இருளில் மூழ்கிக்
கிடக்கும் அந்தத் தியேட்டரில்தான் கல்யாணியின் கணவன் படம் பார்த்தேன். 1963 இல் வந்த
படம் திரும்பவும் 1983 வாகிலும் வந்திருந்தது. “நமது ராஜ சபையிலே ஒரே சங்கீதம். அதில்
இரவும் பகலும் தூக்கமில்லை ஒரே சந்தோஷம்” என்ற பாடல் மறக்க இயலாதது. இங்கே மணாளனே மங்கையின் பாக்கியம் போன்ற மாயாஜாலப்
படங்களும், இராஜா ராணிக் கதை உள்ள படங்களும் பார்த்திருக்கிறோம்.
காரைக்குடி முத்துப்பட்டணத்தில்
வ உ சி ரோட்டில் இருக்கும் ஸ்ரீ ராமவிலாஸம் தியேட்டர்தான் அது. சினிமா முடிந்து வந்ததும்
வெளியே இருளில் சாலைகள் எல்லாம் ஜில்லென்று இருக்கும். பரோட்டாக் கடைகளில் முட்டைப்
பரோட்டாவுக்காகக் கொத்திக் கொண்டிருப்பது தாள லயத்தோடு பசியைத் தூண்டும். அப்போதெல்லாம்
வெளியே பரோட்டா எல்லாம் வாங்கிச் சாப்பிட்டுப் பழக்கமில்லை.