எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 28 அக்டோபர், 2013

கைபேசியும் ,இணையமும், பெற்றோருடன் இணைக்கிறதா.

கைபேசியும் ,இணையமும், பெற்றோருடன் இணைக்கிறதா.

கண்போன போக்கிலே கால் போகலாமா.. என்றொரு பாட்டு உண்டு. அதில் மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா என்று ஒரு வார்த்தை வரும். இன்று மனம் போன போக்கில்தான் மனிதர்கள் வாழ்கிறார்கள். மேலும் பிள்ளைகளையும் வளர்த்துகிறார்கள்.


நாம் சிறு பிள்ளைகளாய் இருந்தபோது வீட்டில் தொலைபேசி என்ற ஒன்று மட்டும் உண்டு. அதிலும் பிபி கால் என்று போட்டு அரைமணிநேரம் அல்லது ஒரு நாள் கழித்துக் கூடப் பேசுவோம். இப்போதெல்லாம் உள்ளங்கைக்குள் உலகம். ஏன் விரல் நுனியில் உலகம். ஆனால் உறவுகள் எல்லாம் வீட்டுக்கு வெளியே அல்லது வீட்டின் ஏதோ ஒரு மூலையில் அவரவர் கணினி அல்லது கைபேசியோடு. முக்காலே மூணு வீசம் குடும்பங்களில் அம்மாவைத்தவிர எல்லாரும் கைபேசியோடுதான் உண்ணல், உறங்கல், உலா எல்லாம். 

பத்து வயது ஆனவுடன் கைபேசி வாங்கித் தந்துவிடுகிறோம். ஏன் ஒன்றரை வயதிலேயே அதில் கேம்ஸ் விளையாட ஆரம்பித்து விடுகின்றார்கள் வாண்டுகள். பள்ளி செல்லும் பிள்ளைகள் , வேலைக்குச் செல்லும் பெற்றோர் என்ற சூழலில் ஒவ்வொரு குழந்தையிடமும் அதிகாரபூர்வமான செல்ஃபோன் ஒன்றும், சில பிள்ளைகளிடம் அதிகாரபூர்வமற்ற செல்ஃபோன் ஒன்றும் இருக்கிறது. அது என்ன  அதிகார பூர்வமற்ற செல்ஃபோன்... அவர்களின் நண்பர்கள் ( கூடா நட்பு ) பரிசளிக்கும் கைபேசிதான் அது.

நாள்பூராவும் செல்லுடனே உலாத்துவார்கள் பிள்ளைகள். ஆனால் பெற்றோருடன் ஒரு சில மணித்துளிகள் கூட பேசவே மாட்டார்கள். பிள்ளை /பெண் வீடு பத்திரமாய் வந்தார்களா என விசாரிக்கப் பெற்றோர் தொடர்பு கொண்டாலும் கூட நாட் ரீச்சபிள் என்றோ அல்லது தொடர்பு எல்லைக்கு வெளியே இருக்கின்றார்கள் என்றோ வரும். அப்படி எங்கே தொடர்பு எல்லைக்கு வெளியே போனார்கள் என்று தேடினால் படுக்கையில் படுத்துப் போர்வையைப் போர்த்திக் கொண்டு நடு சாமத்தில் தோழன்/தோழி கூடப் பேசிக் கொண்டோ , குறுந்தகவல் அனுப்பிக் கொண்டோ இருப்பார்கள்.கைபேசிக்கு என்ன தேவைக்காக பிள்ளைகளுக்கு வழங்கப்பட்டதோ அதைத் தவிர எல்லாவற்றுக்கும் அது உபயோகப்படும்.

