செவ்வாய், 4 ஜனவரி, 2011

நாஞ்சிலார்... விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்...

ரஷ்யன் கல்சுரல் சென்டரில் நாஞ்சிலாருக்கு விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் சார்பாக பாராட்டுவிழா நடத்தப்பட்டது.. புத்தாண்டின் மிகச் சிறந்த ஆரம்பமாக., கோலாகலமாக இருந்தது ..

எஸ்.ரா., பாரதிமணி., பாலுமகேந்திரா., ராஜேந்திர சோழன்., கண்மணி குணசேகரன்., ஞாநி., ஜெயமோகன்., சிறில் அலெக்ஸ்., ஆகியோர் அமைந்த பெரும் சபை அது.. அமைப்பாளர் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் அரங்கசாமி.

நெஞ்சிலிருந்து வந்த வார்த்தைகளை நிறைவாய் வழங்கி., மிக நெகிழ்வாய் இருந்தது அரங்கு.. சிறில் அலெக்ஸின் அறிமுக உரை அருமை.. விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் ராஜகோபால் நாஞ்சிலார் குறித்து ., அவர் படைப்பு குறித்து அருமையான பேசினார்..

சுல்தான் அவர்கள் நாஞ்சிலாரின் நூல்களை கணனியேற்றம் செய்து வருகிறார்கள். அவரை நாஞ்சிலார் கௌரவித்தார்.. ஜே. டி . குரூஸ் நாஞ்சிலாருக்கு சால்வை போர்த்தினார்.. நாஞ்சிலாரின் கான் காசிப் நூலை பாலு மகேந்திரா வெளியிட பாரதி மணி பெற்றுக் கொண்டார்.

பாராட்டு கேக்க எனக்கு பிடிக்கும்.. என்னை அண்ணாச்சி என்பார் நாஞ்சிலார்.. எனவே நிறைய பாராட்டுங்கள் .. நான் கேட்டுக்கொண்டே இருக்கிறேன் என சுருக்கமாக சுவையாக பேசினார் பாரதிமணி ஐயா..

எஸ்ரா.. நாஞ்சிலாரின் மரபு சார்ந்த படைப்புகள் குறித்து பேசினார். எந்த ஊரில் இருந்தாலும் தன் நாஞ்சில் நாட்டை நினைவு கூறும் படைப்புக்களை படைப்பது பற்றியும்., இருக்கும் ஊரின் மரபுகள் பற்றியும்., கூர்மையான அங்கதத்தில் முடியும் அவர் கதைகள் குறித்தும் சுவாரசியமாய் பகிர்ந்தார்..

பாலு மகேந்திரா தன்னுடைய கதை நேரத்தில் மிக முக்கியமான அருமையான படைப்பாளிகளின் படைப்பை தன் மொழியான சினிமாவுக்கு மாற்றும் போது இரண்டு படைப்பாளிகளின் படைப்புக்கும் (எழுத்து ., சினிமா) க்ளாஷ் நேர்ந்துவிடக்கூடாது என்பதாலேயே அவற்றைத் தேர்ந்தெடுக்கவில்லையென கூறினார்.. முதலில் தான் ஒரு பசி மிகுந்த வாசிப்பாளன் எனக் கூறினார்..

ராஜேந்திர சோழன் பேசும் போது., அவர் நாஞ்சில் நாட்டுக்கு மட்டுமல்ல., தமிழ்நாட்டுக்கும் பெருமை தேடித்தந்தவர் என கூறினார்.. இந்த விருது கொடுத்ததன் மூலம் பெருமை பெற்றது எழுத்தாளர் அல்ல .. சாகித்ய அகாதெமியே எனக் கூறினார். நாஞ்சிலாரின் காலத்தில் எழுதியவர்கள் தொடர்ந்து எழுதவில்லை தான் உட்பட.. வெவ்வேறு விழைவுகளில் பிரிந்து விட்டதால் என சொன்ன ராஜேந்திர சோழன் .., எந்தக் காலத்திலும் விடாமல் தொடர்ந்து எழுதியதாலேயே நாஞ்சிலார் இந்த விருதைப் பெற்றார் என கூறினார்.

