திங்கள், 2 ஜூன், 2014

ஐம்பத்தாறு வகை மனிதர்களும் அங்கீகரிக்கப்படாத தொழிலும். :-

ஐம்பத்தாறு வகை மனிதர்களும்  அங்கீகரிக்கப்படாத தொழிலும். :-

இரண்டு பாலினங்கள் மட்டுமே எல்லா இடங்களிலும் கேட்கப்படுகின்றன மற்றும் குறிப்பிடப்படுகின்றன. மூன்றாம் பாலினத்தவர் தங்களையும் இணைக்கக் கோரியுள்ளார்கள். ஆனால் முதன் முறையாக முகநூலில்  பாலினம் எனக் குறிப்பிடப்படும் இடத்தில் 56 விதமான பால் வகைகளை வகைப்படுத்தப் போவதாக செய்தித்தாளில் படித்தேன்.

மனிதர்களே ஐம்பது வகையாயிருக்கும்போது ,அவர்களின் பல்வேறுபட்ட காம விழைவுகள் பெருவாரியாகப் பேசப்படும்போதும் காமம் தீர்க்கும் தொழிலில் ஈடுபடும் பெண்களையும் திருநங்கைகளையும் மட்டுமே இன்னும்  சமூகம் மோசமானவர்களாகச் சித்தரிக்கின்றது. அழகிகள் கைது என்று   வரும் செய்தித்தாள்களில் ஒன்றாவது அழகன்கள் கைது என்று கேள்வியுற்றிருக்கின்றீர்களா.இற்கிழத்தி, காமக்கிழத்தி, காதற்பரத்தை, அரங்கக்கூத்தியர், நாடகக் கணிகையர், சேரிப்பரத்தை என்ற சொற்றொடர்கள் இலக்கியத்தில் குறிப்பிடப்படுகின்றன. காமம் தணிக்கும் தொழிலில் ஈடுபடும் ஆணும் கிகாலோ,  ரெண்ட் பாய்ஸ் எனக் குறிப்பிடப்படுகிறான். திருநங்கைகளும் இதில் ஈடுபடுகிறார்கள்.

தேவரடியார்கள் என்ற வகைப் பெண்கள் தஞ்சைக் கோயிலில் உழவாரப்பணி செய்தல், பூசை செய்தல், பராமரித்தல், ஈசன்  முன்பு பாடல்கள் இசைத்தல், திருவிழாக்களில்  திருநடனம் ஆடுதல்  ஆகிய பணிகளில் ஈடுபட்டிருந்தார்கள். இவர்களில் அரசவைப் பெண்களும் இருந்திருக்கிறார்கள். ( நாடகத்துறையில் இருக்கும் ஒருவர் சோழர் காலத்தில் போரில் சிறைப்பிடிக்கப்பட்ட அந்நிய தேசப் பெண்களும், அடிமைப் பெண்களும் பணிப்பெண்களும் தேவரடியார்களாகப் பணி செய்யப் பணிக்கப்பட்டார்கள் எனக் கூறுகிறார்.

இங்கனம் பணி செய்த பெண்டிர் கடவுளுக்குப் படைக்கப்படும் பிரசாதத்தையே உணவாக உண்டு வந்திருக்கிறார்கள். இவ்வாறு கடவுள் பணி செய்த பெண்டிரைத் தம் காம இச்சைக்காக மனிதர்கள் பயன்படுத்தத் துவங்கினார்கள். அவர்களைத் தேவதாசி என்று கூறி பொட்டுக் கட்டிப் பொதுமகளிர் ஆக்கினார்கள்.

சில குடும்பங்களில் மூத்த குழந்தை பெண்ணாகப் பிறந்தால் அவர்களை இறைவனுக்கு அர்ப்பணித்தல் என்ற முறையில் கோயிலுக்கு நேர்ந்து விட்டிருக்கிறார்கள். அடுத்து ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என்ற ஆசையில். இப்போதும் கூட ஆடு மாடுகளைப் போலப் பெண் குழந்தைகளை வேறு மாநிலங்களில் கோயிலுக்கு நேர்ந்துவிடுதல் நடக்கத்தான் செய்கிறது.

கடவுளின் பணியாளர்களைக் காமத்தின் வடிகால்களாக்கியது  யார் அல்லது எது.? பெண்ணைப் போகப்பொருளாக, அடிமையாகக் கருதும் மனப்பான்மைதான் காரணம்.  இதற்குப் பெரும் முயற்சி எடுத்து டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி அவர்களின் காலகட்டத்தில் தடைச்சட்டம் கொண்டுவரப்பட்டது.