மிஸ்டு காலைக் கண்டுபிடித்தவர்கள் நாம்தான். போனில் பாலன்ஸ் இல்லாவிட்டால் மிஸ்டு கால் கொடுத்தால்  அவர்கள் திரும்பப் பேசுவார்கள். ஆனால் அதில் சில சிக்கல்களும் இருக்கின்றன. பக்கத்து வீட்டுப் பெண்ணுக்கு ஒரு கால் வந்து உடனே கட்டாகி விட்டது . மிஸ்டு காலை வைத்து அந்தப் பெண் திரும்ப அழைத்தால் மிஸ்டு கால் கொடுத்தவர் ஏதோ அந்தப் பெண் தான் தன்னை அழைத்தாகக் கூறிக் குழம்ப வைத்தார். இதைத் தொடர்ந்து அந்தப் பெண்ணின் எண்ணைச் சேமித்து இரவு நேரங்களில் தவறான மெசேஜ் கொடுப்பது, அண்டைமில் போன் செய்து நாகரீகமில்லாமல் பேசுவது எனத் தொல்லை தொடர்ந்தது. பள்ளி செல்லும் பெண் படிக்க முடியாமல் கவனச்சிதறல் ஏற்பட்டது. இதை என்ன செய்வது எனத் தெரியாமல் அந்தப் பெண் தவிக்கும்போது அடுத்த முறை கால் வரும்போது சைபர் க்ரைமில் புகார் செய்து விட்டதாகவும் அந்த ஆளின் பேச்சு டேப் செய்யப்படுவதாகவும் சொல்லச் சொன்னேன். பயந்து போனை கட் செய்தான் அந்த ஆண். அதன் பின் சுவிச்டு ஆஃப் என்று வந்தது. அதன் பின் அந்த அநாமதேய போன் தொல்லை ஒழிந்தது. 

மொபைல் மேனர்ஸ் என்ற ஒன்று இருக்கிறது. அதன் படி பொது இடங்களில், பேருந்துப் பயணங்களில், ஷாப்பிங்க் மால்களில், சினிமா தியேட்டர்களில், ரெஸ்டாரெண்ட்களில், இருக்கும்போது பிறர் கவனிக்கும்படி போனில் உரக்கப் பேசுவது, தன்னைப் பற்றிய அல்லது குடும்பம்,வீடு, வீட்டு முகவரி, படிப்புப் பற்றிய தகவல்களைச் சொல்லாமல் தவிர்ப்பது நலம். இல்லாவிட்டால் வேலியில் போற ஓணானை காதில் விட்ட கதையாக குத்துதே, குடையுதே என்று தவிக்க வேண்டி வரும். 

பதின் பருவப் பிள்ளைகள் எல்லாரும் இப்போது சோஷியல் நெட்வொர்க்கிங் எனப்படும் முகநூல், ட்விட்டர், மை ஸ்பேஸ், கூகுள் ப்ளஸ் என எல்லாவற்றிலும் இருக்கின்றார்கள். இதில் முகம் தெரிந்து மற்றும் தெரியாத அநேகருடன் நட்பாக இருக்கின்றார்கள். இதன் மூலம் பதின் பருவத்தினருக்கு மட்டுமல்ல., பேரிளம் பெண்களுக்கும் கூட கண்ணுக்குத் தெரியாத அச்சுறுத்தல்கள் இருக்கின்றன. புகைப்படங்கள், ஸ்டேடஸ் மெசேஜ்கள் எல்லாவற்றையும் பப்ளிக் என்ற ஆப்ஷனில் போட்டால் யார் வேண்டுமானாலும் பார்க்கலாம். இதை எல்லாம் தாண்டி தாங்கள் யாருடன் சாட் செய்கின்றோம் எனத் தெரியாமலே சாட் செய்து வருகின்றார்கள். இதற்கு இன்பாச்சுவேஷன் மட்டும் காரணமல்ல. எந்த வயதினராய் இருந்தாலும் காரணமற்ற த்ரில்லும் கூட ஒரு காரணம்.

இணையப் பயன்பாட்டில் எனக்கு முகநூலில் இரண்டு வீடியோக்கள் பகிரப்பட்டிருந்தன. அவை ஏற்படுத்திய அதிர்ச்சி அலைகள் சொல்லி மாளாது. முதல் வீடியோவில் ஒரு பெண் ஒரு வீட்டில் ஒரு படுக்கை அறையில் முகநூலில் சாட் செய்து கொண்டிருக்கிறாள். அப்போது அவளின் தாய் கதவைத் தட்ட உடனே லாப்டாப்பை மூடி தலையணைக்குள் கீழ் ஒளித்து வைத்து விட்டுக் கையில் ஒரு புத்தகத்தோடு கதவைத் திறக்கிறாள். தாய் மகளின் தலையைக் கோதிவிட்டு ஏதோ உணவு தந்துவிட்டு மறைய பெண் கதவைத் திரும்பச் சாத்தி சாட் செய்யத் துவங்குகிறாள்.

