எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 24 ஜனவரி, 2013

சிறுவயல் பொன்னழகியம்மன் திருவிழா கவியரங்கத்தில் வேரைத் தாங்கும் விழுதுகள்.

                      
மே மாதம் 1985 இல் சிறுவயல் பொன்னழகியம்மன் திருவிழாவில்
நடந்த கவியரங்கில் ”இலக்கியத்தில் வேரைத் தாங்கும் விழுதுகள்” 
என்ற தலைப்பில் வாசித்த கவிதை.

*கப்பும் கிளையுமாய்ப்
பூத்தலும் காய்த்தலும்
கனித்தலும் பெற்றுக் 
கிளைகளும் இலைகளுமாய்த் தழைத்துத்
திசைதொறும் விழுதுகள் பரப்பிச்
செழித்துச் சிரிக்கும் ஆலமரம்.

*அதன் வேராய்ப் பொன்னழகித்தாய். 

*விழுதுகளாய்ச் சிறுவயலூரார்கள்

*வேருக்கும் விழுதுகளுக்கும்
என் தலை தழைகிறது.

* தமிழ்த்தாய்க்கு :-
*****************

* காற்றாகி, நீராகி,நெருப்பாகி,
மண்ணாகி விண்ணாகி
என் சொல்லாகிச் செயலாகி,
களிப்பாகி, விழிப்பாகி
உயிர்க்கனவாகி, உணவாகி,
சுவாசக்காற்றாகி யாதுமாய் ஆன தமிழே..!
நின்னில் என் சரணம்.

* சாலையோர ஆலமரம் ( சிறுவயல் ) 

* சந்திக்கும் நாற்புறங்கள் ( மேடை)

* சிந்திக்கும் வழிப்போக்கர்களாய் நாம்.

* தலைவர் அவர்களுக்கு:-
*************************

* பாரதிக்குத் தாசனாய் ஓர் பாரதிதாசன்.
கண்ணனுக்குக்த் தாசனாய் ஓர் கண்ணதாசன்
கனவுகளுக்குத் தாசனாய் நம் கவியரங்குத் தலைவர் கனவுதாசன்.
கவிஞர்கள் பெரும்பாலும் கனவுலகுக்குட்பட்டவர்தாம்.
நம் தலைவரோ கனவுகளின் தாசர்.

* தலைவா,
எங்கள் வட்டில்களுக்கும்
உன் அமுத சுரபியிலிருந்து
கனவுப் பிச்சையிடு.

* எங்கள் கவிதைப் பசிகள்
கொஞ்சம் அடங்கட்டும்.

* மக்கள் கவிஞர் அரு. நாகப்பன் அவர்களுக்கு.:-
*******************************************

நீ தேன்..! மலைத்தேன்
நீ சாதித்தேன்..
நீ நம்ம ஜாதித் தேன்
என விளித்து
குடத்திலிட்ட விளக்காய்
கல்லூரிக் கவியரங்குக்கு மட்டும் 
பழகிய என்னைச்
சிறுவலூர்ப் பெருங்குடிக்கு
அறிமுகப்படுத்தியமைக்கு
மனமார்ந்த நன்றிகள் 
மக்கள் கவிஞரே..!

* சக கவிஞர்களுக்கு :- 
********************** 

சித்திரையில்
இத்தரையில்
தங்கள் முத்திரையைப் 
பொறிக்க வந்திருக்கும்
கவிப் பத்திரங்களே..!
உங்கள் கவிதைகள்
இவர்க்கான அஸ்த்திரங்களே..

* பேனாக்கள் மைச்சோறு ஊட்ட
இவர்கள் 
நெஞ்சக் காகிதத்தை
நம் கவிதை நிரப்பட்டும்..

* இலக்கியத்தில் வேரைத் தாங்கும் விழுதுகள் என்பதே என் தலைப்பு. 

* உழவர்கள்.,
இந்த இலக்கிய உழவர்கள்,
அகலவும் ஆழவும்
உழுகிறார்கள், உழுகிறார்கள்
உழுதுகொண்டே இருக்கிறார்கள்.
அது சரி..
விதைப்பதெப்போ..?

* இந்த உழவர்கள்
உழுவது பயிர் செய்வதற்கா?
இல்லை
புதைபொருள் ஆராய்ச்சிக்கா?
இவர்கள் விழிகளை
மூடிக்கொண்டு
ஒளிகளைத் தேடுகிறார்கள்.
கவனமாயிருக்கச் சொல்லுங்கள்,
இவர்கள் வழிகளில்
கிளிகளும் வரலாம்.
விழிகளை விழுங்கும் 
வல்லூறுகளும் படையெடுக்கலாம்.

* இன்றின் இலக்கியச் சேவகர்கள்
ஏன் இன்னும் பழைய்ய
காவியப்பானைகளை வைத்தே
நீர்ப்பந்தல் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்..?

* இந்த அடிமரத்தின் பிரதிகளா
வேரைத்தாங்கும்..?

* வேரைத்தாங்கும் விழுதுகள்..
விழுதுகள் மேலோ பழுதுகள்..?