மிக முக்கியமான விஷயமாக இந்த விழாவினை முன் வைத்து மருத்துவர் விநாயக் சென்னின் விடுதலை குறித்தான கோரிக்கையை முன்வைத்தார் ராஜேந்திர சோழன்..

ஞாநி பேசும் போது இந்த விருதுகளின் பிண்ணனியில் உள்ள சர்ச்சைகள் பற்றியும் ., வழங்கப்படும் விதம் பற்றியும் குறிப்பிட்டார்.. யானை கையில் மாலை கொடுத்து அது யார் கழுத்தில் போடுகிறதோ அவரே ராஜா என தேர்ந்தெடுப்பது குறித்து சொன்ன அவர் சில சமயம் அது குரங்கு கையில் போய் அதுவே பூவெல்லாம் பிய்த்துத் தின்கிறது எனவும் பேசினார்.

இந்த வருடம் மிகச் சரியான ஒருவருக்குத்தான் பூமாலை விழுந்திருக்கிறது என சொன்னார்.. எல்லா விருதுகளை விடவும் இந்த விருதுக்கு மதிப்பு மிக அதிகம் என கூறினார்.. மக்களின் பிரநிதியான ஒரு அரசாங்கம் மிகச் சிறந்த இலக்கியம் படைத்த படைப்பாளியை கௌரவிக்கும் மிக அரிய விருது இது என கூறினார்..

கண்மணி குணசேகரன்.. மிகச் சிறப்பாக அதிரடியாக பேசினார்.. மூன்று கவிதைத் தொகுதிகள்., பல கதைத் தொகுதிகள்., பல நாவல்கள் என வெளியிட்டுள்ள இவரின் பேச்சில் முந்திரிக் காட்டின் மண் மணம் அதிகம்.. புளிய மரம் எதையும் வளரவிடாது.. ஆனால் முந்திரிக்காடு எல்லாவற்றையும் அரவணைத்துச் செல்லும் என கூறினார். மிகச் சிறந்த படைப்பாளியாக அறியப் பெறும் இவர் அடுத்த சாகித்ய அகாதெமி விருது பெறவேண்டும் என்ற விருப்பம் அனைவர் பேச்சிலும் வெளிப்பட்டது.

இவ்வாறு விருது பெற்றவர்களுக்கு அரசு தனது சார்பாய் இலவச பேருந்து பயணம்., ரயில் பயணம்., வீடு தருதல் போன்றவை செய்யலாம்.. மேலும் சட்ட சபையில் ஒரு உரை நிகழ்த்த அழைக்கலாம் என குறிப்பிட்டார்.. விருதுத் தொகையையும் அதிகப்படுத்திக் கொடுக்கவேண்டும் என கூறினார்..

ஜெயமோகன் பேசும் போது நாஞ்சிலாரின் கதைகளில் ., பகிர்வுகளில் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாகத் தொடர்ந்து வரும் சில உணர்வுகளைக் குறிப்பிட்டார்.. ஒரு விருந்தில் அமர்ந்திருப்பவர் ., முக்கியமான ஒரு விருந்தாளி வந்ததால் எழுப்பிவிடப்பட அந்த உணர்வோடே வருத்தமாக வீட்டிற்கு சாப்பிடாமல் செல்வதான தனது முதல் கதையிலிருந்து இன்று வரை இன்னொரு உலகம் இருக்கிறது .,ஒரு நிறைவடையாத உணர்வு என்பதான ஒன்று.. அந்த உணர்வு அவருடைய எல்லாக் கதைகளிலும் தொடர்ந்து வருகிறது என கூறினார்.. அவருடைய மெல்லிய அங்கதம்., கசப்பும் கோபமும் கலந்த மொழி நடை., கும்ப முனி வாயிலாக அவர் காட்டும் யதார்த்த உலகம் ., பேச்சு வழக்கு., உணவு குறித்தான அவரது பரந்து விரிந்த அனுபவமும் பார்வையும் என ஜெயமோகன் ஒரு மிகச் சிறந்த எழுத்தாளராயிருந்தும் மனம் விட்டு நாஞ்சிலாரைப் பாராட்டினார்.. சக எழுத்தாளனை பாரபட்சமின்றி புகழ்வதும் . , ஒன்றி இருப்பதும் வியப்பானதுதான்..