இன்னொரு வீட்டில் இன்னொரு ஆண் இதே போல சாட் செய்து கொண்டிருக்க அவனின் அம்மா கதவைத் தட்ட , அவன் உடனே டெஸ்க்டாப்பில் ஸ்க்ரீன் சேவருக்கு மாற்றிவிட்டுக் கதவைத் திறக்கின்றான். அவனின் அம்மாவும் தலையைக் கோதிப் பாலைக் கொடுத்து விட்டு மறைய அவனும் திரும்ப சாட் செய்கின்றான்.

இவர்கள் இருவரும் ரோஸ், ராக் என்ற செல்லப் பெயர்களோடும், ஹல்க், ஹென்னா மோண்டேனா போன்ற ப்ரொஃபைல் பிக்சர்களோடும் சாட் செய்வதால் யார் எனத் தெரியாமல் கொஞ்சிக் கொண்டிருக்கிறார்கள்.  மறுநாள் குறிப்பிட்ட கம்யூட்டர் செண்டரில் சந்திப்பதாக முடிவு செய்து இருவரும் மறுநாள் குளித்து உடை மாற்றி தங்கள் தங்கள் வண்டியில் செல்கின்றார்கள்.

குறிப்பிட்ட கம்ப்யூட்டர் செண்டரின் குறிப்பிட்ட அறையில் அந்தப் பெண் காத்திருக்க, அங்கே வந்த அந்த ஆண் கதவைத் திறக்க , இருவரும் அதிர்கிறார்கள். அந்தப் பெண் “ அண்ணையா’ என்று சொல்லியபடி அதிர்ச்சி ஆகிறார். என்ன நடந்திருக்கிறது என்றால் இருவரும் சகோதர சகோதரிகள். ஒரே வீட்டில் தங்கள் பெட்ரூமில் இருந்தபடி வேறு யாரோ என நினைத்து இருவரும் சாட் செய்திருக்கின்றார்கள். என்ன கண்றாவி இது.

இதேபோல் ஒரு முதியவரும், பள்ளிப் பெண்ணும் சாட் செய்கின்றார்கள். ஒரு நாள் வீடியோ சாட் செய்ய நினைத்து அந்த வழுக்கைத்தலை ஆண் விக் அணிந்து காமிராவை ஆன் செய்கின்றார். அந்தப் பெண் தன் தலைமுடியை முன்னால் இழுத்து விட்டு பனியனின் முன் பகுதி தாழ்வாக இருக்க காமிராவை ஓபன் செய்கின்றார். 

காமிராவில் பார்த்தவுடன் இருவரும் அதிர்ச்சியாக அவர் முன்னி எனக் கத்த, அந்தப் பெண் பப்பா எனக் கூவுகின்றார். இங்கே என்ன அசிங்கம் என்றால் பெற்றவரும் பெண்ணுமே யாரெனத் தெரியாமல் சாட் செய்திருக்கின்றார்கள். 

இதேபோல தென் தமிழ்நாட்டில் ஒரு சிற்றூரில் கல்லூரியில் படித்த பெண் வெளிநாட்டு ஆண் ஒருவருடன் முகநூலில் நட்பு கொண்டிருக்கின்றார். அவருக்கு ஆங்கிலம் சரிவர தெரியாது. இந்தப் பெண்ணுக்கோ ஃப்ரெஞ்ச் தெரியாது. இருவரும் உரையாடியபோது  இவர் இந்தக் கல்லூரியில் இந்த கோர்ஸ் படிப்பதாகத் தெரிவித்து இருக்கிறார். சென்ற வருடம் சுனாமி ரிலீஃப் பண்ட் வழங்க தன் குழுவினருடன் வந்த அந்த ஆண் இந்தப் பெண்ணைப் பார்க்க விரும்ப, அவர் தங்கியிருந்த ஹோட்டலுக்கே இந்தப் பெண் சென்று பார்த்திருக்கிறார். அங்கே என்ன நடந்ததோ தெரியவில்லை.

