எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 17 மே, 2013

பேறுகாலப் ( TRIMESTER) பாதுகாப்பு..

கல்யாணம் ஆயிட்டாலே குழந்தைப் பேறு எப்பன்னு அப்பல்லாம் எதிர்பார்ப்பாங்க வீட்டில உள்ள பெரியவங்க.சொந்தக்காரங்களும் ஒரு ஆறு மாசம் ஆயிட்டா உங்க மகள்/மருமகள் முழுகிட்டு இருக்கிறாளா எனக் கேட்பாங்க.

இப்ப உள்ள நிலைமை என்னன்னா நிறைய தாமதமான திருமணங்கள் . அதனால அவங்க காரியரில் தடைஏற்படாதவண்ணம் பிள்ளைப் பேறுன்னு தள்ளிப் போறதால சிலசமயம் பிள்ளைப் பேறு ரொம்ப தாமதமாயிடுது.


நிறைய ஃபெர்டிலிட்டி சென்டர்களும்( கருத்தரிப்பு மையங்கள் ) உருவாகி வருகின்றன. இக்ஸி முறை இன்னும் பலமுறைகளில் ஆணின் விந்தணு உறை நிலையில் சேமிக்கப்பட்டு பெண்ணின் கருமுட்டையோடு சேர்க்கப்படுகிறது. ஏனெனில் முன்ன 20 வயதில் கல்யாணமான உடனே கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பு அதிகம் இருந்தது. பெண்ணுக்கு 21, ஆணுக்கு 25 இல் இருந்து 30 க்குள் இருக்கும். இப்ப பெண்ணுக்கே 30 க்கு மேல திருமணம் ஆறதால பெண்ணும் ஆணும் தங்கள் பணிச்சுமைகாரணமாக, உடல் நிலை காரணமாக, ஸ்ட்ரஸ், ஸ்ட்ரெயின் காரணமாக, கம்யூட்டரை அல்லது லாப்டாப்பை அதிக நேரம் உபயோகிப்பதன் காரணமாக ( தொடையில் வைத்து ஆபரேட் செய்தால் அதன் சூடு விந்தணுக்கள் உற்பத்தியை பாதிக்கிறதாம்.) பெண்ணுக்கு தைராய்டு காரணமாக கர்ப்பம் தரிப்பது தள்ளிப் போகிறது.

ஆண்கள் குடிப்பது புகைப்பது மட்டுமல்ல. தற்காலத்தில் பெண்களும் குடிப்பதும், புகைப்பதும், அடிக்கடி கருச்சிதைவு செய்து கொள்வதும் கூட குழந்தைப் பேறு தாமதமாக அல்லது குழந்தைகளுக்கு பாதிப்பு நேரிடக் காரணமாகின்றது. கர்ப்பகாலத்தில் பெண்கள் குடிக்கவோ புகைக்கவோ கூடாது.

பெண்ணின் கருக்குழாயில் போதுமான வளர்ச்சியடைந்த கருமுட்டை இல்லாவிட்டால், கர்ப்பப்பையில் நீர்க்கட்டி இருந்தால் கருப்பை வளைந்து இருந்தால், கருப்பைச் சுவர் வீக்காக கரு  சீக்கிரம் கலையும் வாய்ப்பு இருந்தால், ஃபெலோப்பியன் ட்யூப்பில் அடைப்பு இருந்தால், அடிக்கடி டி& சி செய்து இருந்தால் அடிக்கடி தடுப்பு முறைகளை மேற்கொண்டிருந்தால், தைராய்டு அல்லது ட்யூபர்குளோசிஸ் போன்ற குறைபாடுகள் இருந்தால் , ஹார்மோன் இம்பாலன்ஸால், ஈஸ்ட்ரோஜன் குறைபாடால், ஒழுங்கற்ற மாதவிடாயால், குழந்தை பேறு என்பது குதிரைக் கொம்பாக ஆகி விடுகிறது.  சில சமயம் பெண்ணுக்கு உடலுறவின்போது சுரக்கும் திரவத்தில் அமிலத்தன்மை அதிகம் இருந்தால் அது விந்தணுவின் செயல்பாட்டைக் குறைக்கிறது. அல்லது கொன்றுவிடுகிறது,