* எத்தனையோ கவிதா விருட்சங்கள்,
மனத்தடி மண்ணில் விழுதுகள் பதிக்கும்,
ஆனால்
அத்தனை விழுதுகளுமா
விருட்சம் தாங்குகின்றன..?

* இன்றின் நிகழ்வில் விழுதுகள்
விழுதுகள் தோறும் கழுகுகள். 

* கல்யாணச் சீர் பரப்பும்
இந்தக் கவிதா வித்தகர்கள்
சாமான்களை அள்ளித் தெளிக்கக் கூடாது.
அளந்து வைத்தாலே பெருமையுண்டு.

* விழுதுகள் விழுதுகள் விழுதுகள்
அடி வேரில்லாத விழுதுகள்.

* குடும்பத்தின் மருமக்களாய்
இலக்கியத்தில் மரபும் புதுமையும்.

* முத்த மருகளாய் சனாதித்தனங்களை
இறுக்கப் பற்றிக் கொண்டு மரபுக்கவிதை,
இல்லையில்லை , செய்யுள்.

* படித்த புதுமருமகளாய்,
உணர்வுகளின் சுருக்கமாய்,
சொல்செலவுகளைத் தவிர்த்து
மனிதர்களின் மனசுக்கு 
உரையெழுதும் புதுக்கவிதை. 

* இங்கே வேர்விடுதலில்
விழுதுகளுக்குள்ளே போட்டி.

* புதியன புகுதல் அவசியம்.
பழையன கழிதல் அதைவிட அவசியம்.

* காப்பியங்கள்..
அவை இரையெடுக்கப்பட்ட மாடுகள்..
பழம்பெரும் ராஜாளிகளால்
இரையெடுக்கப்பட்ட மாடுகள்.

* இறைச்சியிழந்த மாட்டிலே
புது இராஜாளிகள்
பிண ஆராய்ச்சி செய்யுமா..?

* இலக்கிய உலகின் ஜாம்பவான்களே..!
மேடைகளில் காப்பியங்களைக் குத்திக் கிழித்தே
மரபுவேரைத் தூர்த்து விடுவீர்கள் போலிருக்கிறதே.!

* நீங்களோ வேரையே
செப்பனிட்டுக் கொண்டிருக்கிறீர்கள்.
நிமிர்ந்து பாருங்கள்.,
அவை உங்களால் நிற்கவில்லை.
எங்களின் புதுக்கவிதை விழுதுகளின்
தோள்களின் தாங்கலில்தான் நிற்கின்றன. 

* நாங்கள் கூட்டுச் சேராக் கொள்கைக்காரர்கள் அல்ல.

* இருகூட்டு உடன்படிக்கை
எடுத்துக் கொள்ளவே நினைக்கிறோம்.

* மரபு நடத்துவது முடியாட்சி
புதுக்கவிதை நடத்துவது குடியாட்சி.

* இந்தப் புதுக்கவிதை தேசம்
மரபு சாம்ராஜ்யத்துடன்
நேசம் பூணவே விரும்புகிறது.

* நாமென்ன அண்டை நாடுகளா..?
எல்லைப் போர் செய்ய..?
எல்லைகளற்று விரிந்தவர் நாம்.
நமக்குள்ளா எல்லைப் போர்கள்..?

நீதி நெறி விளக்கத்தில் ‘ தற்புகழ்ச்சி கூடாது ‘
என்ற தலைப்பில் ஒரு செய்யுள்.

“ தன்னை வியப்பிப்பான் தற்புகழ்தல் தீச்சுடர்
நன்னீர் சொரிந்து வளர்த்தற்றால் - தன்னை
வியவாமை அன்றே வியப்பாவ(து)? இன்பம்
நயவாமை அன்றே நலம்.?

இதில் நம்மைப் போன்றோர்க்கு என்ன விளங்குகிறது..?

முடியாட்சிபோல சிலர் மட்டுமே
புரிந்துகொள்ளக்கூடியது இது.

இதே விஷயத்தை உங்களூர்க் கவிஞர்
சிறுவயல் ஜெயமணி அவர்கள் ‘ பௌர்ணமி ‘ இதழில்
‘இரண்டும் சாய்ந்தன’ என்ற தலைப்பில்,

‘அரிக்கேன் விளக்கை
ஆட்டி ஆட்டி
பார்த்தான் பையன்.
எண்ணெய் விளக்கிலும் இல்லை.
வீட்டிலும் இல்லை.
என்ன செய்ய்?
நாளை காலை தேர்வு.
இரவு முழுவதும்
படித்தே தீரணும்.
தேடி எடுத்தான் 
மெழுகுவர்த்தி ஒன்றை.
ஏற்றி வைத்துப் 
படிக்க ஆரம்பித்தான்.
எரிந்த மெழுகுவ்ர்த்திக்கு
எண்ணம் பிறந்தது.
நமது ஒளியில்தானே
இவன் தன்
நாளைய வாழ்க்கை.
எண்ணெயும் திரியும்
நானே ஆகி,
என்னையே உருக்கி
இருளை விரட்ட
தன்னை மறந்து 
படிக்கின்றான் தம்பி.
இவன் தன் படிப்பு
என்றன் கையில்.
இப்படியாக மெழுகுவர்த்திக்கு
தற்பெருமை தலைக்கேறியது.
திடீரென்று பாய்ந்தது காற்று.
சாய்ந்தது வர்த்தி மட்டுமல்ல.
தற்பெருமையும்தான்”

- இது உங்களூர்க்கவிஞர் எழுதியது.