நாஞ்சிலார் தனது ஏற்புரையில் தன்னைவிட தகுதியான பலர் இருக்கிறார்கள் என குறிப்பிட்டார்.. தன்னைத் தானே வியத்தலும் இலமே என்பதனை நான் கண்டேன்.. எவ்வளவு பெரிய படைப்பாளிகள்.. இவர்கள் எல்லாம்.. தன்னை விட வயதில் முதிர்ந்த படைப்பாளிகளான ஆ. மாதவன்., மற்றும் தன்னை விட வயது குறைந்த படைப்பாளியான கண்மணி குணசேகரன் எல்லாருமே பெறத் தகுதியானவர் என குறிப்பிட்டார். இன்னும் பலர் இருந்தும் தனக்கு கிடைத்திருக்கிறது என அவையடக்கத்தோடு குறிப்பிட்டார். பல மொழியாக்கங்கள்., திரைப்படமான கதை., கவிதைத் தொகுதிகள்., கட்டுரைத் தொகுதிகள்., நாவல்கள்., என சொல்லிக் கொண்டே செல்லலாம்.. எளிமை., யதார்த்தம்., என்பதே இவரின் பகிர்வுகளின் சிறப்பு.. இவ்வளவு சிறப்பிருந்தும் எல்லோரோடும் எளிமையாகப் பழகுகிறார் என்பதும்., அணுக்கத்திற்கும்., இந்தப் பேரன்பிற்கும் உரியவராயிருக்கிறார் என்பதும் பெருஞ்சிறப்பு..

நேற்றைய விழா அரங்கம் நிரம்பி., நின்றுகொண்டே நிறையப் பேர் கலந்து கொண்டார்கள்.. சட்டசபைக்கு நிகராக அழகான ரஷ்யன் கல்சுரல் சென்டரின் அரங்கும் ., பெரும் எழுத்தாளர்களும்., இயக்குநர்களும் ( மணிரத்னம் வந்திருந்தார்) ., படைப்பாளிகளும்., பதிப்பகத்தாரும்., வலைப்பதிவர்களும் கலந்துகொண்டு குடும்பத்தின் மூத்தவரின் ஆண்டு நிறைவை நிறைவாகக் கொண்டாடுவதன் ஒத்திசைவோடு நிகழ்ந்தது விழா..

தமிழ்நதி ராஜேந்திரன்., சுகா., அண்ணா கண்ணன்., மதுமிதா., உஷா ராமச்சந்திரன்., நிர்மலா., சுகா., கிழக்குப் பதிப்பகம் பத்ரி ., உண்மைத் தமிழன் ஆகியோரை சந்தித்தேன். மொத்தத்தில் இன்று ஆரம்பிக்கப் போகும் புத்தகத் திருவிழாவின் முன்னோட்டமாக இருந்தது அது . நண்பர்கள் கூடி இழுத்த தேரோட்டம் அது.. ஊரே தாம்புக் கயிற்றைப் பிடித்து நிலை வரை இருந்து கொண்டு சேர்த்தது..

கடைசி வரை இருந்து., விழா முடிந்தும்., பிரமிப்பாய் ஒருவரோடு ஒருவர் அளவளாவிக் கொண்டிருந்து விட்டு வீடு திரும்பியதும் நினைத்துக் கொண்டேன்.. எப்பேர்ப்பட்ட கூட்டத்தில் இருந்து விட்டு வந்திருக்கிறாய் நீ.. அடுத்த வருடமாவது புத்தகத் திருவிழாவுக்குள் ஒரு கவிதை புத்தகம் வெளியிட்டு விட வேண்டும் என.. .. என்னைப் போல சிறிய வலைத்தளவாசிகளுக்கும் இந்த மாதிரி படைப்பாளிகளும் ., அவர் பெறும் விருதுகளும்., அவர்க்காக அன்போடு நண்பர்கள் நடத்தும் விழாக்களும் க்ரியா ஊக்கிகளாய் இருக்கின்றன.. வாழ்க நாஞ்சில் நாடன்., வாழ்க ஜெயமோகன் .. வாழ்க நட்பூ.. வாழ்க விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்..!!!

19 கருத்துகள் :

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan சொன்னது…

நன்றாகத் தொகுத்தளித்துள்ளீர்கள். நன்றி.

இடுகையை.. பத்தி பத்தியாகப் பிரித்து எழுதியிருந்தால் படிப்பதற்கு மேலும் நன்றாக இருக்கும்.