இந்த வருடமும் வருவதாகச் சொல்ல உஷாரான பெண் தன் முகநூல் கணக்கை முடக்கிவிட்டு அமைதியாகிவிட்டார். ஆனால் அந்த ஆண் சுனாமி ரிலீஃப் பண்ட் குழுவினருடன் கடலூருக்கு வந்த அவர் தன் குழுவினரிடம் கூடத் தெரிவிக்காமல் இந்தப் பெண் படித்த கல்லூரிக்கு வந்து விட்டார். இவரைக் காணவில்லை என பயந்து அந்தக் குழுவினர் போலீசாரிடம் புகார் கொடுத்து விட்டார்கள். 

அவரோ வாட்ச்மேனிடம் வந்து அந்தப் பெண்ணின் பெயரும் படித்த கோர்சின் பெயரும் சொல்லி விசாரித்து இருக்கிறார். அன்று விடுமுறை தினமாதலால் திரும்பத் திரும்ப வாட்ச்மேனிடம் விசாரிக்க பயந்து போன அந்த வாட்ச்மேன் அதைத் தாளாளரிடம் தெரிவித்து விட்டார்.

இந்த விபரம் கேட்டுக் கொதித்துப் போனார் தாளாளர். ஏனெனில் அவருக்கு மிகத் தெரிந்த கௌரவமான குடும்பத்தைச் சேர்ந்த பெண் அவர். உடனடியாக அந்தப் பெண்ணின் படிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு திருமணம் ஆனது. படிக்கும் வயதில் படிப்புத்தான் முக்கியம் என்று கருதாததால் வந்த வினை இது. 

அடலசண்ட் ஏஜ் பிள்ளைகள் பெற்றோரைத் தொல்லையாகக் கருதுவதும், நட்புக்களை மட்டுமே உலகமாகக் கருதுவதும்தான் பிரச்சனைகளின் ஆணிவேர். என் அம்மா அப்பா என்னைப் புரிந்து கொள்ளவில்லை என நினைக்கும் குழந்தைகள் தன் பெற்றோரைப் புரிந்து கொண்டிருக்கின்றார்களா. அவர்களின் பிரச்சனைகள், முதுமை, உடல் கூறு தொடர்பான நோய்கள் என எதையாவது கவனித்து உதவி செய்திருக்கிறார்களா. பிள்ளைகள் படிப்புக்காக கடன்பட்டும், கஷ்டப்பட்டும் உழைக்கும் அவர்களின் தியாகத்துக்கு என்றாவது ராயல் சல்யூட் செய்திருக்கின்றீர்களா. பிரதிபலன் எதிர்பாராமல் கொடுப்பது பெற்றோரால் மட்டுமே இயலும். 

பொதுவாக 18 – 21 வயதில் படிக்கும் பிள்ளைகளின் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் 45 – 50 வயதிருக்கலாம். அவர்கள். அவர்களுக்கும் ஸ்ட்ரெஸ், ஸ்ட்ரெயின், பிபி, சுகர், தைராய்டு, மெனோபாஸ், டிப்ரஷன், பிள்ளைகள் பற்றிய பயம், பாதுகாப்பற்ற உணர்வு, போன்ற தொந்தரவுகள் இருக்கும். அதைக் களைய என்றேனும் முயற்சி எடுத்திருக்கிறீர்களா. உங்கள் உடைக்காக, கல்விக்காக, உணவுக்காக சிறந்ததை வழங்க விரும்பும் அவர்களுக்காக நீங்கள் உங்கள் நேரத்தையாவது செலவு செய்திருக்கின்றீர்களா. அவர்களை உங்கள் தேவைகளைத் தீர்த்து வைக்கும் மணிமேக்கிங் மெஷின்களாக தயவு செய்து பார்க்காதீர்கள். 

பெற்றோர்கள் கடவுள் கொடுத்த வரம் என்றும் அவர்கள்தான் சிறந்த நண்பர்கள் என்றும் கருதுங்கள். உங்கள் பிரச்சனைகளை அவர்களிடம் மனம் விட்டுப் பேசுங்கள். தங்கள் ஊனிலிலிருந்தும் குழந்தை என்ற உயிருள்ள பிரதிமையைப் படைத்திருக்கும் பிரம்மாக்கள் அவர்கள். மேட் பை என்று அவர்கள் உங்கள் உடலில் சைன் செய்வதில்லை.

கல்வி தொடர்பான பிரச்சனைகளை ஆசிரியர்களிடமும், காதல், உடல் பிரச்சனைகளைப் பெற்றோரிடமும், நட்பு, படிப்பு சம்பந்தப்பட்டவைகளை நண்பர்களிடமும் விவாதியுங்கள் தெளிவும் தீர்வும் கிடைக்கும். 

