”பெண்”களை இயக்கிய சுகாசினி மணிரத்னம்
”பருவமே புதிய பாடல் பாடு..” நெஞ்சத்தைக் கிள்ளாதேயில் விஜியாக சுகாசினி மோகனுடன் மெல்லிய பனி படர்ந்த சோலையில் ட்ராக்சூட் அணிந்து குதிரைவால் கொண்டை ஆட ஒரு ஜாகிங் செல்வார். குதிரையின் லாடச் சத்தம் போல் மனதைத் தாளமிட வைக்கும் சந்தம்.
’பூந்தோட்டத்தில் ஹோ காதல் கண்ணம்மா’ ,’தேனாடும் முல்லை நெஞ்சில் என்னவோ’ என்று மனதையும் அசைத்த காதல். சோலை, சாலை என்று இப்படி ஓடிக் கொண்டே இருக்கமாட்டோமா என்று தோன்ற வைத்த பாடல்
ஷூக்கள் சப்திக்கும் மியூசிக்கில் என் பதின்பருவத்தில் கேட்ட லயமான பாடல் இது.. இப்போது கேட்டாலும் தண்ணென்று இருளும் குளிரும் பனியும் சூழ்ந்த மரங்களின்மேல் வெள்ளிக்கீற்றாய் சூரியன் கோலமிடும் பூஞ்சோலை என் நினைவுகளில் பூத்தெழும். சிறுபிள்ளையாய் ஆக்கும் என் மனமும் அதோடு சேர்ந்து பாடத் துவங்கிவிடும்.
இப்படி எண்பதுகளில் பள்ளிப்பருவத்தைக் கடந்திருக்கும் ஒவ்வொருவருக்கும் சுகாசினியோடு ஒரு ஒட்டுறவு உண்டு. எளிய பக்கத்து வீட்டுப் பெண் தோற்றம். நிறையப் பேருக்கு அவர் அறிவுஜீவி அக்கா மாதிரி. என் நாத்தனார், பெரியம்மா பெண் போன்ற சிலருக்கு அவர்களேதான் சுகாசினி J