ஆணுக்கு உள்ள பிரச்சனை என்னவென்றால் விந்தணுக்கள் போதிய அளவில் சுரக்காமலிருந்தல் அல்லது விந்தணுக்களே இல்லாமலிருந்தல். பெண் ஆண் யாருக்குப் பிரச்சனை என்றாலும் இன்றைய நவீன கருத்தரிப்பு முறைகள் மூலம் கணவனின் விந்தணுவை எடுத்து மனைவிக்கு செலுத்தி ( டெஸ்ட் ட்யூப் பேபிஸ்) உருவாக்கப்படுகின்றன. இதற்குப் பலவேறு முறைகள் இருக்கின்றன.

ஆணின் விந்தணு கம்மியாக இருந்தால் அல்லது செயலற்று இருந்தால் விந்து தானம் பெறப்பட்டு கணவன் மனைவி சம்மதத்தின் மூலம் குழந்தை பெறப்படுகிறது. தத்து எடுத்து வளர்ப்பது அல்லது தன்னுடைய மனைவிக்கு பிறந்த குழந்தையை வளர்ப்பது என்பதில் அக்கறை உள்ள கணவன் இதை முடிவு செய்கிறார். மனைவிக்கு கருப்பை தொடர்பான பிரச்சனைகள் இருந்தால் கருமுட்டை தானம் பெறப்பட்டு ஆரோக்கியமாய் இருக்கும் கணவனின் விந்தணு செலுத்தப்படுகிறது. அல்லது இருவருக்குமே குறைபாடு இருந்தால் இரண்டுமே தானம் பெறப்பட்டு மனைவிக்கு செலுத்தப்படுகிறது. குழந்தை பெறவே முடியாத சூழ்நிலையில் வாடகைத் தாய் முறையும் செயல்பாட்டில் உள்ளது.

எனவே தற்காலத்தில் கருத்தரிப்புக்கு முன்னும் டாக்டர்களை கன்சல்ட் செய்யும் ஆலோசனை முறை பின்பற்றப்படவேண்டியுள்ளது.. பொதுவாக கர்ப்பகால பாதுகாப்பு மட்டும்தான் கவனத்தில் கொள்ளப்படும்.. ஆனால் கர்ப்பம் தரிக்கும் முன் மேற்கொள்ள வேண்டிய செக்கப்புகள் பற்றி அரசு மருத்துவமனையில் பணி செய்து ஓய்வுபெற்ற டாக்டர் மாதினி .. கைனகாலஜிஸ்ட். ( தற்போதும் மந்தைவெளியில் ப்ராக்டீஸ் செய்து வருகிறார்).
கர்ப்பத்துக்கு முன்னும் ., கர்ப்பகாலத்தின் போதும் மேற்கொள்ள வேண்டிய செக்கப்புக்கள்., பாதுகாப்பு முறைகள்., மருத்துவம்., உணவு., பயிற்சிகள் பற்றி விழிப்புணர்வுத்தகவல்கள் தந்துதவுமாறு கேட்டேன்.. அவர் கூறிய தகவல்களைத் தொகுத்துள்ளேன்..

டாக்டர் கமலா செல்வராஜும் நானும் சாஸ்த்ரிபவனில் நடைபெற்ற மகளிர்தின விழாவில் சிறப்பு விருந்தினராகவும் சிறப்புப் பேச்சாளராகவும் கலந்து கொண்டோம். அவரும் மகப்பேறு குறித்த தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். அதிலிருந்தும் கருத்துக்களை எடுத்துக் கொண்டேன்.

