வீடு அர்ச்சனா
ஓ வசந்த ராஜா தேன் சுமந்த ரோஜா என்ற பாடலில் இரட்டை ஜடையுடன்
பெரிய பொட்டோடு எளிமையான அழகுடன் காட்சியளிப்பார் அர்ச்சனா. ஜோடி பானுசந்தர். நடுநடுவே
பரதநாட்டிய உடையில் அபிநய முத்திரைகளில் அபாரமான வடிவழகோடு திகழ்வார். அதே பாடலின்
முடிவில் பாலுமகேந்திராவின் ஆஸ்தான கதாநாயகிகளின் உடையான டைட் பெல்ஸ், டாப்ஸில் கடற்கரையில்
ஆடல் இடம்பெற்றிருக்கும். அலையுடன் போட்டிபோடும் கூந்தலுடன் வெகு ஸ்லிம்மாக அழகாக இருப்பார்.
பானுப்ரியா, சுஜாதா போன்றதொரு தீர்க்கமான பார்வை, தெளிவான நடை, உடை, பாவனை, வெகுளிப் புன்னகை, யதார்த்த சினிமாக்களின் நாயகி, தனித்துவத்துடன் நடிக்கும் நடிகை, எந்த சர்ச்சைகளிலும் சிக்காதவர், சவாலான கதாபாத்திரங்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகளில் நடிப்பவர் அர்ச்சனா. ஆர்ட் ஃபிலிம் நடிகை என்று கூட முத்திரை குத்தப்பட்டவர். ஒரியா உட்பட ஆறு மொழிகளில் 30 படங்களில் நடித்தவர். அதிலும் பிரபலமான இயக்குநர்களின் படத்தில் நடித்தவர்.