ஒரு பெண்ணை சமூகம் எப்படிப் பார்க்கின்றது. மகளாய், மனைவியாய், தாயாய் , மாமியாராய் இனம் காண்கிறது என ஷாரு ரெங்கெனேகர் என்ற மராட்டி எழுத்தாளர் கூறுகின்றார். ஒவ்வொருவருக்கும் வாழ்வில் உயர ரோல்மாடல்கள் தேவை. அது மிகப் பெரிய சாதனை புரிந்த பெண்ணாக இருக்க வேண்டியதில்லை. அவரவர்களின் பெற்றோராகவும் இருக்கலாம். 

கைபேசியை தேவைக்கு மட்டுமே உபயோகிக்க வேண்டும். தேவையற்ற சமயங்களில் தேவையற்ற தகவல்களை அனுப்பிக் கொண்டிராமல் இருப்பது பாதிப் பிரச்சனைகளைத் தவிர்க்கும். 

இணையத்தில் பொழுது போக்குத்தவிர கிண்டில், அமேசான் போன்ற உபயோகமான தளங்களும் இருக்கின்றன. அவற்றைப் பயன்படுத்தி நிறையப் படிக்கலாம். நிறையக் கற்கலாம். எந்த ஒரு விஞ்ஞானக் கண்டுபிடிப்பையும் ஆக்கத்துக்கும் பயன்படுத்தலாம், அழிவுக்கும் பயன்படுத்தலாம். நாம் எதற்குப் பயன்படுத்துகிறோம் என்பதில்தான் நம் வெற்றி அடங்கி இருக்கின்றது.


7 கருத்துகள்:

  1. பெற்றோர்களின் மன நிம்மதியின்மையை நன்றாக காட்டி இருக்கிறீர்கள். நன்றி

    பதிலளிநீக்கு
  2. மைக்கில் பேசுவதைப்போல் சிலர் பொது இடங்களில் ,இரவு நேர பஸ் பயணத்தில் செல்லில் பேசுவதைக் கேட்க எரிச்சலாக்கத்தான் இருக்கிறது !
    உங்கள் பதிவு அவசியம் பெற்றோர்களால் படிக்கப் பட வேண்டும் !

    பதிலளிநீக்கு
  3. நீங்கள் சொன்ன கண்ணொளி - சில இடங்களில் உண்மை...

    முதலில் பெற்றோர்கள் மாற / திருந்த வேண்டும்...

    பதிலளிநீக்கு
  4. இணையம் சாதக பாதகங்கள் நிரம்பியவை, இளையோரிடம் அவை சிக்கும் போது அவற்றின் நன்மை தீமைகளை உணர்ந்து செயலாற்றும் பக்கும் மிக குறைவாகவே உள்ளது, அதன் முக்கியக் காரணம் இணையம் மற்றும் தொலைதொடர்பு சாதனங்களின் சாதக பாதகங்கள் குறித்து பெரும்பாலான பெற்றோருக்கே விழிப்புணர்வு இல்லை. கல்வி நிலையங்களும், சமூக ஆர்வலர்களும் கூட இவைக் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த தவறிவிடுகின்றனர். அத்தோடு கட்டற்ற இணையத்தின் பேராபத்துக்களை உணராமல் இளையோர் மட்டுமல்ல வயது வந்தோரும் கூட சிக்கி தம் அந்தரங்கங்களை இணையத்தில் தொலைத்து சிக்கல்களுக்குள் ஆகி உள்ளனர். சமூக ஊடகங்கள் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரங்களை பொது ஊடகங்களில் ஏற்படுத்துதல் மிக அவசியம்.


    சமூக ஊடகங்கள் குறித்த எனது பதிவு ஒன்று இங்கே

    பதிலளிநீக்கு
  5. அருமையான கட்டுறை அக்கா...
    முதலில் பெற்றோர்களிடம் மாற்றம் வரவேண்டும்...

    பதிலளிநீக்கு
  6. நன்றி சேகர்

    நன்றி பகவான் ஜி

    நன்றி தனபாலன் சகோ

    நன்றி விவரணன் நீலவண்ணன்

    நன்றி குமார்

    நன்றி ராமலெக்ஷ்மி

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...