உங்களின் கைதட்டல்களிலிலிருந்தே
புதுக்கவிதையின் குடியாட்சித் 
திறமை தெரிகிறது.

* வயலெங்கும் பயிர்கள்
பயிரிடப்பட்டவையோ
‘வேற்றுமைவாத’மெனும்
பூஞ்சைக் காளான்கள்.

* களையென்று எதனைக் களைவது.?

* இயந்திர யுகக்காரர்களுக்குத்
தலைவாழை இலை போட்டுக்
கல்யாண விருந்துண்க,
காப்பிய விருந்துண்க
அவகாசமில்லை.

* அவர்களின் அவசரப் பசிகளுக்கு
எங்களின் சிற்றுண்டிகளே பெருந்தீனிகள்..

* நாங்கள் 
முக்திக்கு பக்தியை வித்திடும்( வித்து இடும்)
புராணக் காவியங்களல்ல.

* இந்தக் கால விண்வெளியை
உலா வரும் வித்யாசக் கோள்கள்..

* பாலிலிருந்து தண்ணீரை மட்டுமல்ல..
அழுக்கையும் பிரித்தெடுத்து
வெளித்தள்ளும் ஆற்றலுள்ள
அசுர அன்னங்கள்.

* கவிகளின் 
இச்சத்தின் உச்சத்தில் எழுத
எச்சங்களின் சொச்சங்களா கவிதைகள்..?
இல்லை.
இதைச் சொல்ல எங்களுக்கு
அச்சமும் இல்லை.
பாரபட்சமும் இல்லை.

* மரபு மாமியார்களால் இடிக்கப்படும்
இன்றைய மருமக்களாய்ப்
புதுக்கவிதைகள்.

* இவர்கள் நாளைய மாமியார்கள்.!

*இவர்கள் தங்களின்
மருமக்கள் வழி மான்யம் செலுத்துதலையும்
பார்க்கத்தானே போகிறீர்கள்.

* நமக்கென்று சில தானியங்கள்
வெற்றுச் சாக்குகளுடன்.

* வாருங்கள், வாருங்காலத்திற்காய்
நவதான்யங்கள் 
சேர்த்து வைப்போம்.

* சூரிய இரைக்காய்க்
காத்திருக்கும்
தாவரங்கள் நாம்.

* நம் வாரிசுகளுக்காய்ப்
பச்சையம் கருத்தரிப்போம்.

* மனித மனசுகளை
நம் கவிதை விழுதுகளின் கீழ்
ஆக்டோபஸ்களாய்ப் பிடித்து வைப்போம்.

* நம்முடைய நாட்டில்
எத்தனை நிலங்கள் தரிசுகளாய்..
நம் இலக்கிய ஏர்களால் உழப்படாமல்.

* பனைகளையாவது பயிரிட்டு வைப்போம்

* அவை நம் பரம்பரையின்
பசிக்கிறக்கம் விலக்கட்டும்.
தாக விடாய் தீர்க்கட்டும்.

* இந்த மரபு ஆலங்கள்
நாள்தோறும் விழுதுகளாய்,
புதுக்கவிதை விழுதுகளாய்ச்
சுயம் விரிக்கும்.

இரு தேன் 
உன் கவி எங்களுக்கு மதுத்தேன் 
என நீங்கள் சொல்ல ,
நான் இருந்தேன்.

பொறு தேன் 
உன் கவி எங்களுக்குப் போதைத் தேன் 
என நீங்கள் சொல்ல,
நான் பொழிந்தேன்.

கொஞ்சம் கடுத்தே விடு தேன் நீ அறு தேன்
எனப் புகல்வதற்குள் ( புகழ்வதற்குள்) 
நான் கவிதை விடுத்தேன். முடித்தேன்.

கொடுத்தேன் நன்றி அனைவருக்கும். 


5 கருத்துகள்:

 1. கவியரங்கத்தில் உங்கள் தேன் கவிதை...
  ஆண்டுகள் பல கடந்தும் எங்கள் பார்வைக்காக...
  அருமை அக்கா.

  பதிலளிநீக்கு
 2. நன்றி குமார் தொடர்ந்த கருத்துக்கும் ஊக்கமூட்டுதலுக்கும். :)

  பதிலளிநீக்கு
 3. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு
 4. மிகச்சிறந்த கவிதையினை மாணவப் பருவத்திலேயே வழங்கிய தங்கட்கு எளியேனின் நல்வாழ்த்துக்கள்.மீண்டும் எங்கள் ஊரில் உங்கள் கவிமுழங்கவேண்டுகிறேன்.அரு.நாகப்பன்.

  பதிலளிநீக்கு
 5. தங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி மக்கள் கவிஞர் அரு. நாகப்பன் அவர்களே :)

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...