தேவதாசி என்ற சொல்லை முதன்முதலில் குறிப்பிடும் கல்வெட்டு கர்நாடகத்தில் உள்ள அலனஹள்ளியில் காணப்படுகிறது. (கி.பி1113).கர்நாடகத்தில், ஒரு பெண், அவள் வயதுக்கு வருவதற்கு முன்பாகத்தான் அர்ப்பணிக்கப்பட வேண்டும் என்ற வழக்கம் இருந்தது. ஆந்திரப் பிரதேசம் கிருக்ஷ்ணா மாவட்டத்தில் கல்வெட்டு ஒன்று, நாகேஸ்வர சுவாமி கோயில் பணியில் எட்டு வயதே நிரம்பிய சிறுமிகள் இருந்ததைக் குறிக்கிறது’ என தேவதாசி மரபு என்ற நூலை எழுதிய பி. எம் மருதம் குறிப்பிடுகின்றார்.தேவநகரியில் உள்ள ஹரப்பனஹல்லி தாலுகாவில் உத்தராங்க் மாலா துர்க்கா கோயில் உள்ளது.  இங்கே பெண் குழந்தைகள் தேவதாசிகளாகக் கோயிலுக்கு அர்ப்பணிக்கப்படுவதாக ஒரு என் ஜி ஓவின் எஸ் எல் ஃபவுண்டேஷனைச் சேர்ந்த ஒருவர்  புகார் அளித்ததின் பேரில் ஃபிப்ரவரி 14 ல் சுப்ரீம் கோர்ட் எந்தப் பெண்ணும்/சிறுமியும் தேவதாசியாக கோயிலுக்குக் கொடுக்கப்படக் கூடாது என்று தடைச்சட்டம் விதித்துள்ளது.
மேலும் இந்த தேவதாசி பாரம்பரியத்தை ஒழிக்க வேண்டும் என்றும் இது தேசிய அவமானம் என்றும் கர்நாடக அரசை வலியுறுத்தி உள்ளது. தேவதாசிகள் கடவுளுக்குக் காலம் தோறும் பணி செய்ய அர்ப்பணிக்கப்பட்டவர்கள். ஆனால் அவர்கள் மனிதர்களின் இச்சை தீர்க்கப் பணிக்கப்பட்டார்கள் என்பதே காலத்தின் கொடுமை.
 ஆயி என்ற தாசியின் வீட்டைக் கடந்த கிருஷ்ணதேவராயர் அவள் வீட்டின் முன்புறம் பூக்களால்  அலங்கரிக்கப்பட்டு சந்தனம் அகில் சாம்பிராணிப் புகை வீச ஏதோ கோயிலோ என வணங்கினார் எனவும் அது ஒரு தாசி இல்லம் எனத் தெரிந்தவுடன் அவளைக் கைது செய்தார் எனவும் அவளது நல்லுள்ளம் அறிந்து அவளுக்காக ஆயிகுளம் என்ற ஒன்றை வெட்டினார் எனவும் படித்திருக்கிறேன். இன்றும் பாண்டிச்சேரியில் ஆயி மண்டப் என்று அந்த குளம் இருந்த இடத்தில் ஒரு பூங்கா இருக்கிறது.

குழந்தைகளையும் பெண்களையும் திருநங்கைகளையும் காமம் தீர்க்கும் பணியில் ஈடுபடுத்துவது என்பது பல்நெடுங்காலமாகத் தொடர்ந்து வருகின்றது. தொழில்களை இண்டஸ்ட்ரி எனக் குறிப்பிடப்படுவதைப் போல செக்ஸ் இண்டஸ்ட்ரி என்றும் அதில் ஈடுபடுபவர்களைக் கமர்ஷியல் செக்ஸ் வொர்க்கர் என்றும் குறிப்பிடுகின்றார்கள்.

மஞ்சள் பத்ரிக்கை, நீலப்படம் , சிவப்பு விளக்கு ஏரியா என நிறங்களைக் கூடக் காமத்தின் வயமாகத் திருப்புதல் மனிதருக்கே சாத்தியம். பல பெண்களை வைத்துத் தொழில் செய்வோரை பிம்ப் என்றும் மேடம் என்றும் கூறுகிறார்கள். ஜாதி மதம் இனம் பார்க்காத தொழில் இது ஒன்றுதானாகத்தானிருக்கும். குழந்தைகளும் பெண்களும் கடத்திவரப்பட்டு விற்கப்படுதல், காமத்தொழிலில் ஈடுபடுத்தப்படுதல், பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்படுதல் குறித்துப் பார்த்தால் ரத்தமே கொதிக்கும்.

