்பாளடியாள்

நன்றி செந்தில்குமார்.

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...