எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
குறுநாவல் போட்டி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குறுநாவல் போட்டி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 24 மே, 2017

பெல்லட் - குறுநாவல்.


பெல்லட்:-

அத்யாயம் – 1. சிபிஐ கோர்ட்

ஒரு கோடி ரூபாயைக் கையாடல் செய்த வழக்கில் கைதாகி கோயமுத்தூரில் இருந்த அந்த சிபிஐ கோர்ட்டில் ஆஜராகி தலைகுனிந்து அமர்ந்திருந்தார் முருகானந்தம். மது மாது சூது என்று எந்தப் பழக்கமும் இல்லாத நேர்மையான மனிதர், மிகப் பெரும் நிலக்கிழார் என்று பெயரெடுத்திருந்த, மிகப்பெரும் நிறுவனத்தின் உயர் பொறுப்பிலிருந்த அவருக்கு ஒரு கோடி ரூபாய் எடுக்கும்படி அப்படி என்னதான் தேவை பணத்துக்கு என்று அவரது அலுவலகச் சிப்பந்திகளே அதிர்ச்சியில் உறைந்து இருந்தார்கள்.

”முருகானந்தம் முருகானந்தம் முருகானந்தம்..” மூன்று முறை அழைத்தார் டவாலி.

நேரே எழுந்து சென்றவரை சைகை காட்டி பக்கவாட்டில் வரச் சொன்னார் டவாலி. மாண்புமிகு நீதிபதியின் முன் குறுக்கே செல்வதோ பின்புறம் திரும்பி நடப்பதோ சிபிஐ கோர்ட்டில் அனுமதிக்கப்படுவதில்லை.

குற்றவாளிக் கூண்டில் ஏறி நின்றார் முருகானந்தம். ஆறடி உடம்பும் ஆறு சாண் ஆகிவிடாதா எனக் குறுகியபடி இருந்தது அவர் முகம். எந்தப் பக்கம் திரும்பினாலும் எல்லாம் தெரிந்த முகங்கள்.

சாட்சிக் கூண்டில் ஒரு கோடி ரூபாய்க்கான அந்த செக் மாற்றப்பட்ட வங்கியின் ஊழியர்  ராஜன் நின்றிருந்தார். அவர் அங்கே இண்டர்னல் ஆடிட்டிங்கில் இன்ஸ்பெக்‌ஷன் டிபார்ட்மெண்டில் இருந்தார். ராஜனுக்கு முருகானந்தத்தைப் பார்க்க வருத்தமாக இருந்தது. இருந்தும் என்ன செய்ய ?. கோர்ட் நடைமுறை. நடந்ததை சொல்லித்தானே ஆகவேண்டும்.

செவ்வாய், 23 மே, 2017

அகல்யா :-

அகல்யா :-
****************

வாகேட்டர் பீச்சில் கூட்டம் அலைமோதிக் கொண்டிருந்தது. சூரியமீனின் தங்கச் செதில்களுடன் நீந்திக் கொண்டிருந்த கடலுடன் வெண்மணலும் ஓடிக்கொண்டிருந்தது. உள்ளிழுப்பதும் வெளித்தள்ளுவதுமான விளையாட்டில் இரண்டும் ஈடுபட்டிருந்தன. கைப்பையை இறுகப்பற்றியபடி இளசுகளின் கூச்சல்களையும் கும்மாளங்களையும் பார்வையிட்டபடி நடந்துகொண்டிருந்தார்கள் கபிலனும் அகல்யாவும்.

அங்கங்கே வட்டம் போட்டு அமர்ந்து நாலைந்து வாலிபர்கள் பாட்டில்களைக் கவிழ்த்துத் தானும் மட்டையாகிக் கிடந்தார்கள். சேஃப் கார்டுகளின் விசில்களில் அலைகளில் ஆடியவர்கள் அவ்வப்போது பின்வாங்கிக் கொண்டிருந்தார்கள். ஹெனின்கைனும் கிங்ஃபிஷரும் பட்வைஸரும் கடலின் உப்புநீருடன் கசப்புநீராய்க் கலந்துகொண்டிருந்தன. தூரத்தில் ஒரு பெண் நீச்சல் உடையுடன் தண்ணீருக்குள் தற்கொலைக்கு முயல்பவள் போல கைகளை நீட்டியபடி பாய்ந்து சென்றுகொண்டிருந்தாள்.

மணலும் நீரும் சேருமிடத்தில் லேசாகக் காலை நனைத்தபடி சொன்னான் கபிலன். ” அப்பாவுக்கு ரெண்டு தரம் அட்டாக் வந்திருச்சு இனி எங்க அப்பா அம்மா என் கூடத்தான் இருப்பாங்க.”.

”ஹ்ம்ம். நல்லதுதான் ஆனா பார்த்துக்க முடியுமா. டயப்படி மருந்து கொடுக்கணும். சாப்பாடு ஜூஸ், சூப் கொடுக்கணும். நீங்க இந்தியாவுல இருந்தா பரவாயில்லை. நான் வேற வேலைக்கு போறேன்.  ””.

“பார்த்துக்கத்தான் வேணும். வேலையை விட்டுடு. நான் அனுப்புறது போதும். வீடு துடைக்க, பாத்திரம் கழுவ, மேவேலைக்கு ஒரு ஆள் போட்டுக்க. வாஷிங் மெஷின் போட்டு சமையல் செய்றதுமட்டும்தானே . உனக்கு ஈஸிதான். “


Related Posts Plugin for WordPress, Blogger...