இதிலும் கன்னிப் பெண்களை விற்கவென்றே ஒரு உலகளாவிய கும்பல் இருப்பதாகவும் உக்ரேன் தேசத்துப் பெண்களுக்கு மிகுந்த விலை கொடுக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. கமல் நடித்த மகாநதியும், லியம் நீசன் நடித்த டேக்கன் படமும் பார்த்துவிட்டுப் பதறியது மனம். ஷேக் ஒருவருக்குக் கடத்தி விற்கப்படும் தன்னுடைய பதின் பருவ மகளைத் துரத்திச் என்று கண்டுபிடித்து அழைத்து வரும் தந்தையின் துயரத்தையும் உணர்வுகளையும் ஆழப் பதிய வைத்த படம் அது.

இதில் விரும்பி ஈடுபடுபவர்கள் நளினி ஜமீலா, நீலப்படத்தில் விருப்பப்பட்டு நடிப்பதாக கூறும் சந்தியா ஆகிய ஒரு சிலரைத் தவிரப் பலர் வாழ்க்கையை நடத்திச் செல்லவும், பணத்தேவைக்காகவுமே ஈடுபடுகிறார்கள். அல்லது ஈடுபடுத்தப் படுகிறார்கள். அப்பா, அம்மா, சகோதரன், உறவினர்கள்,  கணவன் போன்றோர் இவர்களை இந்தப் பாழும் தொழிலில் தள்ளியவர்களாக இருக்கிறார்கள். சினிமாவில் நடிக்கும் ஆசையில் பலர் வந்து இந்தத் தொழிலில் மாட்டிய கொடுமையும் இருக்கிறது.

இன்னும் ஜெர்மனி, போன்ற தேசங்களில் இதன் ப்ரோக்கர்கள் 70 சதவிகிதப் பணத்தை எடுத்துக் கொள்வதாகவும் இந்தப் பெண்களுக்கு 30 சதவிகிதமே கிடைப்பதாகவும் கூறப்படுகிறது. ஜெர்மனியில் இதன் கொடுமை அதிகம் இருப்பதாகக் கூறப்படுகிறது. மேற்காசியப் பெண்களும் உக்ரேன் பெண்களும் ( ரஷ்யப் பிரிவினைக்குப்பிறகு ) இங்கே அதிக அளவில் வந்து பாலியல் தொழிலில் ஈடுபடுவதாகவும் அதன் வன்கொடுமைகளை அனுபவிப்பதாகவும் கூறுகின்றார்கள்.

லண்டனில் பால் வினைத் தொழில் புரிவோர் தங்கள் வீட்டிற்கே கஸ்டமர்களை அழைத்து வரப் போராட்டம் நடத்துகின்றார்கள். செண்டர்ல் லண்டனில் சோகோ என்ற ப்ளாட்டுகளில் இருந்த  பெண்களை டிசம்பர் 4, 2013 அன்று பால்வினைத் தொழிலாளிகள் என்று அவர்களை உள்ளாடையுடன் இழுத்துவந்து போலீசார் ரெய்டு செய்து கைது செய்தது மிகப்பெரும் கலவரத்தை ஏற்படுத்தியுள்ளது.

நிக்கி ஆடம்ஸ் என்ற குழு இது பற்றிக் கூறுகையில் கைது செய்யப்பட்ட பெண்கள் பாதுகாப்பான இடத்தில் இருப்பதை இது குலைத்துள்ளது என்றும் அவர்களின் கடன் மிகவும் அதிகமாகிவிட்டதாலும் வீடற்ற நிலைக்குத்தள்ளப்படப் போவதாலும் இதில் ஈடுபட்டனர் என்று கூறுகின்றனர். இதில் பாதுகாப்பற்ற நிலையில் தெருக்களில்  விபசாரம் செய்த இரு பெண்கள் கொலையுண்டதையும் குறிப்பிடுகின்றார்கள்.மேலும் போலீசார் சொல்லும் கடத்தல், ரேப், இது எல்லாம் இதனால் அதிகரிக்கும் என்பதெலாம் பொய் எனவும் கூறுகின்றனர். “  NO BAD WOMEN. JUST BAD LAWS"   ” OUTLAW POVERTY NOT PROSTITUTION "என்ற பதாகை தாங்கி தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