பொதுவா கர்ப்பம் தரித்தபின்தான் பெண்கள் டாக்டரிம் செக்கப்புக்கு வருவார்கள்.. கர்ப்பம் ஆகுமுன்னே வந்து மருத்துவரை அணுகி தங்களுக்கு ஏதும் உடல் கோளாறு  இல்லை என செக்கப் செய்து கொள்வது தாய்க்கும் சேய்க்கும் நலம் பயக்கும். இதயத்தில் மர்மர் சத்தம்., தைராய்ட்., இரத்த அழுத்தம். , ஹீமோக்ளோபின்.,  ஃபைப்ராயிட் கட்டிகள் இருக்கா என எல்லாம் செக் செய்து கொள்ள வேண்டும். அதற்குத் தகுந்த மருந்துகள் எடுத்துக் கொள்ள வேண்டும்.


உடல்நலக் கோளாறு இல்லையா., சர்க்கரை இருக்கா., எல்லா தடுப்பு ஊசிகளும்  ( ஜெர்மன் மீசில்ஸ்) போடப்பட்டிருக்கா என செக்கப் செய்து கொள்வது ப்ரி கன்சப்ஷன் செக்கப் எனப்படுகிறது PRE CONCEPTION CHECK UP ஐ PRE CONCEPTION CLINIC சென்று செய்து கொள்வது அவசியம். அதன் பின் கருத்தரிப்பது நல்லது.

கர்ப்பம் தரிப்பது தாமதப்பட்டால் ஃபோலிக் ஆசிட் குறைபாடு இருந்தால் ஃபோலிக் ஆசிட் எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. அது நரம்பு மண்டல வளர்ச்சிக்கு முக்கியமானது. கருத்தரிக்கும் முன்பே போடலாம். இந்த ஃபோலிக் ஆசிட் குறைபாட்டினால் குழந்தைகளுக்கு நரம்பு மண்டல வளர்ச்சியும் , மூளை வளர்ச்சியும் பாதிக்கப்படும். இந்தக் குறைபாட்டால் கருச்சிதைகளும் ஏற்படலாம்.

முதல் மூன்று மாதம்., இரண்டாவது மூன்று மாதம்., மூன்றாவது மூன்று மாதம் என மூன்றாக ( TRIMESTER) கர்ப்பகாலம் பிரிக்கப்படுகிறது. ஆரம்பகால மூன்று மாதங்களில் தலைசுற்றல் ., வாந்தி, அசதியாக இருப்பது., குமட்டல் இருப்பது என சில அறிகுறிகள் இருக்கும். பொதுவா எடை  ஏறாது.. அல்லது கொஞ்சம் குறையவும் செய்யலாம். இப்படி இருந்தா சிறுநீர் ., மற்றும் ரத்தத்தைப் பரிசோதனை செய்யணும் . கொஞ்ச நாள் கழித்து இரட்டைக் குழந்தையா., குழந்தையின் இதயத் துடிப்பு  சரியா இருக்கா., கர்ப்பம் உள்ளே இருக்கா., அல்லது வெளியெ இருக்கா ., குழந்தையின் உறுப்புக்களில் பிரச்சனை இருக்கா., தாய்க்கு ஃபைப்ராயிட் ., ஓவரி கட்டிகள் இருக்கான்னு ஸ்கேன் செய்து கொள்வது நல்லது.

ஸ்கான் கட்டாயம் செய்ய வேண்டுமென்பதில்லை.. ஆனால் செய்து கொண்டால் நல்லது. சிலர் இதெல்லாம் தெரிந்து கொள்ள செய்வார்கள். பாலிசிஸ்டிக் ஓவரியன் டிசீஸ்-- பி.சி.ஓ.டி.   (சினைப்பையில் சிறிய நீர்க்கட்டிகள் ) அல்லது செப்டிசீமியா எனப்படும் கரு உள்ளேயே சிதைவுறுதல் ஆகியன கண்டுபிடிக்கப்படும்.
இப்படி கரு உள்ளேயே சிதைந்து விட்டால் உடனடியாக கண்டுபிடிக்கப்பட்டு டி & சி அல்லது  சிசேரியன் செய்யப்படவேண்டும் அல்லது அது தாயின் உயிருக்கே ஆபத்தாக அமையும்.