ராமலக்ஷ்மி சொன்னது…

//குடும்பத்தின் மூத்தவரின் ஆண்டு நிறைவை நிறைவாகக் கொண்டாடுவதன் ஒத்திசைவோடு நிகழ்ந்தது விழா..//

முக்கியமான நிகழ்வை மிக அருமையாகத் தொகுத்தளித்திருக்கிறீர்கள். நன்றி தேனம்மை.

இளம் தூயவன் சொன்னது…

அருமையாக தொகுத்து, பிறர் அறியும் வண்ணம் கொடுத்துள்ளிர்கள்.

எம்.ஏ.சுசீலா சொன்னது…

அன்பின் தேனம்மை,
புத்தாண்டு வாழ்த்துக்கள்.
விஷ்ணுபுரம் வட்டத்தில் நானும் ஓர் உறுப்பினர்.
சென்னை விழாவில் நான் கலந்து கொள்ள முடியாத குறையை நீ கலந்து கொண்டு போக்கி விட்டாய்.மிக்க மகிழ்ச்சி.
இன்னும் 6 மாதங்களுக்குள் உன் கவிதை நூல் வர வேண்டும்.அதற்கு வாழ்த்துரை வழங்கும் வாய்ப்பை நீ எனக்கு அளித்தே ஆக வேண்டும்.அன்புடன்....

அமைதிச்சாரல் சொன்னது…

ரொம்ப நல்லா தொகுத்திருக்கீங்க :-)))

raja சொன்னது…

மிக அழகாக எழுத்தாளரது நிகழ்வை தொகுத்து இருக்கிறீர்கள்.

ஆயிஷா சொன்னது…

அருமையாக தொகுத்திருக்கீங்க

புத்தாண்டு வாழ்த்துக்கள்.

என் பிளாக்கையும் எட்டி பார்த்துட்டு போங்க

Gopi Ramamoorthy சொன்னது…

அருமையான பதிவு. நன்றி

சிநேகிதன் அக்பர் சொன்னது…

அருமையான தொகுப்பு.

சீக்கிரம் கவிதை தொகுப்பு வெளியிட வாழ்த்துகள்

தமிழ் உதயம் சொன்னது…

நல்ல இலக்கிய பகிர்வு. புத்தாண்டு வாழ்த்துகள்.

நேசமித்ரன் சொன்னது…

விரிவான,திருத்தமான பகிர்வு
இறுதி வரிகள் இயல்பூக்கம்

வெகு விரைவில் தொகுப்பு வர வாழ்த்துகள் .உங்கள் ஆசான் வாழ்த்துரையுடன்

ஸாதிகா சொன்னது…

தேனம்மை,நல்ல கவிதாயினி மட்டுமல்ல நீங்கள் சிறந்த தொகுப்பாளினியும் கூட.

அ.வெற்றிவேல் சொன்னது…

அருமையான நிழல்படம் போன்ற பதிவு.. அடுத்த புத்தகக் கண்காட்சியின் போதாவது சென்னையில் இருந்து இது போன்ற நிகழ்ச்சிகளுக்குப் போக வேண்டும் என்ற ஆசையை தூண்டிவிட்ட பதிவு.

Starjan ( ஸ்டார்ஜன் ) சொன்னது…

அருமையான தொகுப்பு நன்றி தேனக்கா..

Chitra சொன்னது…

எங்களை உற்சாகப்படுத்தும் அக்காவுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்! எப்படி இருக்கீங்க, அக்கா?
பொங்கலுக்கு ரெடி ஆயாச்சா?

அஹமது இர்ஷாத் சொன்னது…

அருமையான தொகுப்பு. :))

சே.குமார் சொன்னது…

ன்றாக தொகுத்துள்ளீர்கள் அக்கா.

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

நன்றி செந்தில் வேலன்., ராமலெக்ஷ்மி., இளம் தூயவன்., சுசீலாம்மா.. ( அம்மா.. நன்றிம்மா) ., சாரல்., ராஜா., ஆயிஷா., கோபி., அக்பர்., ரமேஷ்., நேசன்., ஸாதிகா., வெற்றி., ஸ்டார்ஜன்., சித்து.,அஹமத்., குமார்..

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...