எய்ட்ஸ், ஹெச் ஐ வி, பால் வினைநோய்கள் தொற்றும் அபாயம் இருந்தாலும் கர்நாடகத்தில் மட்டும் இதில் ஈடுபடும் பெண்கள் 85, 000 பேர் இருப்பதாக ஒரு சர்வே கூறுகிறது. இன்னும் இந்தியா முழுவதும்  இரண்டு மில்லியன் பெண்கள் இத்தொழிலில் இருக்கிறார்களாம்.

சேஃப் செக்ஸ் பற்றியும் உறைகள் பயன்பாடு குறித்தும் பேசப்படுகின்றது. இதை முற்றிலுமாக ஒழிக்க முடியாது என்றும் இதை ஒழித்தால் சமூகத்துக்கு மிகப் பெரும் பிரச்சனைகள் ஏற்படும் என்றும் ஷைலா சாமுவேல் என்ற ஒரு பெண் சமூகவியலாளர் கூறினார். பாலியல் தொழிலை முடக்குவதன் மூலம் அதை நாடுபவர்கள் இளம்பெண்கள் , குழந்தைகளைக் கடத்தக் கூடிய சீரழிக்கக் கூடிய அபாயம் பெருகிவிடும் என்றும் பாலியல் தொழிலாளிகளே மக்களின் முறையற்ற காமத்தை நெறிப்படுத்துவதாகவும் கூறினார். இந்தத் தொழிலுக்கு  அரசு அங்கீகாரம்  அளிக்க வேண்டும் என்றும் இதனால் இதன் இடைத்தரகர்கள் இவர்களிடம் இருந்து பிடுங்கும் பணம் எலாம் இவர்களுக்கே சேரும் என்றும் கூறினார். தேவையான மருத்துவ உதவிகளும் அளிக்கப்படவேண்டும் என்று கூறினார். சமூக நலனுக்காக இவர்களைப் பலியிடுவது ஒன்றே வழி என்பது உடன்பாடு இல்லாத கருத்தாகும்..

விபச்சாரத்துக்கு அரசு அங்கீகாரம் கொடுக்கப்பட்ட நாடுகளும் இருக்கின்றன. தாய்லாந்தில் பெண்கள் மிகவும் மென்மையும் அழகும் ஆனவர்களாம். இத்தொழிலில் ஈடுபடுபவர்கள் குறிப்பிட்ட ஒரு ஏரியாவைச் சேர்ந்தவர்கள் மட்டுமேயாம். ஆனால் தாய்லாந்து என்றாலே செக்ஸ் டூரிசம் என்ற ஒரு மோசமான எண்ணத்தை விதைத்து விட்டார்கள்.

EXTERMINATE YELLOW என்று சைனாவிலிருந்து ஹாங்காங்குக்கு வெளியேறும் செக்ஸ் வொர்க்கர்களைத் தடுக்க காவல் கண்காணிப்புக் குழுவும் பலப்படுத்தப்பட்டுள்ளது.  செக்ஸ் ட்ரேடுக்காக எல்லை கடந்த 900 செக்ஸ் வொர்க்கர்களை செஹ்ன்ஷன் என்ற இடத்தில் 6000 போலீசார் சேர்த்து பிடித்திருக்கிறார்கள்.தெற்கு சீனாவில் கிட்டத்தட்ட 2000 மசாஜ் பார்லர்கள், கரோகி செண்டர்கள் , பார்களை மூடியுள்ளது.

ப்ரான்சில் செக்ஸ் தொழிலுக்குத் தடைச் சட்டம் கொண்டு வரப்பட்டது . ப்ராத்தல் நடக்குமிடங்களில் சென்று கைது செய்தது.   மீறினால்  $ 1500 யூரோ முதல்  $ 3,750 யூரோ வரை தண்டம் விதிக்கப்பட்டிருக்கிறது. இதை செக்ஸ் தொழிலாளிகள் எதிர்த்தனர். இதற்குப் பதிலடியாக  (ZEROMACHO) சீரோமெக்கோ என்ற குழுவைச் சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்ணியவாதிகள் செக்ஸ் தொழிலில் ஈடுபடுவது இழிவு என எதிர்த்துள்ளார்கள். பெண்களின் சமத்துவம் முக்கியம் என்றும் அது இதில் ஈடுபடுவதால் இழிவடைவதாகக் கூறி எதிர்த்துள்ளார்கள்.