முதல் மூன்று மாதத்திற்கு மாத்திரை ஏதும் கொடுப்பதில்லை.எது வேண்டுமானாலும் சாப்பிடலாம். அடிக்கடி கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட வேண்டும். பொதுவா வெயிட் ஏறாது. சிலருக்கு குறைய வேறு செய்யும்.

கர்ப்பகாலங்களில் எந்த உடல் நலக்குறைவு ஏற்பட்டாலும் மருத்துவரை அணுகி அவர் பரிந்துரைக்கும் மருந்துகளைத்தான் சாப்பிட வேண்டும். இன்னொரு ஸ்கான் 11 முதல் 13 வாரத்தில் செய்ய வேண்டும். டவுன் சிண்ட்ரோம் பேபியா., உறுப்புகள் சரியான வளர்ச்சி  உள்ளதா ., என பார்க்க முடியும். அதற்கு அறிகுறிகள் இருந்தால் ப்ளட் டெஸ்ட் செய்து ஸ்கான் செய்வதால் தெரியவரும்.

முடிந்தவரை  கர்ப்பகாலத்தில்  எக்ஸ்ரேக்கள் எடுக்காமல் இருப்பது நல்லது. அதன் கதிர்கள் கர்ப்பத்தில் இருக்கும் சிசுவைப் பாதிக்கலாம். மேலும் காய்ச்சல்,தலைவலி, சளி போன்றவற்றிற்குக்கூட டாக்டரிடம் ஆலோசனை பெற்றபின்பே மருந்துண்ண வேண்டும். பல் தொடர்பான பிரச்சனைகள், பல் எடுத்தல் போன்றவற்றை டாக்டரிடம் கேட்டுவிட்டே செய்யவேண்டும்.

டாக்டர் கவுன்சிலிங்குக்குப் பிறகு முதல் மூன்று மாதங்களில் குழந்தை கொஞ்சம் கொஞ்சமாக வளர ஆரம்பிக்கும் போது ப்ளட் டெஸ்ட்., ஹீமோக்ளோபின்.( HAEMOGLOBIN) , ரத்த குரூப்.,(BLOOD GROUP) ஹெச் ஐ வி ( HIV)  இருக்கா., ஹெப்பாட்டைட்டிஸ் பி ( HEPAPATITIES B) , இவை எல்லாம் செக் செய்து கொள்ள வேண்டும். இது கட்டாயம்.

இரண்டாவது 3 மாதத்தில் இரும்புச்சத்து மாத்திரை., கால்சியம் மாத்திரை எடுத்துக் கொள்ள வேண்டும். 20 வாரத்தில் சிசுவுக்கு ஏதாவது பெரிய குறைபாடு  இருக்கா., உறுப்பு வளர்ச்சி இருக்கா என்று ஸ்கான் மூலம் அறியலாம். டெட்டனஸ்., டிப்தீரியாவுக்கு இன்ஜெக்‌ஷன் 4 முதல் 6 வாரத்தில் ஒரு டோஸ் கொடுக்க வேண்டும் . இரண்டாவது டோஸ் ., 30 அல்லது 3 அல்லது 36 வாரத்தில் கொடுக்க வேண்டும்.

உணவு இரண்டாவது 3 மாதத்தில் கொஞ்சம் கொஞ்சமாக அடிக்கடி சாப்பிடலாம். நிறைய ப்ரோட்டீன் உணவு ( பருப்பில் இருக்கிறது ) அவசியம். கார்போஹைட்ரேட்., ஃபாட்.(FAT) , தண்ணீர் ஆகாரம்., நிறைய எடுத்துக் கொள்ளலாம்.

இயற்கையாய் தயாரிக்கும் சத்துமாவுக் கஞ்சி எடு்த்துக் கொள்ளலாம். ப்ரோட்டீன் நிறைந்த ஆகாரம் முக்கியம். காய்கறி., கீரை., பயிறு வகைகள்., பழம் அதிகம் சேர்க்கலாம். முட்டை, பால், காரட், பழவகைகள் அனைத்தும் எடுத்துக்கலாம். அவ்வப்போது டையபடீஸுக்கும் ஹீமோக்ளோபினுக்கும் செக்கப் செய்து கொள்வது அவசியம்.

