ஆயர்பாடி அன்று ஒரே கோலாகலமாயிருந்தது. பசுக்கள் தங்கள் கழுத்து மணியை ஆட்டியபடி பசும் புற்களை மேய்ந்துகொண்டிருந்தன. வைக்கோல் வேய்ந்த குடில்கள் அன்று பசுஞ்சாணம் பூசியிருந்தன. இல்லங்களில் ஆய்ச்சியர் தயிர்கடையும் மத்தொலி கூட சரட் சரட் என்று கால்கள் கீறித் திமில் திருப்பிக் கொம்பசைத்துக் கிளர்ந்து நிற்கும் எருதுகளின் ஹீங்காரத்தை எதிரொலிக்கின்றது.
கொன்றை மரத்திலிருந்து பொன்னிறக் கொன்றைப்பூக்கள் அன்று நிகழப்போகும் ஏறு தழுவலுக்கு ஆசி அளிப்பதுபோல் உதிர்ந்துகொண்டே இருந்தன. ஆமாம் அன்று ஏறு தழுவப் போவது யார் ? அதுவும் ஏழு ஏறுகளைப் தழுவப் போகும் அந்த மாவீரன் யார் ?
வாருங்கள் தங்கள் நீண்ட கூந்தலில் பலவிதப் பூக்கள் அணிந்த ஆயர் மகளிர் ஒன்று கூடும் அந்த மைதானத்தை அடைவோம். அடடே அங்கே உயரத்தில் பரண் எல்லாம் கட்டப்பட்டு பாதுகாப்பாகத்தான் இருக்கிறது. கூர் சீவிய கொம்புகளை உடைய ஏறுகள் கம்பிக்கட்டைகள் பின்னே அணிவகுக்கின்றன. அவை திமில் மிரள வாடிவாசலில் இருந்து உள்ளே ஓடி வருவதற்குள் நாம் பாதுகாப்பாகப் பரணில் ஏறி அமரலாம். யாருக்காக இந்த ஏறுதழுவல் என்பதைப் பார்க்க நாம் அதோ சில குழந்தைகள் குரவைக்கூத்தாடும் இடத்துக்குப் போவோம்.