செவ்வாய், 28 மே, 2013

விலையின்றிப் பெறமுடிவதும் விலையின்றித் தரமுடிவதும்..

போரும் அமைதியும் புத்தகத்தில் விஜயா பதிப்பகத்தின் உரிமையாளர் அண்ணன் வேலாயுதம் அவர்கள் எழுதிக் கொடுத்த வரிகள் இவை.. என்னைப் பொறுத்தவரை இவை வைர வரிகள். போரில் அமைதி என்பது போரை நிறுத்தி மனித குலத்தை நேசிக்கும் அன்பொன்றாலே கிடைக்கூடியதுதானே.


என் பள்ளி ஆசிரியை மைதிலி மிஸ்ஸை ( ஒன்பதாம் வகுப்பு கணக்கு டீச்சர் --
இன்னிக்கு இருக்க கொஞ்ச நஞ்ச கணக்கு அறிவும் அவங்க கொடுத்ததுதான் ) யதேச்சையாக ஒரு ஆயத்த ஆடையகத்தில் சந்தித்தேன். அப்போது என்னுடைய புத்தகம் பற்றிய பேச்சு வந்தது. அவர்கள் கோவையில் விஜயா பதிப்பகத்தில் புத்தகங்கள் வாங்கி வாசிக்கும் வழக்கம் இருப்பதாகவும் என்னுடைய புத்தகங்கள் அங்கே கிடைத்தால் வாங்க இயலும் என்றும் கூறினார்.


 மே 15 அன்று கோவை சென்றிருந்த போது விஜயா பதிப்பகத்தில் என்னுடைய புத்தகங்களைப் பார்வைக்கு வைக்குமாறு வேலாயுதம் அண்ணன் அவர்களிடம் கேட்டேன். என் வேண்டுகோளை ஒப்புக் கொண்டு அங்கே வைக்க அனுமதித்தார்கள்.


வேலாயுதம் அண்ணன் அவர்களை எனக்கு எப்படித் தெரியும் என்று கேட்கின்றீர்களா. அது ஒரு சுவாரசியமான விஷயம். காரைக்குடிப் புத்தகத் திருவிழாவில் தினமணிக்கதிர் போட்டியில் ஊக்கப் பரிசு பெற்ற என்னுடைய சிறுகதையான சிவப்புப் பட்டுக் கயிறு படித்துவிட்டு அண்ணன் அவர்கள் லேடீஸ் ஸ்பெஷல் பத்ரிக்கை ஆசிரியை திருமதி கிரிஜா ராகவன் மேடத்திடம் என்  ஃபோன்  நம்பரை வாங்கி என்னிடம் பேசினார்கள். மிகவும் அருமையான சிறுகதை என்று பாராட்டினார்கள்.


ஆச்சர்யமும் சந்தோஷம் ஒருங்கே அடைந்த நான் கோவை செல்லும்போது அண்ணன் அவர்களை சந்திக்க எண்ணம் கொண்டேன். தோதாக என்னுடைய ஆசிரியை சொல்லியதும் என் புத்தகங்களோடு விஜயா பதிப்பகத்துக்கு விஜயம் செய்து என் புத்தகங்களை சமர்ப்பித்தேன்.


மிகப் பெரிய புத்தக நிலையம் அது. மூன்று தளங்களிலும் புத்தகங்கள், புத்தகங்கள், புத்தகங்கள்தான். அண்ணன் வரவேற்று இன்முகத்தோடு உபசரித்து தேநீர் வழங்கினார்கள்.  அவர்களுக்கு இரண்டு மகன், ஒரு மகள். ஒரு மகன் தந்தையின் புத்தக நிலையத்தைப் பார்த்துக் கொள்கிறார். இன்னும் பல இடங்களில் விஜயா பதிப்பகத்தின் புத்தக நிலையங்கள் இருக்கின்றன. ஆசியாவிலேயே பெரிய புத்தக நிலையம் அது என்ற தகவலை அண்ணன் அவர்கள் பகிர்ந்து கொண்டார்கள்.

அப்போது  அவர்கள் மேற்கொண்ட ஒரு நிகழ்வைப் பற்றிய உரையாடலோடு என் குடும்பம் பற்றியும்  விசாரித்து நான் வாங்கிய போரும் அமைதியும் புத்தகத்தில் ” விலையின்றிப் பெற முடிவதும் விலையின்றித் தரமுடிவதும் அன்பொன்றுதான் “ என எழுதிக் கொடுத்தார்கள்.  ஆம் இந்த உலகில் விலையற்றது அன்பொன்றுதான். அதைப் போன்றதே   எழுத்துக்கான அங்கீகாரமும்  பாராட்டும்  என்ற சந்தோஷத்தோடு அண்ணன் அவர்களிடம் ஆசீர்வாதம்  வாங்கி வந்தேன். 

டிஸ்கி:- என்னுடைய புத்தகங்கள் ”சாதனை அரசிகள்” மற்றும் ”ங்கா” கிடைக்குமிடம்:- 

டிஸ்கவரி புத்தக நிலையம் - சென்னை
வம்சி புத்தக நிலையம் - திருவண்ணாமலை
மீனாஷி புத்தக நிலையம் - மதுரை
விஜயா பதிப்பகம் - கோவை.
அபிநயா புக்ஸ் - சேத்தியா தோப்பு. 


3 கருத்துகள் :

Manavalan A. சொன்னது…

நான் வாங்கிய போரும் அமைதியும் புத்தகத்தில் ” விலையின்றிப் பெற முடிவதும் விலையின்றித் தரமுடிவதும் அன்பொன்றுதான் “ என எழுதிக் கொடுத்தார்கள். ஆம் இந்த உலகில் விலையற்றது அன்பொன்றுதான். அதைப் போன்றதே எழுத்துக்கான அங்கீகாரமும் பாராட்டும் என்ற சந்தோஷத்தோடு அண்ணன் அவர்களிடம் ஆசீர்வாதம் வாங்கி வந்தேன்.
- Parattukkal.

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி மணவாளன்

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...