மூன்றாவது 3 மாதத்தில் வயிறு பெரிதாகும் அடிக்கடி டாக்டரிடம் காண்பிக்கலாம். தலை கீழே இறங்கி இருக்கிறதா., சரியான வளர்ச்சி இருக்கா என்று. உப்பு ஹீமோக்ளோபின்., சர்க்கரை., இரத்த அழுத்தம்,எடை  ஆகியவை அடிக்கடி சோதனை செய்து கொள்ளலாம். கர்ப்ப ஸ்த்ரி  10 லிருந்து 13 கிலோ எடை ஏறவேண்டும். முதலில் எடை ஏறாது மூன்றாம் மாதத்தில் இருந்து சுமாரா இரண்டு கிலோ எடை ஏறணும்.

நடைப்பயிற்சி ., மூச்சுப் பயிற்சி., ப்ரணயாமம் செய்யலாம்., சத்து மாத்திரை எடுத்துக் கொள்ளலாம். வலி எடுத்தாலோ., உதிரப்போக்கோ., பனிக்குடம் உடைந்து தண்ணீர் வெளியேறினாலோ குழந்தை அசைவு இல்லாமல் இருந்தாலோ ஹாஸ்பிட்டலுக்கு போக வேண்டும். பொதுவா லேபர் பெயின் இருந்தாலும் போகணும். மூச்சுப் பயிற்சி மூலம் வலியை சிறிது சகித்துக் கொள்ள முடியும்.

குழந்தை பிறக்கும் முன்பு சிரமமாக இருந்தால் எபிசிடியாட்டமி ( EPICITIYATAMI) .. சிறிது வெட்டி விடுதல் செய்யப்படும். நஞ்சு கட் செய்து விட்டு உதிரப் போக்கு கட்டுப்படுத்தப்படும்.

குழந்தை பிறந்தவுடன் பால் கொடுத்தல் முக்கியம். அதுக்கு கொலாஸ்டம்னு பேர். பால் நன்றாக வரும். சீம்பால் என்று தமிழில் சொல்வார்கள் . அதுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகம். குழந்தையை துடைத்தவுடன் அம்மாவிடம் கொடுக்கலாம்.

இதை எல்லாம் பேறுகாலத்தில் பின்பற்றி சுகமான பிரசவமாய் அமைந்து தாயும் சேயும் நலமுடன் வாழ வாழ்த்துக்கள்..சிலசமயம் எல்லாம் சரியாகப் பின்பற்றப்பட்டிருந்தும் உயரத்தின் காரணமாக , அதிக எடையின் காரணமாக,  இரத்த அழுத்தம் காரணமாக மேலும் இடுப்பெலும்பு விரிந்து கருப்பை வாய் சரியாக திறக்காததன் காரணமாக, குழந்தையின் தலை கீழ் நோக்கி திரும்பாததன் காரணமாகசிசேரியன் செய்ய நேரிடலாம்.

இதை முடிந்தவரை தவிர்க்க. எடை மிகவும் அதிகரிக்காமலும், நடைப்பயிற்சி, மூச்சுப் பயிற்சி செய்தும், சின்ன சின்ன எளிமையான ஆசனங்கள் ( டாக்டரின் வழிகாட்டுதலின் பேரில் ) செய்தும், உணவில் அதிக அளவு கீரை, காய், பழங்கள் இருக்குமாறும் அமைத்துக் கொண்டால் பிரசுபம் எளிதாக அமையும். மேலும் கர்ப்பகாலத்தில் விபரீதமான திரைப்படங்களைப் பார்ப்பதைத் தவிர்ப்பது நலம்.அவரவர் நம்பிக்கைக்கு ஏற்ப கீதை போன்ற புத்தகங்களைப் படிப்பதும், மனதில் அமைதியான எண்ணங்களை வளர்த்துக் கொள்வதும் குழந்தைக்கு நலம் பயக்கும்.1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...