மேயர் சார்லெட்டி ப்ரிட்ஸ் சார்ப்ரூக்கனில் ஒரு சிப்ஸ் கடையை ஆரம்பிப்பதைவிட எளிதானது ஒரு ப்ராத்தலை ஆரம்பிப்பது என்று கூறி இருக்கிறார். இதில் 6000 ஸ்கொயர் ஃபீட் உள்ள ஒரு புது பிராத்தல் 90 முழு நேர விபச்சாரிகளாலும் 45 பர்மனெட் ஊழியர்களாலும் இயக்கப்படுவதாகக் கூறியுள்ளார்.

ப்ரெஞ்சின் பெண்கள் உரிமைக்கான அமைச்சர்  NAJAT VALLAUD- BELKAACEM  டிசம்பர் 4, 2013 ல் நேஷனல் அசெம்ளியில் புது ப்ராஸ்ட்டியூஷன் சட்டத்தை கொண்டுவந்தார். அதற்கு 268 பேர் ஆதரவாகவும், 138 பேர் எதிப்பாகவும் வோட்டளித்தனர். இந்தச் சட்டம் மூலம் ப்ரான்சே இரு கூறாகிச் சண்டையிட்டு வருகிறது. லிபரடேரியன் மாகசீன் சீசர் என்ற பத்ரிக்கையில் 343 சாலாட்ஸ் என்ற குழுவினர் ( 19 ஆண் பிரபலங்கள் கொண்ட குழு )எங்கள் உரிமைகளில் தலையிடாதீர்கள் என்ற ஸ்லோகனோடு  ஒரு பெட்டிஷனில் கையெழுத்திட்டிருக்கிறது.

இந்தியாவில் மிலாப் ஹோப் ப்ராஜக்ட் ( MILAAP HOPE PROJECT ) என்பது தேவதாசிகளுக்கான மறுவாழ்வு வழங்க உருவாக்கப்பட்டிருக்கிறது. வறுமையாலும் , பட்டினியாலும் வீடற்ற பாதுகாப்பற்ற நிலையிலும் இதில் ஈடுபட்டவர்களுக்கு, உறவினர், நண்பர்கள், அந்நியர்களால் இத் தொழிலில் தள்ளப்பட்டவர்களுக்கு, வேறு மாற்றுத் தொழிலில் ஈடுபட வாய்ப்பில்லாதவர்களுக்காகக் கொண்டுவரப்பட்டுள்ளது இத்திட்டம். இதன் மூலம் நாம் தத்தெடுக்கும் ஒரு கடவுளின் பணியாளருக்கு ( தேவதாசி )  $25 யூரோ முதல் உதவி செய்யலாம். அதை அவர்கள் 18 - 24 மாத கால கட்டத்துக்குள் நமக்குத் திருப்பிச் செலுத்துவார்கள்.

நாம் அளிக்கும் பணத்தைக் கொண்டு அவர்களுக்கு சிறுதொழில்கள் கற்பிக்கப்பட்டு அதற்கான விற்பனை வாய்ப்புக்களும் உருவாக்கித் தரப்படும் என்று கூறுகிறார்கள். சென்னையைச் சேர்ந்த பாலியல் தொழிலாளிகள் ஐந்து அம்சக் கோரிக்கை ஒன்றை அரசிடம் முன்வைத்திருக்கிறார்கள். “ பாலியல் தொழிலாளர்களுக்கென நல வாரியம், முதியோர் ஓய்வூதியம், குழந்தைகளுக்குக் கல்லூரி வரையிலான படிப்புச் செலவை அரசே ஏற்பது, குழந்தைகள் கடத்தப்படுவதைத் தவிர்ப்பது, பாலியல் தொழிலாளிகளுக்கு மாற்றுத் தொழில் ஏற்பாடு செய்து தருவது ஆகியன அந்தக் கோரிக்கைகளாம். இவற்றை வலியுறுத்தி 2000 தொழிலாளிகள் போராடி வருகிறார்கள்.

இவர்கள் இத்தொழிலில் இருந்து மீண்டெழவும் , இவர்களின் வாரிசுகள் இத்தொழிலில் ஈடுபடாமல் தடுக்கப்படவும்  மனிதநேயத்தோடு நம்மால் முடிந்த உதவிகளைச் செய்வோம்.


1 கருத்து :

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...